சனி, 14 பிப்ரவரி, 2015

(1) மார்க்சியத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் 
நடைபெற்ற வெற்றிகரமான கியூபப் புரட்சி!
----------------------------------------------------------------------------------  
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------------------------- 
சமர்ப்பணம்: இக்கட்டுரை, மேற்கோள்வாதிகள்,
சொற்காமுகர்கள், பாராயணவாதிகள், புரோகிதவாதிகள் 
இன்ன பிற நுனிப்புல் மார்க்சியர்களுக்குச் சமர்ப்பணம்.
------------------------------------------------------------------------------------------ 
பிடெல் காஸ்ட்ரோ கியூபா நாட்டின் அதிபராக 
பல பத்தாண்டுகள் இருந்த, மக்களின் அன்பைப் பெற்ற 
தலைவர். அண்மையில்தான் உடல்நலக்குறைவின் விளைவாக,
தம் தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவராக விளங்கிய 
பிடெல் சட்டம் பயின்றவர். கியூபாவில் செயல்பட்ட 
பார்ட்டிடோ ஆர்த்தொடாக்சோ என்ற பூர்ஷ்வா கட்சியில் 
இணைந்த காஸ்ட்ரோ அக்கட்சியின் செல்வாக்கு மிக்க 
இளம் தலைவராக விளங்கினார்.

பார்ட்டிடோ ஆர்த்தொடாக்சோ கட்சி நம்மூர் அதிமுகவைப் 
போல ஊழல் மலிந்த கட்சி. அதே நேரத்தில் பாஜகவைப் போல 
ஒரு பழமைவாதக் கட்சி. இக்கட்சியில்தான் காஸ்ட்ரோ 
இணைந்தார்; தலைவராக உயர்ந்தார்.

அக்காலத்தில் கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.
குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் திகழ்ந்தது. திரளான 
தொழிலாளர்களைத் தொழிற்சங்கங்களில் அணிதிரட்டி 
வைத்து இருந்தது. யுவான் மாரி நெல்லோ என்பவர் 
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார். கம்யூனிஸ்ட் 
கட்சியின் தொண்டர்களும் போராளிகளும் நேர்மையுடனும் 
அர்ப்பணிப்புடனும் திகழ்ந்து மக்களின் மதிப்புக்குப் 
பாத்திரமாக இருந்தனர்.1944க்குப் பின் இக்கட்சி மக்கள் சோஷலிசக் 
கட்சி (PSP) என்று அழைக்கப் பட்டது. 

இப்படியெல்லாம் இருந்தும், காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் 
கட்சியில் சேரவில்லை. மாறாக ஊழல் மலிந்த பிற்போக்கு 
பூர்ஷ்வா கட்சியான பார்ட்டிடோ ஆர்த்தொடாக்சோ கட்சியில்தான் 
இணைந்தார்.

1952ஆம் ஆண்டு கியூபா நாடாளுமன்றத் தேர்தலில் காஸ்ட்ரோ 
போட்டியிட்டார். ஆனால், கியூபா அதிபர் பாட்டிஸ்டா தேர்தலையே 
ரத்து செய்து விட்டார்.இதனால் கோபமுற்ற காஸ்ட்ரோ 
வெறும் 150 பேரைத் திரட்டி, ஆயுதங்கள் மூலம், ராணுவக் 
காப்பு அரண்கள் மீது தாக்குதல் தொடுத்தார். இத்தாக்குதல் 
தோல்வி அடைந்தது; கடுமையாக ஒடுக்கப் பட்டது.
வெறும் சாகசத் தன்மை வாய்ந்த முதிர்ச்சியற்ற தாக்குதல் 
இது என்று பின்னாளில் உணரப்பட்டது. எனினும், ஜூலை 26, 1953
அன்று நடைபெற்ற இத்தாக்குதல், பின்னாளில் கியூபப் புரட்சியின் 
சின்னமாகவும் அடையாளவும் விளங்கியது. 

ராணுவக் காப்பரன்கள் மீது காஸ்ட்ரோ நடத்திய இத்தாக்குதலை 
கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியான PSP வெளிப்படையாகவே 
கண்டித்தது. "சான்டியாகோ தாக்குதல் பூர்ஷ்வாச் சிந்தனையால் 
வழிநடத்தப் பட்டது"என்று PSP கண்டித்தது.

ஆக, இவ்வாறு காஸ்ட்ரோவும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர் எதிர் 
நிலைகளை எடுத்தனர். இது வரலாறு.

மேலும், காஸ்ட்ரோ மார்க்சிய நூல்களைப் போதிய அளவுகூடப் 
படித்து இராதவர். 1955இல் சே குவேராவுடன் தொடர்பு 
ஏற்பட்ட பிறகே, காஸ்ட்ரோ ஓரளவு மார்க்சியத்தைத் தெரிந்து 
கொண்டார்.காரல் மார்க்சின் மூலதனம் நூலை அவர் 
படிக்கவே இல்லை.

இருப்பினும் சோஷலிச நாடாக கியூபாவை அவர் மாற்றி 
அமைத்ததற்கு இவை எதுவும் தடையாக இருக்கவில்லை 
என்பதும் வரலாறு.

இவை தரும் படிப்பினை என்ன? பின்னர் பார்ப்போம்!
----------------------------------------------------------------------------------------------- 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
*****************************************************************       
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக