சனி, 21 பிப்ரவரி, 2015

வியட்நாம் போரும் வியட்நாம் வீடு திரைப்படமும்!
---------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------------------
வியட்நாம் கட்டுரை: பகுதி நான்கு 
--------------------------------------------------------------------------------------- 
அமெரிக்க எதிர்ப்பு என்பது இந்தியாவின் அரசியல் அரங்கில் 
பெரிதும் பேசப்படும் ஒரு கோட்பாடு. அமெரிக்க எதிர்ப்பு உளவியல் 
இந்திய இடதுசாரிகளின் சிந்தனையில் ஒரு கூறாகவே அமைந்துள்ளது.
இந்திய மக்களில் பெரும்பகுதியினருக்கு இடதுசாரிகளின் 
அமெரிக்க எதிர்ப்பு நன்கு பரிச்சயமானது. பரந்துபட்ட மக்களிடம் 
தொடர்ந்து அமெரிக்க எதிர்ப்புக் கருத்துக்கள் இந்திய 
இடதுசாரிகளால்முன்வைக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன,
அவை மக்களால் ஏற்கப் படுகின்றனவா என்பது குறித்த 
எவ்வித ஆய்வுமின்றி.
----------------------------------------------------------------------------------------------------- 
நரசிம்மராவ் முதற்கொண்டு எல்லா இந்தியப் பிரதமர்களும் 
அமெரிக்க அடிவருடிகளாகவே சித்தரிக்கப் படுகின்றனர்.
எல்லா நிதியமைச்சர்களும் அவ்வாறே. குறிப்பாக, 123 ஒப்பந்தம் 
கையெழுத்தானபோது, டாக்டர் மன்மோகன்சிங் பட்டபாடு 
கொஞ்சநஞ்சம் அல்ல.  
---------------------------------------------------------------------------------------------------
அமெரிக்க ஜனாதிபதியின் பூட்ஸ் காலை, இந்தியப் பிரதமர்கள் 
துடைப்பது போல அமைந்த கேலிச்சித்திரங்கள், உருவகங்கள் 
ஆகியன இடதுசாரி ஏடுகளில் மலிந்து கிடக்கும். உலகமே கண்டு 
அஞ்சுகிற மகா கொடூர அரக்கன் அமெரிக்கா என்ற கண்டுபிடிப்பும்,  
உலக மக்களின் துன்ப துயரங்களுக்கு ஒரே காரணம் அமெரிக்காதான் 
என்ற சித்தரிப்பும் இந்திய இடதுசாரிகளின் ஒற்றை ஆயுதமாக 
நீண்ட காலமாக இருந்து வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------- 
எனினும், இடதுசாரித் தலைவர்களின் குழந்தைகள் 
அமெரிக்காவில் கல்வி பயில்வதும், வேலை பார்ப்பதும்,
குடியுரிமை பெறுவதும்,அமெரிக்க மருத்துவமனைகளில் 
சிகிச்சை பெறுவதும் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்பேர்ப்பட்ட
HYPOCRITS இவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரிந்தேதான்  
இருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------- 
 1960களில் வியட்நாம் வீடு என்று ஒரு திரைப்படம் வந்தது.
சிவாஜி கணேசன் நடித்த படம். இந்தப் படத்தைக் கடுமையாகக் 
கண்டித்து, அன்றைய ஜனசக்தியில், எரிமலை பகுதியில், 
அறந்தை நாராயணன் எழுதினார். ஏகாதிபத்திய அமெரிக்காவை 
எதிர்த்து வியட்நாம் நடத்தும் புனிதப் போரை, சாதாரண 
நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் நடக்கும் அற்பத்தனமான 
சண்டையுடன் ஒப்பிடுவதா என்று ஆவேசத்தின் எல்லையைத் 
தொட்டிருந்தார் அறந்தை அக்கட்டுரையில். தமது கண்மண் 
தெரியாத ஆவேசத்தில், அவர் சிவாஜி கணேசனையே 
அமெரிக்க அடிவருடியாகச் சித்தரித்து இருந்தார்.
------------------------------------------------------------------------------------------ 
இதுபோல, அமெரிக்க எதிர்ப்புக் கருத்துக்களை வரம்பே 
இல்லாமல் பேசுவதற்கான உரிமையை இந்திய 
ஜனநாயகம் வழங்குகிறது. எனவே பேசுகிறார்கள். பேசட்டும், 
தவறில்லை.
------------------------------------------------------------------------------------------ 
ஆனால், நக்சல்பாரி வெடித்தபோது, இந்திய சமூகத்தில் 
நிலவும் பிரதான முரண்பாடாக, ஏகாதிபத்தியத்துக்கும் 
பரந்துபட்ட மக்களுக்கும் உள்ள முரண்பாட்டை, சாரு மஜும்தார் 
ஏற்கவில்லை. மாறாக, நிலப்பிரபுத்துவத்துக்கும் விவசாயிகளுக்கும் 
உள்ள முரண்பாடே பிரதான முரண்பாடு என்றுதான் சாரு 
மஜும்தார் வரையறுத்தார்.
----------------------------------------------------------------------------------------------- 
இதன் பொருள், இந்தியப் புரட்சியின் பிரதான எதிரி, இந்திய 
நிலப்பிரபுக்களே அன்றி, அமெரிக்க ஏகாதிபத்தியம் அல்ல 
என்பதாகும். எனவே நாடாளுமன்ற இடதுசாரிகளான CPI, CPM 
கட்சிகளின் குருட்டுத் தனமான அமெரிக்க எதிர்ப்பு பெரிதும் 
மிகைப்படுத்தப் பட்டது என்பதும், எத்தகைய புறநிலை ஆய்வும் 
மேற்கொள்ளாமல் போகிற போக்கில் சொல்லப் படுவது 
என்பதும் புலனாகிறது.
--------------------------------------------------------------------------------------------------- 
 உலகிலேயே அமெரிக்க எதிர்ப்புக் கருத்துகளைப் பேசுவதற்கான 
பரிபூரண சுதந்திரம் இந்தியாவில் வழங்கப் படுகிறது. இந்தச் 
சுதந்திரத்தில் ஒரு மிகச் சிறிய அளவு கூட கம்யூனிஸ்ட் 
சீனாவில் கிடையாது. வியட்நாமிலும் கிடையாது.
இடதுசாரிகளின் குட்டி முதலாளித்துவ, சந்துமுனை மற்றும் 
வாயில் கூட்டப் பேச்சாளர்கள், தங்களின் பேச்சுக்களை 
சீனாவிலோ வியட்நாமிலோ பேசுவார்கள் என்றால், நீண்ட 
காலச் சிறைவாசம் உறுதி.
ஏனெனில், மார்க்சியம் எதிரி வர்க்கத்தினருக்குக் 
கருத்துரிமையை வழங்குவதில்லை. எதிரி வர்க்கம் யார் 
என்பதைக் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானிக்கும்.
------------------------------------------------------------------------------------------------------ 
இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி இதுதான்.
அமெரிக்க ஆதரவு நிலையும் அமெரிக்காவுக்கு நட்புநாடு 
அங்கீகாரமும் தரும் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சி 
சரியானதா?
( அல்லது)
மாற்றமே இல்லாத, அமெரிக்க எதிர்ப்பு நிலையைக் 
கொண்டிருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(கள்)
சரியானதா?
விடை காண்போம். தொடர்ந்து படியுங்கள்.
------------------------------------------------------------------------------------- 
நான்காம் பகுதி முற்றியது!
------------------------------------------------------------------------------------------ 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
*********************************************************************                
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக