நவீனத்துவம் என்றால் புதுமை உருவாவது அல்ல. அதை நவீனத்தன்மை என்றுதான் சொல்கிறார்கள். அது எப்போதுமே நடப்பது. நவீனத்துவம் என்றால் கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒரு பொதுப் போக்கு. அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப் படுத்துகிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப அறிவியல் வளர்ச்சி அடைந்தது. எல்லாவற்றையும் தர்க்கம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அறிவியல் உருவாக்கிய தொழிற் புரட்சி மூலம் உலகம் முழுக்க போகவும் தொடர்பு கொள்ளவும் வசதி ஏற்பட்டது. ஆகவே எல்லா சிந்தனைகளையும் உலகப் பொதுவாக உருவாக்கும் போக்கு உருவாகியது. இந்த இரு விஷயங்களும்தான் நவீனத்துவத்தின் அடிப்படை. அதாவது 1.அறிவியலை மையமாக்கிய நோக்கு. 2 உலகளாவிய நோக்கு
நவீனத்துவம் உருவாக்கிய அமைப்புகள் 1. தொழிற்சாலை 2 பள்ளி 3 பொதுப்போக்குவரத்து 4 பொதுச் செய்தித் தொடர்பு 5 பொது ஊடகம். இவை மூலம் நவீனத்துவம் சமூகத்தை உறுதியான மையம் கொண்ட அமைப்பாக ஆக்குகிறது. இவ்வாறு மையம் கொண்ட அமைப்பு உருவாகும்போது அதற்கு எதிரான, தேவையில்லாத அமைப்புகள் ஒடுக்கப் படுகின்றன, நிராகரிக்கப் படுகின்றன.
இதன் விளைவாக சிந்தனைகளிலும், சமூக அமைப்புகளிலும், பண்பாட்டிலும் ஏராளமான போக்குகள் உலகமெங்கும் உருவாகி வந்தன. அவற்றை பொதுவாக நவீனத்துவப் போக்கு என்பது வழக்கம்.
இந்த நவீனத்துவம் மீது ஆழமான அவநம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி வந்தது. நவீனத்துவத்தின் குறைபாடுகளும், போதாமைகளும் கண்டடையப் பட்டன. உறுதியான அமைப்புகள் மீது சந்தேகம் உருவாகியது. திட்டவட்டமான மையம் கொண்ட அமைப்புகள் நிராகரிக்கப் பட்டன. விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப் பட்டவை மீது கவனம் விழுந்தது. அவையனைத்துக்கும் இடமுள்ள ஒரு சமூகக் கட்டுமானம், ஒரு சிந்தனைமுறை தேவை என்ற எண்ணம் எழுந்தது.
இவ்வாறு நவீனத்துவம் பின்னுக்குத் தள்ளப் பட்டது. அதன் பின் வந்த எல்லா சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக பின் நவீனத்துவம் என்கிறார்கள். பின் நவீனத்துவத்திற்குள் பலவகையான போக்குகள் உள்ளன. ஆனால் மையங்களையும், ஒட்டு மொத்த பெரும் அமைப்புகளையும் நிராகரிக்கும் போக்கு மட்டும் பொதுவாக இருக்கும்.
பின் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுப் போக்கு. இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார்கள். உதாரணமாக ஒரு சமூகத்தில் ஆண்மை மைய விழுமியமாக போற்றப் பட்டது என்றால் அங்கே திரு நங்கைகள் ஒடுக்கப் படுவார்கள் இல்லையா? பின்நவீனத்துவ சமூகம் அப்படி மைய விழுமியங்களை ரொம்பவும் சார்ந்திருக்காது. இருபாலினத்தவருக்கும் அதே இடத்தை அளிக்கும். தமிழ்ச் சமூகம் கூட இன்று இந்த இடம் நோக்கி வந்து விட்டிருக்கிறது அல்லவா?
அதாவது மிகச் சிறந்தது, சரியானது என ஒன்றை கண்டு பிடித்து அதை நிரூபித்து அதை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை நிராகரிக்கும் போக்குதான் நவீனத்துவம். அப்படிச் செய்தால் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப் படுவார்கள் என உணர்வதே பின்நவீனத்துவம். இது ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்மையை முன்வைக்கிறது. எல்லாவற்றுக்கும் அவற்றுக்கான இடம் அளிக்கப்பட வேண்டும் என்கிறது. அப்படி மையப் படுத்தும் சிந்தனைகளை பிரித்து ஆராய்ச்சி செய்கிறது. ஒருமை கொண்ட வடிவங்களை பிரித்துப் பரப்பிப் பார்க்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக