வெள்ளி, 21 ஏப்ரல், 2017

தீர்ப்பும் எழுதவில்லை! திறனாய்வும் செய்யவில்லை!
தாக்குதலின் இலக்காகவும் மீனா கந்தசாமி அவர்கள்
இருந்ததில்லை!
--------------------------------------------------------------------------------
அன்புச் சகோதரி மாலதி மைத்ரி அவர்களுக்கு,

1) மீனா கந்தசாமி அவர்களின் குறத்தியம்மன் என்ற
நூலுக்கு நான் தீர்ப்பு எழுதவில்லை.  திறனாய்வோ
மதிப்புரையோ எழுதவில்லை. தந்தை பெரியார்
குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவல்  அந்த நூலில்
இடம் பெற்றுள்ளதாக தங்களின் (மாலதி மைத்ரி அவர்கள்)
முகநூல் பதிவு வாயிலாகவே அறிந்தேன். அது குறித்து
தெளிவு படுத்துமாறு ஒரு கோரிக்கை விடுத்துள்ளேன்.
நூலில் உள்ள ஒரு  தகவல் குறித்த ஒரு ஐயத்திற்கு
விளக்கம் தருமாறு விடுத்த கோரிக்கை திறனாய்வு
ஆகாது. திறனாய்வு எனது தொழிலோ பொழுதுபோக்கோ
அல்ல. அதில் எனக்கு பயிற்சியும் கிடையாது. நான்
இலக்கியவாதியும் அல்ல.

2) வேறு எவரும் இவ்வாறு சொல்லியிருந்தால், அதைப்
பொருட்படுத்தாமல் கடந்து போயிருப்பேன். ஆனால்
நூலின் பதிப்பாளரான தாங்களே அக்கருத்தை
வெளியிட்டு இருப்பதால் அதை உதாசீனப் படுத்த
இயலவில்லை.

3) சூனியர் விகடன் ஏட்டில் பிரசுரமான அந்த நூல்
மதிப்புரையை தாங்கள் எவ்வித விமர்சனமும் இன்றி
வெளியிட்டு உள்ளீர்கள். பெரியார் குறித்த அக்கருத்து
தவறானது என்றோ, மீனா கந்தசாமி அவர்கள்
அப்படி எழுதவில்லை என்றோ தாங்கள் ஒரு
ஒற்றைவரிக் குறிப்பு எழுதியிருந்தால் போதுமே.

4) மாறாக, தங்களின் கனத்த மௌனம் தந்தை பெரியார்
குறித்த அந்தத் தகவலை தாங்கள் ஏற்பதாக ஒரு
சித்திரத்தைத் தந்து விடுகிறது. ஆனால், பெரியார்
நாயுடுவைச் சந்திக்கவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில்
அறியப்பட்ட ஒன்று.

5) எனவே மீனா கந்தசாமி அவர்கள் தமது கருத்தை
நிரூபிக்க வேண்டும் என்றே எனது பதிவில் நான்
வலியுறுத்தி இருந்தேன். பெரியார் பற்றிய தகவல்
"பொய்" என்று நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

6) அதே நேரத்தில், தாங்களோ மீனா கந்தசாமி அவர்களோ
பெரியார் நாயுடுவைச் சந்தித்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் பட்சத்தில், அதை  ஏற்பதில் எமக்கு
எந்தத் தடையும் இல்லை. இங்கு உண்மை என்ன என்பதை
அறியும் விருப்பமே தலைதூக்கி நிற்கிறது.மற்றப்படி,
நட்பு முகாமில் உள்ள மீனா கந்தசாமி அவர்கள் எமது
தாக்குதலின் இலக்காக என்றுமே இருந்ததில்லை; .
இப்பொழுதும் கூட.

7) ஆனால் தாங்களோ போலி மார்க்சியவாதி என்ற
வசவுடன் என்னை அவதூறு செய்து தங்களின்
குட்டி முதலாளித்துவ மனநிலையை
வெளிப்படுத்துகிறீர்கள்.

8) எவர் ஒருவருக்கும் மார்க்சியவாதி என்றோ அல்லர்
என்றோ சான்றிதழ் வழங்கும் அதிகாரம்
குட்டி பூர்ஷ்வாக்கள், லிபரல் பூர்ஷ்வாக்கள்.
பின்நவீனப் பித்தர்கள், மேட்டுக்குடிப் பெண்ணியவாதிகள்
ஆகியோருக்கு இல்லை என்பது மார்க்சிய பாலபாடம்.

9) போராட்டக் களமும் மக்களுமே ஒருவரை
மார்க்சியவாதி ஆக்கும். பாவெல் விலாஸவ்
என்னும் ஓரு சராசரி இளைஞன்  மார்க்சியவாதியாக
பரிணாமம் அடைவதை தாய் நாவலில் மாக்சிம்
கார்க்கி எழுதி இருப்பார்.

10) 35 ஆண்டுகளைக் கொண்ட இழையறாத
தொழிற்சங்கச் செயல்பாடுகளில், கட்டமைத்த
பங்குபெற்ற கணக்கற்ற வேலைநிறுத்தக் களங்களில்,
124A சட்டப்பிரிவின் கீழான (Sedition charge) சிறைவாசத்தில்
மார்க்சியத்தைப் பிரயோகிப்பது எப்படி என்று
களத்தில் இருந்தும் தொழிலாளர்களிடம் இருந்தும்
கற்றவன் நான். லிபரல்களும் பின்நவீனத்துவர்களும்
எமக்கு சான்றிதழ் வழங்க முற்படுவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம், சென்னை.
முகநூல் முகவரி:  Ilango Pichandy. (நாள்: 21.04.2017)
**************************************************************            

தாங்கள் ஓர் இலக்கியவாதி என்றும் கவிஞர் மற்றும்
பதிப்பாளர் என்றும் அறிகிறேன். நான் இலக்கியவாதியோ
திறனாய்வுவாதியோ அல்ல. இலக்கியத் திறனாய்வில்
பரிச்சயமோ பயிற்சியோ உள்ளவன் அல்ல. எங்கள்
தொழிற்சங்க வகுப்புகளில் இலக்கியத் திறனாய்வு
ஒரு பாடமாக இருந்ததே இல்லை. எனவே "திறனாய்வு
செய்கிறான்", "தீர்ப்பு  எழுதுகிறான்" என்று தொடர்ந்து
பொய் சொல்லிக்கொண்டே போவதில் அர்த்தமில்லை.
**
மீனா அவர்கள் எழுதிய தகவலில் ஒரு ஐயம் எழுகிறது.
அதைத் தெளிவு படுத்துங்கள் என்று மட்டுமே உங்களிடம்
கேட்கிறேன். நாயுடுவை தந்தை பெரியார் சந்தித்தாரா
என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டிய அவசியம்
தங்களுக்கு உள்ளது. இதைத் தாங்கள் எப்படி சகோதரி
தட்டிக் கழிக்க முடியும்? இதற்கு பதில் சொல்லுங்கள். 

அம்மா,
பத்ரி சேஷாத்ரி அவர்களின் கிழக்கு பதிப்பகம்
இந்த நூலை வெளியிட்டு இருக்குமானால், தீய
உள்நோக்கத்துடன் (malafide intention) கூடிய அவதூறு
என்று சுலபமாகக் கடந்து விடலாம். ஆனால் வெளியிட்டது
தங்களின் அணங்கு பதிப்பகம். நூலை எழுதியவர்
செயமோகன் அல்லர்; மீனா கந்தசாமி. பெரியாரைப்
போற்றி எழுதியவர். எனவே அதிர்ச்சிகரமான தகவல்
நட்பு முகாமில் இருந்து வருகிறது என்பதால்
இதில் உண்மை என்ன என்று அறிவதற்கு ஆவல்
பிறக்கிறது. எனவே பதிப்பாளரான தாங்களோ அல்லது  நூலாசிரியரான மீனா அவர்களோ
இந்த விஷயத்தில் உண்மை என்ன
என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். இது என்னுடைய
வலிமையான கோரிக்கை. அருள்கூர்ந்து செவி
சாய்க்க வேண்டுமாறு கோருகிறேன்..
**
நூலை நான் வாங்குகிறேன்; படிக்கிறேன் ஒரு
வாசகனாக.அவ்வளவுதான். என்னிடம் இருந்து
இலக்கியத் திறனாய்வு எதுவும் வராது. நன்றி.   
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக