வெள்ளி, 18 நவம்பர், 2022

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 
வீரப்போர் புரிந்த மகத்தான போராளி வ உ சி.
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்-அடி 
மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம் 
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்-எங்கள் 
பாரத தேசமென்று தோள் தட்டுவோம்.    

1757ல் நடைபெற்ற பிளாசிப்போரில் வெற்றி பெற்றதைத் 
தொடர்ந்து ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியின் 
ஆட்சி இந்தியாவில் தொடங்கியது. நூறாண்டு கழிந்த 
பின்னர் 1857ல் நாடு முழுவதும் இந்திய சுதந்திரத்திற்கான 
போர் நடைபெற்றது. நானா சாஹிப், ஜான்சி ராணி 
லட்சுமிபாய், தாந்தியா தோபே உள்ளிட்ட பல 
இந்தியத் தலைவர்கள் பிரிட்டிஷ் படைகளை களத்தில்
எதிர்கொண்டனர். பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு
எதிரான இந்தியாவின் சுதந்திர வேட்கையின் 
நாடு தழுவியதும் அழுத்தமானதுமான அடையாளமாக
முதல் இந்திய சுதந்திரப்போர் (1857) விளங்கியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய 
காங்கிரஸ் கட்சி இந்திய சுதந்திரத்திற்காகப் போராடும் 
நாடு தழுவிய அமைப்பாகத் திகழ்ந்தது. அதன் 
தலைவர்களான லஜபதி ராய், விபின் சந்திர பால்,
பால கங்காதர திலகர் ஆகியோர் நாடு முழுவதும் 
சுதந்திரக் கனலை மூட்டினர்.

திலகரின் சீடராகத் தம்மை வரித்துக் கொண்ட வ உ சி 
பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் இணைந்து 
தமிழ்நாட்டில் சுதந்திர வேட்கையை மூட்டினார்.

விதேசிப் பொருளாதாரம் சுதேசிப் பொருளாதாரத்தை 
விழுங்கி விடாமல் தடுக்கும் பொருட்டு 
சுதேசிக் கப்பல் ஓட்டினார் வ உ சி. தூத்துக்குடியில்
ஆலைத் தொழிலாளர்களைத் திரட்டி சுரண்டலுக்கு 
எதிராகப் போராடினார்.

இதனால் எல்லாம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின்
கோபத்துக்கு இரையானார். சிறைப்பட்டார்; செக்கிழுத்தார்.

வ உ சி மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி.
இந்திய சுதந்திரப்போரின் இலச்சினையும் அடையாளமும் 
அவரே. அடிமைப்படுத்திய பிரிட்டிஷை எதிர்த்து சுதேசிக் 
கப்பலோட்டி பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் மீது 
பலத்த தாக்குதல் தொடுத்தார். இந்திய தேசிய 
விடுதலையின் வீர மரபைத் தோற்றுவித்தவர் அவரே.
பன்முகத் தன்மை வாய்ந்த பேராளுமைக்குச் 
சொந்தக்காரர் எனினும், முதலும் முடிவுமாக 
வ உ சி இந்திய விடுதலை வீரரும் மாபெரும் 
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியும் ஆவார்.

வ உ சியின் நினைவை நெஞ்சில்  ஏந்துவோம்!
-------------------------------------------------------------------------
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக