சனி, 14 பிப்ரவரி, 2015

(1) மார்க்சியத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் 
நடைபெற்ற வெற்றிகரமான கியூபப் புரட்சி!
----------------------------------------------------------------------------------  
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------------------------- 
சமர்ப்பணம்: இக்கட்டுரை, மேற்கோள்வாதிகள்,
சொற்காமுகர்கள், பாராயணவாதிகள், புரோகிதவாதிகள் 
இன்ன பிற நுனிப்புல் மார்க்சியர்களுக்குச் சமர்ப்பணம்.
------------------------------------------------------------------------------------------ 
பிடெல் காஸ்ட்ரோ கியூபா நாட்டின் அதிபராக 
பல பத்தாண்டுகள் இருந்த, மக்களின் அன்பைப் பெற்ற 
தலைவர். அண்மையில்தான் உடல்நலக்குறைவின் விளைவாக,
தம் தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவராக விளங்கிய 
பிடெல் சட்டம் பயின்றவர். கியூபாவில் செயல்பட்ட 
பார்ட்டிடோ ஆர்த்தொடாக்சோ என்ற பூர்ஷ்வா கட்சியில் 
இணைந்த காஸ்ட்ரோ அக்கட்சியின் செல்வாக்கு மிக்க 
இளம் தலைவராக விளங்கினார்.

பார்ட்டிடோ ஆர்த்தொடாக்சோ கட்சி நம்மூர் அதிமுகவைப் 
போல ஊழல் மலிந்த கட்சி. அதே நேரத்தில் பாஜகவைப் போல 
ஒரு பழமைவாதக் கட்சி. இக்கட்சியில்தான் காஸ்ட்ரோ 
இணைந்தார்; தலைவராக உயர்ந்தார்.

அக்காலத்தில் கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.
குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் திகழ்ந்தது. திரளான 
தொழிலாளர்களைத் தொழிற்சங்கங்களில் அணிதிரட்டி 
வைத்து இருந்தது. யுவான் மாரி நெல்லோ என்பவர் 
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார். கம்யூனிஸ்ட் 
கட்சியின் தொண்டர்களும் போராளிகளும் நேர்மையுடனும் 
அர்ப்பணிப்புடனும் திகழ்ந்து மக்களின் மதிப்புக்குப் 
பாத்திரமாக இருந்தனர்.1944க்குப் பின் இக்கட்சி மக்கள் சோஷலிசக் 
கட்சி (PSP) என்று அழைக்கப் பட்டது. 

இப்படியெல்லாம் இருந்தும், காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் 
கட்சியில் சேரவில்லை. மாறாக ஊழல் மலிந்த பிற்போக்கு 
பூர்ஷ்வா கட்சியான பார்ட்டிடோ ஆர்த்தொடாக்சோ கட்சியில்தான் 
இணைந்தார்.

1952ஆம் ஆண்டு கியூபா நாடாளுமன்றத் தேர்தலில் காஸ்ட்ரோ 
போட்டியிட்டார். ஆனால், கியூபா அதிபர் பாட்டிஸ்டா தேர்தலையே 
ரத்து செய்து விட்டார்.இதனால் கோபமுற்ற காஸ்ட்ரோ 
வெறும் 150 பேரைத் திரட்டி, ஆயுதங்கள் மூலம், ராணுவக் 
காப்பு அரண்கள் மீது தாக்குதல் தொடுத்தார். இத்தாக்குதல் 
தோல்வி அடைந்தது; கடுமையாக ஒடுக்கப் பட்டது.
வெறும் சாகசத் தன்மை வாய்ந்த முதிர்ச்சியற்ற தாக்குதல் 
இது என்று பின்னாளில் உணரப்பட்டது. எனினும், ஜூலை 26, 1953
அன்று நடைபெற்ற இத்தாக்குதல், பின்னாளில் கியூபப் புரட்சியின் 
சின்னமாகவும் அடையாளவும் விளங்கியது. 

ராணுவக் காப்பரன்கள் மீது காஸ்ட்ரோ நடத்திய இத்தாக்குதலை 
கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியான PSP வெளிப்படையாகவே 
கண்டித்தது. "சான்டியாகோ தாக்குதல் பூர்ஷ்வாச் சிந்தனையால் 
வழிநடத்தப் பட்டது"என்று PSP கண்டித்தது.

ஆக, இவ்வாறு காஸ்ட்ரோவும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர் எதிர் 
நிலைகளை எடுத்தனர். இது வரலாறு.

மேலும், காஸ்ட்ரோ மார்க்சிய நூல்களைப் போதிய அளவுகூடப் 
படித்து இராதவர். 1955இல் சே குவேராவுடன் தொடர்பு 
ஏற்பட்ட பிறகே, காஸ்ட்ரோ ஓரளவு மார்க்சியத்தைத் தெரிந்து 
கொண்டார்.காரல் மார்க்சின் மூலதனம் நூலை அவர் 
படிக்கவே இல்லை.

இருப்பினும் சோஷலிச நாடாக கியூபாவை அவர் மாற்றி 
அமைத்ததற்கு இவை எதுவும் தடையாக இருக்கவில்லை 
என்பதும் வரலாறு.

இவை தரும் படிப்பினை என்ன? பின்னர் பார்ப்போம்!
----------------------------------------------------------------------------------------------- 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
*****************************************************************       
     
வின் டி.வி.யில் விவாதம்!
DEBATE IN WIN TV!
--------------------------------------------------- 
நாள்: சனிக்கிழமை 14.02.2015 இரவு 7.00 to 8.00
பொருள்: 
--------------- 
இலங்கை அதிபர் சிரிசேனாவின்
இந்திய வருகையும், வடக்கு மாகாணச் 
சட்ட மன்றத் தீர்மானமும்!
-------------------------------------------------------------- 
பங்கேற்பு:
பி இளங்கோ சுப்பிரமணியன் 
ஓவியர் புகழேந்தி 
கல்கிப் பிரியன் 

விரும்புவோர் காணலாம்!
............ நியூட்டன் அறிவியல் மன்றம்......

*****************************************************      

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

கண்ணை விற்றுச் சித்திரமா?
காவிரி நீரைக் கொடுத்து கொக்கொ கோலாவா?
---------------------------------------------------------------------------- 
அமெரிக்காவின் கொக்கோ கோலா நிறுவனம் 
தனது குளிர்பானத் தயாரிப்பு ஆலையை 
பெருந்துறை நகரில் நிறுவப் போகிறது.
இதற்குத் தமிழகத்தின் அதிமுக அரசு 
அண்மையில் அனுமதி வழங்கி உள்ளது.
பெருந்துறையின் சிப்காட் பகுதியில் 72 ஏக்கர் 
பரப்பளவில் இந்த ஆலை அமைகிறது.
ஒரு நாளுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரைக் 
காவிரி ஆற்றில் இருந்து எடுத்துக் கொள்ள 
கொக்கோ கோலா நிறுவனத்துக்கு அதிமுக 
அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதை எதிர்த்து பெருந்துறை மக்கள் 
போராடி வருகிறார்கள். மக்களின் நியாயமான 
இப்போராட்டத்தை அதிமுக அரசு மிகக் 
கடுமையாக ஒடுக்கி வருகிறது.    

வேண்டாம் கொக்கோ கோலா!
காவிரி ஆற்று நீரைப் பறி  கொடுக்க மாட்டோம்! 
மக்கள் போராட்டம் வெல்க!
அதிமுக அரசின் அடக்குமுறையை முறியடிப்போம்! 

**************************************************************** 
கேஜ்ரிவாலின் ஆட்சி பார்ப்பன பனியா ஆட்சியே!
------------------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------- 
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அடையாள அரசியல் இந்தியாவில் மட்டுமே உள்ளது.சாதி மத அடையாளங்களின் அடிப்படையிலான அரசியல் இந்தியாவில் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தியாவில் துளிர்த்து 
வந்த இடதுசாரி அரசியலை அடையாள அரசியல் விழுங்கி விட்டது.

டில்லியில் கேஜ்ரிவால் அமைத்திருக்கும் ஆட்சி பார்ப்பன பனியா ஆட்சியே. டில்லி சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏக்களில் 
67 பேர் ஆம் ஆத்மி கட்சியினர். இந்த 67 பேரின் சாதி ரீதியிலான 
புள்ளி விவரங்களைக் கீழே காண்க.

பார்ப்பனர்கள்: 22
பனியா:             8
பிற உயர்சாதி: 9
ஜாட் சீக்கியர்கள்: 8
பிற்பட்டோர்:    5
எஸ்.சி/எஸ்.டி: 11
முஸ்லிம்:       4
ஆக மொத்தம்: 67 

67 பேரில் 47 பேர் ( 22+8+9+8) உயர்சாதியினர்.
அந்த 47 பேரில் 30 பேர் பார்ப்பன பனியாக்கள்!
எனவே, அடையாள அரசியல் கோட்பாடுகளின்படி,
கேஜ்ரிவாலின் ஆட்சி பார்ப்பன பனியா ஆட்சியே!

*******************************************************************

வியாழன், 12 பிப்ரவரி, 2015

கேஜ்ரிவால் உயிர்த்தெழுந்தார்!
THE RESURRECTION OF KEJRIWAL!
-----பகுதி-இரண்டு------
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------------
இக்கட்டுரையின் முதல் பகுதியில் காங்கிரஸ் மற்றும்
இடதுசாரிகளின் டில்லித் தேர்தல் தோல்வி பற்றிப்
பார்த்தோம். இப்போது பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள்
பற்றிப் பார்ப்போம்.

தேர்தல் நெருக்கத்தில் தோல்வி உறுதி என்று தெரிந்து
கொண்டது பாஜக. என்றாலும் இந்த அளவு படுமோசமான
தோல்வி ஏற்படும் என்று அக்கட்சி கணித்திருக்கவில்லை.
திகைத்துப்போய் வாய்குழறி நிற்கிறது பாஜக.

பாஜகவுக்கு விழுந்த மரண அடி என்றெல்லாம் இத்தேர்தல் 
முடிவுகளை வர்ணிப்பது சிறுபிள்ளைத் தனமானது. பாஜகவின் 
பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரானதுதான் இத்தீர்ப்பு 
என்பது போன்ற பொழிப்புரைகள், எதையும் மேம்போக்காக 
மட்டுமே பார்க்கத் தெரிந்த குட்டி முதலாளித்துவ விடலைகளின் 
பேதைமை நிறைந்த பார்வை.

இப்பார்வை இன்னமும் போதிய அளவு அம்பலப் படாத 
பாஜகவை, அதன் ஆபத்தை குறை மதிப்பீடு (under estimate)
செய்யும் அபத்தமான பார்வை.

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் 
ஒரே பொருளாதாரக் கொள்கையைக் கொண்டவை.
பொருளாதார சீர்திருத்தங்களில் நம்பிக்கை கொண்டவை.
மதவாதம் என்று எடுத்துக் கொண்டாலும், ஆம் ஆத்மி 
ஒன்றும் மெய்யான மதச்சார்பற்ற கட்சி அல்ல. அப்பட்டமான 
மதவாதம் ஆம் அத்தமிக்கு ஏற்புடையது அல்ல. 
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற ஆரவாரமற்ற 
மதவாதமே ஆம் ஆத்மியின் கொள்கை.

டில்லித் தேர்தலை ஒரு மாநிலத்தின் தேர்தல் என்று 
கருதுவதே முதல் பிழை. அது வெறும் மாநகராட்சித் 
தேர்தல்தான். பொருளாதாரக் கொள்கைகளோ மதவாதமோ 
இத்தேர்தலில் பாடுபொருளாக இருக்கவில்லை. மின்சாரக் 
கட்டணம், குடிநீர் விநியோகம், சுகாதாரம்  ஆகிய 
தலமட்டப் பிரச்சினைகளே இத்தேர்தலில் முன்னிலை 
வகித்தன. இவற்றைத் திறம்பட நிறைவேற்றும் ஆற்றல் 
உள்ள தலைவர் கேஜ்ரிவால் என்று நம்பிய டில்லி மக்கள் 
அவர் முதல்வராக வேண்டும் என்று விரும்பி அவருக்கு 
அபரிமிதமான ஆதரவைத் தந்துள்ளனர். இதற்குமேல்,
இத்தேர்தலில் புலனாய்வு செய்து துப்பறிந்து கண்டுபிடிக்க 
எதுவுமே இல்லை. JUST THAT'S ALL; NOTHING MORE OR LESS!

டில்லி மாநில அரசின் பிரச்சினைகள் ஒரு மாநகராட்சிச்
சட்டகத்துள் (within the frame work of a municipal corporation) அடங்கி 
விடக் கூடியவை. நீண்ட காலம் புரட்சி வேடம் தரிப்பதற்கு 
இது கேஜ்ரிவாலுக்கு வாய்ப்பை வழங்கும். எனவே அவர் 
அம்பலப் படுவதற்குச் சற்றுக் கூடுதலான காலம் பிடிக்கும்.
அதுவரை  குட்டி முதலாளித்துவ விடலைகளால் அவர் 
புரட்சியாளராகவே கொண்டாடப் படுவார்.     

ஆம் ஆத்மியின் வெற்றியில் மகிழ்வதற்கு உண்மையில் 
ஒன்றுமே இல்லை. இதன் பொருள் பாஜக வெற்றி பெற்று 
இருக்க வேண்டும் என்பதல்ல. 

            
ஏகாதிபத்தியத்திடம்  நிதிஉதவி பெறும் அரசு சாரா 
நிறுவனங்களால் ( NGOs ) நடத்தப் படும் கட்சி ஆம் ஆத்மி.
இக்கட்சி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
ஏகாதிபத்திய எடுபிடிக் கட்சி. இந்திய அரசியலை 
ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகத் திருப்புவதே இக்கட்சியின் 
ஒரே திருப்பணி. அறியாமையால் உந்தப்பட்டு இக்கட்சியை 
இன்று ஆதரிக்கும் நேர்மையான சக்திகள் காலப்போக்கில் 
தாமாகவே உண்மையை உணர்வார்கள். அதற்கான  வாய்ப்புகளை கேஜ்ரிவாலே உருவாக்கித் தருவார்.

நக்சல்பாரிப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திக் கொண்டு 
இருந்த வினோத் மிஸ்ரா தலைமையிலான மா-லெ கட்சி
என்ன ஆனது? அரசுசாரா நிறுவனங்களால் கொஞ்சம் 
கொஞ்சமாக விழுங்கப்பட்டு முற்றிலுமாக புரட்சிகர 
அரசியலில் இருந்து விலகிப்போனது.

புரட்சிகர இயக்கத்தை முடமாக்குவதும், மக்களின் 
ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை மழுங்கடிப்பதுமே 
அரசுசாரா நிறுவனங்களின் திருப்பணி; ஒரே பணி.
இதைச் செய்வதற்கென்றே உருவான கட்சி ஆம் ஆத்மி.

மேலும், கேஜ்ரிவால் ஒரு வலதுசாரி. இடஒதுக்கீட்டு 
எதிர்ப்பாளர். ஊழல் ஒழிப்பு என்பதிலும்கூட, தெரிவு 
செய்யப்பட மறதி  (selective amnesia ) உள்ளவர். இந்தியத் 
துணைக்கண்டத்தையே குலுக்கிய ஜெயலலிதாவின் 
தண்டனை குறித்து மறந்தும் வாய் திறக்காதவர்.
ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் பியூன் மீது கத்தியைப் 
பாய்ச்சும் இவர், பாசிஸ்ட் கிரிமினல்களைக் கண்டு 
கொள்ளாமல் விடுவதில் வல்லவர்.

எனவே இவரை ஆதரிப்பது தற்கொலைக்குச் சமம்.

************************************************************  

          
டில்லி தேர்தலில் கின்னஸ் சாதனை படைத்த  
மார்க்சிஸ்ட் கட்சி தமிழகத் தேர்தலிலும் சாதனை படைக்குமா? 
--------------------------------------------------------------------------------------------------------
எதிர்வரும் 2016 தமிழக சட்ட மன்றத் தேர்தலில் கேப்டன் 
விஜயகாந்த் கூட்டணியுடன் இணைந்து இடதுசாரிக் கட்சிகள் 
(CPI, CPM) தேர்தலைச் சந்திக்கின்றன. கடந்த ஆண்டு 
2015 டில்லி சட்டமன்றத் தேர்தலில் புரிந்த கின்னஸ் 
சாதனையை இத்தேர்தலில் இடதுசாரிகள் நிகழ்த்துவார்கள் 
என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

டில்லியில் இடதுசாரிகள் புரிந்த கின்னஸ் சாதனையைப் 
பார்ப்போமா! கடந்த ஆண்டு 2015இல் நடந்த  
டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பெருத்த ஆரவாரத்துடன் 
மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் களம் 
இறங்கின. ஏழு கட்சிக் கூட்டணி அமைத்துப் 
போட்டியிட்டன. CPM, CPI, CPIML (liberation), SUCI-C,
RSP, All India Forward Bloc, Socialist Party (India) ஆகிய ஏழு 
கட்சிகள் இடதுசாரிக் கூட்டணியில் இடம் பெற்றன.

ஒன்றேகால் கோடி வாக்காளர்களைக் 
கொண்ட  டில்லிமாநிலத்தில், மொத்தமுள்ள எழுபது 
தொகுதிகளில், இடதுசாரிக் கூட்டணி பதினைந்து 
தொகுதிகளில் போட்டியிட்டது. பிரகாஷ் காரத், எச்சூரி,
பிருந்தா காரத், டி.ராஜா ஆகிய தலைவர்கள் 
தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வந்ததும் மூச்சடைத்துப் 
போனார்கள் இடதுசாரிகள். போட்டியிட்ட 15 தொகுதிகளிலும் இடதுசாரிகள் டெப்பாசிட் இழந்தனர். முற்றிலுமாகத் 
துடைத்தெறியப் பட்டனர்.  

போட்டியிட்ட 15 இடதுசாரி வேட்பாளர்களில் ஒருவர் கூட, 
நான்கு இலக்க வாக்குகளை பெறவில்லை. அதாவது, 
ஒருவர் கூட ஆயிரம் வாக்குகளைப் பெறவில்லை.

உதாரணமாக, முண்ட்கா தொகுதியில் இடதுசாரி  
வேட்பாளர் ராகேஷ் சர்மா வெறும் 52 வாக்குகளை மட்டுமே 
பெற்று கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இன்னொரு தொகுதியில் 
இடதுசாரி  வேட்பாளர் ஹரி சங்கர் சர்மா வெறும் 49 வாக்குகளை 
மட்டுமே பெற்று கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

ஆக, 52 (ஐம்பத்திரண்டு), 49 (நாற்பத்தொன்பது).... இவையெல்லாம் 
இடதுசாரி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்!!!
இந்தியத் துணைக்கண்டத்தின் தேர்தல் வரலாறு இதுவரை 
கண்டிராத அளவில்,  இடதுசாரிக் கட்சிகள் 
இவ்வளவு குறைவாக வாக்குகள் பெற்று இருப்பது உலக 
அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.  காங்கிரசும் வேண்டாம்,
பாஜகவும் வேண்டாம் என்ற  முழக்கத்துடன் களம் இறங்கிய
இடதுசாரிகள் டில்லித் தேர்தலில் கின்னஸ் சாதனை புரிந்தார்கள்.
இதே சாதனையைத் தான் தமிழகத் தேர்தலில் மீண்டும்
நிகழ்த்துவார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
*****************************************************************************
         
கேஜ்ரிவால் உயிர்த்தெழுந்தார்!
THE RESURRECTION OF KEJRIWAL!
------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------- 
புதுடில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 
அசுரத்தனமான வெற்றியைப் பெற்றுள்ளது. ஏற்கனவே 2014 
நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்தடுத்து வந்த மராட்டியம்,
அரியானா, ஜார்க்கன்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல்களிலும் 
படுதோல்வி அடைந்து துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ் கட்சியின் 
சவ அடக்கம் புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. ஆக, இந்திய 
அரசியலில் காங்கிரஸ் கட்சி முக்தி அடைந்து விட்டது.

இனி காங்கிரஸ் கட்சியில் இருந்து மாபெரும் வெளியேறுதல்கள்
(EXODUS) நிகழும். பல மாநிலங்களில் கட்சி பிளவுபடும், தமிழ்நாட்டில் 
வாசன் பிளவுபடுத்தியது போல். அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவைகள்
போல், காங்கிரஸ் தலைவர்கள் பிற காட்சிகளில் புகலிடம் 
தேடுவார்கள். டில்லியில் தனது வாக்கு வங்கியை முற்றிலுமாக 
ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் இழந்துள்ளது போல, பிற 
மாநிலங்களிலும் இழக்கும். சுருங்கக் கூறின், காங்கிரஸ் இல்லாத 
இந்தியா என்ற மோடியின் எதிர்பார்ப்பு விரைவில் முழுமை 
அடையும்.

ஒருகாலத்தில் மலைப்பாம்பாக இருந்த காங்கிரஸ் கட்சி 
தற்போது மண்புழுவாகப் பரிணாமச் சுருக்கம் ( de-evolution)
அடைந்துள்ளது. இது ஒரு irreversible process என்பதால், காங்கிரஸ் 
மீண்டும் விரிவடைய எவ்வித சாத்தியமும் இல்லை. இந்திய 
ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையை முற்றிலுமாக காங் இழந்து 
விட்டது. 'பேடிகை வாளாண்மை' போல் உள்ள ராகுல் காந்தியின் 
தலைமையால் கட்சியைக் காப்பாற்றுவது என்பது ஒருநாளும் 
நடவாதது. எனவே டில்லி வாக்காளர்களின் தீர்ப்பை மதித்து,
காங்கிரஸ் கட்சிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவோம்!

அடுத்து, டில்லி தேர்தலில் போட்டி(!!!)இட்ட, இன்னொரு தேசியக் 
கட்சியான, மார்க்சிஸ்ட் கட்சியின் கதி என்ன ஆனது என்று பார்ப்போம்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஏழு கட்சி இடதுசாரிக் கூட்டணி 
மொத்தமுள்ள 70 இடங்களில் 15 இடங்களில் போட்டியிட்டது. பதினைந்து 
வேட்பாளர்களும் டெப்பாசிட் இழந்து, முற்றிலுமாகத் துடைத்து எறியப் பட்டது இடதுசாரிக் கூட்டணி.

கடந்த 2013 டில்லி சட்ட மன்றத் தேர்தலில், கேப்டன் விஜயகாந்த்தின் 
தேமுதிக போட்டியிட்டதும் காணாமல் போனதும் வாசகர்களுக்கு
நினைவு இருக்கலாம். இன்று 2015 தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணியின் நிலைமை, கேப்டனை 
விடவும் கேவலமாகப் போனதுதான் மிச்சம். இடதுசாரி வேட்பாளர்கள் 
கேப்டன் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விடக் குறைவாகவே 
பல தொகுதிகளில் பெற்றுள்ளனர்.

15 இடதுசாரி வேட்பாளர்களில் ஒருவர் கூட, நான்கு இலக்க
வாக்குகளைப் பெறவில்லை. அவ்வளவு ஏன், சில தொகுதிகளில்,
இடதுசாரிகள் 100 வாக்குகளைக் கூடப் பெறவில்லை. முண்ட்கா 
தொகுதியில் போட்டியிட்ட இடதுசாரிக் கூட்டணி வேட்பாளர் 
ராகேஷ் சர்மா வெறும் 52 (ஐம்பத்தி இரண்டு மட்டும்) வாக்குகளை 
மட்டுமே பெற்றுள்ளார். இன்னொரு தொகுதியில் போட்டியிட்ட 
இடதுசாரி வேட்பாளர் வெறும் 49 வாக்குகளை ( நாற்பத்து ஒன்பது 
மட்டும்) மட்டுமே பெற்றுள்ளார். இதுதான் இடதுசாரிகளின் 
லட்சணம்! சுயேச்சையாகப் போட்டியிடும் டம்மியோ டம்மி 
வேட்பாளர்கள் கூட, ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறும்போது,
மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களோ, அல்லது, பிற 
இடதுசாரி வேட்பாளர்களோ ஆயிரம் வாக்குகளைக் கூடப் 
பெறவில்லை என்பதில் இருந்து இடதுசாரிகள் படிப்பினை 
பெற வேண்டாமா?

சனிப்பிணம் தனியாகப் போகாது என்பதுபோல, காங்கிரஸ் கட்சி 
சவக்குழிக்குள் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இழுத்துக் 
கொண்டு விட்டது என்பதுதான் உண்மை. 2014 நாடாளுமன்றத் 
தேர்தலில், பத்து சத  இடங்களைக் கூடப் பெறாமல், காங்கிரஸ் 
எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது என்றால், பத்து இடங்களைக் 
கூடப் பெறாமல் வெறும் ஒன்பது இடங்களை மட்டுமே பெற்று 
தேசியக் கட்சி அந்தஸ்த்துக்கு ஆபத்தைத் தேடிக் கொண்டது 
மார்க்சிஸ்ட் கட்சி. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோ வெறும் 
ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்று இறுதிமூச்சை விட்டது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களில், CPI ஒரு 
இடத்தையும், CPM ஒன்பது இடங்களையும் மட்டுமே பெற்றுள்ளன 
என்பதில் இருந்து இக்கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை 
என்பதை முன்பே பல முறை தெரிவித்து இருந்தோம்.
டில்லித் தேர்தல் முடிவுகள் நமது கணிப்பை உறுதி செய்துள்ளன.

எனவே, நடந்த சவ அடக்கம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல,
போலி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்தான். 
போலிக் கம்யூனிஸ்ட்களை விட, கம்யூனிச எதிரி 
மேலானவன் என்று மக்கள் தீர்மானித்ததில் என்ன தவறு?

(தொடரும்... அடுத்த பகுதி பாஜக பற்றி...)

****************************************************************