வியாழன், 19 பிப்ரவரி, 2015

(4) லெனின் படத்தை அழுக்குத் துணியால் மறைத்த 
வியட்நாமிய கம்யூனிஸ்ட் தலைவர்கள்!
--------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------ 
வியட்நாம் ஒரு கம்யூனிஸ்ட் நாடு.
வியட்நாமிய சோஷலிசக் குடியரசு என்றுதான் அந்த 
நாட்டுக்குப் பெயர். (VIETNAM SOCIALIST REPUBLIC).
மேலும் வியட்நாம் ஒரு நாத்திக நாடும் கூட.
வியட்நாமிய அரசமைப்புச் சட்டப்படி, IT IS A DECLARED 
ATHIEST STATE. வியட்நாம் நாட்டில் 2009ஆம் ஆண்டு 
கணக்கெடுத்த சென்சஸ் பிரகாரம், 81 சதம் மக்கள் 
எந்த மதத்தையும் சாராதவர்கள், அதாவது நாத்திகர்கள்.
** 
தென்கிழக்கு ஆசியாவின் குட்டி நாடான வியட்நாமின் 
மக்கள்தொகை சற்றேறக்குறைய ஒன்பது கோடி. நம் 
தமிழ்நாட்டின் அளவுதான், தோராயமாக.
இங்கு ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெறுகிறது.
அந்த ஒரு கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிதான்.
வேறு எந்த அரசியல் கட்சிக்கும் அங்கு இடம் கிடையாது.
அனுமதியும் கிடையாது. VIETNAM IS A ONE-PARTY STATE,
AS PER ITS CONSTITUTION.
இங்கு வியட்நாம் என்பது வடக்கு வியட்நாம்,
தெற்கு வியட்நாம் இரண்டையும் உள்ளடக்கிய 
ஒருங்கிணைந்த வியட்நாம் ஆகும்.
**       
வியட்நாம் உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்து கொண்ட 
ஒரு நாடு. 2007 ஜனவரியில், WTOவில் வியட்நாம் 
இணைந்தபோது, WTOவில் 150 நாடுகள் இணைந்து 
இருந்தன. WTOவில் இணைந்த அந்த நிகழ்வு, வியட்நாமில் 
கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. கொண்டாட்டங்களை 
 CPV, அதாவது வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சி 
முன்னெடுத்தது.இனிப்புகள் பரிமாறப் பட்டன.
பூங்கொத்துகள் WTO அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டன.
வியட்நாமிய கம்யூனிஸ்ட் தலைவர்களும், WTOவின் 
அதிகாரிகளும் ஒன்றாக அமர்ந்து உண்ட அந்த விருந்தில் 
உயர்வகை உணவுகள் பரிமாறப் பட்டன.
** 
மேலும், வியட்நாம் ஏற்கனவே உலக வங்கியில் 
உறுப்பினராக உள்ளது. (ஆனால், கியூபா உலகவங்கியில் 
உறுப்பினராக இல்லை என்பது கருதத் தக்கது.)
உலகவங்கி, IMF,WTO ஆகியவை எல்லாம் ஏகாதிபத்திய 
நிறுவனங்கள். லெனின் கூறியபடி, நிதி மூலதனத்தை 
ஏற்றுமதி செய்து, உலக நாடுகளைச் சுரண்டிக் கொழுக்கும்
பகாசுர நிறுவனங்கள்.
"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்"
என்ற தமது புகழ் பெற்ற நூலில், லெனின் இது பற்றி 
விளக்கி இருப்பார்.
** 
ஆனாலும், எவ்விதக் குற்ற உணர்வும் இன்றியே, 
வியட்நாம் WTOவில் இணைந்தது. தாலி கட்டிய 
புருஷனுடன் படுக்கைக்குச் செல்லும் பெண்டாட்டி 
போல, வியட்நாம் மிக இயல்பாக WTOவில் இணைந்தது.
அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்ற விழாக்களில், லெனின் 
படத்தை அழுக்குத் துணியால் மூட வேண்டி இருந்தது 
ஒன்றுதான் லேசான ஒரு அசவுகரியம்.
** 
மாலையில் நடைபெற்ற, அமெரிக்க அதிகாரிகளுக்கு 
அளித்த மதுபான விருந்தின்போது, வியட்நாமிய கம்யூனிஸ்ட் 
தலைவர்கள், அமெரிக்க முதலாளிகளின் நலனுக்காக, 
குடித்தார்கள். விருந்து மண்டபம் எங்கும் நிறைந்து 
ஒலித்தது  "சியர்ஸ்" ஓசை.  
** 
இருபது லட்சம் வியட்நாமியர்களை அமெரிக்க 
ராணுவத்துக்குப் பலி கொடுத்த வியட்நாம் நாடு,
அதையெல்லாம் மறந்து விட்டு, இன்று அமெரிக்காவுடன் 
கை குலுக்குவதா என்று நீங்கள் பதைபதைப்பீர்கள்
என்றால், உங்கள் வாயிலேயே சூடு போடுவார்கள் 
வியட்நாமியக் கம்யூனிஸ்ட் தலைவர்கள். "நாபாம் 
குண்டுகளை மறந்து விட்டீர்களா காம்ரேட்ஸ்" என்று 
நீங்கள் புலம்பத் தொடங்கினால், வியட்நாமின் "மக்கள் 
ராணுவ" வீரர்கள் உங்கள் நாக்கை அறுப்பது உறுதி.
** 
ஏன் இந்தத் தலைகீழ் மாற்றம்? 1975இல் போரின் 
முடிவில், சைகோன் வீழ்ந்ததுமே, குதிகால் பிடரியில்    
பட ஒடிப்போனார்களே அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு 
ராணுவத் தளபதிகள்! அவர்களுக்கா இன்று வியட்நாமில் 
விருந்து? சிவப்புக் கம்பள வரவேற்பு?
** 
இதுதான் இன்றைய வியட்நாம். இதுதான் உண்மை!
முக்கால உண்மை! ஏன் நிகழ்ந்தது இந்த மாற்றம்?
எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?
விடை காண வேண்டாமா?
------------------------------------------------------------------------ 

             
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக