சனி, 28 பிப்ரவரி, 2015

ஏமாற்றத்திலும் அதிருப்தியிலும் முடிந்த CPI மாநாடு!
மறைந்திருந்து வாலியைக் கொன்ற  தா,பாண்டியன்!
-------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநில மாநாடு 
முடிந்து விட்டது என்றாலும் இழவு விழுந்த வீடாகக் 
காட்சி அளிக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.
அறுநூறு பேர் என்ற அளவில் சார்பாளர்கள் பங்கேற்ற 
இம்மாநாடு, ஆகக் கடைசியில் முத்தரசன்  என்ற 
அனாமதேயத்தைக் கட்சியின் மாநிலச் செயலாளராகத் 
"தேர்ந்து" எடுத்திருக்கிறது. 
------------------------------------------------------------------------------------------------ 
யார் இந்த முத்தரசன்? கட்சிக்கு உள்ளும் கட்சிக்கு வெளியிலும் 
எத்தனை பேருக்கு முத்தரசனைத் தெரியும்? தா.பாண்டியனின் 
அடிவருடி என்ற ஒற்றைத் தகுதியைத் தவிர, இந்த நபருக்கு 
வேறு எதுவும் கிடையாது.

600 சார்பாளர்களில் 450 சார்பாளர்களுக்கும் மேல் தோழர் 
மகேந்திரனை ஆதரிப்பவர்கள். இது மாநாட்டு நிகழ்வுகளில் 
வெளிப்படையாகத் தெரிந்தது. இருப்பினும் மகேந்திரன் ஏன் 
மாநிலச் செயலராக வர முடியவில்லை?
----------------------------------------------------------------------------------------------------- 
அங்குதான் இருக்கிறது தா.பாண்டியனின் நயவஞ்சகம்!
"மாநிலச் செயலராக மகேந்திரன்தான் வரப் போகிறார்,
அதலால், மாநிலக்குழுவில் எனது ஆதரவாளர்களுக்கு 
நிறைவான பிரதிநிதித்துவம் வேண்டும்" என்று வலியுறுத்தி
122 பேர் கொண்ட மாநிலக் குழுவில், சரிபாதி இடங்களைப் 
பெற்றுக் கொண்டார் தா.பா. அதன் பிறகு, சாணக்கியனையே 
வெல்லும் தனது அருவருக்கத் தக்க தந்திரங்களைப் 
பிரயோகித்தார். ஒப்புக் கொண்டபடி, மகேந்திரனை 
மாநிலச் செயலராக ஏகமனதாகத் தேர்ந்து எடுக்காமல்,
தனது அடிவருடியான முத்தரசனைப் போட்டியிடச் செய்து,
சொற்ப வாக்குகளில் அவரை மாநிலச் செயலாளராக 
"வெற்றி"பெறச் செய்து, கட்சியில் தமது பிடியை உறுதி 
செய்து கொண்டார்.
------------------------------------------------------------------------------------------------ 
தா.பா வெளியேறி விட்டார் என்பது "சனியன் தொலைந்தது"
(GOOD RIDDANCE) என்பது போல, ஒரு நிம்மதிப் பெருமூச்சைக் 
கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஏற்படுத்திய போதிலும்,
மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனைப் போல,
தா.பா,  சார்பாளர்களின் பேராதரவு பெற்ற மகேந்திரனைத் 
தோல்வியுறச் செய்தார்.  

தனக்குக் கிடைக்காதது வேறு எவனுக்கும் கிடைத்து விடக் 
கூடாது என்ற தா.பா.வின் வக்கிர சிந்தனையின் விளைவாக 
600 சார்பாளர்கள் கொண்ட நிறைந்த சபை ஏமாற்றப் பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியில் இப்படியும் நடக்குமா என்று அரசியல் 
விமர்சகர்கள் வியக்கிறார்கள்.

இனி காரல் மார்க்சே வந்தாலும் கட்சியைக் காப்பாற்ற 
முடியாது என்று கம்யூனிச லட்சியங்களை  இன்னமும் 
நேசிக்கிற CPI கட்சியின் அணிகளும் ஆதரவாளர்களும் 
சோர்ந்து போய் இருக்கிறார்கள்! அவர்களின் துக்கத்தில் 
நாமும் பங்கு பெறுகிறோம்.
*************************************************************8   
     

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக