ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மும்மொழிக் கொள்கையே இந்தியாவின்
கல்விக் கொள்கை!
1968 முதல் இன்று வரை இதில் மாற்றமில்லை!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் அரசியல் சட்டம் அண்ணல் அம்பேத்காரால்
எழுதப்பட்டது என்பது போல, இந்தியாவின் கல்விக்
கொள்கை டாக்டர் கோத்தாரி அவர்களால் எழுதப்
பட்டது என்று கூறலாம்.

யார் இந்த கோத்தாரி? இந்தியாவின் மிகச் சிறந்த
கல்வியாளர் இவர். பல்கலை மானியக் குழுவின்
(UGC) தலைவராக இருந்தவர். இந்தியாவின் கல்விக்
கொள்கையை உருவாக்க இவர் தலைமையில்
ஒரு குழுவை அமைத்தார் அன்றைய நேரு அரசின்
கல்வி அமைச்சர் முகம்மதலின் சக்ளா.  சக்ளா
இந்தியாவின் கல்வி அமைச்சராக 1963-66
காலக்கட்டத்தில் இருந்தார்.

கோத்தாரி குழுவின் அறிக்கை வெளியானதும், அது
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப் பட்டது.
நாடாளுமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. 1968இல்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, கோத்தாரி
குழுவின் அறிக்கையானது, இந்தியாவின் கல்விக்
கொள்கையாக ஏற்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்
பட்டது.

மும்மொழிக் கொள்கை:
----------------------------------------------
கல்வியைப் பொறுத்தமட்டில் இந்தியா முழுவதும்
மும்மொழிக் கொள்கை என்பதே, இந்தியாவின்
முதல் கல்விக் கொள்கை கூறுவது. அந்த மும்மொழிகள்
யாவை?
1) மாநில மொழி ( உதாரணம்: தமிழ்நாட்டில் தமிழ்,
கேரளத்தில் மலையாளம்)
2) ஆங்கிலம்
3) நவீன இந்திய மொழிகளில் ஒன்று

நவீன இந்திய மொழி என்றால் என்ன? சமஸ்கிருதமா?
இல்லை. ஏனெனில் சமஸ்கிருதம் நவீன மொழி அல்ல;
அது பண்டைய மொழி. அதாவது ancient or classical language.

நவீன இந்தியாவில் பேசப்படும் மொழிகளான இந்தி,
தெலுங்கு, தமிழ், கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற
மொழிகளே நவீன மொழிகள். ( நவீன இந்தியா என்பது
1947க்குப் பின்னான இந்தியா)

முதல் கல்விக் கொள்கை தெளிவாகக் கூறுவது
என்னவெனில், இந்தி பேசாத தென்னிந்திய மாநிலங்கள்
இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்,
இந்தி பேசும் மாநிலங்கள் ஏதேனும் ஒரு தென்னிந்திய
மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.

 இந்தியாவின் இரண்டாம் மொழிக்  கொள்கை 1986இல்
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்
பட்டது. இக்கொள்கையானது 1968ஆம் ஆண்டின்
முதல் கல்விக் கொள்கை கூறிய மும்மொழிக்
கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்டது. இதுவும்
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்
பட்டது.

இந்தியாவின் மூன்றாம் கல்விக் கொள்கை 1992இல்
நரசிம்மராவ் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
1986 கல்விக் கொள்கையில் ஒரு சில திருத்தங்களை
மட்டுமே இது மேற்கொண்டது. மற்றப்படி, 1986இன்
கல்விக் கொள்கையை, அதன் அடிப்படையை
அப்படியே ஏற்றுக் கொண்டது. அன்றைய கல்வி
அமைச்சர் அர்ஜுன் சிங் இதை நாடாளுமன்றத்தில்
முன்வைத்தார்.  முந்தைய கோள்களைப்  போல,
இதுவும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்
கொண்டது. நாடாளுமன்றம் இக்கொள்கையை
விவாதித்து ஏற்றுக் கொண்டது.

தற்போது மோடி அரசு முன்மொழிந்துள்ள கல்விக்
கொள்கை பற்றிய வரைவு அறிக்கையிலும்,
முந்தைய கல்விக் கொள்கைகள் கூறிய அதே
மும்மொழிக் கொள்கை அப்படியே இடம் பெற்றுள்ளது.

சுருங்கக் கூறின், இந்தியாவின் கல்விக் கொள்கையாக
மும்மொழிக் கொள்கை 1968 முதல் எவ்வித மாற்றமும்
இன்றி நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும்
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டு நிறைவேற்றப்
பட்டதே இந்த மும்மொழிக் கொள்கை.

இந்த மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்திற்கு
இடமில்லை என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.
சமஸ்கிருதப் பூச்சாண்டி காட்டுபவர்கள் உள்நோக்கம்
என்ன என்பதை உணர வேண்டும்.
*****************************************************************   
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக