செவ்வாய், 4 ஏப்ரல், 2017

வழுவமைதி என்பது தமிழில் உள்ளது. இந்தப் பதிவில் எவையெல்லாம்
வழுக்கள் என்று கருதப்படுகின்றனவோ
அவற்றை வழுவமைதியாகக் கொள்ள வேண்டும்
என்பதை வலியுறுத்த விழைகிறேன்.
**
மொழி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது.
இயங்கும்போதே மாறிக் கொண்டிருப்பது. இந்த
மாற்றத்தை ஏற்க வேண்டும். மாற்றம் என்பது
இயல்பானது.
**
மக்களால் பேசப்படும்போதுதான் மொழி உயிர்
பெறுகிறது. ஏதேனும் ஒரு தனியறையில் (isolated chamber)
வைத்துப் பராமரிப்பதன் மூலம் எந்தவொரு மொழியையும்
எவரும் உயிருடன் வைத்திருக்க இயலாது. எனவே
பேச்சு வழக்கையும் கருத்தில் கொண்டே இலக்கணம்
சமைக்க வேண்டும்.
**
மொழி என்பது எளிய சுருக்கமான சொற்களைக்
கொண்டிருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.
எனவேதான் சொற்குறுக்கங்கள் எல்லா மொழிகளிலும்
செல்வாக்குப் பெறுகின்றன. 10,15 எழுத்துக்களை அல்லது
அசைகளைக் கொண்ட நெடிய சொல்லை மக்கள்
விரும்புவதில்லை. biscuits என்ற ஆங்கிலச்சொல் bikis
என்று மாறியதை மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.
பேச்சுமொழியில் மட்டுமல்ல எழுத்திலும்கூட சுருக்கம்
தேவைப்படுகிறது. ஒரு நீண்ட சொல்லை அப்படியே
நீளமாக எழுதுகையில் அதை வாசிக்க இன்றைய
தலைமுறை சிரமப்  படுகிறது.
**
"வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று எழுதும்போது அது
வாசிக்கப் படுவதில்லை. வந்து கொண்டு இருக்கிறார்கள்
என்று பிரித்து எழுதும்போது அது மக்களுக்குப்
புரிகிறது;வாசிக்கப் படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முந்திய புணர்ச்சி விதிகளை இன்று பொருத்திப் பார்த்து,
பிரித்து எழுதுவது இலக்கணப்படி தவறு என்று
நிரூபிப்பதால் தமிழுக்கோ அதைப்பேசும் மக்களுக்கோ
என்ன பயன் விளையும்?
**
மார்க்சியம் மக்களுக்கே முதன்மை தருகிறது. எனவே
மக்களுக்குப் புரியும் விதத்தில் எழுதுவதே தேவையானது
என்ற கோட்பாட்டை நான் உணர்வுபூர்வமாகப்
பின்பற்றி வருகிறேன். இது இலக்கணத்தையே எதிர்க்கும்
அராசகவாதமோ (anarchism) (அல்லது) இலக்கணமே கூடாது
என்னும்  பின்நவீனத்துவமோ அல்ல. மாறாக மக்களின்
பேச்சு வழக்கு, எழுத்து முறை ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களை
மேற்கொள்ளுவது என்ற கோட்பாடுதான்.     
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக