செவ்வாய், 3 நவம்பர், 2020

கருந்துளைகளும் பொதுச்சார்பியலும்!

(2020 இயற்பியல் நோபெல் பரிசு)

----------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------   

ரோகர் பென்ரோஸ் தமது 90ஆவது வயதில் நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.

சிந்தனையின் மகத்துவத்தை முதுமை எவ்விதத்திலும் தடுக்கவில்லை 

என்ற உண்மையை ரோகர் பென்ரோஸ்  வெளிப்படுத்துகிறார்.


அழகும் இளமையும் நெருங்கிய தொடர்பு உடையவை. இளமையின் 

வரம்புக்கு அப்பால் அழகு நிலைப்பதில்லை என்பது பொதுவான 

உலகியல். எனினும் எகிப்தியப் பேரழகி கிளியோபட்ராவுக்கு

அழகின் இந்தப் பழைய இலக்கணம் பொருந்தியதில்லை.

எவ்வளவுதான் வயதானாலும் கிளியோபட்ராவின் அழகு  

ஒரு சிறிதும் மங்கவில்லை என்பதை ஷேக்ஸ்பியர் 

Age can not wither her beauty 

Nor custom stale her infinite variety 

(Antony and Cleopatra, Act II, scene-2)   

என்ற அழியாப்புகழ் மிக்க வரிகளில் வெளிப்படுத்துவார்.

முதுமையை முறியடித்த கிளியோபட்ரா போன்று தமது 

90ஆவது வயதிலும் தமது சிந்தனையின் மாண்பை இழக்கவில்லை 

ரோகர் பென்ரோஸ். உலகின் தலைசிறந்த காயகல்பத்தை 

அவர் அருந்தி இருக்கக் கூடும். அது எது? அறிவுக்கு மிஞ்சிய  

காயகல்பம் இப்பிரபஞ்சம் மொத்தத்திலும் இல்லை. அறிவே அனைத்தும்!

அதுவே அற்றம் காக்கும் கருவி! எனவேதான் நோபல் பரிசுப்பெண் 

90 ஆண்டுகள் காத்திருந்து அவரை முத்தமிடுகிறாள்.


2020ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு ரோகர்

பென்ரோஸ் உட்பட மூவருக்குப் பகிர்ந்து வழங்கப் பட்டுள்ளது.

கோட்பாட்டுப் பங்களிப்புக்காக ஆக்ஸ்போர்டு பேராசிரியர் 

ரோகர் பென்ரோஸ் (Roger Penrose, born 1931) பரிசுத் தொகையில் 

பாதியைப் பெறுகிறார், கருந்துளைகளின் உருவாக்கம் என்பது 

ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டின் வலிமையான 

தீர்க்க தரிசனம் என்ற கண்டுபிடிப்புக்காக ரோகர் பென்ரோசுக்கு  

பரிசு வழங்கப் படுகிறது (for the discovery that the blackhole formation is a robust prediction of the General theory of Relativity, Nobel prize citation).

பரிசுத் தொகையின் மீதிப் பாதி, அ) ரெயின்ஹார்ட் ஜென்செல் 

(Reinhard Genzel, born 1952) என்னும் ஜெர்மனியில் பிறந்து 

கலிபோர்னியா பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிபவருக்கும்,

ஆ) ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez, born 1965) என்னும் கலிபோர்னியா பல்கலையின் அமெரிக்கப் பெண் பேராசிரியைக்கும் கூட்டாக  

வழங்கப் படுகிறது. இவர்கள் இருவரின் பங்களிப்பு நடைமுறை 

(practice) சார்ந்தது. நமது பால்வீதி காலக்சியின் மையத்தில் 

ஒரு பெருநிறைக் கருந்துளை இருப்பதைக் கண்டுபிடித்தமைக்காக 

இவ்விருவரும் பரிசு பெறுகின்றனர். (for the discovery of supermassive compact object 

at the centre of our galaxy, Nobel prize citation).  


ஆக,கோட்பாடு, நடைமுறை  (theory and practice) இவ்விரண்டும் 

இவ்வாண்டின் இயற்பியல் நோபெல் பரிசில் முதன்மை பெறுகின்றன. கருந்துளைகள் பற்றிய கோட்பாடு ஒருபுறமும், கருந்துளையின் 

இருப்பைக் கண்டுபிடித்தமையும் ஒன்றுக்கொன்று ஆகச்சிறந்த பொருத்தத்துடன் திகழ்வதை இவ்வாண்டின் நோபெல் பரிசு 

உலகிற்கு உணர்த்துகிறது.  


அதே நேரத்தில், ஐன்ஸ்டைன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய இரு பெரும் மேதைகளோடு ரோகர் பென்ரோஸ் மூன்றாவதாக வந்து விடுகிறார். அம்மேதைகளின் வரிசையில் இடமும் பெற்று விடுகிறார். ரோகர் பென்ரோசுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது மறைந்த  ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு வழங்கப் பட்டது போன்றதாகும் என்று இயற்பியல் ஆர்வலர்கள் பலரும் கருதுகின்ற்னர்.  


ஆண்ட்ரியா கெஸ் இயற்பியலில் நோபெல் பெரிசு பெறும் நான்காவது 

பெண்மணி ஆவார். நோபெல் பரிசு தொடங்கியது முதல் இதுவரை 

நால்வர் மட்டுமே இயற்பியலில் நோபெல் பரிசு பெற்றுள்ளனர்.

ஏனைய மூவர் வருமாறு:- 1) மேரி கியூரி 1903,  (2) மரியா கேப்பர்ட் மேயர் 

1963, (3) டொன்னா ஸ்டிரிக்லேண்ட் 2018.  


நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1915ல் பொதுச்சார்பியல் கோட்பாட்டை 

ஐன்ஸ்டைன் முன்மொழிந்தபோது, அது அநேகமாக எவராலும் 

ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவரின் கருத்துக்கள் 

அறிவியல் உலகால் புரிந்து கொள்ள இயலாமலும் அதன் விளைவாக 

ஏற்கப் படாமலும் இருந்தன. 1921ல் அவருக்கு நோபெல் பரிசு 

வழங்கியபோது கூட, அது அவரின் பொதுச் சார்பியல் கோட்பாட்டுக்கு

அல்லாமல் அவர் கண்டறிந்த ஒளிமின் விளைவுக்காகவே (photoelectric effect) 

வழங்கப் பட்டது. 


சூரியனின் ஈர்ப்பு காரணமாக ஒளி வளைவது (bending of light by sun's gravity) 

பற்றி பொதுச்சார்பியல் குறிப்பிடுகிறது. இது சரிதானா என்ற கேள்வி 

எழுந்தபோது, அதைப் பரிசோதிக்க முற்பட்டார் பிரிட்டிஷ் வானியலாளர் 

ஆர்தர் எட்டிங்டன். இது எட்டிங்டன் பரிசோதனை (Eddington experiment)

என்று அறிவியல் வரலாற்றில் புகழ் பெற்றுள்ளது. ஒரு சூரிய கிரகணத்தின் 

போதுதான் ஒளி வளைவதைச் சோதித்து அறிய முடியும் என்பதால்,

அப்போது 1919 மே மாதம் 29ல் நடைபெற்ற ஒரு சூரிய கிரகணத்தின்போது 

இப்பரிசோதனையை மேற்கொண்டார் எட்டிங்டன். பரிசோதனையின் 

இறுதியில் ஐன்ஸ்டைன் கூறியபடி, ஒளி வளைவது உறுதி செய்யப் பட்டது.

ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாட்டில் உடனடியாக உறுதி 

செய்யப்பட்ட கூறு இதுதான். இத்துடன் எட்டிங்டன்னும் புகழ் பெற்றார்.

அக்காலத்தில் சார்பியல் கோட்பாடு ஐன்ஸ்டைன், எட்டிங்டன் ஆகிய 

இரண்டு பேருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என்றும் இதைத் தெரிந்த 

மூன்றாவது நபர் எவரும் இல்லை என்றும் கருதப் பட்டது. நகைச்சுவையாக 

இருப்பினும், பொதுமக்களின் கருத்து இவ்விதமாகவே இருந்து வந்தது.


இன்று காலம் தலைகீழாக மாறி விட்டது. ஐன்ஸ்டைனின் பொதுச்சர்பியல் 

கோட்பாடு, மென்மேலும் எளிமை அடைந்து பட்டப் படிப்பு வகுப்புகளின்  மாணவர்களுக்கும் எளிதில் புரியத் தொடங்கி விட்டது. பொதுச்சார்பியலில் 

ஈர்ப்பு அலைகள் (gravitational waves) பற்றி 1915ல் கூறி இருந்தார் ஐன்ஸ்டைன்.

எனினும் நூறு ஆண்டுகளாக அவற்றைக் கண்டுபிடிப்பது (detecting)

கடினமாக இருந்தது. அதுவும் தற்போது சாத்தியமாகி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 14 செப்டம்பர் 2015 அன்று, லிகோ கருவிகள் 

(LIGO = Laser Interferometer Gravitational-wave Observatory) மூலம் ஈர்ப்பு அலைகளின் 

இருப்பு உணரப்பட்டு பதிவு செய்யப்பட்டது.


கருந்துளைகள் இப்பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்றார் 

பொதுச்சார்பியலில் ஐன்ஸ்டைன். தற்போது ரோகர் பென்ரோஸ் 

கருந்துளைகளின் உருவாக்கம் பற்றிக் கண்டறிந்துள்ளார்.

கருந்துளைகள் பற்றிய ஐன்ஸ்டைனின் தீர்க்கதரிசனம்  

மிகவும் ஆற்றல் வாய்ந்த தீர்க்கதரிசனம் (robust prediction) என்கிறது நோபல் பரிசுக்குழு. ஆக, ஒளி வளைதல், ஈர்ப்பு அலைகள், கருந்துளைகள் என்று ஐன்ஸ்டைன் சொன்ன ஒவ்வொன்றும் இன்று மெய்ப்படத் தொடங்கி விட்டது.

கடந்த ஆண்டு, ஏப்ரல் 10, 2019 அன்று ஒரு கருந்துளையை நிழற்படம்

எடுத்து வெளியிட்டனர் நிகழ்வெல்லைத் தொலைநோக்கி அமைப்பின் 

(Event Horizon Telescope) விஞ்ஞானிகள். கருந்துளைகளின்  இருப்புக்கு

இதுவரை சந்தர்ப்ப சாட்சியங்களே விஞ்ஞானிகளால் தரப்பட்டிருந்த 

நிலையில், ஒரு கருந்துளையின் நிழற்படம் என்பது அறிவியலின் 

வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இவ்வாறு பொதுச்சார்பியலின் கடினத்தன்மை இளகி இளகி மென்மைப்

பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த வரிசையில் ரோகர்  பென்ரோஸ்  தம் பங்குக்கு பொதுச்சார்பியலை மென்மை ஆக்கி இருக்கிறார்.                 

          

இப்பரிசு குறித்து நன்கறிந்திட விரும்பும் எவர் ஒருவருக்கும் 

கருந்துளைகள் குறித்த சரியானதும் துல்லியமானதுமான 

புரிதல் வேண்டும்.. கருந்துளை குறித்து எதுவும் அறியாமல் 

நவீனப் பேரண்டவியலையோ (modern cosmology), பொதுச்சார்பியலையோ  

எவரும் அறிந்திட இயலாது. எனவே முதலில் கருந்துளை குறித்துப் 

பார்ப்போம்.     


சில நட்சத்திரங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தம் அந்திம 

காலத்தின் இறுதியில் கருந்துளைகளாக மாற்றம் அடைகின்றன.

எல்லா நட்சத்திரங்களும் கருந்துளைகளாக ஆவதில்லை. நிறை 

அதிகமுள்ள நட்சத்திரங்களே கருந்துளைகளாக மாறும் வாய்ப்பைப் 

பெறுகின்றன. நமது சூரியனின் நிலை என்ன? அது கருந்துளையாக 

மாறுமா? மாறாது. ஏனெனில் அதற்கான நிறை நமது சூரியனிடம் 

இல்லை. ஒரு நட்சத்திரம் கருந்துளையாக மாற வேண்டுமெனில்,

குறைந்தபட்சமாக அது சூரியனின் நிறையை விட 1.4 மடங்கு 

அதிகமாக இருக்க வேண்டும். நமது சூரியனின் நிறை சற்றுத் 

தோராயமாக 2 x 10^30 கிலோகிராம் ஆகும். இதன் 1.4 மடங்கு 

என்பது 2.8 x 10^30 கிலோகிராம் ஆகும். இந்த அளவு நிறையுள்ள 

ஒரு நட்சத்திரமே பின்னாளில் நியூட்ரான் நட்சத்திரமாகவோ 

கருந்துளையாகவோ  மாறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறது. 


மேற்கூறிய, சூரியனின் நிறையைப் போல் 1.4 மடங்கு என்பது 

சந்திரசேகர் வரம்பு (Chandrasekar limit) என்று அழைக்கப் படுகிறது.

தமிழரும் இந்தியருமான சந்திரசேகர் (Subramaniyam Chandrasekar 

1910-1995) அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். இக்கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1983ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபெல் பரிசு வழங்கப் பட்டது.  


மேலும் ஒரு நட்சத்திரம் கருந்துளையாக மாற வேண்டுமெனில்,

அதன் நிறை மட்டுமின்றி அதன் மையத்தின் நிறையும் 

(mass of the core) அதிகமாக இருக்க வேண்டும். சூரியனின் நிறையை விட 

2.8 மடங்கு அதிகமாக ஒரு நட்சத்திரத்தின் மையத்தின் (core)

நிறை இருந்தால், அது கருந்துளையாக மாறும். இங்கு நட்சத்திரத்தின் 

நிறைக்கும் அதன் மையத்தின் நிறைக்கும் (mass of the core) இடையிலான 

வேறுபாட்டை வாசகர்கள் நன்கு உணர வேண்டும். எந்த ஒரு 

நட்சத்திரத்திலும், அதன் மையத்தில்தான் அணுக்கருப் பிணைவு 

(nuclear fusion)  நடைபெறுகிறது.


நிறை குறைந்த நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக ஒன்றிணைவதும், நிறை மிகுந்த நட்சத்திரங்களில் 

இரும்பு அணுக்கள் (Fe)  வரை அணுக்கருப் பிணைவு நடைபெறுவதும்    

(nuclear fusion) எங்கு நடைபெறுகின்றன? அவை நட்சத்திரங்களின்

மையப்பகுதியில்தான் (core) நடைபெறுகின்றன.எனவே ஒரு நட்சத்திரத்தின்  

மையப்பகுதியம் அதன் நிறையும் அதைக் கருந்துளையாக மாற்றுவதில்

முக்கியத்துவமான பங்கு வகிக்கின்றன.  எனவே சூரியனின் நிறையை விட 

ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியின் நிறை 2.8 மடங்கு அதிகம் 

இருந்தால், ஒரு சூப்பர்நோவா வெடிப்புக்குப் பின்னர் அந்த 

நட்சத்திரம் கருந்துளையாக மாறும். மேற்கூறிய நிபந்தனைகளின்            

அடிப்படையில் பரிசீலிக்கும்போது, நமது சூரியனும் மற்றும் அதைப்போன்ற 

ஆற்றல் குறைந்த நட்சத்திரங்களும் ஒருபோதும் கருந்துளையாக மாறப்போவதில்லை என்பது புலப்படுகிறது.


மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களுக்கும் பிறப்பு இறப்பு 

உண்டு. தமது அந்திம காலத்தில் நட்சத்திரங்கள் அ) வெள்ளைக் குள்ளன் 

ஆ) நியூட்ரான் நட்சத்திரம் இ) கருந்துளை ஆகியவற்றில் பொருத்தமான 

ஒன்றாக உருமாறித் தமது இறுதியைச் சந்திக்கும். இதுவே 

நட்சத்திரங்களின்  இயற்கை.    


இந்த இடத்தில் காரல் ஸ்க்வார்ச்சில்டு (Karl Schwarzchild 

1873-1916) என்னும் ஜெர்மானிய இயற்பியலாளரை நினைவுகூர வேண்டும். 

பொதுச்சார்பியலில் கூறப்பட்ட ஐன்ஸ்டைனின் புலச் சமன்பாடுகளுக்கு

(Einstein's  Field equations) மிகத் துல்லியமான தீர்வை 1916ஆம் ஆண்டிலேயே   

கண்டறிந்தவர் ஸ்க்வார்ச்சில்டு. இவரின் தீர்வில் வருகின்ற, பௌதீக ரீதியான 

அளவே (physical parameter) ஸ்க்வார்ச்சில்ட் ரேடியஸ் (Schwarzchild radius).


ஸ்க்வார்ச்சில்டின் வினோதமான கூற்று என்னவெனில், எந்த ஒன்றையும் 

கருந்துளையாக மாற்றலாம் என்பதே. அப்படி மாற்ற வேண்டுமெனில், அப்பொருளை அதன் ஸ்க்வார்ச்சில்டு ஆரத்திற்கு 

(Schwarzchild radius) குறைக்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார்

காரல் ஸ்க்வார்ச்சில்டு. அப்படியானால் ஒரு யானையைக் கருந்துளையாக 

மாற்ற இயலுமா? மாற்ற இயலும் என்பதே ஸ்க்வார்ச்சில்ட்டின் பதில்.

அதற்கான சூத்திரத்தையும் (formula)  அவர் உருவாக்கி இருந்தார்.


70 கிலோகிராம் நிறையுள்ள ஒரு மனிதனை, கருந்துளையாக மாற்ற 

வேண்டுமெனில், அம்மனிதனின் ஸ்க்வார்ச்சில்ட் ஆரத்தை 

10^minus 25 மீட்டர் என்ற அளவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்

ஸ்க்வார்ச்சில்டு (மனிதனுக்கான ஸ்க்வார்ச்சில்டு 

ஆரம் = 1.04 x 10^minus 25 மீட்டர்).


கருந்துளைகள் நமது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பவை.

அவை அடிப்படையான இயற்பியல் பொருட்கள் (fundamental physical objects).

கருந்துளைகள் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன.


அ) நுண்ணிய கருந்துளைகள் (micro black holes). இவை அளவில் (size) ஒரு 

அணுவின் அளவே (10^minus 10 மீட்டர்)  இருக்கும்.

ஆ) நட்சத்திரக் கருந்துளைகள் (stellar black holes). இவை நடுத்தர 

அளவிலானவை. பொதுவாக இவை சூரியனின் நிறையை விட 

20 மடங்கு அதிக நிறை உள்ளவையாக இருக்கும்.

இ) பெருநிறைக் கருந்துளைகள் (supermassive black holes). இவை மிகவும் 

பிரம்மாண்டமானவை. இவற்றின் நிறையானது ஒரு மில்லியன் 

சூரியனின் நிறையை விட அதிகம்.


ஒவ்வொரு பெரிய காலக்சியின் மையத்திலும் ஒரு பெருநிறைக்

கருந்துளை இருப்பதற்கான அறிவியல் சான்றுகள் உள்ளன.  

நமது பால்வீதி காலக்சியின் மையத்தில் ஒரு பெருநிறைக்

கருந்துளை உள்ளது. அதன் பெயர் சகிட்டாரியஸ் ஏ (Sagittarius A).

இது நான்கு மில்லியன் சூரிய நிறைக்குச் சமமானது.


1990 முதலே வானியலாளர்களின் குழுக்களை நியமித்து 

சகிட்டாரியஸ் ஏ குறித்து தொடர்ச்சியாக ஆய்வு நடத்தியும்,

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகளைப் பயன்படுத்தியும் 

புதிய உத்திகளைக் கையாண்டும் நமது பால்வீதியின் மையத்தில் உள்ள பெருநிறைக் கருந்துளையைக் கண்டுபிடித்தனர் நோபெல் பரிசாளர்களான

ரெயின்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்டிரியா கெஸ் ஆகிய இருவரும்.

1960களில் குவாசார்கள் (quasars) கண்டுபிடிக்கப் பட்டன. காலக்சிகளின் நடுவில்

பெருநிறைக் கருந்துளைகள் இருக்கக்கூடும் என்ற கருத்துக்கு 

குவாசார்கள் வலு சேர்த்தன. பரிசாளர்கள் ஜென்செல் மற்றும் ஆண்டிரியா கெஸ் இருவரும் குறைந்தது முப்பது பெரும் பிரகாசமான நட்சத்திரங்களைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்தனர். 1990 முதலான முப்பது ஆண்டுகளின் கடின உழைப்பு அவர்களுக்கு இவ்வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.     

கருந்துளைகள் பெரும் நிறை கொண்டவை என்பதால் பெரும் ஈர்ப்புச் சக்தி கொண்டவையாக இருப்பது இயற்கை. ஒரு கருந்துளையின் ஈர்ப்புச் சக்தி அசுரத் தனமானது 

எனவே, அதனுள்ளிருந்து எதுவும் வெளியேற இயலாது. ஏனெனில் கருந்துளையில் இருந்து ஒளி வெளியேற வேண்டுமெனில்,     

அதன் விடுபடு திசைவேகம் (escape velocity) அரக்கத் தனமாக இருக்க 

வேண்டும். உதாரணமாக பூமியின் மேற்பரப்பின் விடுபடு

 திசை வேகம் (escape velocity) 11,186 meter/sec ஆகும். இதன் பொருள் என்ன?

பூமியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் இருந்து, ஏதேனும் 

ஒரு வாயு பூமியை விட்டு வெளியேற வேண்டுமெனில், அது வினாடிக்கு 

11,186 மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும். அதாவது வினாடிக்கு 

11 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். இந்த வேகம் சாத்தியமற்றது.

எனவேதான் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் 

அனைத்தும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டன.  


இது போலவே, ஒளியின் வேகத்தை விட (வினாடிக்கு 3 லட்சம் கிமீ) 

அதிகமாக விடுபடு திசை வேகம் இருந்தால் மட்டுமே கருந்துளையில் 

இருந்து ஒளியால் வெளியேற இயலும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் கருந்துளைக்குள் சென்ற எந்த ஒன்றும் ஒருபோதும் வெளியேறுவதில்லை.    


ஜனவரி 1965ல், தமது 34ஆவது வயதில், கருந்துளைகள் இருக்கின்றன என்ற கருத்தை முன்மொழிந்து ரோகர் பென்ரோஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார். பொதுச்சார்பியல் கோட்பாட்டின் ஆகச்சிறந்த 

பங்களிப்பாக அது இன்றளவும் கருதப் படுகிறது. ராட்சத நட்சத்திரங்களின் 

பரிணாம வளர்ச்சியை மிக இயற்கையாக முடிவுக்குக் கொண்டு

வந்து விடுகிறது ஒரு கருந்துளை. 


ஸ்டீபன் ஹாக்கிங்குடன் இணைந்து தனிஒருமைத் தேற்றங்களை 

(singularity theorems) உருவாக்கி நிரூபித்தார் பென்ரோஸ். ஒரு கருந்துளையானது 

எப்போதுமே ஒரு தனிஒருமையை (singularity) தனக்குள் மறைத்து வைத்துக் 

கொண்டிருக்கிறது என்ற உண்மையை நிரூபித்தார் பென்ரோஸ்.

காலமும் வெளியும் ஒரு தனிஒருமையில் முடிவுக்கு வந்து 

விடுகின்றன. தனிஒருமையின்போது இயற்பியலின் விதிகள் 

செல்லுபடி ஆவதில்லை. ஆக இன்றளவும் கருந்துளைகளைச் 

சுற்றி பெரும் மர்மங்கள் நிலவுகின்றன. இவை காலப்போக்கில் 

ரோகர் பென்ரோஸ் போன்றோரின் பெரும் மேதைமை நிறைந்த 

அறிவியலின் வீச்சுகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.


நோபெல் பரிசுக்குழுவானது மிகவும் கறாராக ரோகர் பென்ரோசுக்கு

கருந்துளைகள் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக மட்டுமே 

நோபல் பரிசை வழங்கி உள்ளது. ஆனால் கருந்துளைகளையம்  

தாண்டி ரோகர் பென்ரோசின் சிந்தனை விரிகிறது. இந்தப் 

பிரபஞ்சம் குறித்தும் பேரண்டவியல் குறித்தும் ஒருங்கிணைந்த 

முற்றிலும் புதிதான பார்வையைக் கொண்டுள்ளார் பென்ரோஸ்.

தமது புதிய பார்வையை கணக்கற்ற தமது நேர்காணல்களில் 

வெளிப்படுத்தி வருகிறார் பென்ரோஸ். 

 

ஒற்றைப் பிரபஞ்சம் (single universe) என்ற கருத்தில் இருந்து 

பென்ரோஸ் வெகுவாக விலகி உள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட

பிரபஞ்சம் உள்ளது என்று கருதும் பன்மைப் பிரபஞ்சம்

(multiverse) என்ற கருத்தால் ஈர்க்கப் பட்டுள்ளார். எனினும் 

இவை அனைத்தும் இன்றளவும் அனுமானங்களே. எந்த 

ஒன்றும் எவராலும் நிரூபிக்கப் படவில்லை. அதே நேரத்தில் 

இக்கருத்துக்கள் மக்களிடையேயும் விஞ்ஞானிகளிடையேயும்  

செல்வாக்குப் பெற்று வருவதையும் நாம் காணத்  தவறுவது

கூடாது. சரியானது நிலைக்கும்! தவறானது நீர்க்குமிழியாய் 

வாழ்ந்து மறைந்து விடும். இதற்கு அறிவியல் உத்தரவாதம் 

அளிக்கிறது.

*******************************************************************

 

     


           


      

      

  

    

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக