திங்கள், 31 மே, 2021

 ஹோமியோபதியும் மார்க்சியமும்!

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

---------------------------------------------

ஹோமியோபதி இந்த மண்ணின் மருத்துவம் அல்ல.

அது ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி 

செய்யப் பட்டது. சாமுவேல் ஹானிமன் 

(Samuel Hahnemann 1755-1843) என்னும் ஜெர்மானிய 

மருத்துவர் ஹோமியோபதியை உருவாக்கினார்.


நோயைக் குணப்படுத்தும் தத்துவம் 

ஹோமியோபதியைப் பொறுத்த மட்டில் 

இதுதான்! அதாவது, மருந்து என்பது நோயை 

ஒத்தது (Let likes be cured by likes).  


ஹோமியோபதியில் இருந்து வேறுபட்ட ஒரு 

தத்துவத்தை நோயைக் குணப்படுத்தும் தத்துவமாகக் 

கொண்டவை இந்தியாவின் ஆயுர்வேதம், 

சித்த மருத்துவம் மற்றும் அல்லோபதி என்னும் ஆங்கில 

மருத்துவம் ஆகிய மூன்றும்.


இவற்றின் நோயைக் குணப்படுத்தும் தத்துவம் 

இதுதான்! அதாவது மருந்து என்பது நோய்க்கு 

எதிரிடையானது என்பதுதான் (Let likes be cured 

by dislikes)     


ஓரிடத்தில் நெருப்பு எரிகிறது. கொழுந்து விட்டு 

எரிகிறது. இதை அணைக்க வேண்டும்.

ஹோமியோபதி என்ன சொல்கிறது? நெருப்பை 

நெருப்பே அணைக்கும் என்கிறது ஹோமியோபதி.


அல்லோபதியும் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் 

என்ன சொல்கின்றன? நெருப்பைத் தண்ணீர்தான்  

அணைக்கும் என்கின்றன. நெருப்பை நெருப்பே 

அணைக்கும் என்பது தவறு என்றும் நெருப்புக்கு 

எதிரிடையான தண்ணீர்தான் நெருப்பை அணைக்கும் 

என்றும் அவை கூறுகின்றன.


ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகிய இரண்டும் 

ஒன்றுதான். ஒரே மருத்துவமானது வட இந்தியாவில் 

ஆயுர்வேதம் என்றும் தென்னிந்தியாவில் சித்த 

மருத்துவம் என்றும் பெயர் பெற்றுள்ளன. தற்காலத்தில் 

இவை இரண்டும் கூட்டாக இந்திய மருத்துவம் 

(Indian Medicine) என்று பெயர் பெற்றுள்ளன.   

   

மேற்கூறிய ஓர் எளிய அறிமுகத்துடன் இக்கட்டுரையின் 

கருப்பொருளுக்கு வருவோம். இக்கட்டுரை பல்வேறு 

மருத்துவ முறைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு எது 

சிறந்தது என்று முடிவு செய்யும் கட்டுரை அல்ல. 


மார்க்சியம் ஹோமியோபதியை எப்படிப் பார்க்கிறது 

என்பது மட்டுமே இக்கட்டுரையின் கருப்பொருள் 

ஆகும். மார்க்சியத்துக்கும் ஹோமியோபதிக்கும் 

உள்ள தொடர்பு என்ன, கம்யூனிச நாடுகள் என்று 

அறியப்பட்ட சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா),

சீனா போன்ற நாடுகளில் ஹோமியோபதிக்கு இருந்த 

இடம் என்ன, ஸ்டாலின், மாவோ போன்ற 

மார்க்சிய மூல ஆசான்களின் ஹோமியோபதி 

குறித்த நிலைப்பாடு என்ன ஆகியவற்றைக் கூறுவது 

மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.     


சாமுவேல் ஹானிமன், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய 

மூவருமே கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள்; 19ஆம் 

நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். மார்க்ஸ் எங்கல்சை 

விட ஹானிமன் 60 ஆண்டுகள் மூத்தவர். மார்க்ஸ் 

காலத்தில் ஹோமியோபதி மருத்துவம் செயல்பாட்டுக்கு 

வந்திருந்தது. மார்க்சும் எங்கல்சும் ஹோமியோபதி 

மருத்துவம் பற்றி நன்கு அறிந்து இருந்தனர். என்றாலும்

அவர்கள் ஹோமியோபதியை ஏற்கவோ ஆதரிக்கவோ 

இல்லை. கறாராகச் சொல்வதானால், மார்க்சும் எங்கல்சும், சக ஜெர்மானியரான சாமுவேல்  ஹானிமனின் 

ஹோமியோபதியைப் பொருட்படுத்தவே இல்லை.


தங்கள் காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு சிறிய அறிவியல் 

வளர்ச்சியையும் விட்டு விடாமல், அவற்றை நன்கு கற்று 

மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பழக்கம் உடைய மார்க்சும்

எங்கல்சும் ஹோமியோபதியைப் பொருட்படுத்தவில்லை. 

காரணம் அதை அவர்கள் அறிவியல் என்று கருதவில்லை.


1917ல் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டது; போல்ஷ்விக்குகள் 

அரசு அதிகாரத்தைக் கைப்பற்றினர். 

(போல்ஷ்விக்குகள் = ரஷ்யக் கம்யூனிஸ்டுகள்).

லெனின் ரஷ்ய அதிபர் ஆகிறார். 1922ல் சோவியத் 

ஒன்றியம் (Soviet Union) உருவாகிறது. 1924ல் 

லெனினின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின்

ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். 1924 முதல் 1954 

வரை முப்பதாண்டுகள் ஸ்டாலின் ரஷ்யாவை ஆண்டார்.


ஸ்டாலின் காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் 

ஹோமியோபதி தடை செய்யப் படுகிறது. இது அதிபர் 

ஸ்டாலினின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது CPSUவின் 

முடிவு. (CPSU = Communist Party of Soviet Union)         


சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியானது 

சோவியத் நாட்டின் அறிஞர்கள், விஞ்ஞானிகள், 

மருத்துவர்கள் ஆகியோரிடம் நன்கு விவாதித்து 

இறுதியில் ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் 

(Homeopathy is a pseudoscience) என்ற முடிவுக்கு வந்தது. 

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவை ஏற்று 

அதிபர் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தில் 

ஹோமியோபதியைத் தடை செய்தார். 

ஹோமியோபதி மருத்துவ மனைகள் அல்லோப்பதி 

மருத்துவ மனைகளாக மாற்றப் பட்டன. போலி அறிவியலான  ஹோமியோபதியை ஆதரித்த பலர் 

சிறைக்கு அனுப்பப் பட்டனர்.


ஹோமியோபதியின் ஆதரவாளர்கள் ஸ்டாலின் ஒரு 

சர்வாதிகாரி என்றும் எந்த நியாயமும் இல்லாமல் 

ஹோமியோபதியை அவர் தடை செய்தார் என்றும் 

கூறுகிறார்கள். 1954ல் ஸ்டாலின் மறைந்ததும் 

குருச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஆகிறார்.

ஸ்டாலின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசு 

நடவடிக்கைகளை ரத்து செய்தவர் குருச்சேவ். என்றாலும்  

அவர் ஹோமியோபதி மீதான தடையை நீக்கவில்லை.


பிரஷ்னேவ், கோர்ப்பச்சேவ் என்று சோவியத்தின் 

அதிபர்களாக வந்தவர்கள் யாரும் ஹோமியோபதியை 

அங்கீகரிக்கவில்லை. அதன் மீதான தடையை 

நீக்கவில்லை.


சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறி ரஷ்யா மட்டுமே 

எஞ்சியது. போரிஸ் யெல்ட்சின், விளாதிமிர் புடின் ஆகிய 

அதிபர்கள் ரஷ்யாவை ஆண்டனர். இவர்கள் காலத்தில் 

ரஷ்யா ஒரு அப்பட்டமான முதலாளித்துவ நாடாக மாறி 

இருந்தது.


ஆனாலும் புடினின் ரஷ்யாவிலும் ஹோமியோபதி 

மீதான தடை நீக்கப் படவில்லை. தொடர்ந்து தடை 

நீடித்தது. ஆக கம்யூனிச ஸ்டாலின் காலம் முதல் 

முதலாளித்துவ புடின் காலம் வரை ரஷ்யாவில் 

ஹோமியோபதி தடை செய்யப்பட்டே இருந்தது. அதன் 

மீதான தடையை நீக்க புடின் முன்வரவில்லை.


ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு பெரும் 

தத்துவங்களான மார்க்சியமும் முதலாளித்துவமும்  

ரஷ்யாவில் ஹோமியோபதியை நிராகரித்து இருந்தன.

ஹோமியோபதி மீதான தடை 1924 முதல் இன்று வரை, 

நூறாண்டு காலமாக நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் 

ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் (pseudo science)  என்பதே. 


அடுத்து சீனாவில் ஹோமியோபதியின் நிலை என்ன 

என்று பார்ப்போம். 1949ல் சீனா விடுதலை அடைந்தது.

கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் அதிபர் மாவோ 

பாரம்பரிய சீன மருத்துவத்திற்கு பெரிய அளவில் 

முக்கியத்துவம் அளித்தார். அரசு முற்றிலுமாக 

பாரம்பரிய சீன மருத்துவத்தை ஆதரித்தது.

கூடவே அல்லோபதியையும் சீனா ஏற்றுக் 

கொண்டு ஆதரித்து வந்தது.


சீனாவில் ஹோமியோபதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

சீனாவில் ஹோமியோபதி பரவவும் இல்லை. சீனாவில் 

ஹோமியோபதியை நுழைக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் 

மாவோ ஆதரவு அளிக்கவில்லை. 1976ல் மாவோ மறைந்து     

ஹுவா குவா ஃபெங், டெங் சியோ பிங் ஆகியோர் 

அதிபர்களாக பின்னரும் கூட சீனாவில் ஹோமியோபதி 

செல்வாக்குப் பெறவில்லை. ஹோமியோபதிக்கு 

இன்றளவும் சீன அரசின் ஆதரவும் இல்லை. இதற்குக் 

காரணம் ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் 

என்பதுதான்.


மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ 

ஆகிய மார்க்சிய மூல ஆசான்கள் ஐவரும் 

ஹோமியோபதியை ஏற்கவில்லை; அங்கீகரிக்கவில்லை.


ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் என்று மார்க்சியம் 

மிகத் தெளிவாக உணர்ந்துள்ளது. எனவே ஹோமியோபதி 

தோன்றியது முதல் இன்று வரை மார்க்சியமானது 

ஹோமியோபதிக்கு  எதிரானதாகவே உள்ளது. 

ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் என்பது 

மார்க்சியத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிலைபாடு 

மட்டுமின்றி நூறாண்டுக்கு மேல் நிலைபேறு 

உடையதும் இன்றும் நடைமுறைப் படுத்தப்பட்டு 

வருவதுமான நிலைபாடு.


மார்க்சியமும் ஹோமியோபதியும் ஒன்றுக்கொன்று 

எதிரானவை. ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.

இவ்விரண்டுக்கும் இடையிலான முரண்பாடு பகைத் 

தன்மை வாய்ந்த முரண்பாடு (antagonistic contradiction).

பகை முரண்பாடாக இருக்கின்ற காரணத்தால்,

இவை இரண்டும், அதாவது, மார்க்சியமும் 

ஹோமியோபதியும் ஒன்றையொன்று அழிக்க 

முனையும். இவ்விரண்டில் எது சரியானதா, எது 

அறிவியல்பூர்வமானதோ அது மட்டுமே வெல்லும். 

மற்றது அழிந்து ஒழிந்து போய்விடும்.


மார்க்சியம் நூறு சதமும் அறிவியல்பூர்வமானது.

ஹோமியோபதி ஒரு போலி அறிவியல். எனவே 

மார்க்சியத்துக்கும் ஹோமியோபதிக்குமான இந்தச் 

சண்டையில் மார்க்சியம் வெல்லும்; ஹோமியோபதி 

தோற்று அழியும். ஏனெனில் போலி அறிவியலான  

ஹோமியோபதியால், சரியான அறிவியலான 

மார்க்சியத்தை ஒருபோதும் வெல்ல இயலாது. 


ஜெர்மானியத் தத்துவப் பேரறிஞர் ஹெக்கல் என்பவர் 

(Hegel 1770-1831) இயங்கியல் (அல்லது முரண்தர்க்கவியல்)

என்னும் கோட்பாட்டை உருவாக்கினார். எந்த ஒரு 

விஷயத்திலும் உண்மை என்ன என்று கண்டறியப் 

பயன்படும் முறையே இயங்கியல் (dialectics) ஆகும்.

ஹெக்கலின் இயங்கியலைத் திருத்தியும் செப்பனிட்டும் 

மேம்படுத்தியும் மார்க்சிய இயங்கியலை உருவாக்கினர்

மார்க்சும் எங்கல்சும். 


மார்க்சிய இயங்கியலுக்கு எதிரானது ஹோமியோபதி. 

மேலும் மார்க்சியப் பொருள்முதல்வாதத்தைத் தூக்கி 

எறிந்து விட்டு, கருத்துமுதல்வாத (idealism) அடிப்படையில் 

ஹோமியோபதியை உருவாக்கினார் சாமுவேல் ஹானிமன். 

ஹோமியோபதியின் மருந்து கொடுக்கும் கோட்பாடு 

அதீதமாக நீர்த்துப் போகச் செய்தல் (extreme dilution)

என்பதாகும்.


ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சமையல் உப்பை 

(சோடியம் குளோரைடு) சேர்த்து ஒரு கரைசலை 

உருவாக்குவோம். இதில் மேலும் மேலும் தண்ணீர் கலந்து 

கரைசலை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். 

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக நீர்த்துப் போகச் 

செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு மருந்தானது 

வீரியம் மிக்கதாக ஆகிறது. இதுதான் ஹோமியோபதியின்    மருந்து கொடுக்கும் தத்துவம்.


மேற்சொன்ன உதாரணத்தில் 1 லிட்டர் தண்ணீரில் சோடியம் 

குளோரைடின் ஒரே ஒரு மூலக்கூறு கூட இருக்கக் கூடாது.

அந்த அளவுக்கு அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும்.   


இதன் அர்த்தம் என்னவெனில், பொருளானது மறைந்து 

போக வேண்டும். பொருள் மறைந்து போகிறது என்று 

சொல்லும்போது அங்கு ஆதிசங்கரர் வந்து விடுகிறார்.

அத்வைதம் வந்து விடுகிறது. 


ஆக ஹோமியோபதி என்பது ஒரு பொருள் மறுப்பு 

மருத்துவம். பொருளை மறுத்து விட்டு அதனிடத்தில் 

கருத்தை வைக்கும் மருத்துவமே ஹோமியோபதி. 

எனவே ஹோமியோபதி என்பது போலி அறிவியல் 

என்பது நிரூபணம் ஆகிறது. 

 

இந்தியாவில் ஹோமியோபதிக்கு செல்வாக்கு உள்ளது.

அறிவியல் தற்குறித் தேசமான இந்தியாவில் போலி 

அறிவியலான ஹோமியோபதி செல்வாக்குப் பெறுவது 

இயல்பானதே.


தமிழ்நாட்டில் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் 

நடுவில் ஹோமியோபதி பெரும் செல்வாக்குப் 

பெற்றுள்ளது. வேறு வர்க்கத்தினர் குறிப்பாக உழைக்கும் 

வர்க்கத்தினர் யாரும் ஹோமியோபதியை ஏற்கத்தக்க  

மருத்துவமாகக் கருதவில்லை. 


உழைக்கும் மக்களைப்  பொறுத்தமட்டில், அல்லோபதி 

என்னும் ஆங்கில மருத்துவத்தையும் சித்த மருத்துவம் 

என்னும் தமிழ் மருத்துவத்தையுமே  நாடுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் குவியும் ஏழை எளிய மக்களின் 

கூட்டம் இதை நிரூபிக்கிறது.


ஹோமியோபதிக்கு ரசிகர் மன்றங்களை வைத்து 

நடத்துபவர்கள் தமிழ்நாட்டின் குட்டி முதலாளித்துவர்கள்

மட்டுமே. 


தங்களை இடதுசாரிகள் என்றும் 

மார்க்சியர்கள் என்றும் 

நக்சல்பாரிகள் என்றும் 

மாவோயிஸ்டுகள் என்றும் 

அழைத்துக் கொள்ளும் குட்டி முதலாளித்துவ 

அன்பர்கள் அனைவருமே ஹோமியோபதியின் 

மீது காதல் கொண்டு கிடக்கிறார்கள்.


ஹோமியோபதியை எதிர்ப்பதோ அல்லது 

ஹோமியோபதியின் பிடியில் இருந்து மக்களை 

விடுவிப்பதோ இக்கட்டுரையாளரின் நோக்கம் அல்ல.

   

யார் எவரும் தங்களுக்கு என்ன மருத்துவம் பிடிக்குமோ 

அதைப் பின்பற்றலாம். ஹோமியோபதியே சிறந்த 

மருத்துவம் என்று கருதுபவர்கள் தாராளமாக அதைப் 

பின்பற்றலாம். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது 

இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஒன்றே ஒன்றை மட்டும் 

இக்கட்டுரை வலியுறுத்துகிறது.அது இதுதான்!


ஹோமியோபதியை மார்க்சியம் எதிர்ப்பதால்,   

ஹோமியோபதியைப் பின்பற்றுவோர் எவரும் 

மார்க்சிஸ்ட்டுகள் ஆக மாட்டார்கள். அவர்கள் தங்களை 

மார்க்சிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்வது மோசடி ஆகும்.


ஹோமியோபதியை ஆதரிப்போர் பொருள்முதல்வாதத்தை 

எதிர்க்கிறார்கள். எனவே இயல்பாகவே அவர்கள் 

மார்க்சியத்தின் எதிரிகளாகி விடுகிறார்கள்


ஹோமியோபதி, மார்க்சியம் என்னும் இவ்விரண்டில்,  

எவர் ஒருவரும் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் 

ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றி வரலாம். அதற்கு 

அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் ஒருவர் 

இரண்டையும் வைத்துக் கொள்ள இயலாது.


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது கூடாது.

ஹோமியோபதிக் கூழை விரும்புவோர் மார்க்சிய 

மீசையை மழித்து விட வேண்டும். மார்க்சிய மீசையே 

முக்கியம் என்போர் ஹோமியோபதிக் கூழை 

சாக்கடையில் கொட்டி விட வேண்டும். இது மட்டுமே 

இக்கட்டுரை சொல்லும் ஒரே செய்தி!

***************************************************** 




    






                       



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக