ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

வாருங்கள்! வந்து எங்கள் EVMகளை
ஹேக் (hack) செய்து காட்டுங்கள் என்ற
தேர்தல் ஆணையத்தின் சவாலை ஏற்க நாதி இல்லை!
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலாது! தொடர் கட்டுரை பகுதி-3.
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMகளை
ஹேக் செய்ய எவனும் இன்னும் பிறக்கவில்லை!
இந்தக் கூற்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நிரூபிக்கப்
பட்ட எந்தக் கூற்றும் கணிதத்தில் ஒரு தேற்றமாகக்
கருதப்படும். (Any statement which is proved is a theorem).
எனவே நியூட்டன் அறிவியல் மன்றத்தின் மேற்கண்ட
கூற்றும் பித்தகோரஸ் தேற்றம், அப்பலோனியஸ்
தேற்றம் போல ஒரு தேற்றமே ஆகும்.
2017 பெப்ரவரி- மார்ச்சில் இந்தியாவில் ஐந்து
மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்,
மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களே
அவை. உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
மாயாவதியும் அகிலேஷ் யாதவும் படுதோல்வி
அடைந்தனர்.
தங்களின் தோல்விக்குக் காரணம் EVMகளே என்று
அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் மூலம் EVMகளின்
நம்பகத் தன்மை மீது ஐயத்தை ஏற்படுத்தினர்.
எனவே EVMகளின் நம்பகத் தன்மையை உறுதி
செய்யவும், அரசியல் கட்சிகளின் ஐயங்களைப்
போக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் முன்வந்து
பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது
மதிப்புக்குரிய நஜீம் ஜைதி தலைமைத் தேர்தல்
ஆணையராக (CEC) இருந்தார்.
அ) 12 மே 2017ல் நாட்டிலுள்ள தேசியக் கட்சிகளையும்
மாநிலக் கட்சிகளையும் அழைத்து EVM குறித்து
விளக்கம் அளித்ததுடன் அவர்களின் ஐயங்களையும்
இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டுத் தெரிந்து
கொண்டது. இதில் 42 கட்சிகள் பங்கேற்றன.
பெருவாரியான கட்சிகள் EVMகள் மீது நம்பிக்கை
தெரிவித்தன.ஒரு சில கட்சிகள் மட்டுமே
ஐயங்களைக் கூறின.
ஆ) 20 மே 2017ல் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு
செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இதில் EVMகளின்
செயல்முறையை விளக்கியும், ஐயங்களைப்
போக்கியும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இச்சந்திப்பில் EVM Challenge எனப்படும் EVM சவாலை
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இ) EVMகளில் மோசடி செய்ய முடியாது என்றும்
மோசடி செய்ய முடியுமானால் அதை நிரூபித்துக்
காட்டுமாறும் இந்தியத் தேர்தல் ஆணையம் சவால்
விடுத்தது. செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக
விடப்பட்ட சவால் இது. இந்தச் சவாலில் பங்கேற்குமாறு
தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு அன்றைய தினமே
(20 மே 2017) அழைப்பு அனுப்பப் பட்டது.
ஈ) 2017 ஜூன் 3 தேதியானது சவாலுக்கான நாளாக
நிர்ணயிக்கப் பட்டது. சவாலில் பங்கேற்கும் அரசியல்
கட்சிகள் தங்கள் பங்கேற்பைத் தெரிவிக்க 26 ஜூன் 2017
மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப் பட்டது.
எனினும் மார்க்சிஸ்ட் கட்சி (CPM), சரத் பவரின்
தேசியவாத (NCP) காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள்
மட்டுமே சவாலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து
இருந்தன.
உ) நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில்
பயன்படுத்தப்பட்ட எந்தவொரு EVM எந்திரத்தையும்
சோதித்துப் பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்து இருந்தது. அதாவது மேற்கூறிய ஐந்து
மாநிலங்களில் இருந்து எந்தத் தொகுதியில்,
எந்த பூத்தில் பயன்படுத்தப்பட்ட EVMஐயும்
சோதிக்கலாம் என்றும், எந்தெந்த EVMகள்
கொண்டுவரப் பட வேண்டும் என்று அரசியல்
கட்சிகள் விருப்பம் தெரிவிக்கலாம் என்றும்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
ஊ) இருப்பினும் இன்னின்ன EVMகள் வேண்டும் என்று
எந்தக் கட்சியும் கோரவில்லை. எனவே தேர்தல்
ஆணையம், கட்டுக்காவல் மிகுந்த அறைகளில்
(strong rooms) சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த
EVMகளை முற்றிலும் தற்போக்கான முறையில்
தெரிவு செய்து (random selection) சவாலுக்கு முன்வைத்தது.
உ.பி, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மூன்று
மாநிலங்களில் உள்ள 12 சட்ட மன்றத் தொகுதிகளில்
இருந்து மொத்தம் 14 EVMகள் இவ்வாறு கொண்டு
வரப்பட்டன.
எ) சவால் நாளான 3 ஜூன் 2017 அன்று, மார்க்சிஸ்ட்
கட்சி, தான் சவாலில் பங்கேற்க வரவில்லை என்றும்
தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள
மட்டுமே வந்ததாகக் கூறியது.
ஏ) திருமதி வந்தனா சவான் தலைமையில் வந்த
தேசியவாத காங்கிரசும் அவ்வாறே கூறியது.
வந்திருந்த இவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும்
தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்
குழுவினர் EVMகளின் செய்முறை விளக்கம்
அளித்தனர்.
ஆக, வாக்குப் பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய
முடியும் என்று கூறியவர்கள் எவரும் அதை நிரூபிக்க
முன்வரவில்லை. கொள்ளையடிப்பது, ஊழல்
செய்வது, பதவிச் சுகங்களை அநுபவிப்பது
ஆகியவை தவிர வேறெதிலும் அக்கறையற்ற
முற்றிலும் தற்குறிகளையும் கிரிமினல்களையும்
கொண்ட அரசியல் கட்சிகள் எவ்வளவு
பொறுப்பற்றவை என்பதையும் நம்பகத்தன்மை
துளியும் இல்லாதவை என்பதையும் EVM சவால் என்ற
இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
இதற்கப்புறமும் EVMகளை ஹேக் செய்ய முடியும்
என்று நம்பும் அப்பாவிகள் உண்மையை உணர வேண்டும்.
ஆக மொத்தத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின்
EVMகளை எந்தக் கொம்பாதி கொம்பனாலும்
ஹேக் (hack) பண்ண முடியாது என்பதை இதன் மூலம்
நியூட்டன் அறிவியல் மன்றம் நிரூபிக்கிறது. QED.
**********************************************************
தாய்மடி முருகானந்தம், இராமச்சந்திர மூர்த்தி.பா and 74 others
20 Comments
82 Shares
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக