வெள்ளி, 16 ஏப்ரல், 2021

 அறுபது ஆண்டுகளைக் கொண்ட

தமிழ் ஆண்டுக்கணக்கு!
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
சூரியனின் இயக்கத்தைப் பற்றிய அறிவை
முதன்முதலில் பெற்றவர்கள் ஆசியர்களே.
இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா போன்ற
ஆசிய நாடுகளே மனித குலத்திலேயே
முதன் முதலாக சூரியனை அதன் இயக்கத்தை
நன்கு அறிந்திருந்தன. காலண்டர் உருவாக்கம்,
புத்தாண்டு உருவாக்கம் ஆகியவற்றில் ஆசிய
நாடுகளே முன்னிலையில் இருந்தன.
ஐரோப்பிய நாடுகள் குளிர்ப் பிரதேசங்கள்
ஆகும். பல இடங்களில் வெப்பநிலை செல்ஸியஸ்
அளவில் மைனசை நெருங்கும். அங்கு வெயிலும்
குறைவு. விறைத்துப் போகிற குளிரில்
அவர்களால் வானில் குறைந்த நேரமே
இருக்கும் சூரியனை ஆராய்வது இயலாது.
எனவே ஐரோப்பியர்கள் இயல்பாகவே
வானியலில் மிகவும் பின்தங்கி இருந்தனர்.
அரேபிய தீபகற்பம் உள்ளிட்ட பல்வேறு
பாலைவன நாடுகளில் வெயில் மிகவும் அதிகம்.
பகல் நேர வெப்பநிலை குறைந்தது 45 டிகிரி
அல்லது 50 டிகிரி செல்ஸியஸ் இருக்கும். அதீத
வெப்பம் காரணமாக அவர்களாலும் சூரியனை
ஆராய இயலவில்லை. எனவே அவர்களால்
சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில்
அமைந்த துல்லியம் குறைந்த சந்திர
காலண்டரையே (lunar calendar)
உருவாக்க முடிந்தது.
எகிப்து நாடு அப்பிரிக்கக் கண்டத்தைச்
சேர்ந்ததாயிற்றே; அவர்களின் வானியல்
அறிவும் சிறந்து விளங்கியதே; பூமியின்
சுற்றளவை முதன் முதலில் கண்டறிந்தது
எகிப்து அறிஞர் எரோட்டஸ்தீனஸ்தானே
என்று சிலர் கருதலாம். எனவே
வானியல் அறிவில் உலகில் தலைசிறந்து
விளங்கியோரில் ஆசியர்களோடு
ஆப்பிரிக்கர்களும் இடம் பெற வேண்டுமல்லவா
என்றும் சிலர் கருதலாம்.
எகிப்து ஒரு ஆப்பிரிக்க நாடு என்று
கருதுவது உண்மையில் சரியானதல்ல.
எகிப்து நாடு அரேபிய தீபகற்பத்தை ஒட்டி
வருவது. ஆசியாக் கண்டத்தின்
நீட்சியாகத்தான் எகிப்து இருக்கிறது.
வரைபடத்தைப் பார்த்து விளங்கிக்
கொள்ளுங்கள். கண்டப் பிரிவினை
பிற்காலத்தில் ஏற்பட்டது. எனவே
எகிப்தையும் ஒரு ஆசிய நாடாகக்
கருதுவதில் தவறில்லை.
மித வெப்பப் பிரதேசங்களாக இருந்த
காரணத்தால், இந்தியா சீனா கொரியா
ஜப்பான் நாடுகளின் மக்கள் சூரியனின்
இயக்கத்தை முழுமையாகவும் துல்லியமாகவும்
அறியும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவை
ஒட்டியும் உள்ள பல நாடுகளில் அறுபதாண்டு
காலச் சுழற்சி (sixty year cycle) உடைய
காலக்கணிதம் (calendar) பின்பற்றப் பட்டது.
சீனாவிலும் இதே போன்று அறுபதாண்டு
காலச் சுழற்சி உடைய காலக் கணிதமே
பின்பற்றப் பட்டது. சீனாவின் அறுபதாண்டு
காலச் சுழற்சியே ஜப்பான், கொரியாவிலும்
பின்பற்றப் பட்டது.
எந்த நாட்டு மக்கள் அறுபதாண்டு காலச்
சுழற்சியின் அடிப்படையில் காலக்கணிதம்
கொண்டிருந்தார்களோ அவர்களே மானுட
வரலாற்றில் நாகரிகத்தின் முன்னோடிகள்.
தமிழர்கள் அறுபதாண்டு காலச் சுழற்சியின்
அடிப்படையிலான காலக்கணிதத்தை
நடைமுறைப் படுத்திக் கொண்டிருந்தபோது,
ஐரோப்பியர்கள் காட்டு மிராண்டிகளாகத்
திரிந்து பச்சை மாமிசத்தைத் தின்று
கொண்டிருந்தார்கள்.
அறுபதாண்டு காலச் சுழற்சி (sixty year cycle)
இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்தது.
வராக மிகிரர் என்னும் கணித வானியல்
அறிஞர் பற்றி ஒரு சிலரேனும் அறிந்திருக்கலாம்.
இவர் பொது சகாப்தம் ஆறாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர் குப்தப் பேரரசின் கணித வானியல்
அறிஞர். இவரின் பிரசித்தி பெற்ற நூல்
பிருஹத் சம்ஹிதை. கணிதம் முக்கோணவியல்
வானியல் தேற்றங்கள் அடங்கிய நூல் இது.
முக்கோணவியலில் (trigonometry)
Sine squared theta plus cos squared theta = 1
என்று ஒரு தேற்றம் உண்டு. அந்தத்
தேற்றத்தைக் கண்டு பிடித்தவர்
வராக மிகிரர்.
Sine 90 minus theta = cos theta
Cos 90 minus theta = sine theta
என்ற தீரங்களைக் கண்டுபிடித்தவர்
வராக மிகிரரே. இந்தச் செய்திகளெல்லாம்
பாடப் புத்தகத்தில் இருக்காது.
வராக மிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதையில்
அறுபதாண்டு காலச் சுழற்சியும் அதன்
அடிப்படையில் அமைந்த காலக் கணிதமும்
பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
.
அறுபதாண்டுச் சுழற்சி எப்படி வந்தது?
நமது சூரியக் குடும்பத்தில் ஒன்பது
கோள்கள் என்ற நிலை 2006 வரை இருந்தது.
பின்னர் புளூட்டோ தனது கோள் தகுதியை
இழந்தது. அதன் விளைவாக எட்டுக் கோள்கள்
என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் அந்தக் காலத்தில் 2000 ஆண்டுகளுக்கு
முன்பு, ஆறு கோள்கள் மட்டுமே அறியப்
பட்டிருந்தன.
1) புதன் (mercury)
2) வெள்ளி (venus)
3) பூமி (earth)
4) செவ்வாய் (mars)
5) வியாழன் (jupiter)
6) சனி (saturn).
யுரேனஸ் நெப்டியூன் ஆகியவை அன்று
கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை.
இந்த ஆறில், புதனும் வெள்ளியும்
சூரியனைச் சுற்றி வர எடுத்துக்
கொள்ளும் காலம் ஒரு புவியாண்டை
விடக் குறைவு.
புதன் = 88 நாட்கள்
வெள்ளி = 224.7 நாட்கள்
பூமியானது 365.25 நாட்களை (one earth year)
எடுத்துக் கொள்கிறது.
செவ்வாய் = 2 புவியாண்டு (தோராயமாக),
(687 நாட்கள்).
வியாழன் = 12 ஆண்டுகள் (தோராயமாக)
(4331 நாட்கள்)
சனி = 30 ஆண்டுகள் (தோராயமாக)
(10,747 நாட்கள்)
. .
சனி (30), வியாழன் (12), செவ்வாய் (2)
பூமி (1) ஆகிய நான்கும் அறுபதாண்டு
முடிவில் ஒரே புள்ளிக்கு வந்து சேரும்.
1, 2, 12, 30 ஆகிய எண்களின் மீச்சிறு
பொது மடங்கு (LCM = Least Common Multiple)
60 ஆகும்.
இவ்வாறுதான் 60 ஆண்டு காலச் சுழற்சி
அடிப்படையிலான காலக்கணிகம் உருவானது.
இந்தியர்களாகிய நாம் இந்தக் காலக்
கணிதத்தை உருவாக்கிய நேரத்தில்
ஐரோப்பியர்கள் குகைகளில் வாழ்ந்து
மிருகங்களின் இறைச்சியைப் பச்சையாகத்
தின்று கொண்டிருந்தார்கள்.
அக்காலத்தில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு தொடராண்டின் தேவை
உணரப்படவில்லை. மேலும் மனிதர்களின்
சராசரி ஆயுள் இன்றுள்ளது போல் (70 ஆண்டு)
அன்று அதிகமாக இல்லை.எனவே அறுபதாண்டு
கலச் சுழற்சியின் அடிப்படையில் அமைந்த
காலக்கணிதம் அன்றைய தேவையை நிறைவு
செய்வதாய் இருந்தது.
இந்தியா முழுவதும் அறுபதாண்டு காலச்
சுழற்சியின் அடிப்படையில் அமைந்த
காலக்கணிதமும் சித்திரைப் புத்தாண்டும்
பின்பற்றப் பட்டன.
அறுபதாண்டு காலச் சுழற்சி பற்றிய
அறிவு இந்தியா முழுவதும் தமிழ்நாடு
நீங்கலாக சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில்
மட்டுமே அறுபதாண்டுகளின் பெயர்கள்
சமஸ்கிருதத்தில் இருப்பதால் அவை
தமிழாண்டுகள் அல்ல என்னும் மூடத்தனம்
கோலோச்சுகிறது. ஆரம்பத்தில் 60
ஆண்டுகளுக்கும் தமிழிலேயே பெயர்கள்
இருந்தன.காலப்போக்கில் சமஸ்கிருதப்
பெயர்கள் வந்து சேர்ந்தன.
கருணாநிதி தயாளு ஸ்டாலின் ஆகிய சொற்களில்
எதுவுமே தமிழ் அல்ல. இதனால் கருணாநிதியும்
தயாளு அம்மாளும் மு க ஸ்டாலினும்
தமிழ்நாட்டிலேயே வாழ்ந்ததில்லை என்று
கொள்ள முடியுமா?
இன்று தமிழ்க் குழந்தைகள் அனைத்தும்
பெற்றோரை மம்மி டாடி என்று கூப்பிடுவதால்,
தமிழ்க் குழந்தைகள் எல்லாம்
வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவை என்று
பொருள் கொள்ள முடியுமா? முடியாது அல்லவா!
அது போலவே பிரபவ விபவ என்று 60 ஆண்டுகளின்
பெயர்கள் இருப்பதாலேயே அவை தமிழாண்டுகள்
அல்ல என்று யார் சொல்வார்கள்?
அறிவியலே அறியாத தற்குறிகளே
அப்படிச் சொல்ல முடியும். அப்படிப்பட்ட
தற்குறிகள் இந்தியாவிலேயே
தமிழ்நாட்டில்தான் அதிகம்.
*********************************************
Prabha Badrinath, Kothai Nachiar and 79 others
7 Comments
48 Shares
Like
Comment
Share
7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக