இதுவரை சொல்லாமல் விட்டதை இப்போது சொல்கிறேன்!
உண்மைகளை முன்வைக்கும் கிளாஸ்நாஸ்ட்!
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------------------------------------
அர்த் சத்யா என்று ஓர் இந்திப்படம்! கோவிந்த் நிஹலானி
இயக்கியது! 1980களில் வெளியானது. அர்த் சத்யா என்றால்
அரை உண்மை என்று பொருள். பாதி உண்மையை மட்டுமே
இந்தப்படம் சொல்கிறது என்று படத்தின் தலைப்பு மூலம்
அறிவிப்பார் கோவிந்த் நிஹலானி.
நக்சல்பாரி இயக்கத்தில் பணியாற்றியபோது பெற்ற
அரசியல், தொழிற்சங்க, சமூக மற்றும் குடும்ப வாழ்க்கை
அனுபவங்கள் ஆகிய அனைத்தும் குறித்துச் சொல்ல
விரும்புகிறேன். அர்த் சத்யா போன்று அரை உண்மைகளை
மட்டுமே சொல்ல இச்சமூகம் அனுமதிக்கும் என்பதை அறிவேன்..
என்ற போதிலும் அதைச் சொல்வதும்கூட ஒரு கிளாஸ்நாஸ்ட்
(glasnost) தேவை என்று நான் உணர்ந்ததால்தான்.
1980களில் சோவியத்தில் (இன்றைய ரஷ்யாவில்)
அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையைக்
கொண்டு வந்தார் கோர்ப்பச்சேவ். இதுவே கிளாஸ்நாஸ்ட்
(GLASNOST) எனப்பட்டது.
(கிளாஸ்நாஸ்ட் = ரகசியமற்ற வெளிப்படைத் தன்மை).
மறைந்த நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் ஏ எம் கே
அவர்கள் என்னுடைய ஆசான். அவர் பல்வேறு
காலக்கட்டங்களில் பல்வேறு முறைகள் அரசியல் தேவை
கருதி என் வீட்டுக்கு வந்துள்ளார். ஆயினும் எங்களின்
சந்திப்புகள் குறித்து ஒரு புகைப்படம்கூட கிடையாது.
நான் பலமுறை வீடு மாற்றி இருக்கிறேன். மகாகவி பாரதி
நகரில் வீடு, கண்ணதாசன் நகரில் வீடு, தற்போதைய வீடு,
இதே ஊரில் இதற்கு முன்பிருந்த வீடு என்று நான் வீடு
மாற்றியபோதெல்லாம் ஒவ்வொரு வீட்டுக்கும்
பலமுறை வந்துள்ளார் ஏ எம் கே அவர்கள். ஆயினும்
இவற்றுக்கெல்லாம் சாட்சியமாக ஒரே ஒரு புகைப்படம்
கூட கிடையாது.
நாங்கள் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருந்து
இருக்கிறோம். அவர் பேச நான் கேட்டுக் கொண்டு
இருந்தேன் என்று இதற்குப் பொருள். எப்போதுமே அவர்
ஆசான் என்ற நிலையிலும் நான் மாணவன் என்ற
நிலையிலுமே எங்களின் சந்திப்பு இருந்தது.
எங்கள் வீட்டின் மீன் குழம்பையும் குழம்பில் போட்ட
வஞ்சிரம் மீனையும் விரும்பி உண்பார் ஏ எம் கே.
ஒருமுறை அவர் வந்தபோது அவருக்காக எங்கள் வீட்டில்
மட்டன் பிரியாணி. அதைக் கண்ட ஏ எம் கே தன்னை
முன்னிட்டு எதையும் தயாரிக்க வேண்டாம் என்றும்
நீராகாரம் தான் இருக்கிறது என்றாலும், தான் அதை
விரும்பி உண்ணும் வழக்கம் உடையவன் என்றும் என்
மனைவியிடம் கூறினார். "அப்பா, இது எதேச்சையாகச்
செய்த பிரியாணிதான், நீங்க சாப்பிடுங்கப்பா" என்று
என் மனைவி கூறி அவரைச் சாந்தப் படுத்திய பிறகே
ஏ எம் கே சாப்பிட்டார்.
ஒருமுறை என் வீடு தவிர்த்து, எங்கள் அலுவலகத்தின்
இன்ஸ்பெக்சன் குவார்ட்டர்சிலும் ஏ எம் கே அவர்களுடனான
சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன். எங்களின்
இன்ஸ்பெக்சன் அறைகள் மிகவும் ஆடம்பரமானவை.
ஆள் விழுங்கி சோபாக்கள் நிறையவே அங்குண்டு.
அத்தகைய சோபாக்கள் என் வீட்டில் இல்லை.
தோழர் ஏ எம் கே அவர்களின் அந்திம காலத்தில் அவரின்
உடல் நலிவுற்ற நிலையில் இத்தகைய ஆள் விழுங்கி
சோபாக்களில் மட்டுமே அவரை அமரவைத்து உடல்
வலியைக் குறைக்க வேண்டும் என்று நான் முடிவு
செய்திருந்தேன். மேலும் கேண்டீன் வசதியும் அங்குண்டு.
இன்ஸ்பெக்சன் அறைக்குள் நுழைந்ததுமே அந்த அறையின்
ஆடம்பரம் கண்டு ஏ எம் கே அவர்கள் பிரமித்தார். அதன்
வாடகை என்ன என்று கேட்டார். நூறு ரூபாய்தான் என்று
சொன்னேன். இது முழுவதும் official tour வரும் உயர்
அதிகாரிகளின் பயன்பாட்டுக்கானது. அறைகள் புக்
ஆகாத நேரத்தில் லோக்கலாக எங்களுக்கு பெயரளவிலான
வாடகைக்கு விடுவார்கள் என்று சொன்னேன்.
இப்படி எத்தனை எத்தனையோ சந்திப்புகள். என்றாலும்
இதற்குச் சான்றாக ஒரே ஒரு புகைப்படம் கூட என்னிடம்
கிடையாது. அமைப்பிலும் கிடையாது. ஏனெனில் புகைப்படம்
எடுக்கவில்லை. காரணம் புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற
எங்களின் முன்முடிவுதான்.
மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அனைத்துமே
தலைமறைவாக இயங்கும் கட்சிகளாக இருந்தன.
கட்சியானது ரகசியக் கட்சி என்பதாலும் வெகுஜன
அமைப்புகள் கூட அரை ரகசியத் தன்மையுடன்
இயங்குபவை என்பதாலும் கட்சியின் அணிகள்
அனைவருமே ரகசியச் செயல்பாடுகளில் நன்கு
பயிற்றுவிக்கப் பட்டிருந்தனர்.எனவே யாரும் புகைப்படம்
எடுப்பதில்லை என்பதோடு, எவரேனும் புகைப்படம்
எடுத்தாலும் அதைத் தடுக்கும் மனநிலை வாய்க்கப்
பெற்று இருந்தனர்.
ஒரு முக்கிய நிகழ்வைப் பார்ப்போம். 1980களின்
பிற்பகுதி.நாடு முழுவதும் மண்டல் குழுவின்
பரிந்துரைகள் பெரிதும் பேசப்பட்ட காலம்.
அப்போது லிபரேஷன் கட்சியின் முன்முயற்சியில்
ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எல்லா நக்சல்பாரி அமைப்புகளும் மண்டல்
பரிந்துரைகள் குறித்து தங்களின் நிலைபாட்டைச்
சொல்ல வேண்டும் என்பதா ஏற்பாடு செய்யப்பட
கூட்டம் அது.
அக்கூட்டத்தில் பங்கேற்பது என்று ஏ எம் கே அவர்கள்
முடிவு எடுத்திருந்தார். அக்கூட்டத்தில் பங்கேற்று
அமைப்பின் நிலைபாட்டைச் சொல்வதற்கு நான்
தெரிவு செய்யப்பட்டேன். மண்டல் குழுவின்
பரிந்துரைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
பகுதி அரசு ஊழியரின் பகுதி என்பதால், ஏ எம் கே
அவர்கள் என்னைத் தேர்வு செய்து இருந்தார்.
ஆனால் மண்டல் பரிந்துரை குறித்து என்ன பேச வேண்டும்
என்றோ அமைப்பின் நிலைபாடு என்ன என்றோ எனக்குத்
தெரியாது. எனவே எனக்கு போதனை அளித்து, என்னைத்
தயார்படுத்தும் பொருட்டு ஏ எம் கே அவர்கள் என் வீட்டுக்கு
வந்திருந்தார். என் மூளையில் அத்தனை விஷயங்களையும்
இறக்கினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசும்
அருகதை வாய்க்கப் பெற்றேன்.
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில்
லிபரேஷன் குழுவின் சார்பாக அதன் மத்தியக் கமிட்டி
உறுப்பினர் தோழர் பி வி சீனிவாசன் வந்திருந்தார்.
அக்கூட்டத்தில் அவர் முன்னிலையில் நான் பேசினேன்.
வழக்கம்போல், I have stolen the show. வடிவம் உள்ளடக்கம்
(form and content) இரண்டிலும் ஒரு excellenceஐ நான்
எய்தி இருந்தேன். உள்ளடக்கம் ஏ எம் கே அவர்களுடையது;
வடிவம் என்னுடையது.
கட்சி நிலைபாட்டை நான் எப்படிப் பேசுகிறேன் என்று
அறிந்து மேல் கமிட்டிக்கு ரிப்போர்ட் செய்யப்
பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் கூட்டத்துக்கு
வந்திருந்தனர். அவர்கள் என்னுடைய பேச்சைக் கேட்டு
மிகவும் பிரமித்துப் போயிருந்தனர். அனைத்து
விஷயங்களும் ஏ எம் கே அவர்களின் கவனத்துக்குக்
கொண்டு செல்லப்பட்டன.
ஏ எம் கே அவர்களிடம் ரிப்போர்ட் பண்ணிய தோழர்கள்
அனைவரும் ஒரே குரலில் அவரிடம் சொன்னது:
"இளங்கோ பேசினது நீங்க பேசினது மாதிரியே
அச்சு அசலா இருந்தது".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக