மொபைல் பயன்படுத்தும் அனைவரும்
நன்றி செலுத்த வேண்டியது யாருக்கு?
வயர்லெஸ்சின் தந்தையான ஜே.சி.போசுக்கே!
---------------------------------------------------------------------------------------
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-4)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர்: சார், குற்றவாளி Xஐக் கைது செய்து
விட்டேன்; ஓவர்.
கமிஷனர்: அப்படியா, எங்கே, எப்போது; ஓவர்.
இன்ஸ்பெக்டர்: சற்று முன்பு; பம்பாய் VTயில்; ஓவர்.
கமிஷனர்: உடனே அவனை K-12க்குக் கொண்டு வாங்க; ஓவர்.
நிஜ வாழ்க்கையிலோ அல்லது திரைப்படத்திலோ
இதுபோன்ற உரையாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும்.
இது என்ன ஓவர்? ராமபக்தர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவது
போல, வயர்லெஸ் பக்தர்கள் ஓவர் என்று அடிக்கொருதரம்
சொல்ல வேண்டுமா? இது என்ன நேர்த்திக் கடனா?
ஆரம்பகால வயர்லஸ் உரையாடல் இது. (இது இன்னமும்
உலகின் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் இருக்கிறது)
இந்த வயர்லஸ் ஒருவழிச் சேவை (one way working) ஆகும்.
அதாவது, ஒரே நேரத்தில் இருவரும் பேச முடியாது.
அப்படிப் பேசினால், குரல் கேட்காது; இரைச்சல்தான்
கேட்கும் (noise instead of voice). எனவே உரையாடலில்
தனது ஸ்பெல் முடிந்து விட்டது என்பதை உணர்த்தும்
பொருட்டு, ஒவ்வொரு ஸ்பெல் முடிவின்போதும் ஓவர்
என்று சொல்லியாக வேண்டும்.
மொபைல் சேவை ஒரு வயர்லெஸ் சேவை. என்றாலும்
அதற்கு முன்பே வேறு வடிவில் வயர்லெஸ் சேவை
உலகெங்கும் இருந்தது. முதன் முதலில் வயர்லெஸ்
செய்திப் பரிமாற்றத்தைச் சாத்தியம் ஆக்கியவர் இந்திய
விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்தான். ஆனால் அதற்குரிய
காப்புரிமைக்கு அவர் உரிமை கோராமல் இருந்ததால்,
இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி அந்தப் பெருமையைத்
தட்டிச் சென்றார். நோபல் பரிசும் பெற்றார்.
முதன்முதலில் இருந்த வயர்லஸ் சேவை கார்கள்,
காவல்துறை மற்றும் ராணுவ வாகனங்களில் இருந்தது.
டிரான்ஸ்மீட்டர், ரிசீவர் இரண்டும் வாகனத்தின் தலையில்
பொருத்தப் பட்டு இருக்கும். செல் தொழில்நுட்பத்துக்கு
முந்திய வயர்லஸ் சேவை இது. இது பூஜ்யம் தலைமுறை
(Zero Generation) அதாவது 0G எனப்படுகிறது.
மொபைல் வயர்லெஸ்சின் முதல் தலைமுறை,
செல் தொழில்நுட்பத்தைக் கொண்டது (Cellular technology).
சேவை வழங்கப்படும் ஏரியாக்கள் சிறு சிறு
சிற்றறைகளாகப் பிரிக்கப் படுவதால் செல் என்ற பெயர்
வந்தது. இந்த 1G, அனலாக் (analog) முறையில் ஆனது.
அதாவது, இம்முறையில் பேசப்படும் சொற்கள்
எவ்வித ரகசியக் குறியீடுகளாகவும் மாற்றப் படாது.
(No encoding and hence no decoding).
2G முதற்கொண்டு தொடர்ந்த எல்லாத் தலைமுறைகளும்
டிஜிட்டல் முறையிலானவை. இம்முறையில், பேசப்படும்
சொற்கள் பைனரி குறியீடுகளாக (Binary code) மாற்றப்படும்.
உதாரணமாக, "12" என்பது அனலாக் முறையில் 12 என்றே
டிரான்ஸ்மிட் செய்யப்படும். டிஜிட்டலில் 12 என்பது
பைனரியாக மாற்றப்பட்டு 1100 என்று டிரான்ஸ்மிட்
செய்யப்படும். தற்காலத்தில், கீழ் வகுப்புகளிலேயே
பைனரி கற்றுக் கொடுக்கப் படுவதால், இன்றைய
தலைமுறை இது குறித்து நன்கு அறிந்திருப்பர்.
வணிக ரீதியிலான 1G சேவை முதன் முதலில் 1981இல்
சவூதி அரேபியாவில் தொடங்கியது. 1980இன் பத்தாண்டுகள்
முழுவதும் 1G செயல்பட்ட காலம். தரநிர்ணயப்படி, 1G
என்பது NMT -450 (Nordic Mobile Telephony) என்று அழைக்கப்
பட்டது. (நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து,
டென்மார்க் ஆகியவையே நார்டிக் நாடுகள். இங்குதான்
1G உருவாக்கப் பட்டது. எனவேதான் NMT என்ற பெயர்).
1G அளித்த வேகம் (speed provision) 2.4 kbps மட்டுமே.
1990இன் பத்தாண்டுகள் 2Gயின் காலம். 1990-91இல் 2G
சேவை தொடங்கியது. இது அளித்த வேகம் 64 kbps வரை.
2Gயின் பிரபல தொழில்நுட்பங்கள் GSM, CDMA, IS-95
ஆகியவை ஆகும். இவற்றில் CDMA மற்றும் IS-95 ஆகிய
இரண்டும் CDMA தொழில்நுட்பங்கள். இவ்விரண்டும்
அமெரிக்காவில் பிரபலமாக இருந்தன. அமெரிக்கா
தவிர்த்த உலகின் பிற நாடுகளில் GSM தொழில்நுட்பமே
செல்வாக்குப் பெற்றது.
GSM என்பது Global System of Mobile communication ஆகும்.
CDMA என்பது Code Division Multiple Access ஆகும்.
GSMஇல் ரேடியோ அதிர்வெண் அலைக்கற்றையானது
(Radio Frequency Spectrum) பல்வேறு சானல்களாகப்
பிரிக்கப் பட்டு, FD அல்லது TD (frequency division or time division)
முறையில் பயன்படுத்தப்படும்.
CDMAயில் இவ்வாறு பிரிக்கத் தேவையில்லாமல், மொத்த
அலைக்கற்றையுமே பயன்படுத்தப் படும். இது spread spectrum
டெக்னாலஜி ஆகும். CDMA சேவைக்கென்றே
பிரத்தியேகமான மொபைல் ஃபோன்கள் உண்டு. இத்தகைய
CDMA ஃபோன்கள் GSM சேவையில் பயன்படாது.
(CDMA handsets do not have interchangeability)
--------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக