புதன், 23 செப்டம்பர், 2020

உலகைக் குலுக்கும் எலான் மஸ்க்!

------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------- 

அண்மைக்கால மானுட வரலாறு பெருமளவில் 

தொழில்நுட்ப அறிஞர்களைப் படைத்து வருகிறது.

விஞ்ஞானிகளை விட இவர்களின் எண்ணிக்கை நாம் 

வாழும் உலகில் அதிகம். இவர்களில் பலர் நிர்வாக 

மேலாண்மையிலும் திறன் பெற்று, உலகின் முதல் தர 

கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.


ஸ்டீவ் ஜாப்ஸ் (Stevan Paul  Jobs 1955-2011), பில் கேட்ஸ் 

(Bill Gates, born:1955, வயது: 64) என்று தொடரும் இந்த வரிசையின் 

முதல் பெயராக தாமஸ் ஆல்வா எடிசனின் (1847-1931) 

பெயர் உள்ளது. தாம் கண்டுபிடித்த 1093 கருவிகளுக்கு 

காப்புரிமை பெற்றவர் எடிசன். அமெரிக்காவில் பெற்ற 

காப்புரிமை மட்டுமே இது. பிற நாடுகளில் அவர் பெற்ற 

காப்புரிமையை இங்கு கணக்கில் சேர்க்கவில்லை.

எந்த அளவுக்கு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளராக 

இருந்தாரோ, அந்த அளவுக்கு கறாரான ஒரு தொழிலதிபர் 

ஆகவும் இருந்தவர் எடிசன். 


2011ல் மறைந்த ஸ்டீவ் ஜாப்சுக்கு, அமெரிக்காவின் 

கெளரவம் மிகுந்த "தேசியத் தொழில்நுட்பப் பதக்கம்" 

(National Medal of Technology and Innovation) 1985ல் வழங்கப் பட்டது. 

தமது கூட்டாளியான  ஸ்டீவ் வாஸ்னிக் (Steve Wozniak)

என்பவருடன் ஸ்டீவ் ஜாப்ஸ் இப்பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் வழங்கிய இப்பதக்கம் 

ஸ்டீவ் ஜாப்சின் தொழில்நுட்ப மேதைமைக்குக் கிடைத்த 

உயர்ந்த அங்கீகாரம் ஆகும். 


தமது 13ஆவது வயதில், ஒரு மென்பொருள் நிரலை (software programme) வெற்றிகரமாக எழுதி உலக சாதனை புரிந்தவர் 

பில் கேட்ஸ். தாம் படித்த பள்ளியில் வேலை பார்க்கும் 

அனைவரின் சம்பளப் பட்டியல் குறித்த மென்பொருள் நிரல் 

அது. பில் கேட்சின் தொழில்நுட்ப அறிவு 13 வயதிலேயே 

வெளிப்பட்டு அவர் ஒரு குழந்தை மேதை (Child prodigy)

என்பதை உலகிற்கு உணர்த்தியது.


இந்த வரிசையில் சமீபத்திய வரவு எலான் மஸ்க் 

(Elon Musk, born: 1971, வயது 49)  ஆவார். இவரைத் தெரியாத 

எவரையும் முட்டாள் என்றே கருதுகிறது இன்றைய சமூகம்.

கனடா நாட்டுத் தாய்க்கும் தென்னாப்பிரிக்க நாட்டுத் 

தந்தைக்கும் பிறந்த இவர் கல்லூரிப் படிப்பின்போது 

அமெரிக்கா சென்று  அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.


அடிப்படையில் எலான் மஸ்க் ஓர் இயற்பியல் பட்டதாரி.

பட்டப் படிப்பை முடித்தவுடன், கலிபோர்னியாவில் உள்ள 

ஸ்டான்போர்டு பல்கலையில் பயனுறு இயற்பியலில் 

(applied physics) பிஹெச்டி படிப்பில் சேர்ந்த இவர், சேர்ந்த 

இரண்டு நாட்களிலேயே படிப்பைத் துறந்தார்.      

ஒரு வலைத்தள மென்பொருள் நிறுவனத்தை 

உருவாக்க விரும்பிய எலான் மஸ்க், பிஹெச்டி படிப்பதை விட 

தொழிலதிபர் ஆவதையே விரும்பினார். 


மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா (Tesla) என்னும் 

நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் ஆவார். இனி உலகெங்கும் 

மின்சாரக் கார்களே ஓடும். பெட்ரோல் டீசலில் ஓடும் கார்களின் 

சகாப்தம் முடிந்து விட்டது. பெட்ரோலும் டீசலும் பூமியைச் 

சூடேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதால் 

அவற்றின் பயன்பாடு உலகெங்கும் நிறுத்தப் பட்டு வருகிறது.


இயற்பியலின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப அறிஞர் 

நிக்கோலா டெஸ்லா (Nicola Tesla 1856-1943) ஆவார். ஒரு பொறியாளரும் கண்டுபிடிப்பாளருமான இவரை கெளரவிக்கும் 

நோக்கிலேயே எலான் மஸ்க்கின் கார் நிறுவனத்துக்கு  

டெஸ்லா என்று பெயரிடப் பட்டது. 


மின்சாரக் கார் உற்பத்தியில்  மட்டுமல்ல, விண்வெளித் 

துறையிலும் பெரும் சாதனைகளைப் புரிந்தவர் எலான் மஸ்க்.

அமெரிக்காவில் தனியாரும் விண்வெளித் துறையில்

பங்கேற்க அனுமதி உண்டு. ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) எனப்படும் 

விண்வெளிச் செயல்பாடுகளுக்கான நிறுவனத்தை 2002ல் எலான்  

மஸ்க் உருவாக்கினார். செவ்வாய் கிரகத்தைக் கைப்பற்றி 

மனிதர்களை அதில் குடியேற்றுவது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 

லட்சியங்களில் ஒன்று.


2019 மே மாதத்தில் ஒரே ஏவுகணையைப் பயன்படுத்தி 

ஒரே ஏவுதலில் (in a single launch) 60 செயற்கைக் கோள்களை 

தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) அவரின் 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்தி உலகப் புகழ் பெற்றது.

ஆளில்லா விண்கலன்களை விண்ணில் செலுத்துதலில்

ஒப்பீட்டளவில் ஆபத்துகள் குறைவு. ஆனால் விண்வெளி 

வீரர்களை விண்கலத்தில் ஏற்றி, உரிய இடத்தில் கொண்டு சேர்த்தலும்,

பின்னர் பூமிக்குத் திரும்பக் கொண்டு வருதலும் எளிதானவை 

அல்ல. ஆபத்து நிறைந்த இப்பணிகளிலும் பெருவெற்றி 

அடைந்துள்ளது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.


நாசாவின் இரண்டு விண்வெளிவீரர்களை விண்வெளியில் உள்ள 

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station)

அண்மையில் மே 2020ல் கொண்டு சேர்த்தது ஸ்பேஸ் எக்ஸ்.

இதற்கு இந்நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9) ஏவுகணை 

பயன்பட்டது. பத்திரமாகச் சென்று சேர்ந்தவர்கள் 

பென்கன் (Robert Bhenken), ஹர்லி (Douglas Hurley)    

ஆகிய இரு நாசா வீரர்கள் ஆவர். நாசா மேற்கொண்ட ஒரு 

பரிசோதனைப் பயணமே இது (test flight).


2020 மே இறுதியில் விண்வெளி நிலையம் (ISS) சென்ற நாசா வீரர்கள் 

ஆகஸ்ட் 2, 2020ல் பூமி திரும்பினர். ஸ்பேஸ் எக்சின் செலுத்து 

வாகனத்தில் பூமி திரும்பிய பென்கன், ஹர்லி இருவரும் மெக்சிகோ  வளைகுடாவில் பாரசூட் மூலம் குதித்தனர். இவ்வாறு வணிக 

ரீதியிலான விண்வெளிப்பயணம் மானுட வரலாற்றில் 

தொடங்கியது. 


மின்சாரக் கார் உற்பத்தி மற்றும் விண்வெளித் துறையைத்

தொடர்ந்து, நரம்புசார் அறிவியல் (Neuro science) துறையிலும் 

அண்மையில் தடம் பதித்துள்ளார் எலான் மஸ்க். இதற்காக 

நியூராலின்க் (Neuralink) என்ற நிறுவனத்தையும் சில ஆண்டுகளுக்கு 

முன்பு தொடங்கினார். 1) டெஸ்லா, 2) ஸ்பேஸ் எக்ஸ், 3) நியூராலின்க் 

ஆகிய நிறுவனங்கள்  எலான் மஸ்க்கின் புகழ் பரப்பும் 

நிறுவனங்களாகத் திகழ்கின்றன. இந்தியாவின் இஸ்ரோ 

நிறுவனம் 130 கோடி இந்தியர்களுக்கும் சொந்தம். ஏனெனில்  

இஸ்ரோ அரசின் நிறுவனம். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் அப்படியல்ல.

அது ஒரு தனியார் நிறுவனம். அது எலான் மஸ்க் என்னும் 

தனி ஒருவருக்கு மட்டுமே சொந்தம். எனினும் அரசுக்கு நிகராக 

தனியாரின் முன்முயற்சிகள் அமெரிக்காவில் மிகவும் தாராளமாக அனுமதிக்கப் படுகின்றன. தனியார்மயத்தில் 

அபாயகரமான அளவுக்கு உச்சம் தொட்டு நிற்கிறது அமெரிக்கா. 


மூளையில் கணினிச் சில்லுகளைப் பொருத்துவதன் மூலம் 

(implanting the chips in the brain) கொடிய நரம்பியல் நோய்களைத் 

தீர்க்க முடியும் என்று கடந்த மாதம் (ஆகஸ்டு 2020) அறிவித்து  

மொத்த உலகையும் அதிர வைத்தார் எலான் மஸ்க்.

தமது நியூரோலின்க் நிறுவனத்தின், அறுவை சிகிச்சை 

செய்யும்  ரோபோவின் (surgical robot) அருகில் நின்று கொண்டு

விளக்கவுரை ஆற்றினார் எலான் மஸ்க்.


கொடிய நரம்பியல் நோய்களான அல்சமீர், பார்க்கின்சன்,

செவித்திறன் இழப்பு, முதுகுத் தண்டுவடக் கோளாறு 

போன்ற நோய்களை, மூளையில் பொருத்தப்படும் 

சில்லுகளின் வாயிலாக செயற்கை நுண்ணறிவு 

(Artificial Intelligence) மூலம் குணப்படுத்த இயலும் என்பது  

எலான் மஸ்க் முன்வைக்கும் கோட்பாடு. நியூரோலின்க் 

நிறுவனத்தில் மூன்று பன்றிகளுக்கு தலைக்கு இரண்டு 

சில்லுகள் வீதம் அவற்றின் மூளையில் பொருத்தப் 

பட்டுள்ளன என்றார் மஸ்க். 


சில்லு ஒன்றின் விட்டம் 23 மிமீ ஆகும். அதாவது ஒரு 

சில்லுவின் ஆரம் 11.5 மிமீ ஆகும். அதாவது தோராயமாக 

1 செமீ நீளம் என்றோ அல்லது ஒரு விரற்கடை நீளம் என்றோ 

எடுத்துக் கொள்ளலாம். ஆயின், ஒரு சில்லுவின் கனஅளவு 

4.78 கன செமீ ஆகும்.  இதை 5 கன செமீ என்று எடுத்துக் 

கொண்டால், ஒரு சில்லு என்பது தோராயமாக ஒரு 

நெல்லிக்கனி அளவுக்கு இருக்கும். பன்றியின் மூளையானது 

மனித மூளையை விடச் சிறியது. வளர்ப்புப் பன்றிகளின் 

மூளையின் நிறை சராசரியாக 140 கிராம் என்று ஒரு மதிப்பீடு 

கூறுகிறது. இந்த 140 கிராம் மூளையில், இரண்டு நெல்லிக்கனி    

அளவுக்கு சில்லுகளைப் பொருத்தி இருப்பதை பன்றிகள் 

எப்படி உணரும் என்று நமக்குத் தெரியாது. எனினும் 

மூளையில் சில்லுகள் பொருத்தப்பட்ட பன்றிகள் நல்ல 

உடல்நலத்துடனும், பிற சாதாரணப் பன்றிகளிடம் இருந்து 

பிரித்தறிய முடியாதபடியும் உள்ளன என்கிறார் 

எலான் மஸ்க் மேலும்.


அரசின் அனுமதி பெற்று, பன்றிகளை அடுத்து மனிதர்களுக்கும்

இவ்வாறு சில்லுகளைப் பொருத்த முற்படுவார் எலான் மஸ்க்

என்று தெரிய வருகிறது. இது உலகை அதிர்ச்சியில் 

ஆழ்த்துகிறது.


பல்துறை தழுவிய (versatile) தமது தொழில்நுட்ப மேதைமையை 

தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் 

எலான் மாஸ்க்கின் நுண்ணறிவுக் குறியீடு (IQ) எவ்வளவு 

இருக்கும் என்று அறிவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.

தற்காலத்தில் மனிதர்களின் நுண்ணறிவுக் குறியீட்டை (IQ)

அளவிடும் பல அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் 

எலான் மஸ்க்கின் IQ 155ஐ ஒட்டி இருக்கும் என்று அறிவித்துள்ளன.


எலான் மஸ்க் குறித்து நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன.

இவற்றுள் பலவும் அவரின் வாழ்க்கை வரலாறுகளே.

2015ல் வெளிவந்த ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் 

உயர்வு நவிற்சி இன்றி, அவரின் வாழ்க்கையை அப்படியே 

படம் பிடித்துக் காட்டுகிறது. அதை எழுதியவர் ஆஸ்லி வான்ஸ் 

(Ashlee Vance). 

நூலின் பெயர்: "Elon Musk: How the billionaire CEO of 

SpaceX and Tesla is shaping our future?" 

நூலின் விலை 10 டாலர். அதாவது 700 ரூபாய்.

அமேசானில் கிடைக்கிறது.  


ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், எலான் மஸ்க் போன்ற தொழில்நுட்ப

அறிஞர்களுக்கு இணையாக இந்தியாவில் எவருமே 

இல்லையா? ஏன் இல்லை? இருக்கிறார்கள். சமகால 

இந்தியா நிறையவே தொழில்நுட்ப அறிஞர்களை 

உருவாக்கி இருக்கிறது.


ஐஐடியில் படித்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி (வயது 74)

இன்போசிஸ் நிறுவனத்தைத்  தலைமையேற்று நடத்தியவர்.

சுந்தர் பிச்சை ஐஐடியில் படித்து விட்டு தற்போது கூகிள் 

நிறுவனத்தின் தலைமையில் (CEO, Google) இருக்கிறார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவரை, 2020ஆம் ஆண்டின் 

செல்வாக்கு மிக்க 100 பேரில் ஒருவராக டைம் பத்திரிகை

தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வரிசையில் சத்ய நாதெள்ளாவையும்   

(CEO, Microsoft) சேர்க்கலாம். மேலும்  அமெரிக்காவின் சிலிக்கன் 

பள்ளத்தாக்கில் தொழில்நுட்ப ரீதியாக ஆட்சி செலுத்துபவர்கள் 

மிகுதியும் இந்தியர்களே.


மேற்கூறிய மூவரும் தங்களின் தொழில்நுட்ப அறிவால் 

தொழிலதிபர்களாகி லாபம் ஈட்டுபவர்கள். இவர்களைப் போல் 

அல்லாமல், தங்களின் தொழில்நுட்ப மேதைமையை 

சமூகத்துக்கு அர்ப்பணித்தவர்கள் இந்தியாவில் உண்டு.

டாக்டர் அப்துல் கலாம் (1931-2015), சாம் பித்ரோடா (வயது 77), 

நந்தன் நிலக்கணி (வயது 65) ஆகியோரை எடுத்துக் காட்டுகளாகக்   

கூறலாம்.


வணிக நோக்கமோ, லாப நோக்கமோ துளியும் இன்றி,

அரசைச் சார்ந்து, அரசின் பிரதிநிதிகளாக இருந்து, சமூகத்துக்கும் 

மக்களுக்கும் பயன்பட்டவர்கள் இவர்கள். அணுசக்தித் துறையிலும்

விண்வெளித் துறையிலும் அளப்பரிய பங்களிப்புகளைச் 

செய்தவர் அப்துல் கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.


பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தொலைதொடர்பு

என்பது வெகுவாகப் பின்தங்கி இருந்தது. இதைச் சரிசெய்ய,

பெரும் வருமானம் தந்த தமது அமெரிக்க வாழ்க்கையைத் 

துறந்து இந்தியா வந்தார் சாம் பித்ரோடா. இந்திரா காந்தி,

ராஜிவ் காந்தி ஆகிய இரு பிரதமர்களின் ஆதரவுடன் 

செயல்பட்டார் இவர். இந்தியத் தொலைதொடர்பு ஆணையத்தின் 

(Telecom Commission) தலைவராகச் செயல்பட்டார். இந்தியாவின் 

தொலைதொடர்புப் புரட்சியை நடத்தினார். இன்றைய 

தொலைத்தொடர்பு வளர்ச்சியின் மூலவித்து சாம் பித்ரோடாவே.


ஆரம்பத்தில் இன்போசிஸ்சில் பணியாற்றிய நந்தன் நிலக்கணி 

அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று,

இந்தியக் குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை 

உருவாக்கித் தரும் பணியில் ஈடுபட்டார். ஆதார் என்பது 

நந்தன் நிலக்கணியின் மூளையின் விளைச்சல் (brain child) ஆகும்.

அப்துல் கலாம், சாம் பித்ரோடா, நந்தன் நிலக்கணி ஆகியோர் 

தங்களின் மேதைமையை லாபத்துக்குரிய விற்பனைப் 

பண்டமாகக் கருதாமல் சமூகத்தின் பொதுச்சொத்தாக 

ஆக்கி விட்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் மேன்மக்கள்! 


எடிசன், ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் போன்றோருக்கு நிகராக 

அல்லது சிறிது மாற்றுக் குறைவாக இந்தியாவில் தொழில்நுட்ப 

அறிஞர்கள் உண்டு. ஆனால் இந்தியாவின் அப்துல் கலாம், சாம் பித்ரோடா, 

நந்தன் நிலக்கணி போன்றோருக்கு நிகராக, தங்களின் தொழில்நுட்ப  அறிவை, மொத்த சமூகத்தின் பொதுவுடைமை ஆக்கிய 

எவரேனும் அமெரிக்காவில் உண்டா? இருந்தால் சொல்லுங்கள்!

அப்படிப் பட்டவரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்!

*******************************************************************************

  



     

 


    


  




       


             



       

  

 



      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக