வியாழன், 12 பிப்ரவரி, 2015

கேஜ்ரிவால் உயிர்த்தெழுந்தார்!
THE RESURRECTION OF KEJRIWAL!
------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------- 
புதுடில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 
அசுரத்தனமான வெற்றியைப் பெற்றுள்ளது. ஏற்கனவே 2014 
நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்தடுத்து வந்த மராட்டியம்,
அரியானா, ஜார்க்கன்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல்களிலும் 
படுதோல்வி அடைந்து துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ் கட்சியின் 
சவ அடக்கம் புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. ஆக, இந்திய 
அரசியலில் காங்கிரஸ் கட்சி முக்தி அடைந்து விட்டது.

இனி காங்கிரஸ் கட்சியில் இருந்து மாபெரும் வெளியேறுதல்கள்
(EXODUS) நிகழும். பல மாநிலங்களில் கட்சி பிளவுபடும், தமிழ்நாட்டில் 
வாசன் பிளவுபடுத்தியது போல். அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவைகள்
போல், காங்கிரஸ் தலைவர்கள் பிற காட்சிகளில் புகலிடம் 
தேடுவார்கள். டில்லியில் தனது வாக்கு வங்கியை முற்றிலுமாக 
ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் இழந்துள்ளது போல, பிற 
மாநிலங்களிலும் இழக்கும். சுருங்கக் கூறின், காங்கிரஸ் இல்லாத 
இந்தியா என்ற மோடியின் எதிர்பார்ப்பு விரைவில் முழுமை 
அடையும்.

ஒருகாலத்தில் மலைப்பாம்பாக இருந்த காங்கிரஸ் கட்சி 
தற்போது மண்புழுவாகப் பரிணாமச் சுருக்கம் ( de-evolution)
அடைந்துள்ளது. இது ஒரு irreversible process என்பதால், காங்கிரஸ் 
மீண்டும் விரிவடைய எவ்வித சாத்தியமும் இல்லை. இந்திய 
ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையை முற்றிலுமாக காங் இழந்து 
விட்டது. 'பேடிகை வாளாண்மை' போல் உள்ள ராகுல் காந்தியின் 
தலைமையால் கட்சியைக் காப்பாற்றுவது என்பது ஒருநாளும் 
நடவாதது. எனவே டில்லி வாக்காளர்களின் தீர்ப்பை மதித்து,
காங்கிரஸ் கட்சிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவோம்!

அடுத்து, டில்லி தேர்தலில் போட்டி(!!!)இட்ட, இன்னொரு தேசியக் 
கட்சியான, மார்க்சிஸ்ட் கட்சியின் கதி என்ன ஆனது என்று பார்ப்போம்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஏழு கட்சி இடதுசாரிக் கூட்டணி 
மொத்தமுள்ள 70 இடங்களில் 15 இடங்களில் போட்டியிட்டது. பதினைந்து 
வேட்பாளர்களும் டெப்பாசிட் இழந்து, முற்றிலுமாகத் துடைத்து எறியப் பட்டது இடதுசாரிக் கூட்டணி.

கடந்த 2013 டில்லி சட்ட மன்றத் தேர்தலில், கேப்டன் விஜயகாந்த்தின் 
தேமுதிக போட்டியிட்டதும் காணாமல் போனதும் வாசகர்களுக்கு
நினைவு இருக்கலாம். இன்று 2015 தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணியின் நிலைமை, கேப்டனை 
விடவும் கேவலமாகப் போனதுதான் மிச்சம். இடதுசாரி வேட்பாளர்கள் 
கேப்டன் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விடக் குறைவாகவே 
பல தொகுதிகளில் பெற்றுள்ளனர்.

15 இடதுசாரி வேட்பாளர்களில் ஒருவர் கூட, நான்கு இலக்க
வாக்குகளைப் பெறவில்லை. அவ்வளவு ஏன், சில தொகுதிகளில்,
இடதுசாரிகள் 100 வாக்குகளைக் கூடப் பெறவில்லை. முண்ட்கா 
தொகுதியில் போட்டியிட்ட இடதுசாரிக் கூட்டணி வேட்பாளர் 
ராகேஷ் சர்மா வெறும் 52 (ஐம்பத்தி இரண்டு மட்டும்) வாக்குகளை 
மட்டுமே பெற்றுள்ளார். இன்னொரு தொகுதியில் போட்டியிட்ட 
இடதுசாரி வேட்பாளர் வெறும் 49 வாக்குகளை ( நாற்பத்து ஒன்பது 
மட்டும்) மட்டுமே பெற்றுள்ளார். இதுதான் இடதுசாரிகளின் 
லட்சணம்! சுயேச்சையாகப் போட்டியிடும் டம்மியோ டம்மி 
வேட்பாளர்கள் கூட, ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறும்போது,
மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களோ, அல்லது, பிற 
இடதுசாரி வேட்பாளர்களோ ஆயிரம் வாக்குகளைக் கூடப் 
பெறவில்லை என்பதில் இருந்து இடதுசாரிகள் படிப்பினை 
பெற வேண்டாமா?

சனிப்பிணம் தனியாகப் போகாது என்பதுபோல, காங்கிரஸ் கட்சி 
சவக்குழிக்குள் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இழுத்துக் 
கொண்டு விட்டது என்பதுதான் உண்மை. 2014 நாடாளுமன்றத் 
தேர்தலில், பத்து சத  இடங்களைக் கூடப் பெறாமல், காங்கிரஸ் 
எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது என்றால், பத்து இடங்களைக் 
கூடப் பெறாமல் வெறும் ஒன்பது இடங்களை மட்டுமே பெற்று 
தேசியக் கட்சி அந்தஸ்த்துக்கு ஆபத்தைத் தேடிக் கொண்டது 
மார்க்சிஸ்ட் கட்சி. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோ வெறும் 
ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்று இறுதிமூச்சை விட்டது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களில், CPI ஒரு 
இடத்தையும், CPM ஒன்பது இடங்களையும் மட்டுமே பெற்றுள்ளன 
என்பதில் இருந்து இக்கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை 
என்பதை முன்பே பல முறை தெரிவித்து இருந்தோம்.
டில்லித் தேர்தல் முடிவுகள் நமது கணிப்பை உறுதி செய்துள்ளன.

எனவே, நடந்த சவ அடக்கம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல,
போலி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்தான். 
போலிக் கம்யூனிஸ்ட்களை விட, கம்யூனிச எதிரி 
மேலானவன் என்று மக்கள் தீர்மானித்ததில் என்ன தவறு?

(தொடரும்... அடுத்த பகுதி பாஜக பற்றி...)

****************************************************************                    
   


          
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக