புதன், 28 ஏப்ரல், 2021

 கிரிக்கெட் அப்படியொன்றும் எனக்குப் பிடித்த 

விளையாட்டு அல்ல. அறவே பிடிக்காத விளையாட்டும் 

அல்ல. நான் கிரிக்கெட் விளையாடியதே இல்லை.

கலைஞர் கருணாநிதியைப் போல அரைகுறையாக 

கிரிக்கெட்டைப் பற்றித் தெரிந்து கொண்டு அதை 

முழுநேரமும் ரசிப்பவனும் அல்ல நான்.


கல்லூரியில் முதலாண்டு பட்ட வகுப்பில் சேர்ந்தபோது, 

மைதானத்தில் உட்கார்ந்திருந்த எங்களிடம் வந்த  

பிஸிக்கல் டைரக்டர் ஒவ்வொரு மாணவனும் இங்குள்ள 

ஏதேனும் ஒரு விளையாட்டில் சேர வேண்டும் என்றார்.


எனவே மைதானம் முழுவதையும் நானும் நண்பர்களும் 

சுற்றி வந்தோம். கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட்,

கபடி, கோக்கோ, டென்னிஸ் என்று வரிசையாக 

விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அதில் எதுவும் 

பிடிக்கவில்லை. Baseball பரவாயில்லை என்று தோன்றியது.

எனவே பிஸிக்கல் டைரக்டர் கேட்கும்போது Baseballஐச் 

சொல்லி விடலாம் என்று நானும் நடராஜனும் முடிவு 

செய்தோம். நடராஜன் உடன் பயிலும் மாணவன்.


மறுநாள் பிஸிக்கல் டைரக்டர் வந்ததும் சொன்னோம்.

எங்களையெல்லாம் சேர்த்து இரண்டு டீம்களை

உருவாக்கி, ஆட்டத்தைச் சொல்லிக் கொடுத்து 

விளையாட வைத்தார். விளையாடினோம்.

எனக்கு அதில் ஈர்ப்பே ஏற்படவில்லை. நடராஜனைக் 

கேட்டேன். அவனும் என்னுடைய மனநிலையில்தான் 

இருந்தான்.


அடுத்த கேம்ஸ் பிரீயட்டின்போது, நாங்கள் இருவரும் 

பேஸ்பால் ஆடச் செல்லவில்லை. இதற்குள் நாங்கள் 

இருவரும் கல்லூரியின் சதுரங்க டீமில் சேர்ந்திருந்தோம்.

மணிக்கணக்கில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம்.


தொடர்ந்து கேம்ஸ் பிரீயடைப் புறக்கணித்தது,

பேஸ்பால் விளையாடச் செல்லாதது ஆகியவற்றால் 

கோபம் அடைந்த பிஸிக்கல் டைரக்டர், அவரை வந்து 

சந்திக்குமாறு எங்கள் இருவருக்கும் தாக்கீது 

அனுப்பி இருந்தார். போனோம்; பிஸிக்கல் டைரக்டரைப் 

பார்த்தோம். வராததற்கு மன்னிப்புக் கேட்டோம்.

சரி, போங்க, போய் baseball விளையாடுங்க என்றார்.


நாங்கள் தயங்கி நின்றோம். பேஸ்பால் பிடிக்கவில்லை 

என்றோம். அதனால் என்ன, பிடித்தமான வேறு ஒரு 

விளையாட்டைச் சொல்லு, அதில் சேர்த்து விடுகிறேன் 

என்றார் பிஸிக்கல் டைரக்டர். நாங்கள் மரமாக நின்றோம்.

நெருக்கிக் கேட்டபோது, இங்குள்ள எந்த விளையாட்டும்

பிடிக்கவில்லை என்ற உண்மையைச் சொன்னோம்.


பிஸிக்கல் டைரக்டர் முகம் மாறினார். இதுவரை எங்களை 

அன்புடனும் மரியாதையுடனும் நடத்திய அவரிடம் 

இளக்காரமும் சினமும் தோன்றி இருந்தன. நாளைக்கு 

பிரின்சிபாலைப் போய்ப்பாருங்க. டிசி கொடுப்பாரு,

வாங்கிட்டுப் போங்க என்றார்.


டிசி என்றதுமே எங்களுக்கு சர்வாங்கமும் நடுங்கி விட்டது.

:"சார், நாங்க செஸ்ல சேந்துட்டோம், அதனால்தான் 

கேம்ஸ் பிரீயடுக்கு வர முடியல" என்றோம் ஒரே குரலில்.

மேலும் நான் NCCயிலும் சேர்ந்திருந்தேன். அதையும் 

சொன்னேன். இதைக் கேட்டதும் பிஸிக்கல் டைரக்டருக்கு

எங்கள் மீது மீண்டும் மரியாதையும் அன்பும் எழுந்தன.

"சரி, போங்க, நேரம் கிடைக்கும்போது இங்க வாங்க"

என்று சொல்லி, என் கன்னத்தைக் கிள்ளி எங்களை 

அனுப்பி வைத்தார்.  

----


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக