சனி, 20 மார்ச், 2021

அத்திம்பேர் மருதையனின் அந்தர் பல்டி!

உதயநிதியின் பெயரை வலது கையில் 

பச்சை குத்திக்கொண்ட மருதையன்!

எனது நக்சல்பாரி இயக்க அனுபவங்கள்!

------------------------------------------------------------------ 

வீரை பி இளஞ்சேட்சென்னி 

----------------------------------------------------------- 

Lightly, O lightly we bear her along,

She sways like a flower in the wind of our song;

She skims like a bird on the foam of a stream,

She floats like a laugh from the lips of a dream

(The palanquin bearers, a poem by Sarojini Naidu) 


தமிழ் மரபின்படி தோழர் மருதையன் எனக்கு அண்ணன் 

முறை வேண்டும். எனவே அவரின் துணைவியார் எனக்கு 

மதினியார் முறை ஆகிறார். என் வீட்டுக்கு அவர்கள் 

வந்தால், மருதையனின் துணைவியாரை நான் மைனி 

என்றுதான் கூப்பிடுவேன். அதுதான் எங்கள் ஊரில், 

எங்கள் சாதிகளில் வழக்கம்.


என் மனைவிக்கு மருதையனின் துணைவியார் என்ன 

உறவு முறை? மூத்த சகோதரி அதாவது அக்காள் முறை 

ஆகிறார். அக்காளுடைய கணவர் என்ற விதத்தில் 

மருதையன் அத்திம்பேர் ஆகிறார். எனவே மருதையனை 

அத்திம்பேர் என்று குறிப்பிடுவது சரிதான்!


கொஞ்ச காலத்துக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் 

மருதையனை பாட்டா என்று குறிப்பிட்டார். பாட்டா 

என்றால் நாஞ்சில் தமிழில் பாட்டையா என்று அர்த்தம்;

அதாவது தாத்தா என்று அர்த்தம். தலை தும்பைப் பூவைப் 

போல நரைத்துக் கிடப்பதால், மருதையனை பாட்டா என்று 

குறிப்பிட, ஜெயமோகன் மட்டுமல்ல நாகர்கோவில்காரர்கள் 

அனைவருமே  தூண்டப் படுவார்கள். 


மருதையன், ஜெயமோகன், இக்கட்டுரை ஆசிரியர் 

ஆகிய முவரும் சம்பந்தப்பட்ட இந்த அத்திம்பேர், பாட்டா 

உறவு முறையில் மற்ற யாரும் தலையிட வேண்டாம்.

எங்கள் மூவருக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. ஆம்,

நாங்கள் மூவரும் மத்திய அரசின் தொலைதொடர்புத்  

துறையில் (இன்றைய BSNL) பணியாற்றியவர்கள். 

எங்கள் மூவருக்கும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் உரிமை 

எடுத்துக் கொள்ள இடம் உண்டு. எனவே பிறர் யாரும் 

இந்த இடத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்.


ஆனாலும் மருதையனை பாட்டா என்று குறிப்பிட்டு, அவரின் 

முதுமையை வயோதிகத் தோற்றத்தைக் கேலி செய்ய 

நான் விரும்பவில்லை. அவரும் டை (dye) அடித்துக் கொண்டு 

நரையை மறைக்க முயலவில்லை. மாடாய் உழைத்து 

ஓடாய்த் தேய்ந்தவர் மருதையன் என்பதை நான் அறிவேன்.

பல்வேறு நிகழ்வுகளில் அவரின் சலியாத கடும் உழைப்பை 

நேரில் பார்த்து அறிந்தவன் நான்.


சில ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சாவூரில் பார்ப்பன 

பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தியது மகஇக

(மக்கள் கலை இலக்கியக் கழகம்). அதன் நிரந்தரப் 

பொதுச் செயலாளராக மருதையன் இருந்தார். மேற்படி 

பார்ப்பன எதிர்ப்பு தஞ்சை மாநாட்டை முன்னின்று 

நடத்தியவர் மருதையனே


இந்த மாநாட்டில் பேச இருக்கும் அம்பேத்கரிய அறிஞர் ஆனந்த் தெல்தும்டேவின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழிபெயர்க்குமாறு 

மருதையன் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படி 

தஞ்சை சென்று மருதையன் எனக்களித்த மொழிபெயர்ப்புப் 

பணியை சிறப்பாகச் செய்து முடித்தேன்.


இந்த மாநாட்டின்போது மருதையனைக் கவனித்தேன். 

சேர்ந்தாற்போல் ஒரு மணி நேரம் கூடத் தூங்காமல் 

மாநாட்டு வேலைகளில் மூழ்கிக் கிடந்தார். டீயும் 

சிகரெட்டும் அவரை கண்விழிக்க வைத்திருந்தன;

இப்படியே வேலை செய்து கொண்டிருந்ததால், 

காலப்போக்கில்  அவரின் உடல் நலம் பெரிதும் 

சீர்கெட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையாக 

உடல்நலம் சீர்கெட்டு நோயுற்றுப் படுக்கையில் 

வீழ்ந்து பின்னர் பிழைத்து எழுந்தார். அவருக்கு அது 

மறுபிறவி போல இருந்தது.


உடல் நலம் தேறியதும் தம் சொந்த வாழ்க்கை குறித்து 

கவலையுடன் சிந்தித்த மருதையன் திருமணம் செய்து 

கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி தம் 

சொந்த சாதியைச் சேர்ந்த, ஒரு பார்ப்பனப் 

பெண்மணியை மணந்து கொண்டார். 


திருமணத்தின்போது மருதையனுக்கு வயது 60.   சஷ்டியப்த 

பூர்த்தி நடக்க வேண்டிய வயதில் திருமணம்!

இந்தத் திருமணத்தை முற்றிலும் ரகசியமாக வைத்திருக்க 

முயற்சி செய்து, அது முடியாமல் போய், சந்தி சிரித்துப் 

போனார் மருதையன். 


தேர்தல் புறக்கணிப்பு என்பதை அதன் அளவுக்கு மீறிய 

விதத்தில் ஊதிப்  பெருக்கி, தேர்தலில் வாக்களிக்காமல் 

இருப்பதே உலகின் பிரம்மாண்டமான புரட்சிப்பணி என்று 

ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தன மாநில 

அமைப்புக் கமிட்டி (SOC, CPI ML, Tamilnadu) என்னும் 

மருதையனின் கட்சியும் மகஇக முதலிய மக்கள்திரள் 

அமைப்புகளும்.


எந்த ஒரு நக்சல்பாரிக் குழுவையும் விட,  தேர்தல் 

புறக்கணிப்பை அதிதீவிரமாகவும் அதீதமாகவும் 

முன்னெடுத்தது மகஇக. அவர்களின் ஏடுகளான 

புதிய ஜனநாயகம், புதியகலாச்சாரம், வினவு 

இணையதளம் ஆகியவை தேர்தல் புறக்கணிப்பை 

தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.


"தேர்தல் பாதை திருடர் பாதை" என்றும் 

"ஓட்டுப் போடாதே, புரட்சி செய்" என்றும்

தமிழகமெங்கும் சுவரெழுத்துக்கள் எழுதப் பட்டன; 

தேர்தல் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.


ஆனால் இன்று அத்திம்பேர் மருதையன் அந்தர் பலடி 

அடித்து விட்டார். Infinityயில் இருந்து Zeroவுக்கு வந்து 

விட்டார். 2021 ஏப்ரல்-மே சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக 

கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்கிறார். ஒட்டுப் 

போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்கிறார்.


இதே மருதையன் இதற்கு முன்பு வரை என்ன சொல்லிக் 

கொண்டு இருந்தார்? "யாருக்கு வாக்களித்தாலும் அது 

பாசிசத்துக்கு வாக்களித்ததாகத்தான் அர்த்தம். பாசிசம் 

என்பதே முதலாளித்துவ ஜனநாயகத்தின் நிலைமறுப்பே"

என்கிறார். இங்கு நிலைமறுப்பு (negation) என்றால் என்ன 

என்று புரிந்து கொள்ள வேண்டும்.  நிலைமறுப்பின் 

நிலைமறுப்பு (negation of negation) என்பது ஹெகலிய 

மற்றும் மார்க்சிய முரண்தர்க்கவியலின் ஒரு விதி.

(முரண்தர்க்கவியல் = dialectics). 


இப்படியெல்லாம் புரட்சியாளராக இருந்த மருதையன் 

இன்று எதிர்ப்புரட்சியாளராக மாறி உதயநிதிக்குப் 

பல்லக்குத் தூக்குகிறார். நேற்று வரை பொக்கிஷமாகப் 

போற்றி வந்த தமது கொளகை கோட்பாடுகளை புழுதியில் 

வீசி எறிந்து விட்டார் மருதையன். கருணாநிதி 

குடும்பத்தின் வாரிசு அரசியலை மிகவும் இழிந்த 

முறையில் நியாயப் படுத்த முயன்று தோற்கிறார்.

வாரிசு அரசியல் என்பதே பாசிசம்தானே! கருணாநிதி,

ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என்று தொடர்வது 

பாசிசம் அல்லாமல் வேறு என்ன? 


ஆக அத்திம்பேர் மருதையனை சபரீசன் விலைக்கு 

வாங்கி விட்டார். இப்போது மருதையன் பேசும் 

கருத்துக்கள் அனைத்தும் His Master's Voice என்பது போல 

சபரீசனின் கருத்துக்களே. 


உலகப் புரட்சி  பேசிய பெரும் பெரும் மார்க்சிஸ்டுகளை, 

மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகளை, நக்சல்பாரிகளை 

கட்டிவைத்து அடித்தவர் சபரீசன். சர்க்கசின் ரிங் 

மாஸ்டரைப் போல, சீதாராம் யெச்சூரி முதல் மருதையன் 

வரை அத்தனை மார்க்சிஸ்டுகளையும் முட்டி போட 

வைத்தவர் சபரீசன். சே குவேராவாக வலம் வந்த 

மருதையனை பல்லக்குத் தூக்கியாக மாற்றியவர் சபரீசன்!    


நேற்றைய புரட்சியாளரும் இன்றைய எதிர்ப் 

புரட்சியாளருமான மருதையன் தேர்தல் பரப்புரையில் 

திமுகவினரை விஞ்சுகிறார். ஆங்கிலத்தில் Convert's zeal 

என்று ஒரு தொடர் உண்டு. CONVERT என்றால் மதம் 

மாறியவன் என்று பொருள்.  ZEAL = உற்சாகம். 

(Convert's zeal = மதம் மாறியவனின் உற்சாகம்).       


புதிதாக மதம் மாறியவன் அந்த மதத்தில் ஏற்கனவே 

இருப்பவனை விட அதீத உற்சாகத்துடன் மதச்சடங்குகளில் 

ஈடுபடுவான். அதைப்போல ஒட்டுப் போடாத நிலையில் 

இருந்து மாறி ஒட்டுப் போடும் நிலைக்கு புதிதாக வந்து 

சேர்ந்துள்ள நமது அத்திம்பேர் மருதையன் Convert's zealஐ 

வெளிப்படுத்துகிறார். ராஜனை மிஞ்சிய ராஜவிசுவாசி 

ஆகி விட்டார் அவர். அவரது வலக் கரத்தில் பச்சை குத்தப்பட்ட 

உதயநிதியின் பெயர் வெயிலில் ஜொலிக்கிறது. 


She hangs like a star in the dew of our song;

She springs like a beam on the brow of the tide,

She falls like a tear from the eyes of a bride.

Lightly, O lightly we glide and we sing,

(The palanquin bearers, Sarojini Naidu)


பல்லக்கில் உதயநிதியும் கிருத்திகாவும் அமர்ந்து விட்டார்கள்.

மருதையன், முகுந்தன், காளியப்பன், பாடகர்  கோவன்

ஆகியோர் பல்லக்கைச் சுமந்தபடி செல்கின்றனர். வேகமாப் 

போங்க என்று அதட்டும் உதயநிதியின் கையிலுள்ள 

சவுக்கு மருதையனின் முதுகைப் பதம் பார்க்க, பல்லக்கு 

வேகம் எடுக்கிறது.   


இந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு 

சம்பவத்தைச் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது. மருதையனின் 

கட்டளையை ஏற்று திருச்சி நகரில் தேர்தல் புறக்கணிப்பு

ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியினரோடு ஒரு அரசு 

ஊழியரும் பங்கேற்றார். அவர் மத்திய அரசு ஊழியர். போலீஸ் 

இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்த, 15 நாள் 

ரிமாண்டு என்று தீர்ப்பு வழங்கினார் மாஜிஸ்திரேட். அனைவரும் 

திருச்சி சிறையில் அடைக்கப் பட்டனர்.


மறுநாள் தினத்தந்தி நாளிதழில் கைதான அத்தனை பேரின் 

பெயர்களும் வெளியாயின. அரசு ஊழியரின் பெயரும் 

வெளியானது. இதனால் அவர் வேலை பார்த்த அலுவலகத்திற்கு 

தகவல் தெரிந்து விட்டது. ஒரு அரசு ஊழியர் ஒரு அரசியல் கட்சி 

நடத்துகிற போராட்டத்தில் பங்கேற்பதாய் நடத்தை விதிகள் 

(CCS Conduct rules) அனுமதிப்பதில்லை. எனவே துறை ரீதியான 

ஒழுங்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்த அரசு ஊழியர் 

சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு குற்றப் பத்திரிக்கை 

வழங்கப்பட்டு உள்ளக விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப் 

பட்டது.


சஸ்பெண்ட் ஆகி வீட்டில் இருக்கும் இந்த அரசு ஊழியரின் 

வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்றும் உள்ளக விசாரணையில் 

பாதிக்கப்பட்ட ஊழியருக்காக நான் ஆஜராக வேண்டும் என்றும் 

தோழர் மருதையன் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படி 

அந்த ஊழியரின் வழக்கை எடுத்து நடத்தினேன். திருச்சியில் 

நடைபெற்ற உள்ளக விசாரணையிலும் பங்கேற்றேன்.


இந்த வழக்கில் நான் முழுவெற்றி அடைந்தேன். நிரபராதி என்று 

ஊழியர் விடுவிக்கப் பட்டார் (exonerated). ஊழியரின் மீதான 

குற்றப் பத்திரிக்கை ரத்து செய்யப் பட்டது (charge sheet was withdrawn).

ஒழுங்கு நடவடிக்கை கைவிடப் பட்டது (proceedings were dropped)     

ஊழியரின் சஸ்பென்ஷன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 

அவர் பணியில் சேர்ந்தார்.  

 

அவர் சஸ்பென்ஷனில் இருந்த காலம் முழுவதும் பணியில் 

இருந்ததாகக் கருத வேண்டும் (The period of suspension should 

be treated as PERIOD SPENT ON DUTY) என்று விண்ணப்பித்து

அதைப் பெற்றுத் தந்தேன். அதற்கு சட்டத்தில் இடம் 

இருந்தது. பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் இதனால் சுமார் 

ஒரு லட்ச ரூபாய் வரையில் ஊதிய நிலுவைத் 

தொகையைப் பெற்றார். சுமார் 20 ஆண்டுகளுக்கு 

முன்பு ரூ ஒரு லட்சம் என்பது இன்றைய சூழலில் 

எத்தனை லட்சத்திற்குச் சமம் என்று வாசகர்களே 

கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.  


மருதையனுக்கு ஏக சந்தோஷம். அவர் பேச்சைக் கேட்டு 

போராட்டத்தில் பங்கேற்ற ஒரு ஊழியர் வேலை இழந்து 

தெருவில் நின்று, அவரும் அவர் குடும்பமும் சங்கடத்துக்கு 

உள்ளாகி நின்ற நிலை நீங்கி விட்டது. ஒரு சிறு கீறல் 

கூட இல்லாமல் ஊழியர் காப்பாற்றப் பட்டு விட்டார்.

ரூ ஒரு லட்சம் வரை அரியர்சும் கிடைத்திருக்கிறது.

எனவே பாதிக்கப்பட்ட ஊழியரை விட மருதையனே  

அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருந்தார். இனி அவர் குற்ற 

உணர்வுக்கு இலக்காக வேண்டியதில்லை. அவரால் 

யாரும் நடுத்தெருவுக்கு வந்துவிடவில்லை என்ற உணர்வு 

மருதையனுக்கு நிறைவைத் தந்தது. பாதிக்கப்பட்ட ஊழியரும் 

அவரின் குடும்பமும் இழந்த அனைத்தையும் மீண்டும் 

பெற்று விட்டதில் பெரு மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.         


நான் மருதையன் அவர்களிடம் கேட்க விரும்புவது இதுதான்!

1) மத்திய அரசு வேலையை வேண்டாம் என்று உதறி விட்டு 

முழுநேர ஊழியர் ஆனீர்களே, அது உதயநிதிக்குப் 

பல்லக்குத் தூக்கத்தானா?


2) காலகாலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல்

60 வயதில் கல்யாணம் பண்ணினீர்களே, மருதையனே,

இந்தத் தியாகம் மு க ஸ்டாலினை முதல்வர் ஆக்கத்தானா?  

 

3) மாவோவின் முரண்பாட்டைப் படித்து,

பிளகானவ்வின் வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் படித்து,

மார்க்சின் ஜெர்மன் சித்தாந்தம் படித்து 

எங்கல்ஸின் குடும்பம் தனிச்சொத்து படித்து 

இவ்வளவு தூரம் மெத்தப் படித்ததெல்லாம் 

கழனிப்பானையில் விழுவதற்குத்தானா 

மருதையன் அவர்களே? 

********************************************************   


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக