ஞாயிறு, 8 நவம்பர், 2020

 கமல் உலக நாயகனே! வாழ்த்துவோம்!!

--------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாக 

ஈடுபடுவோரே அந்த சமூகத்தின் நாயகர்கள்.

ஒரு முதலாளிய சமூகத்தில் அத்தகையவர்களை

ஆலைப்பாட்டாளி வர்க்கம் (industrial proletariat) என்று 

வரையறுக்கிறார் மார்க்ஸ். 


கலைஞர்களான நடிகர்கள், பாடகர்கள் ஆகியோர் 

சமுகத்தின் பொருள் உற்பத்தியில் ஈடுபடாத 

வர்க்கத்தினர். எனவே அந்த அளவுக்கு அவர்கள் 

மாற்றுக் குறைந்தவர்கள் என்பதுதான் வர்க்க அரசியலின் அடிப்படையில் உண்மை.   


எனவேதான் கலைஞர்களை நடிகர்களை நாம் பெரிதாக 

மதித்ததில்லை; மதிக்கத் தேவையும் இல்லை. எனினும் 

இந்தப் பொதுவிதிக்கு விலக்காக ஒரு சில நேரங்களில் 

சில கலைஞர்கள் இருந்தது உண்டு. ரஷ்யப் புரட்சியின்போது

கலைஞர்களுக்கு உரிய மரியாதை இருந்தது.


தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில், அத்தகையவர் 

கமல் ஹாசன். சினிமா என்ற துறையில் அளப்பரிய 

சாதனைகளைச் செய்து காட்டியவர் அவர். குருதிப்புனல்,

தேவர் மகன், நாயகன் போன்ற காலத்தால் அழியாத 

காவியங்கள் அவரின் கலை மேன்மைக்கும் 

மகத்துவத்துக்கும் சாட்சி. கமலின் கலையுலகச்

சாதனைகளை என்னை விட வேறு எவரும் இன்னும் 

அகல்விரிவாகவும் ஆழமாகவும் சொல்ல இயலும்.    


கமல் என்னும் மகத்தான கலைஞனை அவரின் அரசியல் 

சிறுபிள்ளைத் தனங்களைக் கொண்டு எடை போடக் 

கூடாது. ஒரு கலைஞன் தன்னுடைய துறையை விட்டு 

விட்டு அரசியலில் புகுந்து தனது கருத்துக்களைச் 

செயலாக்க முயல்வதே அரசியல் சீர்கெட்டுக் 

கிடைப்பதன்  அடையாளம் ஆகும். இதற்கு நிச்சயம் 

கமலோ கலைஞர்களோ பொறுப்பு அல்லர். 


ஒரு நடிகராக சினிமா சார்ந்தவராக மட்டும் இல்லாமல் 

கமல் கற்பதில் பேரார்வம் உடையவராக இருக்கிறார்.

இன்னமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார். அறிவை 

வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதி 

படைத்தவராகத் திகழ்கிறார். தமது வரம்புக்கு உட்பட்டு 

தமது அறிவின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டுதான் 

உள்ளார். அந்த அளவில் அவரை ஒரு மெலிதான 

அறிவுஜீவி என்று though not a robust person, வரையறுப்பது சரியே. 


முறையான பள்ளிக் கல்வியோ கல்லூரிக் கல்வியோ

பெறாத ஒருவர், தம் சொந்த முயற்சியில் சுயமான 

படிப்பில் அறிவைப் பெற்று வருகிறார் என்பது 

பாராட்டத் தக்கது.


கமலுக்கு 66 வயது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 

ஏறக்குறைய என் வயதுதான். நாங்கள் சமவயதுக்காரர்கள்.

எமது பகுப்பாய்வு மற்றும் கணிப்பின்படி, கலைஞானி 

கமல் ஹாசன் இந்த சமூகத்தின் சொத்துக்களில் ஒருவர்.

புறக்கணிக்க இயலாதவர். முட்டாள்தனமான காழ்ப்பு 

உணர்ச்சிக்கு இரையானோர் தவிர, அறிவின் 

மேன்மையை உணர்ந்தோர் அனைவராலும் போற்றப்

பட வேண்டியவர்.


எனவே  உலகநாயகன் கமலை வாழ்த்துகிறோம்.

வாழிய பல்லாண்டு!

*****************************************************        

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக