திங்கள், 9 நவம்பர், 2020

தோழர்கள் மருதையனும் கார்முகிலும் 

நக்சல்பாரிகளா? 

SOC, TNML குழுக்கள் நக்சல்பாரி அமைப்புகள் அல்ல!

------------------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

முன்னாள் மாவட்டச் செயலாளர் 

NFTE BSNL, சென்னை மாவட்டம்.  

---------------------------------------------------------------------------------

இந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாக 

நக்சல்பாரி விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய எழுச்சி 

நிகழ்ந்தது. தொடர்ந்து திருத்தல்வாதத்தை எதிர்த்த 

போராட்டத்தின் ஊடாக புரட்சிகரமான கம்யூனிஸ்ட் 

கட்சி கட்டப் பட்டது.


1969 ஏப்ரல் 22 அன்று, லெனின் பிறந்த நாளன்று, CPI (ML)

கட்சி உதயமானது. மகத்தான புரட்சியாளர் தோழர்

சாரு மஜூம்தார் கட்சியின் முதல் பொதுச்செயலாளர் 

ஆனார். ஐந்து பேர் (அல்லது ஏழு பேர்) கொண்ட மத்தியக் 

கமிட்டியை அமைத்தார் சாரு மஜூம்தார். 

 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மார்க்சிய 

லெனினியக் கட்சியின் வீச்சு இருந்தது. சாரு 

மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று, நாடெங்கும் 

கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் 

படிப்பைத் துறந்து புரட்சியை நோக்கி வந்தனர்.

மகாத்மா காந்திக்குப் பிறகு, வேறு எந்தத் 

தலைவருக்கும் இல்லாதபடி, சாரு மஜூம்தாரின் 

அறைகூவலுக்கு மட்டுமே மக்களிடம் மரியாதை 

இருந்தது. இதையெல்லாம் கண்ட பீகிங் வானொலி 

சாருவை புரட்சியின் சுடரொளி என்று பாராட்டியது.


ஜங்கல் சந்தால் உள்ளிட்ட உள்ளூர்த் தலைவர்களையும் 

கனு சன்யால் போன்றோரையும் உள்ளடக்கியே கட்சி

கட்டி இருந்தார் சாரு மஜூம்தார். தாம் உயிரோடு 

இருக்கும்போது பீகாரைச் சேர்ந்த சத்திய நாராயண் 

சிங்கை  மட்டும் மத்தியக் கமிட்டியை விட்டும் கட்சியை

விட்டும் நீக்கினார். மற்றப்படி ஸ்தாபனப் பிரச்சினைகள் 

எதுவும் இல்லாமல் கட்சியின் செயல்பாடு சுமுகமாகவே

இருந்தது. இதனால் கொடிய சுரண்டல் நிகழும் பீஹார் 

தெலுங்கானா போன்ற இடங்களில் கட்சியால் வறிய 

விவசாயிகளை அணிதிரட்ட முடிந்தது. அறுவடையைக் 

கைப்பற்ற முடிந்தது. இந்த ஆரம்ப கால வெற்றிகள் 

கட்சி மற்றும் அணிகளின் உணர்வு மட்டத்தை உயர்த்தின.


அப்போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் 

இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அடக்குமுறையை ஏவினார். கொல்கொத்தாவில் ஒரு 

மறைவிடத்தில் இருந்த சாரு மஜூம்தார் கைது 

செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.  சிறையில் 

அவர் இறந்து விட்டார் அல்லது கொல்லப் பட்டு விட்டார்.

ஆக ஜூலை 1972ல் சாரு இறந்து விடுகிறார்.


1969 ஏப்ரலில் கட்சி தொடங்கப்பட்டது.

1972 ஜூலையில் பொதுச்செயலாளர் சாரு 

இறந்து விடுகிறார். ஆக, மூன்றாண்டுகள் மட்டுமே 

சாரு கட்சிக்குத் தலைமை ஏற்று வழிநடத்தினார்.


1969ல் கட்சி தொடங்கியதை அடுத்து, கட்சித் திட்டத்தை,

அதாவது இந்தியப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தை           

கட்சி உருவாக்கியது. 1970ல் உருவாக்கப்பட்ட இந்த 

வேலைத்திட்டம் 70 வேலைத்திட்டம் என்று அழைக்கப் 

படுகிறது. பல்வேறு மா-லெ கட்சிகள் இத்திட்டத்தையே 

இன்றுவரை எவ்வித மாற்றமும் இன்றிச் செயல்படுத்தி 

வருகின்றன.


1) இந்திய ஆளும் வர்க்கம் தரகு முதலாளிய வர்க்கம் 

2) இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரம் இல்லை 

3) நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் 

இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு 

4) புரட்சிக்குப் புறநிலைமைகள் கனிந்த ஒரு 

சமூகம் இந்தியச் சமூகம்     .  

5) வர்க்க எதிரிகளைப் படுகொலை செய்யும் அழித்தொழிப்பே  

(annihilation of class enemies) வர்க்கப் போராட்டத்தின் 

உயர்ந்த வடிவம் 


மேற்கூறியவையே கட்சியின் நடைமுறையாக இருந்தன. இந்தியப் 

புரட்சி என்பது சீனப்புரட்சியின் மறுபதிப்பே என்ற 

சிந்தனை கட்சி மொத்தத்திலும் ஆதிக்கம் செலுத்தியது.

"சீனத்தின் தலைவர் நமது தலைவர் 

சீனத்தின் பாதை நமது பாதை" 

என்னும் செயல்தந்திர முழக்கம் கட்சியையும் 

அணிகளையும் பிடித்தாட்டியது. இவை அனைத்துக்கும் 

தலைவர் என்ற முறையிலும் உணர்வுபூர்வமாகவும் 

சாரு மஜூம்தாரே பொறுப்பாவார். அவரும் அதை 

மறுக்கவில்லை.


சாரு உயிருடன் இருந்தபோதே, கட்சி தொடங்கிய 

குறுகிய காலத்திலேயே, 70 வேலைத்திட்டம் வகுக்கப்பட்ட 

உடனேயே, அழித்தொழிப்புக்கு எதிராகவும் மக்கள் திரள் 

பாதை வேண்டும் என்றும் கட்சியில் குரல்கள் ஒலிக்கத் 

தொடங்கி இருந்தன. நாடு முழுவதும் மக்கள் திரள் 

பாதையைக் கோரி, சிந்திக்கும் திறனுள்ள 

முன்னணிகளின் குரல்கள் மெலிதாகவும் வன்மையாகவும்

கேட்க ஆரம்பித்தன. தமிழ்நாட்டிலும் மக்கள் திரள் 

பாதைக்கான ஆதரவு  மிகவும் வலிமையுடன் இருந்தது.                  

 

மக்கள் திரள் பாதையைக் கோரிய சத்ய நாராயண் 

சிங்கை சாரு மஜூம்தார் கட்சியை விட்டு நீக்கினார்.

இதன் மூலம் நாடு முழுவதும் ஒரு தற்காலிகமான 

நீர்க்குமிழித் தன்மை வாய்ந்த ஸ்தாபன அமைதியை 

ஏற்படுத்தினார்.


எனினும் கோட்பாட்டுப் போராட்டம் (theoretical struggle) என்ற 

வகையில் மக்கள்திரள் பாதைக்கான தரப்பு தொடர்ந்து 

தன்னை முன்நிறுத்திக் கொண்டே இருந்தது. சாருவின் 

மறைவுக்குப் பின்னால், மக்கள்திரள் பாதையை 

வலியுறுத்தியோர் தனியாகப் பிரிந்து சென்றனர்;

தனிக்கட்சி கண்டனர்.      


தமிழ்நாட்டில் அப்போதெல்லாம், அதாவது 1970களில்

கட்சிக்கு மாநிலக் கமிட்டியே  இருந்தது. நன்கு கவனிக்கவும்:

மாநில அமைப்புக் கமிட்டி அல்ல; மாநிலக் கமிட்டியே.

வலுவான மத்தியக் கமிட்டி இருந்ததால், அதன் அங்கமாக 

வலுவான மாநிலக் கமிட்டியும் இருந்தது. மாநிலக் 

கமிட்டியின் உட்பிரிவாக பிராந்தியக் கமிட்டிகள் ருந்தன.


மக்கள் திரள் பாதையைக் கோரியும், அழித்தொழிப்பை 

மறுத்தும் மேற்குப் பிராந்தியக் கமிட்டி வலுவாகவும் 

வெளிப்படையாகவும் குரல் கொடுத்தது. கோவை, ஈரோடு, 

திருப்பூர், சேலம் உள்ளிட்ட ஊர்கள் அடங்கியது மேற்குப் 

பிராந்தியம். கட்சித் தலைமை மேற்குப் பிராந்தியக் 

கமிட்டியின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்தது.

எனவே மேற்குப் பிராந்தியக் கமிட்டி முழுவதுமே 

கட்சியை விட்டு விலகி, தனி அமைப்புக் கண்டனர்.

அந்த அமைப்புதான் மாநில அமைப்புக் கமிட்டி ஆகும்.

(SOC State Organising Committee).


மாநில அமைப்புக் கமிட்டிக்கு நக்சல்பாரிப் பாரம்பரியமோ 

அல்லது அழித்தொழிப்புப் பாரம்பரியமோ கிடையாது.

அவர்களை நக்சல்பாரிகள் என்று அழைப்பதில் பொருள் 

கிடையாது. ஒன்றுபட்ட கட்சியில் இருந்தபோதும், சாருவின் 

தலைமையை ஏற்றுக் கொண்டும் அதற்கு விசுவாசமாகவும் 

இருந்தனர் என்று சொல்ல இயலாது. மற்றக் கட்சிகளின்

அணிகளில் பலர் மீதும் அழித்தொழிப்பு வழக்குகள் 

இன்றும் நிலுவையில் இருக்கும்போது, மாநில அமைப்புக்

கமிட்டியின் அணிகள் மீதோ தலைவர்கள் மீதோ 

அழித்தொழிப்பு சார்ந்த வழக்குகள் எவையும் கிடையாது.


தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் 

மூவர். தோழர்கள் அப்பு, ஏ எம் கே, புலவர் கலியபெருமாள் 

ஆகிய மூவருமே அவர்கள். இவர்களில் தோழர் அப்புவை 

போலீஸ் சுட்டுக் கொன்று விட்டது. தோழர்கள் ஏ எம் கே,

புலவர் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப் பட்டனர்.


தமிழ்நாட்டில் ஏ எம் கே தலைமையிலான அன்றைய 

மக்கள் யுத்தக் குழுவும் (இன்றைய போல்ஷ்விக்கின் 

முந்தைய பெயர்), வினோத் மிஸ்ரா தலைமையிலான 

லிபரேஷன் குழுவுமே அழித்தொழிப்பை ஒரு போராட்ட 

வடிவமாக மேற்கொண்டனர். மக்கள் யுத்தக் குழுவில் 

இருந்து விலகி, பின்னாளில் தனிநபர் பயங்கரவாதியாகச் 

சீரழிந்து போன தமிழரசனும் தம் பங்குக்கு நிறைய 

அழித்தொழிப்புகளைச் செய்து இருக்கிறார். ஏனைய 

குழுக்கள் எவையும் அழித்தொழிப்பில் ஈடுபடவோ அதை 

ஏற்கவோ இல்லை.


மேற்குப் பிராந்தியக் கமிட்டியே மாநில அமைப்புக் 

கமிட்டியாக அவதாரம் எடுத்தது என்று பார்த்தோம்.

 மாநில அமைப்புக் கமிட்டி ஒற்றுமையாக நீடிக்கவில்லை.

மிக விரைவிலேயே பிளவு பட்டது. தமிழ்நாடு அமைப்புக்

கமிட்டி (TNOC) புதிதாக தோழர் கார்முகில் தலைமையில் 

உதயமானது. ஆக SOC, TNOC இரண்டும் 1980களில்

போட்டுக் கொண்ட ரோஷமான ஆங்கிலக் குத்துச் 

சண்டை  ஹாலிவுட் படமாகும் தகுதி பெற்றது. இரு 

தரப்பினரும் பத்திரிகைகள் நடத்தினர். புரட்சியை 

நடத்த முடியாது எனவே பத்திரிகைகளை நடத்துவோம் 

என்று தீர்மானித்து இரு தரப்பினரும் பத்திரிகைகளை 

நடத்தினர். இந்தியச் சமூகம் புரட்சிக்கான புறநிலைமைகள் 

கனிந்த சமூகம் அல்ல என்பதும், புரட்சியை ஆதரித்து 

மக்களிடம்  பிரச்சாரம் செய்வதே இன்றையக் 

காலக்கட்டத்தில் கட்சியின்  கடமை என்பதும்தான் 

SOC, TNOC ஆகிய இருவரின் நிலைபாடாக இருந்தது.


எனவே :"70ன் பத்தாண்டுகளை விடுதலையின் 

பத்தாண்டுகளாக ஆக்குவோம்" என்ற சாருவின்  

(The decade of seventies will be the decade of liberation) 

முழக்கத்தை அவர்கள் எள்ளி நகையாடினர்.


"வர்க்க எதிரியைக் கொன்று அந்த ரத்தத்தில் கை 

னைக்காதவன் கம்யூனிஸ்ட்டே அல்ல" என்ற சாருவின் 

முழக்கத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. எனவே SOC, TNOC

ஆகிய இரு அமைப்புகளும் நக்சல்பாரி பாரம்பரியத்தையோ 

அழித்தொழிப்புப் பாரம்பரியத்தையோ கொண்டிருக்கவில்லை 

என்பது மிகப்பெரிதும் கவனம் கொள்ளத்  தக்கது.


இதன் பொருள் நக்சல்பாரிப் பாரம்பரியத்திற்கு இவ்விரு 

கட்சிகளும் உரிமை கோர முடியாது என்பதே. அவர்கள் 

உரிமை கோரினால் அது மோசடி ஆகும். நக்சல்பாரிப் 

பாரம்பரியும் உடைய யார் எவரும் இவர்களின் போலியான 

உரிமை கோரலை ஏற்க இயலாது.


எனவே SOC, TNOC (தற்போதைய பெயர் TNML) ஆகிய இரு 

அமைப்புகளுமே நக்சல்பாரி அமைப்புகள் அல்ல என்ற 

உண்மை இங்கு நிரூபிக்கப் படுகிறது.

**************************************************************      

  

              .   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக