வியாழன், 12 பிப்ரவரி, 2015

கேஜ்ரிவால் உயிர்த்தெழுந்தார்!
THE RESURRECTION OF KEJRIWAL!
-----பகுதி-இரண்டு------
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------------
இக்கட்டுரையின் முதல் பகுதியில் காங்கிரஸ் மற்றும்
இடதுசாரிகளின் டில்லித் தேர்தல் தோல்வி பற்றிப்
பார்த்தோம். இப்போது பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள்
பற்றிப் பார்ப்போம்.

தேர்தல் நெருக்கத்தில் தோல்வி உறுதி என்று தெரிந்து
கொண்டது பாஜக. என்றாலும் இந்த அளவு படுமோசமான
தோல்வி ஏற்படும் என்று அக்கட்சி கணித்திருக்கவில்லை.
திகைத்துப்போய் வாய்குழறி நிற்கிறது பாஜக.

பாஜகவுக்கு விழுந்த மரண அடி என்றெல்லாம் இத்தேர்தல் 
முடிவுகளை வர்ணிப்பது சிறுபிள்ளைத் தனமானது. பாஜகவின் 
பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரானதுதான் இத்தீர்ப்பு 
என்பது போன்ற பொழிப்புரைகள், எதையும் மேம்போக்காக 
மட்டுமே பார்க்கத் தெரிந்த குட்டி முதலாளித்துவ விடலைகளின் 
பேதைமை நிறைந்த பார்வை.

இப்பார்வை இன்னமும் போதிய அளவு அம்பலப் படாத 
பாஜகவை, அதன் ஆபத்தை குறை மதிப்பீடு (under estimate)
செய்யும் அபத்தமான பார்வை.

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் 
ஒரே பொருளாதாரக் கொள்கையைக் கொண்டவை.
பொருளாதார சீர்திருத்தங்களில் நம்பிக்கை கொண்டவை.
மதவாதம் என்று எடுத்துக் கொண்டாலும், ஆம் ஆத்மி 
ஒன்றும் மெய்யான மதச்சார்பற்ற கட்சி அல்ல. அப்பட்டமான 
மதவாதம் ஆம் அத்தமிக்கு ஏற்புடையது அல்ல. 
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற ஆரவாரமற்ற 
மதவாதமே ஆம் ஆத்மியின் கொள்கை.

டில்லித் தேர்தலை ஒரு மாநிலத்தின் தேர்தல் என்று 
கருதுவதே முதல் பிழை. அது வெறும் மாநகராட்சித் 
தேர்தல்தான். பொருளாதாரக் கொள்கைகளோ மதவாதமோ 
இத்தேர்தலில் பாடுபொருளாக இருக்கவில்லை. மின்சாரக் 
கட்டணம், குடிநீர் விநியோகம், சுகாதாரம்  ஆகிய 
தலமட்டப் பிரச்சினைகளே இத்தேர்தலில் முன்னிலை 
வகித்தன. இவற்றைத் திறம்பட நிறைவேற்றும் ஆற்றல் 
உள்ள தலைவர் கேஜ்ரிவால் என்று நம்பிய டில்லி மக்கள் 
அவர் முதல்வராக வேண்டும் என்று விரும்பி அவருக்கு 
அபரிமிதமான ஆதரவைத் தந்துள்ளனர். இதற்குமேல்,
இத்தேர்தலில் புலனாய்வு செய்து துப்பறிந்து கண்டுபிடிக்க 
எதுவுமே இல்லை. JUST THAT'S ALL; NOTHING MORE OR LESS!

டில்லி மாநில அரசின் பிரச்சினைகள் ஒரு மாநகராட்சிச்
சட்டகத்துள் (within the frame work of a municipal corporation) அடங்கி 
விடக் கூடியவை. நீண்ட காலம் புரட்சி வேடம் தரிப்பதற்கு 
இது கேஜ்ரிவாலுக்கு வாய்ப்பை வழங்கும். எனவே அவர் 
அம்பலப் படுவதற்குச் சற்றுக் கூடுதலான காலம் பிடிக்கும்.
அதுவரை  குட்டி முதலாளித்துவ விடலைகளால் அவர் 
புரட்சியாளராகவே கொண்டாடப் படுவார்.     

ஆம் ஆத்மியின் வெற்றியில் மகிழ்வதற்கு உண்மையில் 
ஒன்றுமே இல்லை. இதன் பொருள் பாஜக வெற்றி பெற்று 
இருக்க வேண்டும் என்பதல்ல. 

            
ஏகாதிபத்தியத்திடம்  நிதிஉதவி பெறும் அரசு சாரா 
நிறுவனங்களால் ( NGOs ) நடத்தப் படும் கட்சி ஆம் ஆத்மி.
இக்கட்சி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
ஏகாதிபத்திய எடுபிடிக் கட்சி. இந்திய அரசியலை 
ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகத் திருப்புவதே இக்கட்சியின் 
ஒரே திருப்பணி. அறியாமையால் உந்தப்பட்டு இக்கட்சியை 
இன்று ஆதரிக்கும் நேர்மையான சக்திகள் காலப்போக்கில் 
தாமாகவே உண்மையை உணர்வார்கள். அதற்கான  வாய்ப்புகளை கேஜ்ரிவாலே உருவாக்கித் தருவார்.

நக்சல்பாரிப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திக் கொண்டு 
இருந்த வினோத் மிஸ்ரா தலைமையிலான மா-லெ கட்சி
என்ன ஆனது? அரசுசாரா நிறுவனங்களால் கொஞ்சம் 
கொஞ்சமாக விழுங்கப்பட்டு முற்றிலுமாக புரட்சிகர 
அரசியலில் இருந்து விலகிப்போனது.

புரட்சிகர இயக்கத்தை முடமாக்குவதும், மக்களின் 
ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை மழுங்கடிப்பதுமே 
அரசுசாரா நிறுவனங்களின் திருப்பணி; ஒரே பணி.
இதைச் செய்வதற்கென்றே உருவான கட்சி ஆம் ஆத்மி.

மேலும், கேஜ்ரிவால் ஒரு வலதுசாரி. இடஒதுக்கீட்டு 
எதிர்ப்பாளர். ஊழல் ஒழிப்பு என்பதிலும்கூட, தெரிவு 
செய்யப்பட மறதி  (selective amnesia ) உள்ளவர். இந்தியத் 
துணைக்கண்டத்தையே குலுக்கிய ஜெயலலிதாவின் 
தண்டனை குறித்து மறந்தும் வாய் திறக்காதவர்.
ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் பியூன் மீது கத்தியைப் 
பாய்ச்சும் இவர், பாசிஸ்ட் கிரிமினல்களைக் கண்டு 
கொள்ளாமல் விடுவதில் வல்லவர்.

எனவே இவரை ஆதரிப்பது தற்கொலைக்குச் சமம்.

************************************************************  

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக