கடவுள் நம்பிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும்?
எப்போதுதான் முடிவுக்கு வரும்?
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் கடவுள் என்பவர்
எங்குமே இல்லை. என்றுமே இருந்ததும் இல்லை.
God does not exist.
ஆனாலும் இல்லாத கடவுளின் மீதான நம்பிக்கை
மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆறறிவு
வரையிலான அனைத்து உயிர்களிலும், மனிதனுக்கு
மட்டுமே கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது.
பிற எந்த விலங்கிற்கோ, பறவைக்கோ,
புழு பூச்சிகளுக்கோ, மீன்களுக்கோ
கடவுள் என்ற கோட்பாடே (concept) கிடையாது.
கடவுள் என்ற perceptionஏ ஒன்று முதல் ஐந்தறிவு
வரையிலான எந்த உயிர்களுக்கும் கிடையாது.
அது மனிதனுக்கு மட்டுமே உரித்தான ஒரு உணர்வு.
ஆதி மனிதர்களிடம் கடவுள் என்ற கோட்பாடே
கிடையாது. அப்படி ஒரு கோட்பாடு அன்று
விலங்கோடு விலங்காக வாழ்ந்த அத்தொடக்க கால
மனிதர்களிடம் இல்லை. கடவுள் என்ற கோட்பாடே
உருவாகாதபோது கடவுள் மீதான நம்பிக்கை
எப்படி உருவாகும்?
மனிதன் இயற்கையை ஓரளவு அறிந்த பின்னர்,
இயற்கையை தனக்கு உகந்தவாறு மெதுமெதுவாக
மாற்றியமைக்கத் தொடங்கிய பிறகு, ஓரளவு
சிந்திக்கத் தொடங்கிய பிறகு,இயற்கையின்
பிரம்மாண்டத்தின் முன் தன்னைத் தூசென
உணர்ந்தான்.இயற்கையை வணங்கத்
தொண்டங்கினான்.
இயற்கையோடு தொடர்ந்து வினைபுரிந்து வந்த
மனிதன், அவ்வினையின் ஊடும் தொடர்ந்த
சிந்தனையின் ஊடும் படைப்பு (creation)
என்னும் கருத்தாக்கத்துக்கு வந்து படைத்தவன்
ஒருவன் இருக்கக் கூடும் என்று முடிவெய்தி
கடவுளைப் படைத்தான்.
மனித அறிவுதான் கடவுளைப் படைத்தது.
மனித சிந்தனைதான் கடவுளைப் படைத்தது.
மனிதனின் படைப்பிலேயே மிகவும் எளியதும்
மிகவும் ஆற்றல் மிக்கதுமான படைப்பு கடவுள்தான்.
இதுதான் ஒளிவீசும் உண்மை! இதற்கு மாறாக,
கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என்று
கூறுவது பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.
கடவுள் என்ற ஒருவர் மனிதனால் படைக்கப்பட்டது
முதலே, அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா என்ற
கேள்வியும் கூடவே எழுந்தது. இது குறித்த வாதப்
பிரதிவாதங்கள் மனிதர்களிடம் ஆதி முதலே
தலையெடுத்தன. ஸ்டீபன் ஹாக்கிங் இதை
பண்டைய முரண்பாடு (ancient conflict) என்கிறார்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம்
இன்றும் தொடர்கிறது; நாளையும் தொடரும்.
சரி, என்றுதான் இந்த விவாதம் முடிவுக்கு வரும்?
இந்த விவாதத்துக்கு முடிவே இல்லை. முடிவு
இருக்கவும் இயலாது. ஏனெனில் கடவுள் இல்லை
என்ற உண்மையும், கடவுள் இருக்கிறார் என்ற
கற்பனையும் ஒருபோதும் ஒரு புள்ளியில்
வெட்டிக் கொள்ளாது (will never intersect).
அடுத்து, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி
சமூக-அரசியல் கேள்வி அல்ல. அது தத்துவக்
கேள்வி (It is a philosophical question). பொருள்முதல்வாதமும்
கருத்துமுதல்வாதமும் இறுதிவரை இருந்து கொண்டே
இருக்கும். காலப்போக்கில் ஒன்று வலிமை
பெறுவதும், இன்னொன்று வலிமை குன்றுவதும்
நிகழும். ஆயினும் அவை இரண்டும் இருந்து
கொண்டே இருக்கும். அவற்றுள் எந்த ஒன்றும்
இறந்து விடாது.
எனவே கடவுள் இருக்கிறார், இல்லை என்னும் நிலை
50:50 என்ற விகிதத்தில் இருந்து காலப்போக்கில்
சமநிலை குலைந்து, 05:95 என்ற நிலைகூட வரக்
கூடும். எனவே கடவுள் இருக்கிறாரா என்ற விவாதம்
ever greenஆக இருந்து கொண்டே இருக்கும்.
***************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக