சனி, 6 ஆகஸ்ட், 2016

கறுப்புப் பணமும் ஜி.எஸ்.டி.யம்!
-------------------------------------------------------------------------------------------
கறுப்புப் பணம் பற்றி முதன் முதலில் எங்கள்
காலத்தில் நாங்கள் கேள்விப்பட்ட போது,
எம்ஜியாரும் சிவாஜி கணேசனும் கறுப்புப்பணம்
வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம்.
ஆம், அப்போது கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி
சினிமாத் தொழிலில் புழங்கியது.

அக்காலத்தில் எல்லா அரசியல்வாதிகளிடமும் கருப்புப்
பணம் கிடையாது. ஒரு சிலரிடம் மட்டுமே உண்டு.
அதுபோல, தொழில் அதிபர்களில் சிலரிடம் மட்டுமே
கறுப்புப் பணம் உண்டு.

இன்று இந்த 50 ஆண்டுகளில் கறுப்புப் பணம்
ராட்சஸத் தனமாக வளர்ந்து விட்டிருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பின்னர், தங்கு தடையில்லாத
வளர்ச்சி அடைந்த ஒரே விஷயம் எது என்றால்,
அது கறுப்புப் பணமே.

கறுப்புப் பணத்தை அடியோடு ஒழித்துக் கட்டப்
போகிறேன் என்று எந்த நிதியமைச்சரும் இதுவரை
வாளை உருவியதே இல்லை. கறுப்புப் பணத்தோடு
சமாதான சகவாழ்வு வாழவேண்டும் என்ற வாழ்க்கைத்
தத்துவத்தையே இதுவரை எல்லா நிதியமைச்சர்களும்
கடைப் பிடித்தார்கள்.

ஓரிரு முறை உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைச்
செல்லாது என்று அறிவித்தார்கள் சில நிதியமைச்சர்கள்.
500 ரூபாய் நோட்டு செல்லாது, 100 ரூபாய் நோட்டு
செல்லாது என்று அறிவிக்கும் இத்திட்டத்தின் பெயர்
demonetisation of currency notes of higher denomination ஆகும்.

சில படிப்பறிவில்லாத பணக்காரர்கள்  தாங்கள் பதுக்கி
வைத்திருந்த பணத்தை இழந்தார்கள் என்பதைத்
தவிர இதனால் வேறு எந்த நல்லதும் நடந்து விடவில்லை.

இன்று பூதாகாரமாகப் பெருகிய கறுப்புப் பணம்,
சினிமா, ரியல் எஸ்டேட் என்று முதலீடு செய்த பின்னரும்
பெருமலாவது மிஞ்சி இருக்கும் கறுப்புப் பணம்
சுவிஸ் வங்கி போன்ற வெளிநாடுகளில் முடங்கிக்
கிடக்கிறது. இதனால் யாருக்கும் எந்தப் பயனும்
இல்லை.

ஒரு நல்ல நிதியமைச்சர் என்றால், ஒரு சிறந்த
பொருளாதார நிபுணர் என்றால் அவர் என்ன செய்ய
வேண்டும்? கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்.
அடியோடு ஒழிக்காவிட்டாலும் பரவாயில்லை,
பாதிக்குப் பாதியாவது ஒழிக்க வேண்டும்.
அதாவது கணக்கில் வராத கறுப்புப் பணத்தைக்
கைப்பற்றி அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும்.

இதுதான் இந்தியாவில் முன்னுரிமை உள்ள கடமை.
GSTயை அதன் பிறகு கொண்டு வரலாம். கறுப்புப்
பணம் இருக்கிற வரை எந்த விதமான வரி சீர்திருத்தமோ
பொருளாதாரக் கொள்கையோ பயன் தராது.
ஓட்டைக் குடத்தில் நீர் மொண்ட கதையாகி விடும்.

GSTயைக் கிடப்பில் போடுங்கள், ஐயா.
முதலில் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுங்கள்!
****************************************************************

  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக