வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

இடஒதுக்கீடு என்பது பாரபட்சமே!
---------------------------------------------------------- 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-----------------------------------------------------------
இடஒதுக்கீட்டை எவர் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் 
அல்லது எதிர்க்கலாம். அதற்குமுன் இடஒதுக்கீட்டின் தத்துவம் 
என்ன என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியம்.
இடஒதுக்கீடு குறித்து சரியான ஒரு புரிதலுக்கு 
வருவதற்கு, மேற்கூறிய கேள்விக்கான சரியான விடையைத் 
தெரிந்து இருப்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்கிறது.

கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், இடஒதுக்கீடு என்பது 
"பாதுகாப்புக் கருதிய பாரபட்சம்" ஆகும் (PROTECTIVE 
DISCRIMINATION). இக்காரணம் பற்றியே, (ipso facto) இடஒதுக்கீடானது,
சட்டத்தின் முன்பான சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு 
எதிரானதாகும் ( against the principle of equality before law).  

இப்போது, பரிசீலனையில் இரண்டு கோட்பாடுகள் உள்ளன.
ஒன்று, பாதுகாப்புக் கருதிய பாரபட்சம்;
மற்றொன்று, சட்டத்தின் முன்பான சமத்துவம். இவற்றை 
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஏற்றத்தாழ்வான ஒரு சமூகத்தில், அசமத்துவமான ஒரு 
சமூகத்தில் வாழ்வாதாரங்கள் சமமாகப் பங்கிடப்பட மாட்டாது.
மெலிந்தவனின் பங்கை வலுத்தவன் அபகரித்துக்கொண்டு 
விடுவான்.இதன் விளைவாக, வலுத்தவன் மேலும் கொழுப்பதும்,
மெலிந்தவன் மேலும் இளைப்பதும் நடக்கும். இது முன்னிலும் 
மோசமான அசமத்துவத்துக்கு இட்டுச் செல்லும். இந்தப் போக்கைத் 
தடுத்து நிறுத்தவும், சமத்துவத்தை நோக்கிய தடத்தில் 
சமூகத்தை இயங்க வைக்கவும், சமூகத்தின் உறுப்பினர்களிடையே 
பாரபட்சமான ஓர் அணுகுமுறையைக் கையாள வேண்டியது 
உள்ளது.அத்தகைய ஓர் அணுகுமுறைதான் இடஒதுக்கீடு 
என்னும் பாதுகாப்புக் கருதிய பாரபட்சம் ஆகும். 

அசமத்துவமான இந்தியச் சமூகத்தில், சமூகத்தின் உறுப்பினர்கள் 
இடையே சாதி என்னும் பாரபட்சமும், அதன் உச்சமான தீண்டாமை 
என்னும் பாரபட்சமும் உள்ளன. இதில் தீண்டாமை என்பது 
அழிவு கருதிய பாரபட்சம் ஆகும் (DESTRUCTIVE DISCRIMINATION).
இந்த அழிவு கருதிய பாரபட்சத்தை முறியடிக்க, பாதுகாப்புக் 
கருதிய பாரபட்சத்தைத் தொழிற்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது.
(DESTRUCTIVE DISCRIMINATION versus PROTECTIVE DISCRIMINATION.
CASTE and UNTOUCHABILITY versus RESERVATION.)      

பாம்பு கடித்து நஞ்சு உடலில் ஏறியவனுக்கு, மாற்று மருந்து 
அதாவது, நஞ்சு முறிப்பு மருந்து கொடுப்பது அவசியம்.
அப்படிப்பட்ட நஞ்சு முறிப்பு மருந்தே( ANTIDOTE) இடஒதுக்கீடு 
ஆகும்.

இந்தியாவில் இடஒதுக்கீட்டின் வரலாற்றைத் தெரிந்தவர்கள் 
செண்பகம் துரைராசன் என்ற மாணவியைப் பற்றி அறிந்து 
இருக்கக் கூடும்; அறிந்து இருக்க வேண்டும். இடஒதுக்கீடு 
பாரபட்சமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது என்றும் அதனால் தமது வாய்ப்பு பறிபோய் விட்டது 
என்றும் செண்பகம் துரைராசன் என்ற மாணவி நீதிமன்றத்தில் 
வழக்குத் தொடர்ந்ததும், அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் 
இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பெரும் போராட்டத்தை நடத்தியதும் அதன் விளைவாக அரசமைப்புச் சட்டம் திருத்தப் பட்டதுமான 
வரலாற்றை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.விரித்துக்கூற 
இங்கு இடமில்லை.

அடுத்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி 
செய்யும், சட்டத்தின் முன்பான சமத்துவம் (EQUALITY BEFORE LAW)
என்னும் கோட்பாட்டைப் பார்ப்போம். மானுட சமூகத்தின் 
ஆக உயர்ந்த கோட்பாடு இது.  எனினும், அசமத்துவமான  ஒரு 
சமூகத்திற்கு இது பொருந்தாது. சமமானவர்களுக்கு இடையில் மட்டுமே நிலவ வேண்டியது சமத்துவம்; சமமற்றவர்களுக்கு
இடையில் அல்ல. சமத்துவத்தை எய்திய பிறகு, ஒரு சமூகத்தில்
செயல்படுத்த வேண்டிய இக்கோட்பாட்டை, சமத்துவம் இன்னும் 
எய்தாத ஒரு சமூகத்தில் பேணுவது அபத்தத்துக்கு இட்டுச் செல்லும்.
THIS IS VALID ONLY IN A POST-EQUALITY SCENARIO!

 LIKEWISE, THE PROTECTIVE DISCRIMINATION IS A CONCEPT THAT 
IS VALID ONLY IN A PRE-EQUALITY SCENARIO!

ஆக, இடஒதுக்கீடு என்னும் பாதுகாப்புக் கருதிய பாரபட்சம் 
ஏற்றத் தாழ்வுகள் நிரம்பியதும் சமத்துவத்தை அடையாததுமான 
இந்திய சமூகத்தின் தேவையை நிறைவு செய்யும் ஒரு 
கோட்பாடு ஆகும். சாதி போன்ற அழிவு கருதிய பாரபட்சம் 
நீடிக்கும் வரை, இடஒதுக்கீடும் நீடிக்கும். சாதி என்று 
ஒழிகிறதோ, அன்று இடஒதுக்கீடும் தேவையற்றுப் போகும்.
--------------------------------------------------------------------------------------------- 
கட்டுரை ஆக்கம்: பி இளங்கோ சுப்பிரமணியன் 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
வெளியீட்டாளர் குறிப்பு:
-----------------------------------------
THIS IS THE CORRECT MARXIST LENINIST AND SCIENTIFIC 
STANDPOINT ON THE QUESTION OF RESERVATION.

******************************************************************      

  


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக