தற்குறிகளுக்கு எதிராக கமல்!
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
கமல் ஹாசன் குறித்த எனது முந்தைய கட்டுரை
மிகவும் எளிமையாக, கமல் சரியானவரே என்ற
உண்மையை மட்டும் சுட்டி விட்டுச் செல்கிறது.
சினிமா என்னும் கலைத்தேரை காடு கரையெல்லாம்
கொண்டு சேர்த்தவர் கமல். தமிழ்ச் சமூகத்தில்
தமது தடத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்தவர்
கமல். அவரின் அரசியல் சிறுபிள்ளைத் தனங்களை
வைத்து, அவரின் கலை மேன்மையை ஒதுக்கி
விட முடியாது.
இதையே எனது முந்தைய கட்டுரை வலியுறுத்துகிறது.
தற்போது எழுத்தாளர் ஜெயமோகன் கமல் குறித்து
எழுதியவற்றைப் படிக்க நேர்ந்தது. (ஜெயமோகனின்
இணையதளம், 07.11.2010, "கமல், வெண்முரசு, ஒரு பதில்")
அதில் நவீன இலக்கியத்தையே தமக்கு அறிமுகப்
படுத்தி வைத்தவர் கமல் என்று அதீத உயர்வு நவிற்சி
அணியுடன் எழுதி உள்ளார் ஜெயமோகன். இது
உண்மையா? ஜெயமோகனுக்கே இலக்கிய அறிமுகம்
செய்து வைக்கும் அளவுக்கு கமல் மாபெரும்
இலக்கியவாதியா? யாமறியோம் பராபரமே.
அக்கட்டுரையில் ஜெயமோகன் மேலும் கூறுகிறார்.
" எல்லா அறிவியக்கச் சாதனைகளையும் கமல்
அறிந்திருப்பார்; (அவை குறித்து) பெருமிதத்துடன்
பேசிக் கொண்டிருப்பார்" என்கிறார் ஜெயமோகன்.
இது கமல் பற்றி நன்கறிந்தோர் அனைவருக்கும்
தெரிந்த ஒன்றே.
அடுத்து ஜெயமோகன் கூறுவது பெரும் முக்கியத்துவம்
உடையது. " நான் அவரைச் சந்தித்த நாட்களில், அவர்
பெரும் கிளர்ச்சியுடன் விளையனூர் ராமச்சந்திரன்
(நரம்பியல் நிபுணர்) எழுதிய Phantoms in the brain பற்றிப்
பேசிக்கொண்டிருந்ததை நினைவு கூர்கிறேன்" என்கிறார்
ஜெயமோகன்.
Phantoms in the brain என்ற புத்தகம் உலகைக் குலுக்கிய
பத்துப் புத்தகங்களில் ஒன்று. 1998ல் எழுதப் பட்டது.
எழுதியவர் உலகப்புகழ் பெற்ற நரம்பியல் நிபுணரும்
பேராசிரியருமான விளையனூர் ராமச்சந்திரன் (வயது 69).
பச்சைத் தமிழரான இவர் ஸ்டான்லி மருத்துவக்
கல்லூரியில் MBBS படித்தவர். பின் கேம்பிரிட்ஜில்
டாக்டரேட் முடித்து, தற்போது அமெரிக்காவில்
கலிஃபோர்னியா பல்கலையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு அல்லது அதற்கு முந்தி, சென்னை வந்திருந்த
டாக்டர் ராமச்சந்திரன் ஒரு அரங்கக் கூட்டத்தில் பேசினார்.
இக்கூட்டத்திற்கு கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி
ஏற்பாடு செய்திருந்தார். அவரின் வராக மிகிரர் அறிவியல்
மன்றம் (Varaha Mihirar Science Forum) இக்கூட்டத்தை நடத்தியது.
தெரிந்தெடுக்கப்பட்ட audienceக்கான இந்தக் கூட்டத்தில்
முழுமையாகப் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இதற்கான அழைப்பை பத்ரி சேஷாத்ரி எனக்கு விடுத்ததே
காரணம். அக்கூட்டத்தில் பங்கேற்று டாக்டர் ராமச்சந்திரனை
நேரில் சந்திக்கவும் அவரின் உரையைக் கேட்கவும் எனக்கு
வாய்ப்பு நல்கிய பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு நன்றி.
இக்கூட்ட நிகழ்வு யூடியூபில் பதிவேற்றம் செய்யப் பட்டதாக
அறிகிறேன். தேடிப் பாருங்கள். நிற்க.
1998ல் வெளியான இந்தப் புத்தகத்தை, வெளியான
உடனேயே கமல் வாங்கி இருக்கக் கூடும். அப்போதே
அமேசான் நிறுவனம் புத்தக விற்பனையில் ஈடுபட்டு
இருந்தது. அல்லது ஏதேனும் ஒரு வழியில் கமல்
அப்புத்தகத்தை வாங்கிப் படித்திருக்கக் கூடும்.
மனித மூளையின் பேரதிசயங்கள் (Phantoms in the brain)
என்னும் இப்புத்தகத்தை வாங்கிய கமல்
அ) அதைப் படித்தார் ஆ) அது பற்றிச் சிந்தித்தார்.
ஆனால் படித்தலும் சிந்தித்தலும் மட்டுமே போதாது.
படித்தது குறித்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான்
புத்தகம் தரும் அறிவைப் பெற முடியும். ஆனால்
விவாதிப்பதற்கு நாதி இல்லாமல் கமல் கஷ்டப் பட்டார்.
படித்தலும் சிந்தித்தலும் தனி ஒருவனால் செய்து விட
முடியும். ஆனால் விவாதித்தல் என்பது மற்றவர்களின்
பங்களிப்பையும் கோருவது. பாவம், அதற்கு எங்கே
போவார் கமல்? அவரின் சினிமாத் துறை நண்பர்கள்,
ஏனையோர் ஆகியோருடன் இது பற்றி விவாதிக்க
இயலாது. தமிழ்ப் பேராசிரியர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள்
ஆகியோர் அறிவியல் பின்னணி இல்லாமையால் நரம்பியல்
குறித்தா விவாதத்திற்குப் பயன்பட மாட்டார்கள்.
விவாதம் இல்லாமல் அறிவைப் பெறுதல் முழுமை அடையாது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், விவரம் தெரிந்த
யாருடனாவது விவாதித்து விட வேண்டும் என்ற
தீவிரத்துடன் கமல் அலைந்து கொண்டிருந்த
நேரத்தில்தான், ஜெயமோகன் அவரைச் சந்தித்து
இருக்க வேண்டும்.
ஆக ஜெயமோகனின் கூற்று, கமலின் அறிவுத் தேடலை,
அறிவைப் பெறுவதற்காக அவர் நடத்திய போராட்டத்தின்
வரலாற்றை எடுத்துச் சொல்கிறது. 24 மணி நேரமும்
சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக் கிடைக்கும் சோம்பேறிப்
பயல்களான கூத்தாடிகளின் உலகில் இருந்து கொண்டு,
சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் அறிவுத் தேடலுடன்
கமல் இருந்தார் என்ற உண்மை பலரும் அறியாத ஒன்று.
படித்தல், சிந்தித்தல், விவாதித்தல் என்ற செயல்பாடுகளின்
வாயிலாகவே எவரும் அறிவைப் பெற முடியும். ஆனால்
விவாதித்தல் என்ற செயல்பாடு கற்றறிந்த, அறிவுத் தேடலுள்ள
பிறரின் ஒத்துழைப்புடன் மட்டுமே கைகூடும். எனவேதான்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்கிறது தமிழ் நீதிநூல்.
கமலுக்கு நேர்ந்தது அறிவுத் தேடல் உள்ள எவர்
ஒருவருக்கும் நிகழ்வதுதான். சதுரங்கத்தில் சிசிலியன்
டிபன்ஸ் பற்றி விவாதிக்க விரும்பும் ஒருவர், தமிழ்ச்
சூழலில் யாருடன் விவாதிப்பார்?
தமிழ்ச் சூழல் என்பது அரைவேக்காட்டுத் தமிழ்ப் பண்டிட்
முட்டாள்களால் ஆனது. துளி கூட அறிவியல் அறிவற்ற
போலி இடதுசாரிகள்
போலி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள்
போலி நக்சல்பாரிகள்
ஆகியோர் இங்கு தங்களின் தலையைச் சுற்றி
ஒளிவட்டம் சுழல்வதாகக் கருதிக் கொண்டு, தங்களின்
அறியாமையை வெளிப் படுத்துவார்கள். இப்படிப்
பலருக்கு உடலெங்கும் பழுக்கக் காய்ச்சிய இரும்பால்
சூடு போட்டு அனுப்பி இருக்கிறேன். நிற்க.
கமலஹாசன் அறிவுலகின் பிரஜை. அறிவுலகம் அவரைப்
பாதுகாத்து நிற்க வேண்டிய கடப்பாடு உடையது.
எனவே 360 டிகிரியில் இருந்தும், புழுவினும் இழிந்த
ஈனத் தற்குறிகள் மேற்கொள்ளும் மூர்க்கத் தனமான
தாக்குதலில் இருந்து, கமலைப் பாதுகாப்போம்.
----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஒரு நிகழ்வில் தான் நாத்திகன் அல்லன் என்றும்
பகுத்தறிவுவாதி என்றும் கமல் கூறுகிறார். நாத்திகன்
என்பதற்கும் கடவுளை மறுப்பவன் என்று பொருள் உண்டு.
இப்பொருளை யாராலும் இல்லாமல் செய்து விட முடியாது.
எனினும் தான் ஒரு பகுத்தறிவுவாதி என்று அழுத்தம்
திருத்தமாக கமல் கூறுவது வரவேற்கத் தக்கது.
தன்னைப் பகுத்தறிவுவாதி என்று சொல்வதன் மூலம்,
இங்கர்சால் பாணி கடவுள் மறுப்பைப் பின்பற்றுகிறார்
கமல்.
எனினும், தான் ஒரு பொருள்முதல்வாதி என்று
என்றைக்கு கமல் உறுதிபடக் கூறுகிறாரோ
அன்றுதான் அவர் முழுநிறைவான கடவுள் மறுப்பாளராக
நியூட்டன் அறிவியல் மன்றத்தால் ஏற்கப் படுவார்.
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக