புதன், 18 பிப்ரவரி, 2015

அமெரிக்கா வாழ்க என்று கோஷமிடும் 
வியட்நாமியக் கம்யூனிஸ்ட்கள்!
-------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------ 
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என்று உலகின் எந்த மூலையில்  
இருந்துகொண்டும்  நீங்கள் கோஷம் போடலாம். அதற்கான 
கருத்துரிமை உங்களுக்கு உண்டு. இந்தியாவில் அப்படி நீங்கள் 
கோஷம் போட்டால், உடனடியாக உங்களுக்கு முற்போக்குப் 
பட்டம் வழங்கப்பட்டு விடும். கூடுதலாக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகவும் நீங்கள் வலம் வரலாம்.

ஆனால், இந்த உலகில், ஒரே ஒரு இடத்தில் மட்டும், யாரும் 
மேற்கண்ட கோஷத்தைப் போட முடியாது. மீறி எவரும் 
கோஷமிட்டால், அவர் சிறை செய்யப் படுவார். சுட்டுத் 
தள்ளவும் படலாம்.

அது எந்த இடம்? அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என்று 
கோஷமிடும் எளிய உரிமையைக்கூட  மறுக்கும் 
அந்த இடம் எது?

இந்தக் கேள்விக்கான விடை அனேகமாக எல்லோரையும் 
வியப்பில் ஆழ்த்தலாம். அதிர்ச்சியையும் தரலாம். ஆனால் 
அதுதான் உண்மை. பரிபூரண உண்மை.

அந்த இடம் வியட்நாம்! மாபெரும் பாட்டாளி வர்க்கப் 
புரட்சியாளர் ஹோ சி மின் அவர்களின் வியட்நாம். 
பெரியாரின் மண், காந்தியின் தேசம் என்பதைப் போல, 
அது ஹோ சி மின்னின் வியட்நாம்.
------------------------------------------------------------------------------------------------------ 
ஆம். வியட்நாம் ஒரு கம்யூனிஸ்ட் நாடு. சோஷலிச நாடு.
அங்கு இன்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிதான் 
நடைபெற்று வருகிறது.  

வியட்நாம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு 
சின்னஞ் சிறிய நாடு. அமெரிக்கா இந்த நாட்டை 
ஆக்கிரமித்தது. வியட்நாம் போர் 1955 முதல் 1975 வரை 
இருபது ஆண்டுகள் நீடித்தது. உலக வரலாற்றின் மிகவும் 
அநீதியான போர் இது.

இறுதியில் ஆக்கிரமிப்பாளன் அமெரிக்கா படுதோல்வி 
அடைந்து வியட்நாமை விட்டு ஓடியது. 

ஆனால், இன்று இதெல்லாம் பழைய கதை. அமெரிக்காவும் 
வியட்நாமும் மிக நெருக்கமான நட்பு நாடுகள். இந்த நட்பு 
இன்று, இந்த 2015இல் முகிழ்த்த புதிய நட்பு என்று யாரும் 
கருதி விடவேண்டாம். இந்த நட்புக்கு வயது 20. ஆம், இருபது 
ஆண்டுகளாக, 1995 முதல் 2015 வரை இந்த நட்பு செழித்து 
வளர்ந்து பூத்துக் குலுங்குகிறது.
----------------------------------------------------------------------------------------------------- 
1955 முதல் 1975 வரையிலான இருபது ஆண்டுக் காலத்தில்
இருநாடுகளும் கொடிய பகை நாடுகள்.
1995 முதல் 2015 வரையிலான இந்த இருபது ஆண்டுகளில் 
இருநாடுகளும் மிகவும் நெருங்கிய நட்புநாடுகள். இந்த நட்பு 
வருங்காலத்திலும் தொடர்ந்து நீடிக்கும் ஒளி வீசும் நட்பு.

இருபது லட்சம் வியட்நாமியர்கள்அமெரிக்க எதிர்ப்புப் 
போரில்  உயிர்த் தியாகம் செய்தார்கள்.ஊனமுற்றவர்கள், 
காயம் அடைந்தவர்கள் மேலும் பல லட்சம். 

இருபது லட்சம் பேர் பலி என்பது மிகப்பெரிய நாடான 
இந்தியாவில் சாதரணமாக இருக்கலாம். ஆனால் சின்னஞ் 
சிறிய வியட்நாமில் இருபது லட்சம் என்பது மிகவும் 
அசாதாரணம்.

1955இல் அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது, வியட்நாமின் 
மக்கள் தொகை வெறும் மூன்று கோடிதான் என்னும்போது 
இந்த இருபது லட்சம் பேர் பலி என்பது மிகப் பெரிய விஷயம்.

நிற்க. இன்று இதெல்லாம் ஊசிப்போன பழங்கதை. கிழவி 
வடை சுட்ட கதை. பாரதியார் கூறுவது போல், "கிழவியர் 
தபசியர் போல்" வெறும் கிளிக்கதையை வியட்நாமில் 
யாரும் இன்று கூற முடியாது.
-------------------------------------------------------------------------------------------------------- 

வாழ்க வாழ்க அமெரிக்கா!
அமெரிக்க-வியட்நாம் நட்பு நீடூழி வாழ்க!
பில் கிளிண்டன் ஜிந்தாபாத்!
ஜார்ஜ் புஷ் ஜிந்தாபாத்!
பாரக் ஒபாமா ஜிந்தாபாத்!

விண்ணதிரும் இந்த முழக்கங்களை வியட்நாம் நாடு 
முழுவதும் இன்று கேட்கலாம். வடக்கே ஹனாய் முதல் 
தெற்கே சைகோன் (ஹோசிமின்சிட்டி) வரை. 
----------------------------------------------------------------------------------------------- 

ஏன் இந்த மாற்றம்? எப்படி இது நிகழ்ந்தது? வியட்நாமில் 
அன்று முதல் (1955) இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சிதானே 
ஆள்கிறது! ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது வெறும் மாயை 
என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுவது ஏன்?
தவறு நிகழ்ந்துள்ளதா? தவறு என்றால் இது இமாலயத் 
தவறு ஆயிற்றே!

அப்படி என்றால் தத்துவமே தவறா? கேள்விகள் நெஞ்சைக் 
குடைகின்றன.

சிந்திக்க வேண்டாமா? மூலதன வகுப்பு எடுக்கும் 
பித்துக்குளி முருகதாஸ்கள் இதற்கு என்ன பதில் வைத்து 
இருக்கிறார்கள்? போலிக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதற்கு 
என்ன பதில் தருவார்கள்? முட்டாள்களாகவே வளர்த்து 
எடுக்கப்பட்டு முட்டாள்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் 
போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அணிகளுக்கு, இவ்வளவு 
தீவிரமான மாற்றங்கள் வியட்நாமில் ஏற்பட்டிருப்பது பற்றி 
ரோமம் அளவுக்காவது தெரியுமா?

மார்க்சியம் சந்திக்கும் சமகாலப் பிரச்சினைகள், சிக்கல்கள்,
நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்காமல், மூலதனப் 
பழங்கதையில் முகத்தை ஒளித்துக் கொண்டிருக்கும் 
கோழைகளும் மூடர்களும் என்ன பதில் சொல்லப் 
போகிறார்கள்?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------------------------
முதல் பகுதி முற்றியது!
----------------------------------------------------------------------------------------------------------- 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
********************************************************************     

     
      


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக