படிக்க வேண்டிய புத்தகங்கள்!
படிக்காதவனுக்கு விமர்சிக்கும் உரிமை இல்லை!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
நமது வாசகர்கள் கண்டிப்பாக சில புத்தகங்களைப்
படிக்க வேண்டும் என்று கரடியாகக் கத்தி வருகிறேன்.
எனினும் பலரும் காதில் போட்டுக் கொண்டதாகத்
தெரியவில்லை.
The God Delusion என்று ஒரு புத்தகம். கடவுள் என்னும் பிரமை
என்று பொருள். எழுதியவர் உலகின் தீவிர நாத்திகர்களில்
ஒருவரான ரிச்சர்ட் டாக்கின்ஸ். ஆக்ஸ்போர்டு பல்கலையில்
படித்த இங்கிலாந்து நாட்டவரான ரிச்சர்ட் டாக்கின்சுக்கு
தற்போது 79 வயது. இவர் ஒரு Evolutionary Biologist ஆவார்.
பல்வேறு புத்தகங்களை இவர் எழுதி உள்ளார். கடவுள்
இல்லை என்று தொடர்ந்து நிரூபித்து வருபவர் இவர்.
உலகின் தலைசிறந்த நரம்பியல் நிபுணரான விளையனூர்
ராமச்சந்திரன் பச்சைத் தமிழர். ஸ்டான்லி மருத்துவமனையில்
MBBS படித்து, பின் கேம்பிரிட்ஜில் PhD முடித்தவர். இவரும்
மிகச்சிறந்த புத்தகங்களை எழுதி உள்ளார். அவற்றைப்
படிக்க வேண்டும். குறிப்பாக The Phantoms in the brain என்ற
புத்தகத்தைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
ரிச்சர்ட் டாக்கின்ஸ் மற்றும் விளையனூர் ராமச்சந்திரன்
இருவரும் நிறையவே நூல்கள் எழுதி உள்ளனர். அவற்றின்
பட்டியலை இங்கு நான் தரவில்லை. நீங்களே முயன்று
தெரிந்து கொள்ளுங்கள். அவர் எழுதிய ஒன்று, இவர்
எழுதிய ஒன்று என்று மொத்தம் இரண்டே இரண்டு
புத்தகங்களை மட்டும் படிக்கச் சொல்லுகிறேன்.
மேற்கூறிய நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே
உள்ளன. அவை ஒருபோதும் தமிழில் மொழிபெயர்க்கப்
படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே நான் கருதுகிறேன்.
நுனிப்புல் ஆங்கில அறிவு அல்லது ஒரு எழுத்தருக்கு
உண்டான ஆங்கில அறிவைக் கொண்டு மேற்கூறிய
நூல்களை வாசிக்க இயலாது.
நல்ல ஆங்கிலப் புலமை இருக்க வேண்டும். நல்லதொரு
கல்லூரியில் சிறந்த மதிப்பெண்களுடன் அல்லது
படிப்பில் ஆர்வத்துடன் பட்டப் படிப்பில் தேறி இருக்க
வேண்டும். ஆங்கில தினசரிகளான தி ஹிந்து, எக்ஸ்பிரஸ்,
டைம்ஸ் ஆகியவற்றைத் தினமும் படிப்பவராக இருக்க
வேண்டும். வானொலி-டிவியில் ஆங்கிலச் செய்தி
கேட்பது, ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது ஆகியவற்றின்
மூலமே தேவையான ஆங்கிலப் புலமையைப் பெற
முடியும்.
எனவே மீண்டும் எனது வேண்டுகோள் மற்றும் பரிந்துரை!
ஆங்கில அறிவு உடைய அன்பர்கள் அருள்கூர்ந்து மேற்கூறிய
இரண்டு புத்தகங்களையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.
நடிகர் கமல் ஹாசன் இவற்றைப் படித்து இருக்கிறார்.
அப்புத்தகங்கள் தரும் அறிவை உள்வாங்கி இருக்கிறார்.
எனவே அவரை விமர்சிக்க விரும்பும் அன்பர்கள்
இந்தப் புத்தகங்களைப் கண்டிப்பாகப் படித்திருக்க
வேண்டும். கல்வி அறிவற்றவர்களும் எதையுமே
படிக்காதவர்களும் படித்த பிறரின் கருத்துக்களை
விமர்சிக்கும் அருகதை அற்றவர்கள் ஆவர்.
எனவே படியுங்கள்! அல்லது வாயை மூடிக் கொண்டிருங்கள்!
*******************************************************************
தோழர் தமிழரசனும் அவர் செய்த
அழித்தொழிப்புகளும்!
---------------------------------------------------------------
தோழர் தமிழரசன் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து
விலகிய பின், தமிழ்நாட்டு அளவில் புரட்சி என்ற
நிலையை எடுத்தார். அது ஆயுதப் போராட்டத்தால்
மட்டுமே சாத்தியம் என்ற நிலையையும் எடுத்தார்.
அது சரியல்ல என்ற போதிலும் தமிழரசனுக்கு அந்த
நிலைபாட்டை எடுப்பதற்கான உரிமையை யாரும்
மறுக்கவில்லை. கிளிப்பிள்ளைக்கு எடுத்துச் சொன்னது
போல தோழர் ஏ எம் கே அவர்கள் எடுத்துச் சொன்ன பிறகும்,
தமிழரசன் தனது பிடிவாதத்திலேயே உறுதியாக இருந்தார்.
ஆனால் புரட்சிகரக் கோட்பாடு மற்றும் நடைமுறையில்
ஊன்றி நிற்க இயலாமல் பயங்கரவாதத்தில் சரண்
அடைந்தார்.
மருதையாற்றுப் பாலத்தை வெடிகுண்டு வைத்துத்
தகர்த்து, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்த்து
அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்தது
கொடிய பயங்கரவாதம்.
பொன்பரப்பி ஊரில் உள்ள வங்கிக் கொள்ளையின்போது
பணப்பெட்டியின் சாவிகளைத் தர மறுத்த காசாளரைச்
சுட்டுக் கொன்ற தமிழரசனின் செயல் கொடிய
பயங்கரவாதம் ஆகும். தமிழரசனைப் பற்றிய
மதிப்பீடு மார்க்சிய லெனினிய மதிப்பீடு ஆகும்.
பல்வேறு மார்க்சிய லெனினிய அமைப்புகளின்
மதிப்பீடு ஆகும்.
நீங்கள் வார்த்தையை அளந்து பேச வேண்டும். நாக்பூர்
என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசுவதைத் தவிர்க்கவும்.
தமிழரசன் நிறைய அழித்தொழிப்புகளைச் செய்தார்.
இது உண்மையே. இது கட்சியின் நிலைபாடுதானே!
மக்கள் யுத்தக் குழுவும் லிபரேஷன் குழுவும்
அழித்தொழிப்புகளைச் செய்யவில்லையா? சீனத்தில்
மாவோ அழித்தொழிப்புகளைச் செய்யவில்லையா?
அழித்தொழிப்பு வேறு. தனிநபர் பயங்கரவாதச் செயல்கள்
வேறு. வெறுக்கத்தக்க கொடிய நிலப்பிரபுக்களை
அழித்தொழிக்காமல் மக்களுக்கு விடிவு இல்லை.
எனவே சாறு மஜூம்தார் அழித்தொழிப்பை முன்வைத்தார்.
அதையே ஒரே போராட்டமாக எடுத்துச் சென்றதுதான்
அவர் மீதான தவறே தவிர, அழித்தொழிப்பே கூடாது
என்ற் நிலை ஏற்புடையது அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக