புதன், 2 செப்டம்பர், 2020

பரித்ராணாய ஸாதூனாம் - விநாசாய ச துஷ்கிருதாம்! தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய - ஸம்பவாமி யுகே யுகே!
பரித்ராணம் - பாதுகாப்பு.
காலில் அணியும் செருப்பைக் கூட "பாதத்ராணம் - என்று குறிப்பிடுவதுண்டு - பாதத்துக்கான பாதுகாப்பு!
அதை 'செருப்பு' என்று குறிப்பிடாமல் 'பாதரட்சை'
(பாதரக்ஷா) எனக் குறிப்பிடுவது உண்டு.
பாதத்தின் காப்பு - என்று பொருள்.
அதனால்தான் அதைக் கழற்றும் போது கூட, மூலைக்கு ஒன்றாக உதறி எறியாமல், அருகருகே அந்த ஜோடி சீராக இருக்கும்படி வைக்க வேண்டும்.
பரித்ராணம் - பாதுகாப்பு.
பரித்ராணய - பாதுகாப்புக்காக...
யாருடைய பாதுகாப்புக்காக?
ஸாதூனாம் - நல்லவர்களுடைய...
விநாசாய ச - மற்றும் அழிவுக்காகவும் (சமஸ்கிருதத்தில் இந்த 'ச' என்பது இங்கிலீஷில் "And" போல)
யாருடைய அழிவுக்காக?
துஷ்க்ருதாம் - தீய செயல்களைச் செய்வோருடைய...
அதன் விளைவு என்னவாக இருக்கும்?
"தர்மம் நிலை நிறுத்தப்படும்"-
வெறுமனே தீயவர்களை அழித்துவிட்டு மட்டும், இனி எப்படியோ ஆகட்டும் என்று போய்விடக் கூடாது!
நல்லவர்கள் இனி அச்சமின்றி வாழ ஒரு தர்மத்தையும் நிலை நாட்ட வேண்டும்!
ஸ்தாபித்தல் - என்றால் நிறுவுகின்ற என்ற வினைச்சொல்.
அதன் அந்த வினைச் சொல்லுக்கு உரிய "பெயர்ச் சொல் வடிவம்"- ஸ்தாபனம்!
(நட - வினைச்சொல் ; நடை - அதற்குரிய பெயர்ச்சொல் வடிவம் போல)
ஸம்ஸ்தாபனம் - நன்கு நிறுவுதல்.
எதை? தர்மத்தை.
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தம் - தர்மத்தை நிறுவும் நோக்கம்!
'அர்த்தம்'- என்றால் நோக்கம் என்பதும் ஒரு அர்த்தம்!
"அவன் காரியார்த்தமாகப் பழகுகிறான்"- என்கிறோம் அல்லவா?
ஒரு நோக்கத்துக்காகச் செயல்படுவது!
இங்கே - தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய - தர்மத்தை நிலை நாட்டும் நோக்கத்துக்காக!
ஸம்பவாமி - நான் தோன்றுகிறேன்.
எப்போது?
யுகே - யுகே. (ஒவ்வொரு யுகத்திலும்)
இப்போது ஸ்லோகத்தை உரைநடை பாணியில் வரிசைப்படுத்துவோம்.
ஸாதூனாம் பரித்ராணாய - நல்லவர்களுடைய பாதுகாப்புக்காகவும்,
துஷ்க்ருதாம் விநாசாய - தீயவர்களுடைய பேரழிவுக்காகவும்,
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ச - தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,
(அஹம்) - (நான்)
யுகே யுகே ஸம்பவாமி - ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன்!
காக்கும் கருணைக் கடவுளான திருமால் -
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக இந்த மண்ணில் இறங்கிய அவதாரத் திருநாள் இன்று!
அவதரதி - என்றால் மேலிருந்து இறங்குகிறான் என்று பொருள்.
அவதரணம் - என்றால் அவதரித்தல்!
விண்ணுலகில் இருந்து மண்ணில் இறங்குவதால் "அவதாரம்" என அழைக்கப்பட்டனர்!
கிருஷ்ண - அவதாரம் - கிருஷ்ணாவதாரம்!
"அல்லவை தேய அறம் பெருகும் - நல்லவை நாடி இனிய சொலின் "- என்று வள்ளுவர் பிற்காலத்தில் கூறியதும் இதுதான்!
'அல்லவை தேய வேண்டும் - அறம் பெருக வேண்டும்'- கீதை கூறியதைக் குறளும் ஏற்கிறது!
அதற்கான வழியை மேலும் இன்னொரு வகையிலும் வள்ளுவர் கூறுகிறார்.
"கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் - பைங்கூழ் களை கட்டதனொடு நேர்"- என்பார்!
'இனிய சொலின்'- திருந்தாதவர்களை, வேந்தன் 'ஒறுத்துதான்'- தண்டித்துதான் ஆக வேண்டும்!
வள்ளுவரின் நீதிமன்றத்தில் 'கருணை மனு'- வுக்கு எல்லாம் இடமில்லை!
அப்படித் தீயோரை மாய்ப்பது - "பசுமையான விளைச்சலுக்கு நடுவே முளைத்துள்ள களைகளை அறுத்து எடுப்பது போல"- என்கிறார் வள்ளுவர்.
"பைங்கூழ் களை கட்டதனொடு நேர்" - "துஷ்கிருதாம் விநாசாய"...!
அல்லவை தேய - அறம் பெருக...
"தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய"...
நல்லவை நாடி இனிய சொலின் ...
ஆம், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு...
'நல்லவை நாடி இனியவே சொன்னதால்'- கீதையை உபதேசித்ததால்...
'அல்லவை தேய்ந்தது - அறம் பெருகியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக