திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வீரை பி. இளஞ்சேட்சென்னி கவிதைகள் 

--------------------------------------------------------------------------- 

தரப்படாத முத்தங்கள்
---------------------------------------------------------------------------------------------
நீதி மன்றங்களின்
இருள் கசியும் தாழ்வாரங்கள்
பதிவாளர் அலுவலகங்களின்
பரபரத்த விளிம்புகள்
இங்கெல்லாம்
பாவை விளக்குகளாய்
ஒளிரும் இவர்கள்
தட்டச்சுப் பெண்கள்.

அச்சுலகின் பிரஜைகள்
ஆவணங்களின் அரசிகள்
கலைமகளின் பணிப்பெண்கள்
கணினியின் எஜமானிகள்.

அரசுப் பணிக்கு
ஆசிர்வதிக்கப்பட்டிருந்தால்
சொகுசு இருக்கையும்
வியர்வைக் கேற்ற வெகுமதியும்
பெற்றிருப்பார்கள்.

பிரம்மனின் பிசகிய தருணத்தில் பிறப்பெய்தி
உதிரிப் பூக்களாய்
நரைத்த விலைக்கு
வியர்வையை விற்கும் இவர்கள்
காரல் மார்க்சின் காதலைப் பெற்றவர்கள்.

அடித்தலும் திருத்தலுமாய்க்
கால் இடறும் மூலப்பிரதியைப் புத்துயிர்த்து
குழந்தையைப் பெற்றுத்தருவதுபோல்
என்னிடம் தரும்
தட்டச்சுப் பெண்களை
நான் முத்தமிட விரும்புகிறேன்
இது புணர்தலும் புணர்தல் நிமித்தமும் அன்று.

அன்பின் பரிமாற்றத்தை
ஆயிரம் தடிகளால் அடிக்கும்
பிறழ்ந்த சமூகத்தில்
முத்தங்கள் என்னுடனே தங்கி விடுகின்றன.

தரப்படாத எனது முத்தங்களைத்
தம் கொழுநர்களிடம் பெறட்டும்
என் தட்டச்சு தேவதைகள்

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக