வியாழன், 18 மார்ச், 2021

தாகூரின் காபூலிவாலா!

ஏ மேரே பியரி வதன் பாடல்!

சபிக்கப் பட்டவர்களும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களும்!

--------------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------- 

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஒரு அற்புதமான சிறுகதை 

காபூலிவாலா. இச்சிறுகதை சினிமாவாகவும் 1960களில் 

வெளிவந்தது. காபூல் என்பது ஆப்கானிஸ்தானின் 

தலைநகர். காபூலிவாலா என்றால் காபூலில் இருந்து 

வந்தவன் என்று பொருள். இந்திக்காரன், தெலுங்குக்காரன் 

என்று கூறுவது போல, காபூல்காரன் என்றும் கூறலாம்.


தேசபக்தியை அற்புதமாக விளக்கும் பாடல் ஒன்று 

இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. சலீல் சௌத்ரியின் 

இசையில் மன்னா டே பாடிய பாடல் அது.

ஏ மேரே பியாரே வதன் (Ae mere pyare watan) 

ஏ மேரே பிச்சுடே சமன் (Ae mere bichde chaman)

என்று தொடங்கும் அந்தப் பாடல் இருதயத்தைப் 

பிசையும்.    


இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் இப்பாடலை 

விரும்பி இருக்கின்றனர்; லட்சக் கணக்கானோர் இப்பாடலைப் 

பாடி இருக்கின்றனர். 1961ல் வெளியான பாடல் என்ற 

போதிலும், இன்னமும் இப்பாடல் போற்றப் படுகிறது; 

பேணப் படுகிறது. வட இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு 

 பள்ளி ஆண்டுவிழாவின்போதும்  நடைபெறும் 

கலைநிகழ்ச்சிகளில் இன்றும் தவறாமல் இடம் 

பெறுகிறது இந்த இந்திப் பாட்டு.


சர் வால்டர் ஸ்காட் தெரியுமா?18-19 நூற்றாண்டுகளின்   

கவிஞர்; நாவலாசிரியர். ஸ்காட்லாந்து நாட்டவர்.

அவருடைய புகழ்பெற்ற ஒரு கவிதை தேசபக்தி பற்றியது.

இதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும். ஏனெனில் இந்தியா 

உள்ளிட்ட பல நாடுகளின் பள்ளிகளில் இது பாடமாக 

வைக்கப் பட்டுள்ளது.

Breathes there the man with soul so dead 

Who never to himself hath said 

"This is my own, my native land!"  


இந்தப் பாடலை பள்ளியில் படித்து இருக்கிறீர்களா?

நினைவு வருகிறதா? படிக்கவே இல்லையா? சரி, இந்தப் 

பாடல் இடம் பெற்ற வகுப்பின் மினர்வா நோட்ஸை வாங்கிப் 

படியுங்கள். என்னுடைய வாழ்க்கையில் மினர்வா 

நோட்ஸ் வாங்கிப் படித்த காலம் ஒரு வசந்த காலம்.

என்னுடைய 19ஆவது வயதுடன் முடிந்து போனது 

அந்த வசந்த காலம். பட்டப்படிப்பு இரண்டாம் 

ஆண்டுடன் மொழிப்பாடம் முடிந்து விடும் என்பதை 

எண்ணிப் பாருங்கள்.


பிரசித்தி பெற்ற இந்தப் பாடலை (ஏ மேரே பியாரே வதன்)

தொழில்முறையில் அல்லாமல் பாடும் அமெச்சூர் 

பாடகர்கள் நிறையப் பேர் பாடி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இதை நூற்றுக் கணக்கானோர் பாடி 

உள்ளனர். ஸ்ம்யூலில் (SMULE) நிறையப்பேரின் 

பாடல்கள் கிடைக்கின்றன..


ஸ்ம்யூல் என்றால் என்ன என்று தெரியும் அல்லவா?

அது நவீன அறிவியலின் கொடை! பாடத் தெரிந்தவர்கள்

தாங்கள் விரும்பும் பாடலைப் பாடி ஸ்ம்யூலில் பதிவு 

செய்து கொள்ளலாம். உங்களால் மகனோ மகளோ 

நன்றாகப் பாடுவார்கள் என்றால், அவர்களைப் பாடச் 

செய்து ஸ்ம்யூலில் பதிவேற்றுங்கள். அமெச்சூர் 

பாடகர்களுக்கு ஸ்ம்யூல் ஒரு வரப் பிரசாதம்.       


இந்தப் பாடல் தரும் இன்பத்தை மகிழ்ச்சியை நீங்கள் 

நுகர வேண்டுமெனில், உங்களுக்கு ஓரளவேனும் 

இந்தி தெரிந்திருக்க வேண்டும். பல மொழிகளைக் 

கற்பதும் தெரிந்து வைத்திருப்பதும் ஒருவன் எய்தும் 

பேறுகளில் ஒன்று. தமிழுடன் பிற மொழிகளையும்

தெரிந்தவர்கள் பேறு பெற்றவர்கள். அவர்கள் 

மானுடத்தால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். பிற மொழி 

எதையும் கல்லாதவர்கள் சபிக்கப் பட்டவர்கள்.


சரி, பாடலைக் கேளுங்கள். அதன் அருமை உணர்ந்தோர் 

மட்டுமே அப்பாடலைக் கேட்கட்டும்.

 இனி செவிநுகர் கனிகள் உங்களுக்கே!

*************************************************

 

  

     

 

  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக