திங்கள், 8 மார்ச், 2021

 வௌக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்!

----------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி 

--------------------------------------------------------------------------------

வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வருவது விசேஷம்.

மாமன் பகலிலும் வருவான். பகலில் வருவது ஏதேனும்  

வேலை நிமித்தமாக இருக்கும். வேலை முடிந்ததும் 

மாமன் போய்விட, முறைப்பெண்ணுக்கு ஏமாற்றமே 

மிஞ்சும்.   


ஆனால் வௌக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தால்,

வேலை முடிந்தபின் வந்திருக்கிறான் என்று பொருள்.

எனவே ராத்தங்குவான் என்பதும் அதில் அடங்கும்.

இது முறைப்பெண்களுக்கு கிளர்ச்சி ஊட்டும்.


அப்படி வந்த மாமனை அவள் மறைந்து நின்று 

பார்க்கிறாள். நமது சமூகத்தில் அப்படித்தான் 

பார்க்க முடியும். அவன் தாகம் என்கிறான்; 

தண்ணீர் கேட்கிறான். இவள் கொடுக்கிறாள்.


வௌக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் 

மறஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் 

நான் கொடுக்க 

அவன் குடிக்க 

அந்த நேரம் தேகம் சூடு ஏற ......................

 


போன வருஷம் வீரவநல்லூர் பஸ் ஸ்டாண்டில் 

பஸ்சுக்காகக் காத்திருந்தபோது ஒரு பெண் 

வந்து என்னிடம் பேசினாள்.50 வயதிலும் தள தள 

என்று இருந்தாள். எங்கள் ஊர்ப்பெண்தான்.

கால் மணி நேரம் மிகவும் அந்நியோந்நியமாகப் 

பேசியபின் விடைபெற்றுச் செல்லும்போது,

"அத்தான், நான் உங்களுக்கு முறைப்பொண்ணுதான்"

என்று அறிவித்து விட்டுச் சென்றாள்.  


நான் அவளை முத்தமிட விரும்பினேன். அவள் மீது 

எனக்கு உரிமை உண்டு. அவளும் என்னுடைய 

முத்தத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளக் கூடும்.

பதில் முத்தமும் தரக்கூடும்.


ஆனால் இந்தப் பாழாய்ப்போன சமூகம் 

இழவெடுத்த சமூகம் 

தாலியறுத்த சமூகம்

நாங்கள் முத்தமிடுவதை அனுமதிக்குமா?

ஒருபோதும் அனுமதிக்காது. 


கவிஞர் மனுஷ்ய புத்திரன் புலம்புகிறார்.

தான் ஒரு தவறான காலத்தில் பிறந்து 

விட்டதாக அவர் அரற்றுகிறார். அவர் என்னை விட 

வயதில் இளையவர். எதற்கும் மதிப்பளிக்காத 

ஒரு தவறான சமூகத்தில் பிறந்து விட்டதாக அவரே

வருந்துகிறார் என்றால் நான் எங்கே போவது?

நான் 1953ல் பிறந்தவன். இது ஒரு இரண்டும் கெட்டான்

காலம். ஒன்று 1943ல் பிறந்திருக்க வேண்டும். 

அல்லது 1983ல் பிறந்திருக்க வேண்டும். 1953

எங்கள் எல்லோருடைய தாலியையும்  அறுத்து விட்டது.


முறைப்பெண்களுக்காக இவ்வளவு பேசுகிறாயே,

நீ ஏன் எங்களில் ஒருத்தியைக்கூட மணந்து 

கொள்ளவில்லை என்று என்னுடைய முறைப்பெண்கள்   

கேட்கக் கூடும். அப்படிக் கேட்க அவர்களுக்கு உரிமை 

உண்டு. நான் சொந்தத்திலும் மணம் 

செய்யவில்லை. என்னுடைய சாதியிலும் மணம் 

செய்யவில்லை.


உடன் வேலை பார்த்த ஒரு பெண்ணும் நானும் 

ஒருவரை ஒருவர் விரும்பி, மணம் செய்து கொண்டோம்.

நான் நெல்லை; அவள் சென்னை!

நான் ......சாதி. அவள் ......சாதி.


யாயும் ஞாயும் யாராகியரோ என்பதைப்

பலர் இலக்கியத்தில் மட்டுமே படித்திருக்க 

முடியும். சொந்த வாழ்க்கையில் அதை  

உணர்ந்தவன் நான். 

   

சுமார் 40 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நிகழ்வு 

என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் 

புதிதாக மாற்றி அமைத்தது. நாங்கள் வேலை 

பார்த்தது தொலைதொடர்புத் துறை. 


24 மணி நேர சேவை என்பதால் நைட் ஷிப்ட்

உண்டு. ஒருநாள் மதிய ஷிப்ட் முடித்த பிறகு 

இருவரும் என் எஸ் சி போஸ் ரோட்டில் நடந்து

போய்க் கொண்டிருந்தோம். பூக்கடை 

டெலிபோன் எக்சேஞ்சைக் கடந்ததும் அவள் 

தான் காதலுற்ற செய்தியை என்னிடம் பின்வருமாறு 

கூறினாள். "உங்களுக்கு என்னப் பிடிச்சுருக்கா?"


இதைக் கேட்டதும் 

வானவர்களும் தேவதைகளும் என் மீது 

பூச்சொரிவதாய் உணர்ந்தேன். 

கோடி மணிகளின் ஓசை நெஞ்சில் 

ஒலிக்கக் கேட்டேன். ஆம் என்றேன்.


அவளை முத்தமிட .விரும்பினேன். பூக்கடை 

எக்சேஞ்சுக்கு முன் ஒளி வெள்ளம். அங்கு 

முத்தமிட இயலாது. சமூகம் அனுமதிக்காது.

எனவே மேலும் சிறிது தூரம் நடந்து சென்று,

சற்று வெளிச்சம் பரவாத பகுதிக்கு வந்தவுடன் 

அவளை உதட்டில் முத்தமிட்டேன். எங்கள் 

காதலை நாங்கள் உறுதி செய்து கொண்டோம்.     

எனது வாழ்க்கையின் கார்காலம் அது.


பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

இரு வீட்டார் மட்டுமல்ல, உறவுகள் மொத்தமும் 

எதிர்த்த ஒரு திருமணம். மறுநாள் காலை 

திருமணம். மணப்பெண்ணுக்கு ஒரு சேலை 

வேண்டும். இந்த எண்ணம் வந்தபோது 

இரவு 12 மணி. மேற்கு மாமபலத்தில் பூட்டிய 

கடையைத் திறந்து ஒரு சேலையை எனக்குத் 

தந்த அந்த இளைஞரை இன்றும் நன்றியுடன் 

நினைவு கூர்கிறேன். 


மறைந்த தமிழறிஞர் அரணமுறுவல் எங்கள்  

திருமணத்தை நடத்தி வைத்தார். இன்னும் சொல்ல 

மலையளவு இருக்கிறது. இழந்தது ஏராளம். 

பின்னர் சொல்கிறேன்.  

------------------------------------------------------------------------------

  

.



       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக