-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது
36 ஆண்டுகளுக்கு முன்பு, 1982ல் இந்தியாவில்
முதன் முதலாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரம்
(Electronic Voting Machine) அறிமுகப் படுத்தப்பட்டது.
பரீட்சார்த்த முறையில் கேரள மாநிலம் வடக்கு பரவூர்
தொகுதியின் சில வாக்குச் சாவடிகளில் மட்டும் மின்னணு
வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
(இனி இக்கட்டுரையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்பது
EVM என்று குறிக்கப்படும்).
தேர்தலில் EVMகளை அறிமுகப்படுத்தியதன் மூலம்
இந்திய அரசு அறிவியலுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. .
1999ல் சிறிய மாநிலமான கோவாவில் தேர்தல்
முழுவதுமே EVM மூலமாக நடத்தப்பட்டது. இதுதான்
EVM மூலமாக நடைபெற்ற முதல் மாநில சட்டமன்றத்
தேர்தல் ஆகும்.
பின்னர் நாடு முழுவதும் 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்
முற்றிலுமாக EVM மூலம் நடைபெற்றது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் EVM மூலம்
நடத்தப்பட்ட முதல் தேர்தல் இதுதான்.
அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலும் ,
2014 நாடாளுமன்றத் தேர்தலும் EVM மூலமாகவே நடைபெற்றன.
ஆக, தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத்
தேர்தல்கள் EVM மூலமாகவே நடைபெற்றுள்ளன.
இந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற அனைத்து
மாநில சட்டமன்றத் தேர்தல்களும், பல்வேறு இடைத்தேர்தல்களும் EVM மூலமாகவே
நடைபெற்றன. 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு 113 சட்ட மன்றத் தேர்தல்களும் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களும்
EVM மூலமாகவே நடைபெற்றுள்ளன. இவ்வாறு இந்தியத்
தேர்தல்களில் நிலைபேறு உடையதாக EVM ஆகிவிட்டது.
வாக்களித்த சின்னத்துக்கே வாக்கு பதிவாகுதல்!
---------------------------------------------------------------------------------
டாக்டர் சுப்பிரமணியம் சாமி EVM குறித்து பல்வேறு
சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள்
தொடுத்தார்.வாக்காளர்கள் தாங்கள் என்ன
சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை
அறிந்திட ஏதேனும் ஒரு நிரூபணம் தரப்பட
வேண்டும் என்றும் EVMகளில் அத்தகைய நிரூபணம்
இல்லை என்றும் டாக்டர் சுவாமி டில்லி உயர்நீதி
மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது வழக்கு
தள்ளுபடியானது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுவாமி
மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் மனுதாரர்
கோரியவாறு ஒரு நிரூபணத்தை வழங்க வேண்டும்
என்று தீர்ப்பளித்தது. பிரசித்தி பெற்ற இந்தத்
தீர்ப்பை வழங்கியவர் அன்றைய உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்கள்.
இத்தீர்ப்பின் விளைவாக VVPAT (Voter Verifiable Paper Audit Trail)
என்னும் கருவி EVMகளில் பொருத்தப்
பட்டது. வாக்களித்த பின்னர் எந்தச் சின்னத்துக்கு
வாக்களித்தோம் என்று வாக்காளர் சரி பார்க்கும் வசதி இது.
ஒரு கண்ணாடிப் பேழைக்குள் உள்ள காகிதத்தில்
நாம் வாக்களித்த வேட்பாளரின் பெயரும் அவரின்
தேர்தல் சின்னமும் தெரியும். 7 நொடிகள் வரை தெரியும்
இந்தக் காட்சியை வாக்களித்தவர்கள் பார்க்கலாம்.
ஏழு நொடிகளுக்குப் பின்னர் அக்காகிதம் பேழையின் அடியில் சேமிக்கப்பட்டு விடும். வாக்களித்ததற்கான ரசீது போல இருக்கும்
இக்காகிதத்தை வாக்காளர்கள் தொடவோ வீட்டுக்கு
எடுத்துச் செல்லவோ முடியாது. பார்க்க மட்டுமே முடியும். இருப்பினும் தான் வாக்களித்த
சின்னத்திற்குத்தான் தனது வாக்கு பதிவாகி உள்ளது
என்னும் மன நிறைவை இதன் மூலம் வாக்காளர்
.அடைகிறார்.
பரீட்சார்த்த முறையில் முதன் முதலாக நாகாலாந்து
மாநிலத்தில் உள்ள நோக்சென் (Noksen) சட்டமன்றத்
தொகுதியில் செப்டம்பர் 2013ல் VVPAT பயன்படுத்தப் பட்டது.
தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னோடித்
திட்டம் என்ற பெயரில் 543 நாடாளுமன்றத்
தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டும் VVPAT அறிமுகப்
படுத்தப் பட்டது. அந்த எட்டில் மத்திய சென்னைத்
தொகுதியும் ஒன்று.
நாட்டின் 543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்
பட்ட EVM மூலமாகவே வாக்குப் பதிவு நடக்க
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல்
ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. எனவே
நடைபெற்று வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில்
543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்பட்ட
EVMகளே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன..
இந்த இடத்தில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா பற்றிக்
குறிப்பிட்டே ஆகவேண்டும்.பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் பொறியாளராக இருந்த சுஜாதா EVMஐ
உருவாக்கியவர்களில் ஒருவர். 1982ல் நடந்த வடக்கு பரவூர் (கேரளம்) தேர்தலில், சுஜாதாவே நேரடியாக தொகுதிக்குச் சென்று
EVMஐ இயக்கிக் காட்டினார். இன்று பிரம்மாண்டமாக
வளர்ந்து நிற்கும் மின்னணு வாக்களிப்பின் மூலவித்து அவரே.
பிற நாடுகளில் EVM மூலம் வாக்களிப்பு இல்லையா?
----------------------------------------------------------------------------------------
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே
EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு
முறைக்கு வந்து விட்டபோது, நாம் ஏன் EVMகளைப்
பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி
EVM எதிர்ப்பாளர்களால் எழுப்பப் படுகிறது.
அமெரிக்கர்கள் பலரும் ஒரே மனைவியோடு
காலம் பூராவும் வாழ்வதில்லை. நாம் ஏன் ஒரே மனைவியுடன்
காலம் முழுவதும் வாழ வேண்டும் என்ற கேள்விக்கும் இதற்கும்
பெரிய வேறுபாடு இல்லை.
மேலும் அமெரிக்காவும் எல்லா ஐரோப்பிய நாடுகளும்
EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு
முறைக்கு வந்து விட்டன என்று கூறுவதும் உண்மையல்ல.
அமெரிக்காவில் 27 மாநிலங்களில் இந்தியாவில் உள்ளது
போன்ற EVM மூலம் வாக்களிக்கும் முறை இன்னமும் உள்ளது.
.
ஒரு சில நாடுகள் காகித வாக்குச்சீட்டு முறைக்குத்
திரும்பி இருப்பது உண்மையே. ஜெர்மனியில்
அந்நாட்டு உச்சநீதிமன்றம் (German Constitutional Court) 2009ல்
வழங்கிய தீர்ப்பின்படி, ஜெர்மனி காகித வாக்குச்சீட்டு
முறைக்குத் திரும்பி இருக்கிறது. இது போல ஒரு
சில நாடுகள், அங்குள்ள குறிப்பான சூழல்கள்
காரணமாக EVM முறையைக் கைவிட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது,
கள்ள ஓட்டுப் போடுவது, மக்களில் சில பிரிவினரை
வாக்களிக்க விடாமல் தடுப்பது,
தேர்தல் அதிகாரியை மிரட்டி தேர்தல் முடிவை
மாற்றிச் சொல்லுவது ஆகிய நடைமுறைகள்
மேற்கூறிய நாடுகளில் இல்லை என்பதால்
வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் திரும்புவதால்
அங்கெல்லாம் எந்த நஷ்டமும் கிடையாது.
இந்தியாவில் அப்படி அல்ல. வாக்குச் சீட்டு
முறைக்குத் திரும்புவதானது எவ்விதத்திலும்
நிலைமையைச் சீராக்காது என்பதுடன் முன்னிலும்
மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும்.
சரி, ஜெர்மனி போன்ற நாடுகள் ஏன் EVMகளைக்
கைவிட்டன? அங்கெல்லாம் ஒட்டு மொத்த தேர்தல்
நடைமுறையுமே முழுவதுமாகக் கணினிமயம்
ஆக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவிலும் அப்படியே.
அதாவது வேட்பு மனு தாக்கல் செய்வது முதல்
வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பது
வரை அனைத்துமே கணினிமயம்.
இதன் காரணமாக அந்நாடுகளின் EVMகள் தகவல்
தொடர்பு வலைப்பின்னலுடன் இணைக்கப்
பட்டவையாக இருந்தன (connected to a communication network).
வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட EVMகளில்
மிகவும் சுலபமாக மோசடி செய்ய முடியும்.
அதாவது அத்தகைய EVMகளின் முடிவுகளை
எவர் வேண்டுமானாலும் எங்கிருந்து கொண்டேனும்
எளிதில் முறைகேடாக மாற்றியமைக்க முடியும்.
நம் நாட்டின் தனித்த கணினிகள்!
------------------------------------------------------------
நம் நாட்டின் EVMகள் அனைத்தும் எந்த
வலைப்பின்னலுடன் இணைக்கப்படாத தனித்த
கணினிகள் (standalone and non networked).
நம் நாட்டில் ஒட்டு மொத்த தேர்தல் நடைமுறையும்
முழுவதுமாகக் கணினிமயம் ஆக்கப் படவில்லை.
வாக்குப்பதிவு மட்டுமே இங்கு கணினி மூலமாக
(அதாவது EVMகள் மூலமாக) நடைபெறுகிறது. மீதி
அனைத்தும் மனிதச் செயல்பாடுகள்தான் (manual actions).
எனவே மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், நமது
EVMகள் அனைத்தும் தனித்தவையாக வலைப்பின்னலுடனும் இணைக்கப் படாதவையாக
(stand alone and non networked) இருப்பதால், இவற்றை
ஹேக் (hack) செய்வது எளிதல்ல.இந்த அம்சத்தில் இவை பிற நாடுகளின் EVMகளை விடப் பாதுகாப்பானவை.
வீட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு பாதுகாப்புடன்
இருக்கும் பெண் போன்றது தனித்த EVM.
வெளியில் நெரிசலில் சாலையில் நடந்து செல்லும் பெண்
போன்றது வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட EVM.
நம் நாட்டின் EVMகளுடன் எந்த ஒரு
"தொடர்புக்கருவி"யையும் (communication device)
பொருத்த முடியாது. அதாவது ஒரு ப்ளூ டூத் (Bluetooth) கருவியையோ
அல்லது வேறு ஏதாவது வயர்லெஸ் கருவியையோ
(Wi-Fi device) நம் நாட்டு EVMகளில் பொருத்த முடியாது.
பொருத்தவே முடியாதபோது, அதை வெளியே வேறொரு இடத்தில் இருந்து கொண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவது
என்ற பேச்சுக்கே இடமில்லை.
எந்த அதிர்வெண்ணில் (any frequency) சமிக்ஞைகள்
அனுப்பப் பட்டாலும், அதைப் பெறுவதற்கான
எந்தவொரு ஏற்பியும் (frequency receiver) நம் EVMகளில் கிடையாது.
ஈரிலக்க முறையில் (digital) வரும் சமிக்ஞைகளை
குறியீட்டு நீக்கம் செய்யவல்ல எந்தவொரு குறியீட்டு
நீக்கியும் (decoder) நம் EVMகளில் கிடையாது.
அறிவியல் மாணவர்கள் பயன்படுத்தும் கால்குலேட்டர்
போன்றதே நமது EVM. உங்கள் வீட்டில் உங்கள் மேஜையில் இருக்கும் கால்குலேட்டரில் வெளியில் வேறெங்கோ இருந்து கொண்டு
ஒருவரால் திருத்தம் செய்ய இயலாதல்லவா! அதைப்போலவே
நம் நாட்டு EVMகளிலும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் திருத்தம் செய்ய இயலாது.
ஒருவேளை வாக்குச் சாவடிக்குள் புகுந்து EVMகளைக்
கைப்பற்றி விட்டால், EVMகளுடன் ஒரு நேரடித்
தொடர்பு (physical access) கிடைத்து விடுகிறதே! அப்போது
தக்க தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு
EVMகளில் முறைகேடாகத் திருத்தம் செய்து, யாருக்கோ விழுந்த
வாக்குகளைத் தாம் விரும்பும் கட்சிக்குத் திருப்பி
விட இயலுமா? ஒருபோதும் இயலாது.
எப்படிஎன்பதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
மூன்று வகை எந்திரங்கள்!
-----------------------------------------------
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும்
EVMகள் M1, M2, M3 என்னும் மூன்று வகைப்பட்டவை.
ஆரம்ப காலத்தில் M1 வகை எந்திரங்களே பெருமளவில்
தயாரிக்கப்பட்டு பல்வேறு தேர்தல்களில் பயன்பட்டன.
இவற்றில் VVPATகளைப் பொருத்த இயலாது. எனவே இவை
இன்று பயன்படாது.
பின்னர் 2006-2012 காலக்கட்டத்தில் M2 வகை எந்திரங்கள்
தயாரிக்கப் பட்டன. விரும்பத்தகாத எவரும் இவற்றில்
உள்ள தரவுகளைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில்
தரவுகளைக் குறியீடாக (code) மாற்றிப் பாதுகாக்கும்
என்கிரிப்ஷன் (encryption) வசதி M2 வகை எந்திரங்களில்
செய்யப்பட்டு இருந்தது.
2013க்குப் பிறகு M3 வகை எந்திரங்கள் மட்டுமே
தயாரிக்கப் பட்டு வருகின்றன.
543 தொகுதிகளுக்கும் தேவையான எந்திரங்களை
வைத்திருக்கும் பொருட்டு, ஏற்கனவே உள்ளவை போக
மேலும் 9 லட்சம் M3 எந்திரங்கள் தருவிக்கப்பட்டன. இனி
மொத்தத் தேர்தலையும் M3 வகை எந்திரங்களை
மட்டுமே கொண்டு நடத்தக்கூடிய விதத்தில்
தேவையான அளவு M3 எந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்தியத் தேர்தல்
ஆணையம் பின்வரும் M-3 வகை EVMகளை இருப்பில் வைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகள் = 10.6 .லட்சம்.
Ballot Units = 22.3 லட்சம்
Control Units = 16.3 லட்சம்
VVPATs = 17.3 லட்சம்.
M3 வகை எந்திரங்களின் சிறப்பு என்னவெனில்,
இவற்றில் முறைகேடு செய்ய எவரேனும் முயற்சி
செய்தால், இந்த வகை எந்திரங்கள் உடனே
செயல்படாமல் நின்றுவிடும் (will stop functioning).
எனவே வாக்குச் சாவடிக்குள் புகுந்து EVMகளைக்
கைப்பற்றி, EVMகளைக் கையாள முடிகிற ஒரு நேரடித் தொடர்பு
(physical access) கிடைத்தாலும், எந்தத் தொழில்நுட்ப
வல்லுநராலும் முறைகேடு எதையும் செய்ய முடியாது.
காலந்தோறும் EVMகள் குறித்து வேட்பாளர்கள்,
மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்கள் கருத்தில்
கொள்ளப்பட்டு, தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் EVMகள் தொடர்ந்து மேம்பாடு அடைந்து கொண்டே வருகின்றன. EVMகளின் வரலாற்றில், கடைசியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.எவரேனும் முறைகேடு செய்ய முயலும்போது எந்திரம் செயல்படாமல் நின்று விடும். இதன் மூலம் அனைத்து முறைகேடுகளுக்குமான கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டு விடுகிறது. ஒரு சின்னத்துக்கு விழுந்த வாக்குகளை
இன்னொரு சின்னத்துக்கு மாற்றி விடுவார்களோ
என்ற அச்சத்திற்கு இனி இடமில்லை.
பொதுத்துறை நிறுவனங்களின் தயாரிப்பு!
---------------------------------------------------------------------------
EVMகளை (VVPAT உட்பட) .
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ( BEL)
எலக்ட்ரானிக் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா (ECIL)
ஆகியு இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
EVMகளின் மென்பொருளான சோர்ஸ் கோடை (source code) இவ்விரு நிறுவனங்களிலும் உள்ள தெரிந்தெடுக்கப்பட்ட சில பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழு .தயாரிக்கிறது.
இந்த சோர்ஸ் கோட் சோதிக்கப்பட்டு மதிப்பிடப்படுகிறது.
பின்னர் இந்த சோர்ஸ் கோடானது மெஷின் கோடாக மாற்றப்
படுகிறது (source code is converted into machine code). இவை அனைத்தும் மிகவும் பாதுகாப்பான கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நடைபெறுகின்றன.
சோர்ஸ் கோட் (source code) என்பது ஒரு கணினி என்ன வேலை
செய்ய வேண்டுமோ, அந்த வேலையைச் செய்வதற்கான
கட்டளைகளின் தொகுப்பு. இது கணினி நிரலாளர்களால்
(computer programmers) கணினி நிரல் மொழியில் (computer programming language) எழுதப்படுகிறது. ஜாவா, ஆரக்கிள், C, C++ ஆகியவை
பலரும் அறிந்த கணினி நிரல் மொழிகள் ஆகும்.
சோர்ஸ் கோடை கணினி பற்றித் தெரிந்த எவரும் படித்துப்
புரிந்து கொள்ளக் கூடும். ஏனெனில் இது வாசிக்கத்தக்க
மொழியில்தான் (readable language) இருக்கும். இந்தியாவில் இது
ஆங்கிலத்தில் இருக்கிறது. எவரும் சோர்ஸ் கோடை படித்து விடாமல் தவிர்க்கும் பொருட்டு, சோர்ஸ் கோடானது மெஷின் கோடாக மாற்றப் படுகிறது. மெஷின் கோட் என்பது
எந்திரத்துக்குப் புரியக் கூடிய மொழியில் இருக்கும்.
அதாவது பைனரி, ஹெக்சா டெசிமல் அல்லது இவற்றின் கலவையாக இருக்கும். தமிழோ ஆங்கிலமோ அல்லது சமஸ்கிருதமோ எதையுமே மெஷின் புரிந்து கொள்ளாது.
பழைய M1, M2 வகையிலான EVMகளில், மெஷின் கோடானது
நுண்கட்டுப்படுத்திகளில் (micro controllers) எழுதப்பட்டு இருக்கும். இதற்காக மெஷின் கோடை நுண்கட்டுப்படுத்திகளைத் தயாரிப்போரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அதை
OTP (One Time Programmable) என்னும் முறையில் எழுதுவார்கள்.
OTP என்றால் ஒரு முறை எழுதப்பட்ட புரோகிராமை
மாற்றவோ திருத்தவோ அழித்து எழுதவோ முடியாது
மென்பொருள். தயாரிப்பின்போது எழுதப்படும் இந்த
புரோகிராமை பின்னர் வேறு எந்த நேரத்திலும் மாற்ற முடியாது.
2013க்குப் பிறகான M3 வகை EVMகள் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் மேம்பட்டவை. இவற்றில் மெஷின் கோடை OTP முறையில் எழுதுவதற்காக நுண்கட்டுப்படுத்திகளைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, BEL, ECIL நிறுவனங்களின் வளாகத்திலேயே
இந்த வேலை நடந்து விடும். அதாவது EVMன் சில்லுக்கு
உள்ளேயே (within the chip) மெஷின் கோடானது பதிந்து
வைக்கப்பட்டு விடுகிறது. பிற தனியார் நிறுவனங்களின்
தயவின்றி, EVMஐத் தயாரிக்கும் நமது பொதுத்துறை
நிறுவனங்களே இந்த வேலையைச் சொந்தமாகச் செய்து விடும்.
தொழில்நுட்ப வளர்ச்சி இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது.
இதன் மூலம் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய
மெஷின் கோட் பற்றிய விவரத்தை எந்த ஒரு வெளி
நிறுவனத்துக்கும் தெரியப் படுத்த வேண்டிய தேவை
இல்லாமல், அனைத்து ரகசியங்களும் EVMகளைத் தயாரிக்கும்
BEL, ECIL நிறுவனங்களுக்கு உள்ளேயே அடங்கி விடுகின்றன.
EVM செல்லும் வழியெங்கும் கண்காணிப்பு!
----------------------------------------------------------------------------
இந்தியத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு EVMக்கும் ஒரு தனித்த எண்ணை (unique number) வழங்குகிறது. இந்த எண்ணே ஒரு
EVMன் அடையாளம் (identity) ஆகும். இந்த எண் தேர்தல் ஆணையத்தின் தரவகத்தில் (database) பதிவு செய்யப் படுகிறது.
மேலும் ஒரு EVM எங்கு கொண்டு செல்லப் பட்டாலும்
அதன் பாதை (track) முழுவதும் கண்காணிக்கப் படுகிறது.
இதற்காக "பாதை கண்காணிப்பு மென்பொருள்"
எனப்படும் ETS (EVM Teacking Software)என்னும் மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது இதன் மூலம் எந்த ஒரு நேரத்திலும்
ஒரு EVMன் அடையாளத்தையும் அது எங்கு இருக்கிறது
என்பதையும் கண்டறிய இயலும்.
வாக்குச் சாவடிகளில் EVM!
----------------------------------------------
EVM குறித்து அறிய வேண்டிய பல்வேறு தொழில்நுட்ப
விவரங்களை விரிவாகப் பார்த்தோம். இவை தயாரிப்பு
மற்றும் வடிவமைப்பு சார்ந்தவை. இவை அனைத்தும் தொழில்நுட்ப அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் (technological safeguards).
இவ்வாறு மிகுந்த அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட EVMகள் வாக்குச்
சாவடிகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் பார்ப்போம்.
இவை நிர்வாக அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் (Administrative safeguards)
எந்த EVM எந்தத் தொகுதிக்கு அனுப்பப் படுகிறது
என்பது முற்றிலும் தற்போக்காக (random) முடிவு செய்யப்படுகிறது.
அதே போல ஒரு தொகுதியில் எந்த வாக்குச் சாவடிக்கு
எந்த EVM என்பதும் முற்றிலும் தற்போக்காக முடிவு
செய்யப் படுகிறது. இவ்வாறு EVMகளை தொகுதிக்கும்
வாக்குச் சாவடிக்கும் அனுப்புவதில் இரண்டு தற்போக்குகள்
(two randomisations) நடைமுறைப் படுத்தப் படுகின்றன.
தேர்தல் நாளன்று, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில்
EVMகளின் செயல்பாடு பரிசோதித்துக் காட்டப் படுகிறது. இரண்டு
மாதிரித் தேர்தல்கள் (mock polls) நடத்தப்பட்டு முடிவுகள்
அறிவிக்கப்பட்டு EVMன் சரித்தன்மை உறுதி செய்யப்
படுகிறது.ஒருவேளை ஏதேனும் ஒரு EVMன் செயல்பாடு
சரியில்லை என்றால், அது பழுதடைந்ததாகக் கொண்டு,
அதற்குப் பதில் வேறொரு EVM கொண்டு வரப் படுகிறது.
இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்னரே EVMகள் வாக்காளரின்
முன் வைக்கப் படுகின்றன.
யாராலும் முறைகேடு செய்ய முடியவில்லை!
-------------------------------------------------------------------------
லண்டனில் ஜனவரி 2019ல் நடைபெற்ற ஒரு
கூட்டத்தில் திரு சையது சுஜா என்னும் தொழில்நுட்ப வல்லுநர் பங்கேற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMஐக் கைப்பற்றி (hack) முறைகேடு செய்ய முடியும் என்று காட்டப் போவதாக ஆரவாரமான அறிவிப்புக்கள் வெளியாயின. ஆனால் திரு சையது சுஜா அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; லண்டனுக்கே வரவில்லை. எந்த EVM எந்திரத்தையும் அவர் ஹேக் செய்து காட்டவில்லை. எனினும் அவர்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMஐ ஹேக்
செய்து விட்டதாக பொய்ச் செய்திகள் உலவின.
திரு சையது சுஜா லண்டனுக்கும் வர வேண்டாம்,
இந்தியாவுக்கும் வர வேண்டாம். தான் இருக்கும்
இடத்திலேயே இருந்து கொண்டு, இந்தியத்
தேர்தல் ஆணையத்தின் EVMஐ ஹேக் செய்வதற்கு
உரிய அல்காரிதம்-ஐ (algorithm) பகிரங்கமாக வெளியிடலாமே!
(algorithm = step by step commands, அதாவது கணினியில்
படிப்படியாகச் செய்ய வேண்டிய உத்தரவுகளின்
தொகுப்பு).
அல்லது லண்டனில் அவர் செய்து காட்டப் போவதாக
அறிவித்த EVM hackingஐ, அவர் காமிரா முன்பாக
செய்து காட்டி, அதை யூடியூபில் வீடியோவாக
வெளியிடலாமே! அதை யாரும் தடுக்கவில்லையே!
உண்மையிலேயே EVM hacking செய்யும் திறன் கொண்ட
ஒருவரால், இந்த இரண்டையும் வெகு சுலபமாகச்
செய்ய முடியும். இது எலக்ட்ரானிக் யுகம். ஒரு
மொபைல் போன் இருந்தால் போதும். மொபைல்
போனில் உள்ள காமிராவில் EVM hackingஐ படம்
எடுத்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு உலகையே
அதிர .வைக்கலாம். ஆனால் தன்னை ஒரு எலக்ட்ரானிக் நிபுணர் என்று சொல்லிக் கொள்ளும் திரு சையது சுஜா
இந்த எளிய செயல்களைக்கூடச் செய்ய முன்வரவில்லை
என்பது அவரின் மோசடியை அம்பலப் படுத்தி விடுகிறது.
தேர்தல் ஆணையத்தின் EVM சவால்!
---------------------------------------------------------------
2017 பெப்ரவரி- மார்ச்சில் இந்தியாவில் ஐந்து
மாநிலங்களின் (உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்,
மணிப்பூர், கோவா) சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.
இத்தேர்தலில் தோல்வியடைந்த சில கட்சிகள்
தங்களின் தோல்விக்குக் காரணம் EVMகளே என்று
குற்றம் சாட்டின.
எனவே EVMகளின் நம்பகத் தன்மையை உறுதி
செய்யவும், அரசியல் கட்சிகளின் ஐயங்களைப்
போக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் முன்வந்து
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அவற்றுள் EVM சவால் (EVM Challenge) என்பது முதன்மையானது.
.
EVMகளில் மோசடி செய்ய முடியாது என்றும்
மோசடி செய்ய முடியுமானால் அதை நிரூபித்துக்
காட்டுமாறும் இந்தியத் தேர்தல் ஆணையம் பகிரங்கமாக
சவால் விடுத்தது. இந்தச் சவாலில் பங்கேற்குமாறு
தேசிய, மாநிலக் கட்சிகளை தேர்தல் ஆணையம் அழைத்தது.
2017 ஜூன் 3ஆம் தேதியானது சவாலுக்கான நாளாக
நிர்ணயிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி (CPM), சரத் பவாரின் தேசியவாத (NCP) காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள்
மட்டுமே சவாலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இருந்தன.
EVMகள் மீது புகார் கூறிய கட்சிகள் எவையும் சவாலில்
பங்கேற்க முன்வரவில்லை.
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில்
பயன்படுத்தப்பட்ட எந்தவொரு EVM எந்திரத்தையும்
சோதித்துப் பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்து இருந்தது. அதாவது மேற்கூறிய ஐந்து
மாநிலங்களில் இருந்து எந்தத் தொகுதியில் இருந்தும்
எந்த பூத்தில் பயன்படுத்தப்பட்ட EVMஐயும்
சோதிக்கலாம் என்றும், தாங்கள் சோதித்துப் பார்க்க விரும்பும் EVMகளை அரசியல் கட்சிகள் கேட்டுப் பெறலாம் என்றும்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இருப்பினும் இன்னின்ன EVMகள் வேண்டும் என்று
எந்தக் கட்சியும் கோரவில்லை. எனவே தேர்தல்
ஆணையம், கட்டுக்காவல் மிகுந்த அறைகளில்
(strong rooms) பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த
EVMகளை முற்றிலும் தற்போக்கான முறையில்
தெரிவு செய்து (random selection) சவாலுக்கு முன்வைத்தது.
உ.பி, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மூன்று
மாநிலங்களில் உள்ள 12 சட்ட மன்றத் தொகுதிகளில்
இருந்து மொத்தம் 14 EVMகள் கொண்டு வரப்பட்டு
சவாலுக்கு முன்வைக்கப் பட்டன.
சவால் நாளான 3 ஜூன் 2017 அன்று, மார்க்சிஸ்ட்
கட்சியும், திருமதி வந்தனா சவான் எம்.பி தலைமையில் வந்த
தேசியவாத காங்கிரசும் தாங்கள் சவாலில் பங்கேற்க
வரவில்லை என்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள
மட்டுமே வந்ததாகவும் கூறிப் பின்வாங்கின.
ஆக EVMகள் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ஆதாயம் கருதி, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற அளவில் கூறப்பட்டவையே என்பது புலப்பட்டது. EVMகளின் நம்பகத் தன்மை
உருக்குப் போன்று அசைக்க முடியாதது என்ற செய்தி
130 கோடி இந்திய மக்களையும் சென்றடைந்தது.
ஆக இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில், இந்தியத்
தேர்தல் ஆணையத்தின் EVMகளில் யார் எவராலும் எந்த முறைகேட்டையும் செய்ய முடியாது என்ற உண்மையை இக்கட்டுரை நிரூபிக்கிறது. QED.
*********************************************************