புதன், 25 நவம்பர், 2020

ஆலன் டூரிங்: மானுடத்தின் பெருமிதம்!

------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம்.

------------------------------------------------------------------- 

எல்லாம் இன்ப மயம் என்று கர்நாடக இசையின்

தமிழ்ப்பாடல் ஒன்று உண்டு. முன்பு எம் எல் வசந்தகுமாரியும் 

இன்று நித்யஸ்ரீ மகாதேவனும் பாடிச் சிறப்பித்த அப்பாடல் 

யூடியூபில் உள்ளது. அதை இதுவரை 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


அது போல, எல்லாம் கணினி மயம் என்று நாம் வாழும் உலகம்

ஆகி விட்டது. இதெல்லாம் என்றோ நிகழ்ந்து முடிந்து விட்டது.

இதன் வளர்ச்சிப் போக்கில், இன்று செயற்கை நுண்ணறிவு 

(Artificial Intelligence) குதிரைப் பாய்ச்சலில் உலகை ஆக்கிரமித்து 

வருகிறது. அணு ஆயுதங்களின் பராமரிப்பு முதல் 

ஸ்மார்ட் போனில் இளம்பெண் செல்பி எடுப்பது வரை 

செயற்கை நுண்ணறிவே மனிதனுக்குக் கைகொடுக்கிறது.      


பங்குச் சந்தை நடவடிக்கைகளிலும்கூட செயற்கை 

நுண்ணறிவு பெரும்பங்கு வகிக்கிறது. எந்த நிறுவனத்தின்

பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம் என்று முடிவு 

எடுப்பதில்கூட இது செல்வாக்குச் செலுத்துகிறது.

எனினும் செயற்கை நுண்ணறிவின் முன்கணிப்புகள் (predictions) 

இன்னும் போதிய நம்பகத் தன்மையை அடையவில்லை.


எடுத்த எடுப்பிலேயே செயற்கை நுண்ணறிவு பெருவெற்றி 

அடைந்தது சதுரங்க விளையாட்டில்தான். உலக சதுரங்க 

சாம்பியனுடன் செயற்கை நுண்ணறிவு படைத்த 

கணினிகள் மோதின.


அப்போதைய உலக சாம்பியன் காஸ்பரோவ் 

(Garry Kasparov பிறப்பு: 1963) உடன் IBM நிறுவனத்தின் 

மீக்கணினி டீப் ப்ளூ (Deep Blue) விளையாடியது.

1996-1997 ஆண்டுகளில் இந்த ஆட்டங்கள் நடைபெற்றன.


1984 முதல் 2005 வரை 15 ஆண்டுகள் (மொத்தம் 

255 மாதங்கள்) சதுரங்கத்தில் உலக சாம்பியனாக 

இருந்தவர் காஸ்பரோவ். இவரின் உச்ச அளவிலான ஈலோ 

மதிப்பீடு (Elo rating) 2851ஆகும். இது ஜூலை 1999ல் 

அவர் பெற்றது. ஆர்பட் ஈலோ (Arpad Elo 1903-1992) என்னும் 

ஹங்கேரிய-அமெரிக்க இயற்பியல் பேராசிரியர் உருவாக்கிய 

சதுரங்க வீரர்களின் தரவரிசையே ஈலோ மதிப்பீடு  ஆகும்).      


பெப்ரவரி 1996ல் பிலடெல்பியாவில் டீப் ப்ளூவுடன் நடைபெற்ற 

முதல் ஆட்டத்தில் மொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி 

காஸ்பரோவ் தோல்வி அடைந்தார்; டீப் ப்ளூ வெற்றி பெற்றது.

கறுப்புக் காய்களுடன் விளையாடிய காஸ்பரோவ் 

37ஆவது நகர்த்தலில் தமது தோல்வியை ஒப்புக் 

கொண்டு விலகினார் (resigned).


எனினும் சுதாரித்துக் கொண்ட காஸ்பரோவ், அடுத்தடுத்த 

ஆட்டங்களில் கவனத்துடன் விளையாடி, கணினியைத் 

தோற்கடித்தார். மொத்தம் நடைபெற்ற ஆறு ஆட்டங்களில்  

நான்கு புள்ளிகளை காஸ்பரோவ் பெற்றார். இரண்டு புள்ளிகளை 

மட்டுமே பெற்று டீப் ப்ளூ தோல்வி அடைந்தது.         


தொடர்ந்து 1997ல் நியூயார்க்கில் இப்போட்டியின் 

மறு பந்தயம் (rematch) நடைபெற்றது. மறுபந்தயத்துக்கு 

காஸ்பரோவ் ஒப்புக் கொண்டார். இம்முறை 

டீப் ப்ளூ வென்று விட்டது. மொத்தம் நடைபெற்ற 

ஆறு ஆட்டங்களில், 3.5 புள்ளிகள் பெற்று டீப் ப்ளூ 

வென்றது. 2.5 புள்ளிகள் மட்டுமே பெற்ற 

காஸ்பரோவ் தோல்வி அடைந்தார். 1997 பந்தயத்தை 

விவரித்து இரண்டு ஆவணப் படங்கள் வெளிவந்தன.

1. The Man versus the machine (இயக்கம்: பிராங்க் மார்ஷல்).

2. Game over: Kasparov and the machine (இயக்கம்: விக்ரம் ஜெயந்தி)     

    

பங்குச் சந்தையும் சதுரங்கமும் மட்டுமின்றி, செயற்கை

நுண்ணறிவு இன்னும் பல்வேறு துறைகளையும் 

ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் போன் 

(SMART mobile phone) வைத்திருக்கும் எவர் ஒருவரும் 

இதைத் தமது அன்றாட வாழ்க்கையின் அனுபவத்தில்

இருந்து உணரலாம். 

 

சாம்சங்கின் காலக்சி (Galaxy), 

ஹுவேய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் (Huawei's Mate X)

கூகிள் நிறுவனத்தின் பிக்சல் (Pixel phones)

ஆப்பிள் ஐ போன்கள் (Apple i phones)

ஆகிய ஸ்மார்ட் தொலைபேசிகள் தற்போது 

2020ல் 35 சதம் வரையிலான செயற்கை நுண்ணறிவைக் 

கொண்டிருக்கின்றன என்று மொபைல் சந்தையின் 

ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் செயற்கை 

நுண்ணறிவு மொபைல்களில் 3 சதம் அளவுக்கு மட்டுமே இருந்தது.


ஆக எங்கு நோக்கினும் செயற்கை நுண்ணறிவு என்பது 

மனிதனை ஆளுகை செய்து வருகிறது என்பதும் 

வரும் நாட்களில் அவற்றின் ஆளுகை கிடுக்கிப்பிடியாக 

மனிதர்கள் மீது இருக்கும் என்பதும் உள்ளங்கை 

நெல்லிக்கனி.

  

இன்று இந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ள செயற்கை 

நுண்ணறிவு யாருடைய கொடை? இதையெல்லாம் 

கண்டு பிடித்தது யார்? இந்தக் கேள்விக்கு உலகம் 

முழுவதும் உள்ள இளைஞர்களும் மாணவர்களும்

ஒரே குரலில் ஆலன் டூரிங் என்று பதிலளிப்பர்.


ஆலன் டூரிங் (Alan Turing 1912-1954) ஒரு பிரிட்டிஷ் கணித 

மேதை. கணிப்பொறியின் தந்தை என்றும். செயற்கை  நுண்ணறிவின் 

தந்தை என்றும் இன்றைய தலைமுறை இவரை அழைக்கிறது.. 

பலவேறு தலைமுறை வளர்ச்சியைக் கணினிகள் கண்டு 

விட்டன என்றபோதிலும், இன்றைக்கும் ஒவ்வொரு கணினியும் 

ஆலன் டூரிங் உருவாக்கிய விதிகளுக்குக் கட்டுப்பட்டே 

வேலை செய்கிறது. .

 

முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கணிப்பொறியின் 

தந்தை யார் என்ற கேள்விக்கு சார்லஸ் பாபேஜ் (Charles Babbage 1791-1871) 

என்று பதிலளித்தனர், இப்பதில் தவறானதா? பரிசீலிப்போம்.

சார்லஸ் பாபேஜ் இங்கிலாந்து நாட்டின் கணித மேதை ஆவார்.

இன்றைய கணினியை அல்ல, பெரிதும் இயந்திரத் தன்மை 

வாய்ந்த ஒரு கணிப்பொறியையே சார்லஸ் பாபேஜ் 

உருவாக்கி இருந்தார். கணிப்பொறி உருவாக்கத்திலும், அது குறித்த 

மானுட சிந்தனையிலும்  நிச்சயம் சார்லஸ் பாபேஜ் 

முன்னோடி ஆவார். எனவே கணினிகளின் முன்னோடி 

(pioneer of computer) என்ற பட்டமே அவருக்குச் சாலப் பொருந்தும்.


அதே நேரத்தில் பெரும் கணித மேதையான ஆலன் டூரிங் 

மிகச் சரியாகவே கணினியின் தந்தை என்றும் செயற்கை 

நுண்ணறிவின் தந்தை என்றும் போற்றப் படுகிறார். 

தமது  கணித அறிவு முழுவதையும் தமது தாய்நாட்டின் நலனுக்கே 

ஆலன் டூரிங் செலவிட்டார். எனினும்  அதற்குரிய அங்கீகாரத்தை 

அவருக்கு இங்கிலாந்து அரசு வழங்கவில்லை. 


இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி உள்ளிட்ட 

பாசிச நாடுகளின் சங்கேத மொழியில் அமைந்த ரகசியத் திட்டங்களை 

அம்பலப்படுத்தும் பணியில், அரசின் உத்தரவின் பேரில் அவர் 

தம்மை முழுமையாக  ஈடுபடுத்திக் கொண்டார்.


போரில் ஜெர்மனி வெகு தாராளமாகப் பயன்படுத்திய 

எனிக்மா எந்திரத்தின் (Enigma machine, an encryption device) 

சங்கேத முறையில் எழுதப்பட்ட செய்திகளை உடனுக்குடன்

வெளிப்படுத்தி தாய்நாட்டு ராணுவத்திற்கு வழங்கினார்

ஆலன் டூரிங். இது இங்கிலாந்தின் தலைமையிலான நேச நாடுகள் 

(Allies) பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் வெற்றி பெறுவகற்குப் 

பேருதவியாய்  அமைந்தது. 


இரண்டாம் உலகப்போரின் மிக நீண்ட ராணுவ நடவடிக்கையான 

அட்லான்டிக் போரில் (Battle of Atlantic 1939-1945)

நேச நாடுகள் வெற்றி பெறுவதற்கு, பாசிச ஜெர்மனியின்  

சங்கேதச் செய்திகளை ஆலன் டூரிங் உடனுக்குடன் அம்பலப் 

படுத்தித் தந்ததுதான் காரணம் என்று கருதப்பட்டது. 

இதன் விளைவாக  அவரின் ஒவ்வொரு அசைவும் எதிரிகளுக்குத் தெரியாவண்ணம் ரகசியமாக வைக்கப்பட்டது. வெளியுலகத்திற்கு 

அவரின் பங்களிப்பும் அதன் மகத்துவமும் தெரியாமலே இருந்தன.


டூரிங் எந்திரம் (Turing machine) 1936ல் ஆலன் டூரிங்கால் 

கண்டுபிடிக்கப் பட்டது. இது ஒரு அனுமான அடிப்படையிலான 

எந்திரம் (hypothetical machine). உண்மையில் இது கணக்கீடு 

சார்ந்த ஒரு கணித முன்மாதிரிச் சித்திரம் (mathematical model)

ஆகும். இதன் விதிகளுக்கு உட்பட்டே உலகின் அனைத்துக் 

கணினிகளும் இயங்குகின்றன.


அடுத்து "டூரிங் சோதனை"யை (Turing test) 1950ல் உருவாக்கினார் 

ஆலன் டூரிங். இது செயற்கை நுண்ணறிவுத் துறையில் 

(Artificial Intelligence) பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆக கணினிக்கு 

டூரிங் எந்திரமும், செயற்கை நுண்ணறிவுக்கு டூரிங் சோதனையும் 

என்று ஆலன் டூரிங் அறிமுகப் படுத்திய இவ்விரண்டும் இன்றைக்கும் 

பொருந்துவதாய் காலத்தை வென்று நிற்கின்றன. செயற்கை 

நுண்ணறிவுடன் கூடிய கணினிகளின் பிசாசுத் தனமான 

வளர்ச்சிக்கும், எதிர்காலத்தில் இவை மனிதனுக்குக் கட்டுப் படாமல் 

போய்விடுமோ என்ற அச்சத்தின் தோற்றுவாய்க்கும் ஆலன் 

டூரிங் காரணமாகி இருக்கிறார். 1954ல் அவர் மறைந்து, 

60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் கணினிகளின் மீது அவரின்  

கோட்பாடுகள் சக்தி மிக்க செல்வாக்குச் செலுத்துகின்றன.        


டூரிங் சோதனையை (Turing test) 1950ல் அறிமுகப் படுத்தியபோது

அதற்கு "பொய் முலாம் ஆட்டம்" (The imitation game) என்று பெயர் 

சூட்டினார் டூரிங். ஒரு கணினியானது மனிதனைப் போல 

நடந்து கொள்கிறதா என்று கண்டறிவதுதான் இச்சோதனையின் 

நோக்கம்.


பொய் முலாம் ஆட்டத்தில், அதாவது டூரிங் சோதனையில் 

மூன்று பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

அ) மனிதனைப் போல நடந்து கொள்ள வேண்டிய ஒரு கணினி,

ஆ) ஒரு மனிதன், 

இ) இவ்விருவரின் நடத்தையை மதிப்பீடு செய்யும் ஒரு மதிப்பீட்டாளர்.  

கணினியானது மனிதனைப் போல் சிந்திக்கிறதா, 

மனிதனைப் போல் நடந்து கொள்கிறதா 

என்பதை அறிவதே இந்த ஆட்டத்தின் நோக்கம்.  


நல்வாய்ப்பாக ஆலன் டூரிங்கின் வாழ்க்கை ஆவணப் படுத்தப் 

பட்டுள்ளது. 2014ல் The Imitation Game என்ற பெயரில் ஓர் ஆங்கிலப் படம்

வெளியானது. 1954ல் இறந்தவரின் வாழ்க்கை பற்றி 2014ல்தான் 

அறிந்து கொள்ள முடிந்தது. மார்ட்டன் டில்டம் (Morten Tyldum) இயக்கிய 

இப்படம் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் 

சங்கேதக் குறியீட்டுச் செய்திகளை ஆலன் டூரிங் தமது 

குழுவினருடன் எப்படி உடைத்துநொறுக்கினார் என்பதை 

தத்ரூபமாகக் காட்டும் படம். படம் பார்க்கிற அனைவரையும் 

இருக்கை நுனிக்குக் கொண்டு செல்லும் அளவு கிளர்ச்சியூட்டும் 

(thrilling) படம் இது.   


ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சமூகமானது எந்த ஒரு 

முக்கியமான சமூக நிகழ்வையும் திரைப்படமாக எடுத்து விடுகின்ற 

வழக்கத்தைக் கொண்டது. இதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு   

வரலாறு போய்ச் சேருகிறது. The Imitation Game திரைப்படம் இரண்டாம் 

உலகப்போரின் வெளித்தெரியாத உண்மைகளை வெளிச்சம் 

போட்டுக் காட்டுகிறது. 


பெருஞ்சாதனைகளைப் புரிந்த நிறைவுடன் பெயரும் 

புகழும் பெற்றிருந்த போதிலும் ஆலன் டூரிங் அற்பாயுளில் 

இறந்து போனார். 1954ல் தமது 41ஆம் வயதில் தற்கொலை 

செய்து கொண்டு இறந்து போனார் அவர். எந்தத் தாய்நாட்டுக்கு

விசுவாசத்துடன் உழைத்தாரோ, அந்த இங்கிலாந்து அவரிடம் 

முரட்டுத்தனமாக நடந்து கொண்டது.


அவர் ஓரினச் சேர்க்கையாளாராக இருந்தார் என்பதை 

இங்கிலாந்து அரசு மன்னிக்கத் தயாராக இல்லை. அப்போது 

நடப்பில் இருந்த சட்டங்களின்படி, ஓரினச் சேர்க்கை 

இங்கிலாந்தில் கிரிமினல் குற்றமாகவே கருதப் பட்டது.

எனவே ஆலன் டூரிங்கிற்கு ரசாயன ஆண்மை நீக்கம் 

(chemical castration) செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த 

ஆலன் டூரிங் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.


ஒருவரின் பாலியல் நாட்டம் (sexual orientation) உயிரியல் ரீதியானதா

அல்லது உளவியல் ரீதியானதா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

உளவியல் ரீதியானது என்றால், அது அவருடைய விருப்பத்தைப் 

பொறுத்தது. அதாவது அவர் விரும்பினால் தமது பாலியல் 

நாட்டத்தை மாற்றிக் கொள்ள இயலும். அதாவது தன்பாலின 

நாட்டம் கொண்ட ஒருவர் எதிர்பாலின நாட்டத்திற்கு மாறிக் 

கொள்ளலாம். ஆனால் துரதிருஷ்ட வசமாக, எவர் ஒருவரின் 

பாலியல் நாட்டமும் உளவியல் சார்ந்தது அல்ல. மனிதர்களைப் 

பொறுத்தமட்டில் அனைவரின் பாலியல் நாட்டமும் (sexual orientation) 

உயிரியல் ரீதியானது என்று தற்போதைய மருத்துவ அறிவியல் 

முடிவு செய்துள்ளது.    


ஆக ஒருவரின் பாலியல் நாட்டம் உயிரியல் ரீதியானது

(biological)  என்பதால், அதை அவரால் மாற்றிக் கொள்ள

இயலாது. உயிரியல் ரீதியாக அவரின் பாலியல் நாட்டம் 

என்னவோ அதுவே அவர் சாகும் வரைக்கும் இருக்கும்.

இதன்படி ஒருவருக்கு தன்பாலின நாட்டம் இருக்குமென்றால்,  

அதை மாற்ற இயலாது. அது அவரின் குற்றமும் ஆகாது.


கருப்பாக இருப்பதும் சிவப்பாக இருப்பதும் ஒருவரின் 

விருப்பத்தைப் பொறுத்தது அல்ல. அது உயிரியல் ரீதியானது.

அது போல,  பாலியல் நாட்டமும் உயிரியல் ரீதியானது 

என்பதால், தன்பாலின நாட்டம் உடையவராக ஒருவர் இருப்பது 

கிரிமினல் குற்றம் ஆகாது. 


இங்கிலாந்து அரசு இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 

பெரும் வல்லரசாக இருந்தபோதும், அறிவியலுக்கு எதிரான 

பிற்போக்குக் கருத்துக்களின் பிடியில் சிக்கி இருந்தது.

இதன் விளைவாகவே ஆலன் டூரிங் அநியாயமாகப் 

படுகொலை செய்யப் பட்டார். பின்னாளில் தனது குற்றத்தை 

இங்கிலாந்து அரசு உணர்ந்து திருத்திக் கொண்டது.


2009 செப்டம்பரில் இங்கிலாந்துப் பிரதமர் கார்டன் பிரௌன், 

பிரிட்டிஷ் அரசின் சார்பாக ஆலன் டூரிங்கிற்கு இழைக்கப்பட்ட

அநீதிக்கு பகிரங்க மன்னிப்புக் கோரினார். மனிதத் தன்மையற்ற 

முறையில் பிரிட்டிஷ் அரசு நடந்து கொண்டதாக வருந்தினார்.


பிரிட்டிஷ் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி 

ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் இங்கிலாந்தில் நடைபெற்றது.

இதைத் தொடக்கி வைத்தவர் மென்பொறியாளர் ஜான் கிரஹாம் 

கம்மிங் (John Graham Cumming) என்பவர். மான்செஸ்டர் தொகுதியின் 

எம்.பியான ஜான் லீச் (John Leech), உயிரியல் பேராசிரியரும் 

உலகப்புகழ் பெற்ற நாத்திகருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் 

(Richard Dawkins)  ஆகியோர் ஆலன் டூரிங் ஆதரவு இயக்கத்தை 

மாபெரும் மக்கள் இயக்கமாக்கி வெற்றி கண்டனர்.


இதைத் தொடர்ந்து ஓரினச் சேர்க்கைக்காக சிறையில் 

இருப்போரை மன்னித்து விடுதலை செய்யும் ஒரு சட்டத்தை 

பிரிட்டிஷ் அரசு இயற்றியது. இச்சட்டம் ஆலன் டூரிங் 

சட்டம் (Alan Turing Law) என்று மக்களால் அழைக்கப் பட்டது.    

இவ்வாறாக ஒரு மாபெரும் கணிதமேதையின் வாழ்க்கை 

வரம்பு மீறிய சோகத்தில் மூழ்கிக் கிடந்தது நமது நெஞ்சைப் 

பிழியும் சோகம்! (முற்றும்)

*************************************************************** 


    

  

    



 

    






   

 


   


   

     

 

   

        

 

 

   

    

 

  


 

    


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக