ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

கனி இருப்பக் காய் கவரும் 
போலி முற்போக்குகள்!
--------------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------- \
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் 
சட்டம் ( ANTI SUPERSTITION LAW ) இருக்கிறது.
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை 
ஏமாற்றி மோசடி செய்யும் போலிகளுக்கு அங்கு 
ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை 
உண்டு.

Maharashtra Prevention and Eradication of Human Sacrifice 
and other inhuman, Evil and Aghori Practices and 
Black Magic Act 2013 என்று அச்சட்டத்துக்குப் பெயர்.
26 ஆகஸ்ட் 2013 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது 
இச்சட்டம்.

பிற்போக்குச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட
பகுத்தறிவுப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் 
(1945-2013) அவர்களின் தளராத முயற்சியால் இச்சட்டம் 
பிறந்தது,அவர் தம் உயிரைத் தந்து இச்சட்டம் உருவாகக் 
காரணமாக இருந்தார்.

முதலில் இச்சட்டம் ஓர் அவசரச் சட்டமாக ( ordinance )
கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
பொருளாதாரம், அரசியல், சட்டம்-ஒழுங்கு முதலிய 
துறைகளில் அவசரச் சட்டம் கொண்டு வரப்படுவது 
இயல்பானதே. ஆனால், மக்களின் பண்பாடு சார்ந்த 
இச்சட்டம், அவசரச் சட்டமாகக் கொண்டு வரப்பட்டது 
என்பதில் இருந்து இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து 
கொள்ள முடியும்.

மராட்டிய மாநிலம் இந்துத்துவத்தின் கோட்டை. ஆர்.எஸ்.எஸ்.சின் 
தாயகம் இங்கு நாக்பூரில்தான் உள்ளது. பாஜகவும் சிவசேனையும் 
இம்மாநிலத்தில் மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சிகள். இங்குள்ள 
காங்கிரசும், சரத் பவாரின் கட்சியும் நாத்திகக் கட்சிகளோ 
பகுத்தறிவு இயக்கங்களோ அல்ல. அப்படி இருந்தும் இந்த 
மாநிலத்தில் "மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்" கொண்டுவரப் 
பட்டு இருக்கிறது. 

என்ன காரணம்? எப்படி இச்சட்டத்தை இங்கு கொண்டு வர 
முடிந்தது? இன்றைய முதல்வர் பாஜகவின் பட்நாவிஸ் 
அன்று  எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதுதான் 
இச்சட்டமே வந்தது. பாஜகவும் சிவசேனையும் எதிர்த்து 
நின்று இருந்தால் இச்சட்டம் வந்தே இருக்க முடியாது.

இந்துத்துவ மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமா?
கள்ளிச் செடியில் கற்பூர வாழைக்குலையா? வியக்கிறார்கள் 
மெய்யான பகுத்தறிவாளர்கள்!

என்ன அதிசயம்? எப்படி நடந்தது? வியக்கிறார்கள்!
காரணத்தை அலசி ஆராய்ந்தால் ஒன்று புலப் படுகிறது.
மராட்டியத்தில் போலிகள் இல்லை.

ஆம், ஆம், ஆம்! போலி முற்போக்குகள் அங்கு இல்லை.
இதனால்தான் அங்கு இச்சட்டம் கொண்டு வர முடிந்தது.
மராட்டிய மண் போலிகளை ஏற்பதில்லை.

இப்படி ஒரு சட்டத்தைத் தமிழ்நாட்டில் கொண்டு வருவது 
பற்றி, கனவிலாவது நினைக்க முடியுமா? போலி முற்போக்குகள் 
விட்டு விடுவார்களா?

ஆர்.எஸ்.எஸ்சும் பாஜகவும் தமிழ் மண்ணில் ஒரு 
சோமாலியாக் குழந்தையாகவே இருக்கின்றன.இங்கு 
இந்துத்துவ சக்திகளுக்கு எவ்வித வேர்ப்பிடிப்பும் 
கிடையாது. தற்போது இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 
ஸ்ரீரங்கம் ஒரு 'தெய்வீக' ஸ்தலம். என்றாலும், கடந்த 
2011 தேர்தலில் பாஜக இங்கு பெற்ற வாக்குகள் வெறும் 
இரண்டாயிரம்தான். 

ஆக, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும் விட, 
இந்துத்துவ சக்திகள் வலுக்குன்றி இருக்கும் மாநிலமான 
தமிழ்நாட்டில் ஏன் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் 
கொண்டு வர முடியவில்லை?,

ஒரு நாளும் கொண்டு வர முடியாது. ஏனெனில், தமிழன் 
சினிமா மோகம் பிடித்தவன்.கூத்தாடிகளுக்கு அடிமையாகிப் 
போனவன்.கொத்தடிமைத்தனம் சிந்தையில் உறைந்தவன்.

உலகிலேயே, போலி முற்போக்குகள் நிறைந்த பூமி 
தமிழ்நாடுதான். ஆபாச எழுத்தாளன் பின்னால் போவான் 
இந்தப் போலி முற்போக்கு. கிறிஸ்துவப் பிரச்சாரம் 
என்ற பெயரில் மூடநம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வான் 
ஒரு அதிகாரி. அவன் பின்னால் போவான் இந்தப் 
போலி முற்போக்கு.கனி இருப்பக் காய் கவர்வான் 
இந்தப் போலி முற்போக்கு!

பிற்போக்கு ஆர்.எஸ்.எஸ்.ஐ விட அபாயகரமான 
போலி முற்போக்குகளை ஒழித்துக் கட்டாமல் 
தமிழ்நாடு ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது!

***************************************************************** 
        
    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக