வியாழன், 22 ஜனவரி, 2015

தென்னாலிராமன் வளர்த்த குதிரையாக 
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி!
---------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------  

நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா பாண்டியன் என்று 
கட்சியினர் பெருமை கொள்ளலாம். ஆனால் எங்கள் 
வடசென்னைத்  தொகுதி மக்கள் தா.பா.வை ஒரு 
கம்யூனிஸ்ட் தலைவராகக் கருதுவதில்லை. அவரை 
ஒரு காங்கிரஸ் தலைவராகவே பாவிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு,
மூவர்ணச் சுவரொட்டிகளில் இந்திரா, ராஜீவ் படங்களுக்கு 
இடையில் ஒளிர்ந்து, தொந்தி பருத்த கதர்க் குல்லாய்கள்
புடைசூழ அவர் தெருத்தெருவாக வந்து ஓட்டுக் கேட்ட 
காட்சியும் அதன் மாட்சியும் இன்றளவும் எங்கள் 
வடசென்னைத் தொகுதிவாழ் மக்கள் நெஞ்சில் அழியாச் 
சித்திரமாகத் திகழ்வதை யாரால் மறக்க இயலும்!

நரசிம்மராவின் காங்கிரஸ் அரசு, தொண்ணூறுகளில் 
புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப் 
படுத்தியபோது, அதை ஆதரித்து தா.பா அவர்கள் 
எழுதிய புத்தகம் இப்போது படித்தாலும் திகட்டவில்லையே!
அற்புதமான எழுத்தாற்றலும் ஆணித்தரமான வாதங்களும் 
ஆழ்ந்த பொருளாதார ஞானமும் பளிச்சிட்ட அவரின் 
எழுத்து, ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் 
ஆகியவற்றின் பொருளாதார நிபுணர்களை நாணம் 
கொள்ளச் செய்ததே!

அட்டையைக் கிழித்துவிட்டுப் படித்தால், அதை எழுதியவர் 
டாக்டர் மன்மோகன்சிங் அல்லது ப சிதம்பரம் என்றுதானே 
இன்றைய இளைய தலைமுறை நினைக்கும்?

எனவேதான் சிங்காரவேலர், சீனிவாசராவ், ஜீவானந்தம் 
ஆகியோர் வரிசையில் எங்கள் வடசென்னைத் தொகுதி 
மக்கள் தா.பா.வை வைத்துப் பார்ப்பதில்லை. மாறாக,
மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராமமூர்த்தி, தங்கபாலு 
ஆகியோரின் வரிசையில் வைத்தே பார்க்கிறோம்,
வணங்குகிறோம்.

எஸ்.ஏ.டாங்கே, மொஹித்சென் ஆகிய தத்துவ அறிஞர்கள் 
இந்தியத் துணைக்கண்டத்தில், ஒரு புதிய வகை 
கம்யூனிசத்தை அறிமுகம் செய்தபோது, யாரினும் 
முன்னதாக அதன் மாண்பை உணர்ந்தவர் தா.பா.
எனவேதான், ஐக்கியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற அவர்களின் 
மகரஜோதியில் ஒன்று கலந்தார் தா.பா. 

டாங்கேயிசம் என்று புகழப்படும் அத்தத்துவம் ஒருவித 
அத்வைத தத்துவம் ஆகும். த்வைதம் என்றால் இரண்டு
என்று பொருள். அத்வைதம் என்றால் இரண்டல்ல, ஒன்று
என்று பொருள். முதலாளி, தொழிலாளி என்ற தனித்தனி 
வர்க்கங்கள் இரண்டு அல்ல ஒன்றுதான் என்று பொருள்.
சுண்டெலியும் பூனையும் இரண்டு தனித்தனி உயிர்கள் 
அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்று பொருள்.

காலடி ஆதிசங்கரரின் அத்வைதம் ஆன்மிக விடுதலைக்கானது.
ஆனால் டாங்கே அவர்களின் தத்துவமோ அரசியல் 
விடுதலைக்கானது. எனவே முன்னதை விடப் பின்னது உயர்ந்தது.
இதைத் தம் நுண்மாண்  நுழைபுலத்தால் உணர்ந்த தா.பா.
டாங்கேயிசத்தில் நெஞ்சைப் பறிகொடுத்தார். 

தம் குருநாதரால் உந்தப்பட்டு அவரைப் போன்றே, ஒரு 
புதியவகைக்  கம்யூனிசத்தை, தமிழ்நாட்டில், 2014 ஏப்ரல்-மே
காலக்கட்டத்தில் அறிமுகப் படுத்தினார் தா.பா. புதுமை 
மணக்கும் அத்தத்துவத்தின் பெயர் ஜெ.யிசம்   

ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குவதன் மூலம், தேசிய 
ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றத் திட்டமிட்டார் தா.பா.
ஆனால், பாவம், அவர் ஒன்று நினைக்க, தெய்வம் வேறு 
ஒன்றை நினைத்து விட்டதே!

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தென்னாலிராமன் 
வளர்த்த குதிரையாகி விட்டது. இந்தியாவில் மட்டும் 
என்ன வாழ்கிறதாம் என்று வாசகர்கள் கேட்கக் கூடும்.
543 மக்களவை இடங்களில் "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு"
என்பதாக ஒரே ஒரு இடத்தோடு சுருங்கிப் போய்விட்டது 
கம்யூனிஸ்ட் கட்சி.

நேரு அரசை ஆதரித்தது, டாங்கேயிசத்தைப் பின்பற்றியது,
நெருக்கடி நிலையை ஆதரித்தது, ஜெயாவுக்குப் பல்லக்குத் 
தூக்கியது என்று செய்யத் தகாதவற்றைச் செய்ததுதான் 
கம்யூனிஸ்ட் கட்சியை இன்று மீளாப் படுகுழியில் 
தள்ளி உள்ளது. 

     செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
     செய்யாமை யானும் கெடும்.

வலது பிற்போக்கு சக்திகள் மிகுந்த மூர்க்கத்துடன் 
அரசியல் களத்தில் வாளைச் சுழற்றும் இக்காலக் கட்டத்தில் 
அதை எதிர்கொண்டு முறியடிக்க கம்யூனிஸ்ட் கட்சி 
உயிருடன் இருப்பது அவசியம். 1925இல் சிங்காரவேலர் 
தொடங்கி வைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர் குடிக்க  
எவனுக்கும் உரிமை கிடையாது. 

எனவே உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை,
கம்யூனிஸ்ட் கட்சி தன்னைப் புனர் உத்தாரணம் செய்து 
கொள்ள வேண்டும் . இந்த மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து 
தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக, 
கிரேக்கப்  புராணத்தில் வரும் அவுகியன் லாயத்தைப் போல 
( AUGIAN STY ) அழுக்குப் படிந்து கிடக்கும் கட்சி, 
கழுவித் தூய்மை அடைந்து ஒளிர வேண்டும். 

கம்யூனிஸ்ட் கட்சியில் எல்லாம் இருக்கிறது, கம்யூனிசத்தைத் 
தவிர என்ற அவப்பெயர் நீங்க வேண்டும். டாங்கேயிசம் ஜெ.யிசம் 
ஆகியகழிவுகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும்.   

புரட்சிகர உணர்வைக் குன்றிமணி அளவேனும் தக்க வைத்துக் 
கொண்டிருக்கும் கட்சியின் அணிகளாலும், கட்சிக்கு 
வெளியே உள்ள கம்யூனிசத்தை நேசிக்கும் திரளான 
ஆதரவாளர்களாலும் இதைச் சாதிக்க முடியும்.

       வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 
       மற்றைய எல்லாம் பிற.

*****************************************************************  

         
  





  
          .


    

திங்கள், 19 ஜனவரி, 2015

கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு 
கல் வீசும் தா.பாண்டியனின் விசுவாசிகள்!
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------- 
1) பல கோடி ரூபாய் நில  அபகரிப்புப் புகாரில் 
சிக்கி உள்ளார் தா பாண்டியன். நீதிமன்றத்தில் 
வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

2) தா.பா மீது வழக்குத் தொடுத்தவர் RSS காரரோ,
BJP காரரோ அல்ல. தா.பா.வின் சொந்தக் கட்சித் தோழர்.  
CPI கட்சிப் பொறுப்பாளர்.

3)  இந்தச் செய்தி எல்லா  ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து வந்து கொண்டும் இருக்கிறது. இதனால் 
கட்சியின் மானம் சந்தி சிரிக்கிறது.

4) தா.பா.வின் செய்கை நியாயமா என்று நாம் கேள்வி 
எழுப்பினால், நம் மீது பாய்கிறார்கள் தா.பா. விசுவாசிகள்.

5) தா.பா நில  அபகரிப்பு மோசடி செய்யவில்லை என்று 
அவர்கள் கூற முன்வரவில்லை. மாறாக, கட்சியில் 
உறுப்பினராக இல்லாதவர்கள் அதைக் கேள்வி 
கேட்கக் கூடாது என்கிறார்கள். 

6)  புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் முத்தமிட்டுக்
கொள்ளலாம்; அடித்தும் கொள்ளலாம். நாலு சுவருக்குள் 
இருக்கும் வரை, அது அவர்களின் அந்தரங்கம். ஆனால்,
சண்டை ரோட்டுக்கு வந்து விட்டால், ஊர்க்காரன் தலையிடத்தான் 
செய்வான்.

7) தா.பா அபகரித்த சொத்து AITUC தொழிலாளர்களின் சொத்து.
தொழிலாளியின் வியர்வையில் விளைந்த சொத்து. அதை 
எவன் அபகரித்தாலும், அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக 
இருந்தாலும், தொழிலாளி சட்டையைப் பிடித்துக் கேட்கத் 
தான் செய்வான்.

8) "கோடிக்கால் பூதமடா--தொழிலாளி 
     கோபத்தின் ரூபமடா"
என்பதை தொழிலாளி நிரூபிக்கத்தான் செய்வான்.

9) AITUC யில் எல்லாக் கட்சிகளையும் சார்ந்த 
தொழிலாளர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
எனவே, எல்லாக் கட்சிகளையும் சார்ந்த தொழிலாளர்களுக்கும் 
கேள்வி கேட்க உரிமை உண்டு.

10) தா.பா  நிலஅபகரிப்பே செய்யவில்லை என்றால், 
பொய் வழக்குத் தொடுத்த கட்சித் தோழரின் மீது
நடவடிக்கை எடுத்துக் கட்சியை விட்டு நீக்கலாமே!
ஏன் இன்னும் நீக்கவில்லை?

11) 1972இல் கம்யூனிஸ்ட் கட்சி, பண்ணையார்களிடம் 
இருந்து ஏழை விவசாயிகளின் நிலங்களை மீட்பதற்காக, 
நிலமீட்சிப் போராட்டம் நடத்தியது. திருநெல்வேலியில்,
சி.பா.ஆதித்தனாரின், தாதன்குளம் பண்ணையில் 
இறங்கி, கம்யூனிஸ்ட்டுகள் செங்கொடியை நாட்டினார்கள்.
கைதானார்கள், சிறை சென்றார்கள்.

12) ஆனால், இன்றோ, கட்சித் தலைவரிடம் இருந்து,
தொழிலாளர்களின் நிலத்தை மீட்க, கம்யூனிஸ்ட் 
தொண்டர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்!
என்னே  சரிவு! என்னே வீழ்ச்சி!!

13) இன்று பழைய செய்தித்தாள்களை எல்லாம் 
எடுத்துத் தேடியதில், தா.பாவின்  நிலஅபகரிப்பு குறித்து
பதினேழு செய்தித் துண்டுகள் (PAPER CUTTINGS) கிடைத்து 
இருக்கின்றன. தேவையான ஆதாரங்கள் அதில் 
இருக்கின்றன.

14) செங்கொடியும் அரிவாள் சுத்தியல் சின்னமும் 
உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவானவை.
அது தா.பா.வுக்கும்  அவருடைய விசுவாசிகளுக்கும் 
தனிஉடைமை அல்ல. எனவே, செங்கொடி இயக்கத்தைச் 
சேர்ந்த யார் எவருக்கும், கம்யூனிசத்தின் பெயரைக் கெடுக்கும் 
தா.பாவைக் கேள்வி கேட்க உரிமை உண்டு.

15) சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக 
இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும்தான்.

16) இந்திரஜித் குப்தாவும் சதுரானத் மிஸ்ராவும் மத்திய 
அமைச்சர்களாக இருந்தார்கள். எவனாவது நாக்கில் 
பல்லைப் போட்டுப் பேச முடிந்ததா?

17) அப்படி ஏன் தா.பா.வால்  இருக்க முடியவில்லை? 

18) இந்தியாவில் எந்தக் கம்யூனிஸ்ட் தலைவரும் 
ஊழல் பெருச்சாளி என்று பேர் எடுத்தது இல்லை,
தா.பா.வைத் தவிர.

19) தா.பா.வுக்கு நாணம் இல்லாமல் இருக்கலாம்;
ஆனால், நான் நாணுகிறேன்.
     பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
     அறம்நாணத் தக்கது உடைத்து.

*************************************************************           
     



  
  

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகளால்
கருத்துரிமையைப் பாதுகாக்க முடியுமா?
---------------------------------------------------------------------------
சிறப்புச் சொற்பொழிவு
--------------------------------------
நாள்: ஞாயிறு 18.01.2015
நேரம்: மாலை 6.30 முதல் 8.30 வரை
இடம்: வங்கி ஊழியர் பிற்பட்டோர் நலச்சங்க அலுவலகம்,
               கோடம்பாக்கம், சென்னை 600 024
                (ரயில் நிலையம் அருகில்) 
சிறப்புச் சொற்பொழிவு:
----------------------------------------
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
நிறுவனர், தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்

பொருள்;
-----------------
மாதொருபாகன் நாவல் சர்ச்சை,
மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு கூண்டோடு ராஜினாமா,
ஜல்லிக்கட்டுக் தடையும் தகர்த்து எறிவதன் அவசியமும்,
...இன்ன பிற பொருள்களை உள்ளடக்கி
"குட்டி முதலாளித்துவ மேனா மினுக்கிகளால்
கருத்துரிமையைப் பாதுகாக்க முடியுமா?
என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறும்.

கூட்ட ஏற்பாடு:
--------------------------
தலையங்க விமர்சனக் குழு

தொடர்புக்கு:
---------------------
தோழர் வே சோதிராமலிங்கம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தலையங்க விமர்சனக் குழு, சென்னை

அனைவரும் வருக!
அன்புடன் அழைக்கும்,
தலையங்க விமர்சனக் குழு, சென்னை
மார்க்சிய சிந்தனைப் பயிலகம், சென்னை.

***************************************************************   
  

சனி, 17 ஜனவரி, 2015

நின்றுபோன ஜனசக்தியும்
நிறுத்திவிட்ட  தா.பாண்டியனும்!
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------
ஜனசக்தி நின்றுபோய் விட்டது. மூன்று மாதங்கள்
ஆகின்றன. ஜனசக்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ் மாநிலக் குழுவின் அதிகாரபூர்வ ஏடு.

ஒரு கட்சிப் பத்திரிகை நின்று போனால், அந்தக்
கட்சிக்காரர்கள் மட்டும்தானே வருத்தப்பட வேண்டும்,
மற்றவர்கள் வருந்துவதற்கு என்ன இருக்கிறது என்ற
குறுகிய பார்வை சரியல்ல.

கட்சிப் பத்திரிகைக்கே உரிய எல்லா விதமான
பலவீனங்களும் ஜனசக்திக்கும் உண்டுதான். எனினும்,
ஜனசக்தியின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி அடைய நாம்
ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகள் அல்லவே!
முதலாளித்துவ எதிர்ப்பு முகாமைச் சேர்ந்த
ஒரு ஆயுதம் குறைகிறதே என்பதுதான் நமது ஆதங்கம்.

தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும்
தங்களுக்கென்று தொலைக்காட்சி சானல் வைத்து
இருக்கிறார்கள். ஆனால் இடதுசாரிகளுக்கு என்று
ஒன்று கூடக் கிடையாது. இதற்காக தா.பாண்டியன்
நாணாமல் இருக்கலாம். ஆனால் நான் நாணுகிறேன்.

தொலைக்காட்சி சானலும் கிடையாது. இருக்கிற
பத்திரிகையும் இழுத்து மூடப்பட்டு விட்டது என்றால்
கண்ணீர் வராதா? வரக்கூடாதா?
    
சென்னை ப்ராட்வேயில் உள்ள ஜனசக்தி அலுவலகத்துக்குச்
சென்று ஏமாற்றத்துடனும்  வருத்தத்துடனும்  திரும்பினேன்.
கட்சியில் உள்ள நண்பர்களை விசாரித்தேன். கேள்விப்பட்ட
விஷயங்கள் திடுக்கிட வைக்கின்றன.

மோசடியான நிதி நிர்வாகத்தால் குற்றுயிரும்
குலையுயிருமாகக் கிடந்த ஜனசக்தி காப்பாற்றுவார்
யாருமின்றித் தனது இறுதி மூச்சை விட்டிருக்கிறது.
ஒன்றரைக்கோடி ரூபாய் நிதி மோசடி என்கிறார்கள்
தோழர்கள். வேலியே பயிரை மேய்ந்து விட்டது என்று
குமுறுகிறார்கள் தோழர்கள்.

அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரிவது
போலத்தான், திருச்சிப் பதிப்பு இருந்தது என்பது
இப்போதுதானே புலப்படுகிறது. ஜனசக்தி திருச்சிப்
பதிப்பின் தொடக்க விழாவின் போது, சினிமா நடிகர்
சிவகுமாரை அழைத்து வந்து பேச வைத்து,
கம்யூனிசத்துக்கே இழுக்கைத் தேடினார் தா.பா.
கொங்கு மண்டலத்து லெனினாக சிவகுமாரை
வர்ணிக்காதது ஒன்றுதான் பாக்கி.

ஜெயலலிதாவைத் தவிர, வேறு யாருக்கும் இந்தியப்
பிரதமராகத் தகுதி கிடையாது என்று பிரகடனம்
செய்தவர் அல்லவா தா.பா! ஒருவேளை சிவகுமாரைத்
தமிழ்நாட்டு முதல்வர் ஆக்கவேண்டும் என்று ஏதேனும்
திட்டம் கிட்டம் வைத்திருப்பாரோ! பாவம், இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி தா.பாவிடம் மாட்டிக் கொண்டு, படாத கேவலமே
இல்லை!

ஜனசக்தி நின்று போனது குறித்தோ, 2014 தேர்தலில்
போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி
டெப்பாசிட் இழந்தது குறித்தோ  தா.பாவுக்கு எந்தக்
கவலையும் இல்லை!    

நன்று அறிவாரில் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
என்று வள்ளுவர் கூறும் கயவர்தான்  தா.பா.

இந்த முன்னாள் டாங்கேயிஸ்ட், இந்த முன்னாள்
UCP ஓடுகாலி, இந்த முன்னாள் "மறவர் முரசு "
சாதிப் பத்திரிகையின் ஆசிரியர், என்று ஏகப்பட்ட
"முன்னாள்" களுக்குச் சொந்தமான இந்த தா.பா
முன்னாள் மாநிலச் செயலர் என்றும் ஆனால்தான்
ஜனசக்தியும் உருப்படும். CPI யும் உருப்படும்!

சொந்தக் கட்சியின் AITUC தொழிற்சங்கத்தைச் சேர்ந்த
தொழிலாளர்களின் சங்கக் கட்டிடத்தை அபகரித்து
பல நூறு கோடி ரூபாய் சுருட்டினார் என்ற குற்றச்
சாட்டின்பேரில், தா.பா மீது நீதிமன்றத்தில் வழக்கு
நடந்து கொண்டு இருக்கிறது. சொந்தக் கட்சி
வழக்கறிஞரே தா.பா. வை எதிர்த்து வழக்கு
நடத்துகிறார். இத்தனை கேவலத்துக்குப் பிறகும்,
எப்படி மானமே இல்லாமல், தா.பா சிவப்புத் துண்டை
அணிந்து  கொண்டு பவனி வருகிறார்?

கட்சியில் உறுப்பினராகவே இல்லாத நீ எப்படி
எங்கள் தலைவரைக் குற்றம் சொல்லலாம் என்று
எந்தத் தோழரும் என்னைக் கேட்க மாட்டார்கள்
என்பது உறுதி. ஏனெனில்,திருத்தல்வாத CPIஇல்தான்
நான் உறுப்பினராக இல்லையே தவிர, இந்தியக்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்
என்பதைத் தோழர்கள் அறிவார்கள்.

ஜனசக்தியோடு என்னுடைய உறவு 1970களில்
இருந்து தொடங்குகிறது. அப்போதெல்லாம் ஜனசக்தி
வாரப் பத்திரிகைதான். ஒவ்வொரு வாரமும்
ஜனசக்தியில் வரும் அறந்தை நாராயணனின்
எரிமலைக் கட்டுரைகளை வாசிக்காமல் எந்த
வாரமும் எனக்குக் கழிந்தது இல்லை. அது மட்டுமல்ல,
தூத்துக்குடி தோழர் எஸ்.ஏ.முருகானந்தம் நடத்திய
சாந்தி இதழையும் நான் தவறாமல் படித்து வந்திருக்கிறேன்.

1972இல் கட்சி நடத்திய நிலமீட்சிப் போராட்டத்தின்போது
கட்சிக்கு உதவிகள் செய்தவன் நான்.அப்போது நான்
கல்லூரி மாணவன். சேரன்மாதேவி வட்டாரக் கமிட்டிச்
செயலாளர் மு ராமய்யா உள்ளிட்ட தோழர்கள்
நிலமீட்சிப் போராட்டத்தில் பங்கேற்று, பாளையங்கோட்டைச்
சிறையில் அடைக்கப் பட்டு இருந்தனர். சிறையில் இருந்த
அவர்களை நான் அடிக்கடி சென்று பார்ப்பது உண்டு.

அவர்களைப் பார்க்க நான் செல்லும்போது, ஓட்டலில்
தோசை பார்சல் வாங்கிக் கொண்டு, தோசையைப்
பொதிந்துள்ள தினத்தந்தி பத்திரிகைத்  தாளை அகற்றி
விட்டு, ஜனசக்தியை வாங்கி, அதில் தோசையைப்
பொட்டலம் கட்டிக் கொண்டு சென்றவன் நான். இவ்வாறு
சிறைக்குள் ஜனசக்தியைக் கடத்தியவன் நான்.

இதற்காக, அன்றைய CPI நெல்லை மாவட்டச் செயலாளர்
தோழர் வி.எஸ்.காந்தி, கட்சி அலுவலகச் செயலாளர்
காந்தராஜ், தூத்துக்குடி மாதவன்,ஆம்பூர் கசமுத்து
உள்ளிட்ட தலைவர்களின் பாராட்டைப் பெற்றவன் நான்.
வி.எஸ்.காந்தி அவர்களோடு பலகாலம் திரிந்தவன்.

எனவே, ஜனசக்தி மீது அக்கறை கொள்ளவும், அதைச்
சாகடித்துவிட்ட தா.பா மீது குற்றம் சாட்டவும் எனக்கு
முழு உரிமை உண்டு.

ஏக் தோ சீட்டுக்காக செங்கொடியை விற்றுவிட்ட
தா.பா அவர்களே, மாநிலச் செயலர் பதவியை
ராஜினாமா செய்யுங்கள். கம்யூனிசம் வாழ வேண்டும்
என்றால், தாங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.

பின்குறிப்பு:
---------------------
தா.பா சாதி வெறியராக இருந்தார், "மறவர் முரசு"
என்ற சாதிப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்
என்ற ரகசியத்தை நான் போட்டு உடைத்து விட்டேன் 
என்று தா.பா என் மீது வெறி கொள்ளலாம். 1972இல்,
திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியில் தா.பா
சொற்பொழிவு ஆற்றியபோது, அவரின் பெயருக்குக் கீழே
ஆசிரியர், மறவர் முரசு என்று மட்டுமே குறிப்பிடப்
பட்டு இருந்தது. இவ்வாறு குறிப்பிட்டு அழைப்பிதழைத்
தயாரித்த, அக்கல்லூரியின் அன்றைய மாணவர்
சங்கத்தின் பொதுச் செயலாளர்தான் இக்கட்டுரையின்
ஆசிரியர். மாணவர் சங்கத் தலைவர் சிவகிரி
தங்கமலை இதற்குக் கூடுதல் சாட்சி.

**********************************************************     


    



  



            

பாஜகவின் முகத்தில் வழியும் மலம் 
--------------------------------------------------------------- 
ஜல்லிக்கட்டு மேற்கத்தியக் கலாச்சாரம் 
என்று திருவாய் மலர்ந்து  அருளி உள்ளார் 
மேனகா காந்தி.

இதன் மூலம், இந்தியா பற்றியோ, 
தமிழ்நாடு பற்றியோ ஒன்றும் தெரியாது 
என்று தமது தற்குறித் தனத்தை 
வெளிப்படுத்தி உள்ளார் மேனகா.

நேரு குடும்பத்து மலம், பாஜகவின் 
முகத்தில் வழிகிறது.

*************************************8888 
லும்பன்களின் கொண்டாட்டம் 
------------------------------------------------------ 
திராவிட இயக்கத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்ட 
கோபால மேனனின் புதல்வர் 
ராமச்சந்திர மேனன் 
இன்று பிறந்தநாள் காண்கிறாராம்.
தமிழகம் எங்கும்
லும்பன்கள் களியாட்டம்!

******************************8888888 
ஆண்டாளும் நெய்யுடை அடிசிலும்
-----------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------
நெய்யுடை அடிசில் பேறு பெற்றவர்க்கே வாய்க்கும்.
உடைப்பருஞ் செல்வர் ஆயினும், இனிப்பும்
கொழுப்பும் ( SUGAR AND CHOLESTROL )அண்டுமேயானால்,
நெய்யுடை அடிசில் வாய்க்காமலே போம்.

என் பள்ளிப் பருவத்தில், வீட்டில் அனைவரும்
அமர்ந்து உண்ணும்போது, இலைச் சோற்றில்
எம் அன்னை நெய் ஊற்றும்போதெல்லாம்
எம் தந்தை "மூட நெய்  பெய்து, முழங்கை வழிவார"
என்பார்.

பலமுறை இவ்வாறு சொல்லக் கேட்டபின், எனக்கு
அத்தொடரின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனினும்,
"மூட நெய்" என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
மூட நம்பிக்கை என்றால் தெரியும். அது என்ன
மூட நெய்? மூடத்தனமான நெய் என்பது
பொருந்தவில்லையே! தந்தையிடம் கேட்கத்
தோன்றவும் இல்லை. அக்காலச் சூழலில் கேட்டு
விடவும் முடியாது.

சிறிது காலத்திலேயே, வானொலியில் திருப்பாவை
விளக்கத்தை நான் கேட்கத் தொடங்கினேன். அப்போது
புரிந்தது மேற்கண்ட தொடர் ஆண்டாளின் பாசுரத்தில்
வருகிறது என்று. பொருளும் புரிந்தது.

"ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
 மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்  
 கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்."

மூட நெய் என்பதை அதற்கு முந்திய சீரான
பால்ச்சோறு என்பதுடன் இணைத்துப் பொருள்
காண வேண்டும். (பால்ச்சோறு என்று எழுதித் தெரிந்தே
தவறு இழைக்கும் என்னை இலக்கண ஆசிரியர்கள்
மன்னிக்கட்டும்).

பால்ச்சோறு மூட நெய்  பெய்து என்றால், இலையில்
இடப்பட்ட சோறு முழுவதையும் மூடும் அளவுக்கு
நெய்  ஊற்றுவது என்று பொருள். சோற்றின் நடுவில்
சிறிது நெய் ஊற்றி உண்பவர்கள் அல்ல ஆயர்கள்.
ஆயர் சமூகம் சுரண்டலற்ற சமூகம்; சமத்துவச் சமூகம்.
எனவே, அங்கு வண்மையும் இல்லை; வறுமையும் இல்லை.
ஆயர்குடியினரின் நிறைவாழ்வை  "மூட நெய் பெய்து
முழங்கை வழிவார"   என்ற தொடரால் ஆண்டாள்
யாப்புறுத்துகிறாள்.

உலகம் முழுவதும்  தொல்குடிச் சமூகத்தினர்  
ஆயர்களே என்பது வரலாறு. மானுட வரலாற்றில்
இச் சமூகம் மேய்ச்சல் சமூகம் ( PASTORAL SOCIETY )
என்று அழைக்கப் படுகிறது.     

உலகில் முதன் முதலில் தோன்றிய இலக்கியங்கள் யாவும்
ஆயர் குடியைச் சிறப்பித்துக் கூறுவனவே ஆகும்.
தமிழ் நிலத்தின் நால்வகைப் பிரிவுகளைக் கூறவந்த
தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகமும் " என்றுதான்
தொடங்குகிறார். இங்கு மேய என்பது விரும்பிய என்று
பொருள்படும். திருமால் விரும்பிய காட்டு நிலம் என்பது
பொருள்.

கிறித்துவ சமயமும் ஆயர்களைச் சிறப்பிப்பதில்
தவறியதில்லை. தங்கள் கடவுளையே ஒரு ஆயனாக,
மேய்ப்பனாக வரித்துக் கொண்ட மாண்பு கிறித்துவத்துக்கு
உண்டு.

"கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்;
அவர் புல்  உள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீர் அண்டை இளைப்பாறச்
செய்கிறார் " என்கிறது விவிலியம்.

வேட்டுவச் சமூகமும் தொன்மையானதுதான் எனினும் 
அங்கு கருணைக்கு இடமில்லை. அச்சமூகத்து மனிதன்
விலங்கோடு விலங்காக, சற்று மேம்பட்ட விலங்காக
வாழ்ந்தவன். அவ்வளவுதான்.

ஆனால் ஆயர் சமூகம்தான் நாகரிகம் எய்திய
முதல் சமூகம். வேட்டுவச் சமூகம் போலன்றி,
இங்கு விலங்குகளோடு மனிதன் இயைந்து வாழ்ந்தான்.
திருப்பாவையில், ஆண்டாள் விலங்குகளையும்
பறவைகளையும் சிறப்பித்துப் பாடுவதை நாம்
காணலாம்.

"புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
 வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ"
என்றும் ( பாசுரம்: 6 ),

"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து"
 என்றும் ( பாசுரம்: 7)
ஆண்டாள் பறவைகளை மாண்புறுத்துகிறாள்.

'கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
 நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத் தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்"
என்ற ஆண்டாள் பாசுரத்தைக் காட்டிலும் வேறு எதில்
எருமைகள் சிறப்பிக்கப் படுகின்றன?  

ஆயர் சமூகத்தில், விலங்குகளுக்கும் குடியுரிமை உண்டு.
மனிதனுக்குச் சமமான குடியுரிமை. அங்கு பசுக்களே
வள்ளல்களாக இருப்பதால், மானுட வள்ளல்கள் இல்லை.
"வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்" என்ற
கம்பனின் கூற்று இங்கு பொருந்தும் அழகைக் காண்க.
வண்மை என்றால் வள்ளன்மை, வள்ளல் தன்மை
என்று பொருள். 


ஆயர் குடியில் மனிதர்களை வாழ வைப்பவை
விலங்குகளே! மாடு எனில் செல்வம்!  மாடு எனில் வாழ்வு!
எனவே,
"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் "
நிறைந்த ஆயர் குடியில், சோற்றை மூடும் அளவுக்கு
நெய் பெய்து உண்பதில் வியப்பில்லை அல்லவா!


 ஆண்டாளைப் படிக்கப் படிக்க அவளில் நான் மூழ்கிப்போய்
விடுகிறேன். கன்னங்களில் தாரை தாரையாகக் கண்ணீர் 
வழிய வழிய அவளில் நான் திளைத்து விடுகிறேன்.
திகட்டுதல் கண்டேனில்லை!

"ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ  
 வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்"
என்று அரச போகம் துறந்து சென்ற குலசேகர ஆழ்வார்
போல, நானும் அனைத்தையும் துறந்து, ஆண்டாளின்
திருவில்லிபுத்தூர் ஆய்ப்பாடியில் ஓர் ஆயனாக வாழும்
வாழ்க்கைக்கு ஏங்குகிறேன்.

வள்ளுவர் நம் மூளையை வென்று  விட்டார் எனில்,
ஆண்டாளோ நம் இதயத்தை வென்று விட்டாள்!
வாழிய ஆண்டாள்!

பின்குறிப்பு:
------------------
ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களைப் பாடினாள்.
முதல் பிரபந்தம் திருப்பாவை. இரண்டாவது,
நாச்சியார் திருமொழி. இவற்றுள் பிந்தியது
குறித்தும் எழுத ஆவலாக உள்ளேன், ஆர்வலர்கள்
ஊக்குவித்தால். இல்லையேல் அரசியல் சேற்றில்
வராகமாகக் கிடந்தது உழல வேண்டியதுதான்.

*************************************************************