ஞாயிறு, 22 நவம்பர், 2020

 பதிவு : தோழர் தியாகு

தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களின் விரிவான பின்னூட்டங்கள் கண்டேன். சாதி குறித்துப் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் கேட்கப்பட்ட ஒரு வினாவிலிருந்து இந்த விவாதம் தொடங்கிற்று: “சாதி பொருள்முதல்வாதமா? கருத்துமுதல்வாதமா?” (பொருள்முதல்வாதம் (materialism) என்பதைப் பொருண்மியம் என்றும், கருத்துமுதல்வாதம் (idealism) என்பதைக் கருத்தியம் என்றும் சொல்கிறேன்.)
இதிலிருந்து கிளைத்த ஒரு கேள்வி: சாதி பொருளா? கருத்தா?
இரண்டும்தான் என்பது என் விடை. சாதி கருத்தாகுமே தவிர பொருளாகாது என்பது தோழர் இளங்கோவின் பார்வை.
தோழர் குமரேசனுக்கு எழுதிய விடையில் தோழர் இளங்கோ சொல்கிறார்: “சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம். அதாவது
சமூகக் கட்டுமானம் (social structure). சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்பும் கிடையாது (No physical existence).”
கருத்தியல் கட்டுமானம், அதாவது சமூகக் கட்டுமானம் (social structure) என்றால் என்ன பொருள்? இரண்டும் ஒருபொருள் குறித்த இரு தொடர்களா? இரண்டுக்கும் வேறு வேறு பொருள் உண்டு. சமூகக் கட்டுமானம் என்றால் பொருளியல் அடித்தளம் நீங்கலான சமூகக் கட்டுமானமா? சாதியானது அடித்தளத்திலும் மேற்கட்டுமானத்திலும் இயங்குகிறது என்பதுதான் என் பார்வை. இல்லை, அது கருத்தியல் கட்டுமானம் மட்டும்தான் என்றால், தோழர் இளங்கோ அது சமூகக் கட்டுமானம் (social structure) என்று சொல்வது தன்முரண்பாடு அல்லவா?
சாதி ஒரு சமூகக் கட்டுமானம் என்று இளங்கோ சொல்வது சரி. சமூகக் கட்டுமானம் என்பது பொருளியல் அடித்தளம், கருத்தியல் மேற்கட்டுமானம் ஆகிய இரு பொதுவான அடுக்குகளைக் கொண்டது என்பதைத் தோழர் இளங்கோ மறுக்க மாட்டார். ஆகவே தோழர் இளங்கோ குமரேசனை மறுக்கும் போது வலியுறுத்தும் பார்வை என் பார்வையே ஆகும்.
ஆனால் தோழர் இளங்கோ பூதியல் (இயற்பியல் physics) கற்றுத் தேர்ச்சி கொண்டவர் என்பதுதான் அவரது பார்வையைச் சிக்கலாக்கி விடுகிறது போலும். அவர் கட்டுமானம் என்றாலே பூதியல் (பௌதிக) கட்டுமானம் என்றுதான் புரிந்து கொள்கிறார். பூதியல் கட்டுமானத்துக்கும் குமுக (சமூக) கட்டுமானத்துக்கும் இடையிலான வேறுபாட்டைக் காணத் தவறி விடுகிறார்
அவர் சொல்கிறார்: ”சென்னை அண்ணாசாலையில் 14 மாடி எல் ஐ சி கட்டிடம் உள்ளது. இது ஒரு பௌதிகக் கட்டுமானம். இதற்கு ஒரு பௌதிக இருப்பு (physical existence) உண்டு, இதைப் போன்றதல்ல சாதி என்னும் கட்டுமானம். அது மனித சிந்தனையில் மட்டுமே இருக்கும் ஒன்று.”
எல்ஐசி கட்டடம் போன்ற பௌதிகக் கட்டுமானம் என்று சாதியமைப்பை நாம் கருதவில்லை; யாரும் கருதவில்லை. குமுக (சமூக) கட்டுமானத்தைத் தெளிவின் பொருட்டு பூதியல் (பௌதிக) கட்டுமானத்தோடு ஒப்பிடலாம். சாதிக் கட்டமைப்பை ஒரு கோபுரம் அல்லது பிரமிடுடன் ஒப்பிடுவது உண்டு என்பதாலேயே இரண்டும் ஒன்றாகாது. பிரமிடு ஒரு பூதியல் (பௌதிக) கட்டுமானம், சாதியமைப்பு ஒரு குமுக (சமூக) கட்டுமானம். இது சமூகக் கட்டுமானம் என்று தோழர் இளங்கோ ஏற்றுக் கொள்வதால், அது சிந்தனையில் எதிரடித்து சிந்தனைக் கட்டுமானமாகவும் மாறுகிறது என்பது உண்மைதான்.
சாதியமைப்பு சமூகக் கட்டுமானம் என்று ஓரிடத்தில் சொல்கிறார், பிறகு அது சிந்தனைக் கட்டுமானம் என்றும் சொல்கிறார். புறவய சமூகக் கட்டுமானத்தின் அகவய மறிவினைதான் (reflex) சிந்தனைக் கட்டுமானம் என்பதை ஏற்றுக் கொள்வதில் தோழர் இளங்கோவுக்கு இடர்ப்பாடு ஒன்றுமிராது என நம்புகிறேன்.
சாதி ஒரு பௌதிகக் கட்டுமானம் என்றும் அதற்கு பௌதிக இருப்பு இருப்பதாகவும் யாராவது வாதிட்டால் தோழர் இளங்கோ தரும் விளக்கம் பொருத்தமானதே. அவரே அது ஒரு சமூகக் கட்டுமானம் என்று ஏற்றுக் கொண்ட பின் அவர் எல்ஐசி கட்டிடத்தில் ஏறி காற்றோடு கத்திச் சண்டை போடத் தேவை இல்லை.
குமரேசனுக்கு மறுப்புச் சொல்லும் போது தோழர் இளங்கோ சாதிக் கட்டுமானம் குறித்து மூன்று செய்திகள் சொல்கிறார்:
1) சாதி ஒரு கருத்தியல் கட்டுமானம்;
2) சாதி ஒரு சமூகக் கட்டுமானம்;
3) சாதி ஒரு பௌதிகக் கட்டுமானம் அன்று,
இந்த மூன்றுமே சரி. சாதி கருத்தியல் கட்டுமானமாக இருப்பதற்கும் சமூகக் கட்டுமானமாக இருப்பதற்குமான இயங்கியல் இடையுறவை இளங்கோவால் கண்டறிய முடியுமானால் சாதிப் புதிரை விடுவிப்பது எளிதாகி விடும்.
பருப்பொருளின் அழியாமை விதியை சாதிக்குப் பொருத்தி, சாதி பொருள் என்றால் ஒழிக்க முடியாதா என்று இளங்கோ கேட்பது நகைப்புக்கிடமானது. பருப்பொருளுக்குத்தான் அழிவில்லையே தவிர அதன் வடிவங்களுக்கு அழிவுண்டு என்பது கூட தோழர் இளங்கோவின் அறிவியலுக்குத் தெரியாதா?
சாதியைக் கடவுளோடு ஒப்பிடும் தோழர் இளங்கோ கடவுள் இல்லை, எனவே சாதியும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். கடவுள் ஒருபோதும் சமூகக் கட்டுமானமாக இருந்ததில்லை, ஆனால் சாதி சமூகக் கட்டுமானமாக இருப்பதை அவரே ஏற்றுக் கொள்கிறார். கோட்பாடு ஒருபுறமிருக்க, சாதி இருக்கிறதா இல்லையா? என்பதை வாழ்க்கையின் பட்டறிவு அன்றாடம் குருதியும் நெருப்புமாக நமக்கு உணர்த்திக் கொண்டிருப்பது உண்மையல்லவா?
சாதி இருக்கிறதா? இல்லையா? என்ற வினாவை சாதி வேண்டுமா? கூடாதா? என்ற வினாவுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
”சாதி பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது
என்ற அண்ணன் தியாகுவின் கருத்துக்கு மறுப்பு!” என்ற தலைப்பில் தோழர் இளங்கோ எழுதியுள்ள பின்னூட்டம் ’பொருள்’ என்றால் என்ன? என்பதிலேயே அவருக்குத் தெளிவில்லை என்பதைக் காட்டுகிறது.
’மார்க்சியம் அனா ஆவன்னா’ என்ற குறுநூலில் பொருள் என்றால் என்ன என்பது குறித்து நான் எழுதியிருப்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்:
“பொருள் (அதாவது பருப்பொருள்) என்றால் என்ன? நம்மைச் சுற்றியிருப்பவை நமது ஐம்புலன்கள் வழியாகவே (கண், காது, மூக்கு, வாய், தோல்) நமக்குத் தெரிய வருகின்றன…. எல்லாப் பொருட்களும் நம் மனத்துக்கு வெளியே உள்ளன.
அதாவது அவை நமது கருத்தைச் சார்ந்திருக்கவில்லை. இதைத்தான் புறவயமாய் இருத்தல் என்கிறோம். ஆக, பொருள் என்பது (1) ஐம்புலன்கள் வழியாக அறியப்படுவது; (2) புறவயமாய் இருப்பது."
இதுதான் பொருள் என்பதற்கான மெய்யியல் இலக்கணம். இது நாம் வழக்கமாகப் புரிந்து கொள்ளும் உருண்டு திரண்ட பொருட்களுக்கு மட்டும் பொருந்துவதன்று. கையில் பிடிபடாத நிகழ்வுகள் அல்லது புலப்பாடுகளுக்கும் (phenomena) பொருந்தக் கூடியதாகும். மெய்யியல் (philosophy) நோக்கில் பொருட்களும் பருப்பொருளே; நிகழ்வுகளும் பருப்பொருளே. சூரியனும் பருப்பொருளே. சூரிய உதயமும் பருப்பொருளே. தோழர் இளங்கோவும் பருப்பொருளே, நியூட்டன் அறிவியல் மன்றமும் பருப்பொருளே.
வழக்கமான பொருள் என்பதிலிருந்து மெய்யியல் பொருளை வேறுபடுத்திக் காட்டவே பருப்பொருள் என்கிறோம். தோழர் இளங்கோ பூதியல் (இயற்பியல் அல்லது physics) எல்லைக்குள்ளேயே நிற்கிறார். அதைத் தாண்டி மெய்யியல் பரப்புக்குள் வர மறுக்கிறார். அதனால்தான் சாதியை அவரால் பருப்பொருளாக ஏற்க முடியவில்லை. சாதிக்குள்ள பொருண்மிய இருப்பும் அதன் கருத்தியல் இருப்பும் இணைந்துதான் உங்களையும் என்னையும் இந்தப் பாடு படுத்துகின்றன.
சாதிக்கு இயற்கையில் நியாயமில்லை என்றால், மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும் கூட நியாயமில்லைதான். சாதி மனித வாழ்வுக்குத் தேவையற்றது என்றால் சுரண்டலும் தேவையற்றதே. ஆனால் மெய்ந்நடப்பு என்பது வேறு. இளங்கோ சொல்வது வெறும் பகுத்தறிவுவாத அணுகுமுறையே தவிர, இயங்கியல் பொருண்மியம் அல்லது வரலாற்றுப் பொருண்மியம் சார்ந்த அணுகுமுறை அன்று.
சாதி என்பது என்ன?
“இந்திய சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட உற்பத்திமுறை நிலவிய காலக் கட்டத்தில், கட்டி எழுப்பப்பட்ட ஒரு கருத்தியல் கட்டுமானம்தான் சாதி” என்கிறார் இளங்கோ.
இவ்வாறு சாதிக்கும் பொருளாக்க (உற்பத்தி) முறைக்குமான தொடர்பை மெதுவாகத் தீண்டுகிறார். பொருளாக்கத்தில் உடைமைப் பிரிவினைக்கும் உழைப்புப் பிரிவினைக்கும் சாதியமைப்பு அடிப்படை ஆயிற்றா? இல்லையா? ஆனது உண்மை என்றால், சாதிக்குச் சமூகப் பொருளியல் கட்டமைப்பில் இடமுண்டு என்று பொருள்.
விவாதிப்போம்.
பின்குறிப்பு: தோழர் இளங்கோவன் என்னிடம் அன்பு கொண்டு சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கு நன்றி! எந்த விவாதத்திலும் தலைப்புக்கு அப்பால் பேசும் வழக்கம் எனக்கில்லை என்பதால் ’தமிழ்த் தலிபானிசம்’ பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனாலும் ஒன்று: சாதியமைப்பை விளங்கிக் கொள்ள நியூட்டனின் அறிவியல் போதாது. மார்க்சின் மெய்யியலும் வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டில் தமிழும் வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
இராமச்சந்திர மூர்த்தி.பா, Sudha Thiagu and 29 others
41 Comments
14 Shares
Share
ON

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக