திங்கள், 24 மே, 2021

 மார்க்சிய அறிஞர் தோழர் எஸ் என் நாகராசன்

மறைந்தார்! செவ்வஞ்சலி செலுத்துவோம்!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------

முதுபெரும் மார்க்சிய சிந்தனையாளரும் 

இறுதி மூச்சுவரை மார்க்சியத்தில் ஊன்றி

நின்றவருமான மதிப்புக்குரிய தோழர் 

எஸ் என் நாகராசன் (வயது 94) இன்று அதிகாலை 

(24.05.2021) முதுமை காரணமாகவும் கொரோனா 

தொற்று காரணமாகவும் உயிர் நீத்தார் என்ற  

செய்தி நம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்த்துகிறது.


இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்னை தி நகரில்

அவர் தங்கியிருந்தபோது, நாலைந்து முறை அவரது 

இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.

அவர் பேசப்பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதன் மூலம் அவரின் மார்க்சியப் புரிதல் மற்றும் 

அவர் முன்மொழியும் மார்க்சியத் தீர்வுகள் ஆகியவை 

பற்றி நன்கறிந்து கொண்டேன்.


பல ஆண்டுகளுக்கு முன்பு தலைவரும் ஆசானும் 

ஆகிய தோழர் ஏ எம் கே அவர்கள் மூலமாக

தோழர் எஸ் என் நாகராசன் பற்றி அறிந்து கொண்டேன்.

அவர் மிகவும் நேர்மையான கம்யூனிஸ்ட் என்று 

ஏ எம் கே அவர்கள் கூறியதை இங்கு நினைவு கூர்கிறேன்.


தோழர் எஸ் என் நாகராசன் அவர்கள் பிறர் எவரிடம்

இருந்தும் தமது சுயசிந்தனையால் தம்மை 

வேறுபடுத்திக் கொண்டவர். தமிழக இந்திய மார்க்சிய 

முகாமில் சுயசிந்தனை என்பது அறவே இல்லாத 

ஒன்று; அல்லது வெகு அபூர்வமானது. 


டெம்ப்ளேட் (template) சிந்தனை எனப்படும் 

அச்சு முறுக்குச் சிந்தனை மட்டுமே இங்கு உண்டு. 

தயாராக வைத்திருக்கும் அச்சில், மாவை ஊற்றி 

முறுக்குப் பிழிவது போல மார்க்சியத் தீர்வுகள் 

பிழியப்பட்டு விடும்.  


சுயசிந்தனை அற்றுப்போன ஒரு சூழலில் தோழர் 

எஸ் என் அவர்களின் ஆழமான மார்க்சியக் 

கோட்பாடுகள் இங்கு மார்க்சியர்களிடையே 

மிகக் குறைவாகக் கூட விவாதிக்கப் படவில்லை.

இதன் விளைவாக கோட்பாட்டு ரீதியானதும் 

கட்டம் கட்டமானதுமான மார்க்சிய வளர்ச்சி 

இங்கு சித்திக்கவே இல்லை.


மேலை மார்க்சியம் என்றும் கீழை மார்க்சியம் என்றும் 

மார்க்சியத்தை இரண்டு பிரிவகளாகப் பிரித்தார் 

தோழர் எஸ் என். வசதி கருதியோ சௌகரியம் 

கருதியோ மார்க்சியத்தை இரண்டாகவோ, ஏன், 

இருபதாகவோ கூட பிரித்துக் கொள்ளலாம்.

ஆனால் அந்தப் பிரிவினைகளுக்கு எந்த விதமான 

கோட்பாட்டு நியாயமும் கிடையாது என்பதுதான்  

சரியான புரிதல். ஆனால் ஐரோப்பிய மார்க்சியம் 

கீழை நாடுகளின் (இந்தியா சீனா ஜப்பான்) மார்க்சியம்    

என்னும் இரண்டுக்கும் இடையில் கறாரான கோட்பாட்டு

ரீதியிலான பிரிவினைக்கு இடம் உண்டு என்கிறார் 

எஸ் என். இதை  ஏற்பதற்கில்லை. .


அறிவியல் குறித்த தோழர் ஸ்டாலின் அவர்களின் 

கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு நிலைபாட்டைக் 

கொண்டிருந்தார் எஸ் என். இது தவறான நிலைபாடாகும். 


என்றபோதிலும் எஸ் என் அசலான சிந்தனையாளர்.

மார்க்சிய மூல ஆசான்களின் படைப்புகளை மிகவும் 

ஆழ்ந்து கற்றவர். தமது சிந்தனை மற்றும் பகுப்பாய்வு 

ஆகியவற்றின் விளைவாக அவர் வந்தடைந்த பல 

முடிவுகள் ஒன்று ஏற்கப்படவில்லை அல்லது 

பொருட்படுத்தப் படவில்லை. இதற்குக் காரணம்

மார்க்சியர்களிடம் இன்றும் மேலோங்கி நிற்கும் 

நுனிப்புல் தன்மையிலானதும் பெரும் போதாமை 

உடையதுமான தத்துவார்த்த அறிவே ஆகும்.


இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் 

நக்சல்பாரிக்குப் பின்னர், பெரும் தத்துவார்த்த

விவாதத்துக்குரிய கோட்பாடுகளை முன்வைத்தவர் 

நாகராசன். அவரின் முன்வைப்புகளைப் 

பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டு அவற்றை 

விவாதித்துச் சரியான முடிவுக்கு வர வேண்டியது

இந்திய மார்க்சியர்கள் கடமை ஆகும்.


தோழர் எஸ் என் நாகராசன் அவர்களுக்கு 

செவ்வஞ்சலி செலுத்துவோம்!

----------------------------------------------------------

                 

          

  . 


    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக