சனி, 6 ஆகஸ்ட், 2016

ஜி.எஸ்.டி மசோதாவை ஏன் எதிர்க்க வேண்டும்?
இரண்டு பில்லியன் டாலர் மதிப்பில் பங்களா
கட்டியுள்ள அம்பானிக்கும், பிளாட்பாரத்தில் வாழும்
ஏழைக்கும் ஒரே அளவு வரியா?
-------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி
மசோதாவான அரசமைப்புச் சட்டத்தின் 122ஆவது
திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் நிறைவேறி உள்ளது. வரும் ஏப்ரல் 1, 2017
முதல் இது செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று
நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஜி.எஸ்.டி. மசோதாவையும் அது
முன்வைக்கும் வரிவிதிப்புக் கொள்கையையும்
மார்க்சிய லெனினிய வெளிச்சத்திலும் அறிவியல்
வழியிலும் ஆராய்ந்து மார்க்சிய சிந்தனைப்
பயிலகம் பின்வரும் முடிவுக்கு வந்துள்ளது.

1) பொருளையும் சேவையையும் சமப்படுத்துவது
கோட்பாட்டு ரீதியாக ஏற்க இயலாதது. பொருளுக்கு
வரி விதிக்கலாம்; விதிக்க வேண்டும். ஆனால் இந்தியா
போன்ற ஏழை நாடுகளில் சேவைக்கு வரி விதிப்பது
ஏற்க இயலாதது. சேவைக்கு வரி கூடாது. அல்லது
மிகவும் குறைவானதாக இருக்க வேண்டும்.

We oppose the very concept of equating the services with the goods.
 Both are not equally taxable in India.

2) இந்தியாவில் நகரங்கள் குறைவாகவும் கிராமங்கள்
அதிகமாகவும் உள்ளன. நகரங்களில் உள்ள
வேலை வாய்ப்பு, பிற வசதிகள், வாங்கும் சக்தி
ஆகியவை கிராமங்களில் கிடையாது. GSTயின்
வரிவிதிப்புக் கோட்பாடு, கிராமம் நகரம் இரண்டையும்
சமமாகப் பாவிக்கிறது.

3) இந்தியாவின் மாநிலங்கள் தமக்கிடையே
பாரதூரமான வேறுபாட்டைக் கொண்டவை
(Highly heterogeneous). திரிபுரா, ஜார்க்கண்ட், சட்டிஸ்கர்
போன்ற மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் குறைவு.
தமிழ்நாடு, மகாராஷ்டிரம், குஜராத் போன்ற
மாநிலங்களின் வளர்ச்சி இவற்றோடு ஒப்பிடும்போது
உயர்ந்த கட்டத்தில் உள்ளது. உத்தரகாண்ட், கேரளம்,
ஒடிசா போன்ற சிறிய மாநிலங்களும் உ.பி, பீஹார்
போன்ற பெரிய மாநிலங்களும் உள்ளன. இவற்றுக்கு
இடையிலான வளர்ச்சிக்கான பல்வேறு குறியீடுகளில்
மிகப்பெரிய தாரதம்மியம் உள்ளது.

4) ஒவ்வொரு மாநிலத்திற்கும்  உரிய தனித்தன்மையைக்
கணக்கில் கொள்ளாமலும், மாநிலங்களுக்கு
இடையிலான ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைக்
கணக்கில் கொள்ளாமலும், எல்லா மாநிலங்களையும்
ஒன்றாகக் கருதி ஒருசீரான வரிவிதிப்பை (uniform taxation)
ஜி.எஸ்.டி மேற்கொள்கிறது.

5) ஏழை பணக்காரன் வேறுபாடு உலகெங்கும் உண்டு.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் உலகெங்கும்
உண்டு. என்றாலும் குறைந்தபட்ச வருமானத்திற்கும்
அதிகபட்ச வருமானத்திற்கும் இடையில் மிகப் பெரிய
இடைவெளி இந்தியாவில் உள்ளது. இந்த இடைவெளி
1:10 என்று இருந்தால் அது அறிவுபூர்வமானது (reasonable)

6) நடைபாதையில் வாழும் ஏழைக்கும், தெற்கு
மும்பையில் உள்ள இரண்டு பில்லியன் அமெரிக்க
டாலர் ( இந்திய மதிப்பில் 12,000 கோடி ரூபாய்)
மதிப்புடைய ஆடம்பரமான பங்களாவில் வாழும்
முகேஷ் அம்பானிக்கும் சமமான வரிவிதிப்பு
 என்ற GST கோட்பாட்டை ஒருநாளும் ஏற்க முடியாது.
ஏழை பணக்காரரான இருவருக்கும் சம அளவு
வரி என்ற கோட்பாடு பொருளாதார ஏற்றத்
தாழ்வுகள் மிகவும் குறைவான மேலைநாடுகளுக்குப்
பொருந்தலாம். இந்தியாவில் அதை அனுமதிக்க
இயலாது.

7) சுருங்கக்கூறின், இந்தியாவிற்குத் தேவை  ஒருசீரான
வரிவிதிப்பல்ல. ஏழையிடம் குறைவாகவும்
பணக்காரனிடம் அதிகமாகவும் வரியைப் பெறும்
மாறுபட்ட வரிவிதிப்பு (differential taxing) கொள்கையே
இந்தியாவுக்குத் தேவை. அது ஜி.எஸ்.டி.யில் இல்லை.
எனவே ஜி.எஸ்.டி எதிர்க்கப்பட வேண்டும்.

8) ஜி.எஸ்.டி குறித்த மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின்
கொள்கைப் பிரகடனம் இது. ஜி.எஸ்.டி குறித்த
மிகவும் கறாரான அறிவியல் வழிப்பட்ட மார்க்சியப்
பார்வை இது. இதைத்தவிர வேறு எதுவும் மார்க்சியப்
பார்வை ஆகாது. பிற அனைத்தும் குட்டி முதலாளித்துவப்
பார்வைகளே. இக்கட்டுரையின் பதிப்புரிமை
மார்க்சிய சிந்தனைப் பயிலகத்திற்கு.
****************************************************************

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக