சனி, 6 ஆகஸ்ட், 2016

கேள்வி: ஜி.எஸ்.டி.யின் தாயும் தந்தையும் யார்?
பதில்:  சிதம்பரமும் மன்மோகனும்!
கேள்வி: ஜி.எஸ்.டி.யின் தாய்மாமன் யார்?
பதில்: சீதாராம் யெச்சுரி!
------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜி.எஸ்.டி
மசோதா நிறைவேறி விட்டது. மோடியும் அருண்
ஜெட்லியும் இதில் பெருமிதம் அடையலாம்.

அதே நேரத்தில் இந்த ஜி.எஸ்.டி என்னும் கோட்பாட்டின்
தாயம் தந்தையும் யார் என்றால், ப சிதம்பரமும்
மன்மோகன் சிங்கும் தான்.

அப்படியானால் ஜி.எஸ்.டி.யின் தாய் மாமன் யார்?
வேறு யார்? சீதாராம் யெச்சூரி தான்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய மூன்று தேசியக்
கட்சிகளுக்கும் இந்த மசோதா நிறைவேறியதில்
பங்குண்டு.

இந்த மசோதா இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவையில்
இருந்து பிறந்த ஒன்று. இந்திய ஆளும் வர்க்கத்திற்கும்
கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் இப்படி ஒரு
மசோதா மிகவும் தேவை.

இது மக்களின் தேவை அல்ல. ஜி.எஸ்.டி.யால்
மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படாது. மாறாக
வரிச்சுமை கூடும்.

வரி செலுத்துவதில் குப்பன் சுப்பனையும் டாட்டா
பிர்லாவையும் ஒரே தட்டில் வைத்து விடுகிறது
இந்த ஜி.எஸ்.டி. இருவரிடம் இருந்தும் ஒரே அளவு
பணத்தை வரியாகப் பிடுங்கி விடுகிறது.

வரி செலுத்தும் தெம்பு உள்ள பணக்காரனால்
ஜி.எஸ்.டி வரியை எளிதாகச் செலுத்தி விட முடியும்.
ஆனால் குப்பன் சுப்பனால் அது முடியாது.

பலமுனை வரிகளை அதாவது பல்வேறு வரிகளை
ஒழித்து விட்டு, அதற்குப் பதிலாக ஜி.எஸ்.டி
என்னும் ஒரே வரியை மட்டும் செலுத்தினால்
போதும் என்கிறார்கள் ஜி.எஸ்.டி ஆதரவாளர்கள்.

மேலை நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில்,
அமெரிக்காவில் ஜி.எஸ்.டி வரி இருக்கிறது.
அதைப்போல் நம்மிடமும் வேண்டாமா என்கிறார்கள்
ஜி.எஸ்.டி ஆதரவாளர்கள்.

அவை வளர்ந்த நாடுகள். அங்கு வறுமை இல்லை.
அந்த நிலை இங்கு உள்ளதா? வறுமைக் கோட்டிற்கு
கீழே வாழ்கின்ற கோடிக் கணக்கான மக்கள்
18 சதம் வரி செலுத்த முடியுமா?

சேவைக்கு வரி விதிப்பது இந்தியா போன்ற ஏழை
நாட்டிற்குப் பொருந்தாது. இங்கு  சேவை வரி என்பதே
அபத்தம். ஏழை எளிய மக்களுக்கு சேவையானது
வரியில்லாமல் வழங்கப்பட வேண்டும். அல்லது
குறைந்த அளவு வரியாக இருக்க வேண்டும்.

விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பது போல, ஆளுக்குத்
தகுந்த வரி விதிக்க வேண்டும். அதாவது
பணக்காரனிடம் அதிகமாகவும், ஏழையிடம்
கொஞ்சமாகவும் வரி விதிக்க வேண்டும். இதுதான்
நியாயமான வரி விதிப்புக் கொள்கை. ஏழை
பணக்காரன் இருவருக்கும் சம அளவு வரி விதிப்பது
நியாயமற்ற கொள்கை. அதைத்தான் ஜி.எஸ்.டி
செய்கிறது.

பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகள் குறைந்த மேலை
நாட்டில் இக்கோட்பாடு பொருந்தும். பொருளாதார
ஏற்றத்  தாழ்வு மிகுந்த இந்தியாவுக்கு இந்த ஜி.எஸ்.டி
கோட்பாடு பொருந்தாது.
*****************************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக