செவ்வாய், 11 டிசம்பர், 2018

தொழிற்சங்கம் என்பது ஒரு வெகுஜன அமைப்பு.
இது கம்யூனிஸ்ட் கட்சி அல்ல. ஒரு கம்யூனிஸ்ட்
கட்சியில் அக்கட்சியின் வேலைத்திட்டத்தை
(party programme) ஏற்பவர்கள் மட்டுமே சேர முடியும்.
ஆனால் ஒரு தொழிற்சங்கத்தில், கூலி அடிமை
முறைக்கு இலக்காகி மூலதனத்தால் சுரண்டப்படும்
ஒவ்வொருவரும் சேர முடியும்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிற்சங்கத்திலும்
இங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின்
அனுதாபிகள் உறுப்பினர்களாக இருப்பது இயல்பே.  
ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் வேறு அரசியல்
கட்சிகளின் அனுதாபிகள் இடம்பெற முடியாது.
இவ்வாறாக ஒரு  தொழிற்சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும்
கட்டமைப்பு ரீதியாக வேறுபட்ட கட்டுமானத்தைக்
கொண்டுள்ளன. எனவே கம்யூனிஸ்ட் கட்சிக்கான
அமைப்பு விதிகளை ஒரு தொழிற்சங்கத்துக்குப்
பொருத்த இயலாது.

கம்யூனிஸ்ட் கட்சியானது ஜனநாயக
மத்தியத்துவத்தின் (democratic centralism)  அடிப்படையில்
செயல்படும். தொழிற்சங்கமானது தொழிற்சங்க
ஜனநாயகம் (trade union democracy) என்ற கோட்பாட்டின்
அடிப்படையில் செயல்படும். இதன் பொருள் என்ன?
ஒரு தொழிற்சங்கத்தில், தலைமையும் தலைமையில்
இல்லாத பிறரும் 51:49 என்ற விகிதத்தில்
இருந்தாலும் சரி, அல்லது 90:10 என்ற விகிதத்தில்
இருந்தாலும் சரி, பெரும்பான்மையானது
சிறுபான்மையான பிறரின் கருத்துக்கு
மதிப்பளித்துத்தான் சங்கத்தை நடத்த முடியும்.

மாறாக, மாற்றுக் குரல்களை எழவிடாமல் நசுக்கும்
முயற்சிகள் ஒரு தொழிற்சங்கத்தின் குரல்வளையை
நெறிக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை.
ஏனெனில் ஒரு தொழிற்சங்கத்தை உயிரோட்டமாக
வைத்திருப்பது தொழிற்சங்க ஜனநாயகமே. அதற்கு
எவ்விதத்தில் பங்கம் நேரிட்டாலும், அது
தொழிற்சங்க இயக்கத்தைப் பலவீனப்
படுத்துவதில்தான் சென்று முடியும்.

ஒரு தொழிற்சங்கத்தின் நிலைபாடுகளை, முடிவுகளை
விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு தொழிலாளிக்கும்
உண்டு. இது கேள்விக்கு அப்பாற்பட்ட உரிமை
(indisputable right). குறிப்பாக வேலைநிறுத்தம் போன்ற
விஷயங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தன்
கருத்தை சுதந்திரமாகச் சொல்லும் உரிமை
உண்டு. ஏனெனில் ஒரு வேலைநிறுத்தம் என்பது
அனைத்துத் தொழிலாளர்களின் கூட்டு பேர
சக்தியின் (collective bargaining capacity) மீது நடக்கும்
போராட்டம். எனவே ஒவ்வொரு தொழிலாளியும்
ஒரு வேலைநிறுத்தத்தின் மீது சர்வ சுதந்திரமாக
தனது கருத்தைக் கூற உரிமை உண்டு.

ஒரு வேலைநிறுத்தத்தின் மீது தொழிலாளர்கள்
இயல்பாகவும்  சுதந்திரமாகவும் தங்கள்
கருத்தைக் கூற உகந்த ஒரு சூழ்நிலையை
ஒவ்வொரு தொழிற்சங்கமும் ஏற்படுத்த வேண்டும்.
இதுவே ஒரு தொழிற்சங்கத்தின் கடமையாகும்.
இதற்கு மாறாக ஒரு வேலைநிறுத்தம் பற்றிய
விமர்சன ரீதியான கருத்துக்களை நசுக்க
முற்படுவது தொழிற்சங்க அதிகாரத்துவப்
போக்காகும் (trade union bureaucracy).

ஐரோப்பிய நாடுகளைப் போல் அல்லாமல்,
இந்தியா மிகவும் பன்மைத்துவமுள்ள ஒரு நாடு.
இங்கு எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரே
குரலில் பேச இயலாது. ஒரே அரசியல் கட்சியைச்
சார்ந்த வெவ்வேறு தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட
பிரச்சினையின் மீது வேறுபட்ட கருத்துக்களைத்
தெரிவிப்பதை நாம் அன்றாடம் காண்கிறோம்.
இதற்கு காங்கிரஸ் கட்சி மிகச் சிறந்த உதாரணம்.
திருநாவுக்கரசரும் இளங்கோவனும் வெவ்வேறு
சுருதிகளில் பேசுவதை நாம் பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறோம்.

ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா கட்சிகளே
தங்களின் அணிகளுக்கு கருத்து சுதந்திரத்தை
உறுதி செய்யும்போது, பலதரப்பட்ட பிரிவினரும்
இணைந்துள்ள ஒரு வெகுஜன ஸ்தாபனமாகிய
தொழிற்சங்கத்தில் கருத்து சுதந்திரம்
பரிபூரணமாக இருக்க வேண்டாமா? அதை
மறுக்க இயலுமா?

எனவே ஒரு வேலைநிறுத்தம் பற்றிய, சங்கத்
தலைமையின் அணுகுமுறை முடிவுகள் மீது
கருத்துக்கூறவும் விமர்சிக்கவும் ஒவ்வொரு
தொழிலாளிக்கும் உரிமை உண்டு. இவ்வாறு
விமர்சிப்பதால், சங்கம் பலவீனம் அடையும்
என்பதோ, இடதுசாரி ஒற்றுமை பாதிப்படையும்
என்பதோ சுத்த மாய்மாலம் ஆகும்.

ஒரு தொழிற்சங்கத்தில் விமர்சன உரிமை
இருப்பதும், அதைப் பயன்படுத்தும் ஆற்றல்
உள்ளவர்களாக அச்சங்க உறுப்பினர்களை
வளர்த்தெடுப்பதும் சங்கத் தலைமையின்
கடமைகள் ஆகும். ஏனெனில் ஒரு வெற்றிகரமான தொழிற்சங்கத்தில். தலைமைக்கும்
உறுப்பினர்களுக்கும் இடையில்
நெருக்கமான உயிரோட்டமான உறவு
(close organic contact) இருக்க வேண்டும். விமர்சன
உரிமையும் அச்சமின்றி நிகழ்வுகள் மீது
கருத்துக்  கூறுவதுமே ஒரு சங்கத்தை
உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கும். இல்லையெனில்
அச்சங்கம் நடைப்பிணமாகவே இருக்கும்.
*************************************************** 



               

திங்கள், 10 டிசம்பர், 2018

தீக்கதிர் குமரேசனுக்கு மறுப்பு!
மின்னம்பலம் இணைய இதழில்
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் மறுப்புக் கட்டுரை!
-------------------------------------------------------------------------------------------
மின்னம்பலம் இணைய இதழில் (06.12.2018)
வெளியான கட்டுரை இது!
சாதி பொருள்முதல்வாதம் ஆகும் என்ற தோழர்
குமரேசனின் கருத்தை மறுத்து எழுதப்பட்ட கட்டுரை.

வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
-------------------------------------------------------------
இக்கட்டுரையில் சாதியம் குறித்த மரபார்ந்த
மார்க்சியப் பார்வையை மட்டுமே  வெளிப்படுத்தி
இருக்கிறேன். இது பொதுத்தளத்தில் அனைத்து
வாசகர்களுக்குமான கட்டுரை.

மார்க்சியத்தை ஆழமாகக் கற்ற தோழர் தியாகு
உள்ளிட்ட சிலருடன் முகநூலில் நடைபெற்ற,
நடைபெறும் விவாதத்தில் முன்வைத்த கருத்துக்களை
இக்கட்டுரையில் கூறவில்லை.

சாதி ஒரு மேற்கட்டுமானம் என்றும்
சாதிக்கு பொருளாயத அடிப்படை உண்டு என்றும்
இக்கட்டுரை கூறுகிறது. இது மார்க்சிய
வட்டாரத்தில் இன்று நிலவுகிற ஏற்கப்பட்ட கருத்து.
எனினும் ஏற்கப்பட்ட இந்தக் கருத்துக்கு அப்பால்
சென்று சில உண்மைகளைக் கூற வேண்டும்.
அதை இந்தக் கட்டுரை கூறவில்லை.

விவாதம் முற்றுப்பெற்ற பின்னரே, சாதியம்
குறித்த புதிய கருத்துக்களை எழுத   இயலும்.

விரும்புவோர் படிக்கலாம்.
**********************************************************

அறிவு கருத்து சிந்தனை ஆகிய எல்லாம்
மூளை என்ற பொருளில் இருந்து உருவாகின்றன.
மூளை என்பது சிந்திக்கும் உறுப்பு என்றார்
லெனின்.

அறிவு, மனம் ஆகியவை பொருள் அல்ல.
அவை கருத்தே.

பொருள்  என்பதற்கான மரபார்ந்த மார்க்சிய
வரையறை மிகவும் நெகிழ்ச்சியாகவும்
தாராளத்தன்மை உடையதாகவும் இருப்பதாலேயே
இத்தகைய சந்தேகங்கள் எழுகின்றன.

ஒரு விஷயம் கருத்தா பொருளா என்று அறிவதற்கான
ஒரே வழி அதற்கு பௌதிக இருப்பு உண்டா என்ற
கேள்வியைக் கேட்பதுதான். அறிவு, கருத்து, சிந்தனை 
ஆகியவற்றுக்கு இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில்
எவ்விதமான இருப்பும் இல்லை. அவை மனிதர்களின்
மனதில் குடிகொண்டு இருக்கின்றன.

இதன் மூலம், பொருளின் வரையறையில் "பௌதிக
இருப்பு" (physical existence) என்னும் அம்சத்துக்கு உரிய
முக்கியத்துவம் தெரியவரும். 
------------------------------------------------------------------------------------
நான் சொல்லாத ஒன்றை எனது கருத்தாக
வலிந்து புனைந்து கொண்டு எழுதப்பட்ட மறுப்பு!
--------------------------------------------------------------------------------------
////நிறை இருப்பே பொருளின் வரையறை என்பதே 
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கருத்து.//// என்று 
கூறுகிறார் தோழர் மதியவன் இரும்பொறை.
இது முற்றிலும் உண்மைக்குப் புறமானது.
அப்படி நான் கூறவே இல்லை.

பௌதிக இருப்பு (physical existence) என்பதே பொருளின்
வரையறையாகும் என்பதும் லெனின் கூறிய
"பொருள் என்பது புறநிலை யதார்த்தம் "
(objective reality) என்ற லெனினின் வரையறையுடன்
இதைச் சேர்க்க வேண்டும் என்பதே நான்
வலியுறுத்தும் கருத்து.

பௌதிக இருப்பு வேறு; நிறை இருப்பு வேறு.
நிறை என்பது அறிவியலில் mass என்ற பொருளில்
ஆளப் படுகிறது. பௌதிக இருப்பு என்று நான்
மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக்
கொண்டிருக்கும்போது, நிறை இருப்பு என்று
திரிப்பதில் நியாயம் இல்லை என்பதை
வாசகர்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்.

ஒரு துகளைச் சுட்டும்போது, அதன் நிறையைக்
கொண்டு சுட்டுவது அறிவியலில் பழங்கால
நடைமுறை. இன்று துகள் இயற்பியலில்
(particle physics) ஒரு துகளை எவ்வாறு அடையாளப்
படுத்துகிறார்கள்? உதாரணமாக, ஹிக்ஸ் போஸான்
என்ற துகளைப் பற்றி அறிவியல் எப்படி
எழுதுகிறது? இதோ பாருங்கள்.
"A new particle with a mass of 125 GeV was discovered in 2012" 
இந்த வாக்கியத்தில் mass என்பது மில்லி கிராம் போன்ற 
நிறுத்தல் அளவுகளில் சொல்லப்படவில்லை. மாறாக 
கிக்கா எலக்ட்ரான் வோல்ட் என்ற ஆற்றலின் அலகில் 
(unit of energy) குறிப்பிடப் படுகிறது. ஆக நிறை (mass)
என்பதன் அலகே மாறிவிட்டது.  

எனவே தோழர் மதியவன்  இரும்பொறை அவர்கள் 
நான் என்ன கூறியிருக்கிறோனோ அதற்கு மறுப்புத் 
தரலாம். நான் கூறாத ஒன்றை, அவரே தம் 
கற்பனையில் எடுத்துக்கொண்டு மறுப்புத் தருவது 
அவரின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.

 



ஏ எம் கே நினைவேந்தல் கூட்டம் தோழர்


கருத்து என்பது பொருளுக்கு நிகரானதும்
அதே நேரத்தில் எதிரானதும் ஆகும் என்பதே
கருத்து பற்றிய பரவலான அபிப்பிராயம்.
நீங்கள் கருத்தை வெகுவாக undermine செய்வது
போலத் தோன்றுகிறது. கணினியில் வரும்
master slave architecture போன்றதே பொருளுக்கும்
கருத்துக்கும் உள்ள உறவு என்பது என்
அபிப்பிராயம். இது குறித்து உங்களின்
பார்வை என்ன? (இங்கு குழப்பத்தைத்
தவிர்க்கவே அபிப்பிராயம் என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறேன்). 

BSNLஐயும் ஏர் இந்தியாவையும் ஒப்பிட இயலாது.
பொதுத்துறை வங்கியில் கடன் வாங்கித்தான்
தனியார் நிறுவனங்கள் நடக்கின்றன.
MARGINAL CAPITAL போல பல மடங்கு கடனை
வங்கிகள் தருகின்றன. BSNL இதுவரை வங்கிக்கடன்
வாங்கியதில்லை..சொந்த மூலதனத்தில்
நடக்கும் ஒரே நிறுவனம் BSNL. 


பௌதிக இருப்பு உள்ளதா? பௌதிக இருப்பு
உள்ள எதுவும் பொருளே. ஒளி என்பது ஆற்றல்.
ஒளி என்பது போட்டான்களால் ( photon) ஆனது.
இது ஆற்றல். பொருளும் ஆற்றலும் ஒன்றே
என்று ஐன்ஸ்டின் நிரூபித்தார், அவரின்
E= mc^2 (E is equal to mc squared)  சூத்திரத்தின் மூலம்.
எனவே ஒளியும் பொருள்தான்.

அடுத்து ஒலி என்பதும் ஆற்றலின் ஒரு வடிவமே.
ஆற்றலும் பொருளே. எனவே ஒலியும் பொருளே.
சுருங்கக் கூறின், பௌதிக இருப்பு இருந்தால்
அது பொருளே. இதுதான் எமது வரையறை.


பொருளும் ஆற்றலும் ஒன்றே! 
ஒன்று மற்றொன்றாக மாற இயலும்.
பொருள் ஆற்றலாகும். ஆற்றல் பொருளாகும்.
mass energy equivalence என்பதை ஐன்ஸ்டின் கண்டறிந்து
அறிவித்தார்.
  

பௌதிக இருப்பு = physical existence.
மானசீக இருப்பு என்றால் மனதில் இருப்பது.
பௌதிக இருப்பு என்றால், பிரபஞ்சப்
பெருவெளியில் ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பது.
எல்லாப் பொருளும் பௌதிக இருப்பு உடையவையே.
ஆனால் "கருத்து" என்பதற்கு பௌதிக இருப்பு
கிடையாது.
 

Master slave architecture என்பது ஒரு உவமையாக
மட்டுமே கையாளப் பட்டுள்ளது. பொருள்தான்
எஜமான். கருத்து என்பது எஜமானின் அடிமை
என்பதை உணர்த்துவதே நோக்கம்.

இதன் மூலம் பொருளும் கருத்தும் நிகராவை
என்பது மறுக்கப் படுகிறது. ஏனெனில்
எஜமானும் அடிமையும்  நிகரானவர்கள்
அல்லர். கருத்தின் ஊற்றுமூலம் (source)
மனித மனம்தான். கருத்தின் தோற்றப்
புலம் மனித மனம்தான்.  


கண்ணுக்குப் புலப்பட வேண்டும் என்று
தேவையில்லை, Matter need not be visible.
Who has seen the wind? Neither I nor you. But wind is there.
Electrons, atoms are invisible  But electrons and atoms
are matter. புலன்களாலும் கருவிகளின் உதவியாலும்
பொருளின் இருப்பை அறியலாம்.

அடிப்படையில் அமைந்த எமது பார்வையை

உற்பத்திமுறை என்பது ஒரு கருத்தாக்கம்.
இக்கட்டுரை பொருளைப்  பற்றி விவாதிக்கிறது.

மிகவும் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில்
அவரின் வரலாறு பற்றி எழுத எனக்கு உரிமையும்
அருகதையும் உண்டு. என்றாலும் அது மிகவும்
காலத்தை விழுங்கக் கூடிய ஒரு வேலை. எப்படியும்
இன்னும் 3 மாதத்திற்கு அதைக் கையில்
 எடுக்க இயலாது.
 

இப்போது நன்கு தேறி வருகிறேன். இந்த
டிசம்பர் 31க்குள் பழைய உடல்நலத்தைப்
பெற்று விடுவேன்.
உண்டு.மஜஇக அவற்றை வெளியிடும்.
உண்டு.


அவரையும் தியாகுவையும் ஒரு அழித்தொழிப்பு
வழக்கில் காவல்துறை சேர்த்து விட்டது.


அந்தக் காலத்தில் ஜூனியர் விகடனில்
தொடராக வந்தது.


அது நூல் அல்ல; வாழ்வின் பதிவு.  சரி, நல்லது. நன்றி.
பின்னர் பார்ப்போம்; பேசுவோம்.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

கருத்தின் வரையறை!
--------------------------------------
இந்த பிரபஞ்சத்தின் வயது 14 பில்லியன்
ஆண்டுகள். அதாவது பொருளின் வயது
1400 கோடி ஆண்டு. ஆனால் கருத்தின் வயது
அதிகபட்சமாக 15,000ஆண்டுகள்.

கருத்து என்பதே உயிரினம் தோன்றி, வளர்ந்து
ஆறாம் அறிவைப் பெற்று சிந்திக்கத்
தொடங்கிய பின்னரே பிறக்கிறது.

கருத்து என்பது அகநிலை அம்சம். அதற்கு
ஒரு பௌதிக இருப்பு இல்லை. இந்த பிரபஞ்சத்தில்
பொருளே இல்லையென்றால், கருத்தும் இல்லை.

எனவே கருத்து இரண்டாம்பட்சமானது (secondary).
பொருள் முதன்மையானது.

பிரபஞ்சத்தை இயக்கும் விதிகள் பொருளின்
விதிகளே; கருத்தின் விதிகள் அல்ல. கோள்கள்
சூரியனைச் சுற்றுவது கெப்ளரின் விதிகளால்தானே
தவிர கடவுளின் கட்டளையால் அல்ல.

கருத்து இல்லாமல் பொருள் இருக்கும். ஆனால்
பொருள் இல்லாமல் கருத்து இருக்க இயலாது.
ஒரு மனிதன் இல்லாமல், அவனின் மூளை
இல்லாமல், அந்த மூளை என்னும் பொருளின்
சிந்தித்தல் என்னும் செயல் இல்லாமல்
கருத்து என்பதே இல்லை.


பொருள் எப்போதுமே (always) சுயேச்சையானது.
ஆனால் கருத்து அப்படியல்ல. எனவே
பொருளுக்கும் கருத்துக்கும் உள்ள உறவு
எஜமான்-அடிமை (master-slave) உறவு. இவற்றில்
இருந்து கருத்தைத் துல்லியமாக வரையறுக்க
இயலும்.
பொருள் குறித்த பண்டைய இலக்கணமும்
எமது நவீன இலக்கணமும்!
ஏற்க மறுப்போர் தமது வாதத்தை முன்வைக்கலாம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
பருப்பொருள் குறித்த மார்க்சியர்களின் புரிதல்
பொருள் குறித்த பண்டைய இலக்கணத்தில்
இருந்து பெறப்பட்டது. பொருள் குறித்த நவீன
இலக்கணத்தை நியூட்டன் அறிவியல் மன்றம்
முன்வைக்கிறது. இங்கு தவிர்க்க இயலாமல்
கருத்து வேறுபாடு எழுகிறது. இது  பொருள் குறித்த
பண்டைய இலக்கணத்துக்கும்
நவீன இலக்கணத்துக்குமான வேறுபாடே.

பொருள் என்பது மனித சிந்தனைக்கு வெளியே
சுயேச்சையாக இருக்கிற ஒரு புறநிலை யதார்த்தம்
(objective reality) என்னும் லெனினின் வரையறை
பொருள்முதல்வாதத்தின் ஆகப்பெரிய ஒரு
முன்னடிவைப்பு ஆகும்.

பொருள் குறித்த எமது நவீன இலக்கணம்
லெனினின் வரையறையோடு முரண்பட்டதல்ல.
மாறாக, லெனின் வரையறையை இட்டு
நிரப்புவதாகும் (A complimentary to Lenin's definition and not
contradictory to it).

பௌதிக இருப்பு உடைய அனைத்தும் பொருளே;
பொருள் என்றால் அதற்கு ஒரு பௌதிக இருப்பு
இருக்க வேண்டும் என்பதே எமது நியூட்டன்
அறிவியல்  மன்றம் முன்மொழியும் நவீன
இலக்கணம்.

இந்த நவீன இலக்கணம் தத்துவத்தின் தேவையில்
இருந்து பிறக்கிறது. பொருளுக்கு மானசீக இருப்பு
மட்டுமே உண்டு என்று  முரசு கொட்டும்
கருத்துமுதல்வாதத்தின் முதுகெலும்பை
முறிக்கிறது இந்த நவீன இலக்கணம். 
.
புறநிலை யதார்த்தம் என்னும் லெனினின்
வரையறையுடன் பௌதிக இருப்பு என்னும்
எமது வரையறையும் சேரும்போது, இவ்விரண்டின்
சேர்க்கையானது பொருள் பற்றிய இலக்கணத்தை
முன்னிலும் கூர்மையாகவும் முன்னிலும்
துல்லியமாகவும் ஆக்கி விடுகிறது.

இப்போது பொருளின் இலக்கணம் பின்வருமாறு
அமைகிறது:

"பொருள் என்பது மனித சிந்தனைக்கு வெளியே
சுதந்திரமாக இருக்கிற ஒரு புறநிலை யதார்த்தம்;
பொருளுக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு".

எமது வரையறையை ஏற்பதில் என்ன தயக்கம்?
இங்கு தேவைப்படுவதெல்லாம் பண்டைய
வரையறையில் ஊன்றி நிற்கும் தோழர்கள்
இந்த நவீன இலக்கணத்தை  ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவத்தைப் பெறுவதுதான்.

ஒரு பொருள் அது பெரியதாயினும் அல்லது ஒரு
நுண்ணிய துகளாயினும் இந்தப் பிரபஞ்சப்
பெருவெளியில் அதற்கு ஒரு இடம் உண்டு;
ஒரு இருப்பு உண்டு. பொருளானது வெளிகாலத்தில்
(spacetime) ஒரு இடத்தை அடைக்கும்.
வெளிகாலத்தில் அதன் இருப்பு உணரப்படும்,
புலன்களின் வாயிலாகவோ அல்லது கருவிகளின்
வாயிலாகவோ.

ஒரு பொருளை அது எத்தனை சுதந்திர நிலைகளில்
உள்ளதோ (degrees of freedom) அத்தனை நிலைகளிலும்
சுட்டிக்காட்ட வேண்டும். இதற்காக ஹில்பெர்ட்
வெளியை (Hilbert space) அறிவியல் உருவாக்கி
உள்ளது.

இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளை குறைந்தது
ஆறு அச்சுகளைக் கொண்டு சுட்ட வேண்டும்.
இவற்றில் மூன்று அச்சுகள் நிலையிட அச்சுகள்
(position coordinates). மற்ற மூன்று அச்சுகளும்
உந்த அச்சுகள் (momentum coordinates).
(உந்தம் = momentum = mass times velocity).
இந்த ஆறு அச்சுகளையும் கொண்ட அமைப்பு
phase space என்று அழைக்கப் படுகிறது.      

ஒரு பொருளுக்கு பௌதிக இருப்பு இருக்கிறது
என்றால், மேற்கூறிய ஆறு அச்சுகளைக் கொண்ட
phase spaceல் அப்பொருளை சுட்ட இயல வேண்டும். 
இவ்வாறு சுட்ட இயலவில்லையெனில், அது
பொருள் அல்ல. இதுதான் பொருளின் இலக்கணம்.

மின்புலம், காந்தப் புலம் ஆகிய புலங்களும்
(fields), எலக்ட்ரான், நியூட்ரினோ ஆகிய நுண்
துகள்களும், கால்பந்து பூசணிக்காய் போன்ற
பொருட்களும் ஆற்றல் துகள்களான
போசான்களும் பொருட்களே.

ஆக, பொருள் என்பது மனித சிந்தனைக்கு
வெளியே இருக்கிற புறநிலை யதார்த்தம்
என்ற வரையறையுடன், பொருள் என்பது பௌதிக
இருப்பைக் கொண்டுள்ளது என்ற வரையறையைச் சேர்க்கும்பொழுது பொருளின் வரையறை
முழுமை அடைகிறது.

அவ்வளவுதான்! விஷயம் முடிந்தது.
It is as simple as that.
**********************************************

கருத்து என்றால் என்ன? வரையறை!


பாலியின் தவிர்த்தல் விதி (Pauli's exclusion principle)
ஹெய்சன்பெர்க்கின் நிச்சயமின்மைக்
கோட்பாடு (uncertainty principle) ஆகியவை பொருளை
மிகவும் கூர்மையாகவும் துல்லியமாகவும்
விவரிக்கிற விதிகள்.

பொருளின் பௌதிக இருப்பு என்பதை  பாலியின்
தவிர்த்தல் விதி கூர்மைப் படுத்துகிறது.
ஒரு குவான்டம் நிலையில் ஒரு துகள்தான் இருக்க
முடியும் என்று பௌதிக இருப்பை இன்னும்
தெளிவாக வரையறுக்கிறது பாலியின் விதி.     

பொருள்முதல்வாதம் என்னும் தத்துவத்தைப்
பொறுத்தமட்டில், இவ்விரண்டு விதிகளின்
சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, பொருளுக்கு
பௌதிக இருப்பு உண்டு என்னும் வரையறையை
முன்வைப்பதில் நிறைவடைகிறது.



சனி, 8 டிசம்பர், 2018

பொருள் பற்றிய அறிவியலின் வரையறை!
சாதியும் கடவுளும் கருத்தா? பொருளா?
அறிவியலுக்குக் கீழ்ப்படியும் தத்துவம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
சாதியம் குறித்த விவாதத்தின் தொடர்ச்சியாக
பொருள் (matter) குறித்த விவாதம் எழுந்தது. இதில் 
அண்ணன் தியாகு அவர்களும் நானும்
எங்கள் தரப்பை முழுமையாக முன்வைக்கும்
முன்னரே தோழர் ஏ எம் கே அவர்களின் மறைவுச்
செய்தி வந்தமையால் விவாதம் இடையிலேயே நின்றது. இந்நிலையில் பொருள் குறித்த இன்றைய அறிவியலின் பார்வையை தற்போது முன்வைக்கிறேன்.

1. மார்க்சியம் என்பது  வழிகாட்டும் தத்துவமே
(guiding philosophy) தவிர வழிபாட்டுக்கு உரிய
தத்துவம் அல்ல.

2. நியூட்டன், ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகள் மீது  
அறிவியலாளர்கள்  என்ன அணுகுமுறையைக்
கொண்டுள்ளனரோ, அதே அணுகுமுறையையே
மார்க்சிய மூல ஆசான்கள் மீதும் மார்க்சியர்கள்
கொண்டிருக்க வேண்டும். மாறாக, வழிபாட்டு
மனநிலையுடன் கூடிய அணுகுமுறை உண்மையைக்
கண்டறிய உதவாது. அது மார்க்சியத்தின் அறிவியல்
உள்ளடக்கத்துக்கு எதிரானது.

3. அல்லாஹு அக்பர் என்று கூச்சலிடுவது போல,
மார்க்சுஹு அக்பர், லெனினுஹூ அக்பர் என்று
கூச்சலிடுவது அறிவியல் அல்ல; வழிபாடு! அறிவியல்
உலகில் யார் எவரும் நியூட்டனுஹூ  அக்பர் என்றோ
ஐன்ஸ்டினுஹூ அக்பர் என்றோ கூச்சலிடுவது இல்லை.
(அல்லாஹு அக்பர் என்பதற்கு இறைவன் மிகப்
பெரியவன் என்று பொருள்).  

4. எந்தவொரு தத்துவ விவாதத்திலும் இறங்குவதற்கு
முன்னால், தத்துவத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள
உறவு நிலையைக் கறாராக  வரையறுத்து விட
வேண்டும். இது ஒரு அவசியமான முன்நிபந்தனை
ஆகும்.  

5. மார்க்ஸ் (181801883) எங்கல்ஸ் (1820-1895) காலமான
19ஆம் நூற்றாண்டிலும், லெனின் (1870-1924)
காலமான 20ஆம் நூற்றாண்டின் முன்பகுதியிலும்
அறிவியலை விட உயர்ந்த இடத்தில் தத்துவம்
இருந்தது. எல்லா அறிவுத் துறைகளின் தலைமைப்
பீடமாக தத்துவம் இருந்தது.

6. கணிதம், இயற்பியல், விலங்கியல், பொருளியல்
உள்ளிட்ட எல்லா அறிவுத் துறைகளின்
பொதுவிதிகளைக் கண்டறிந்தும், இவற்றின்
உள்ளடக்கத்தை கிரகித்துக் கொண்டும், ஓர்
ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்தை
தத்துவம் (philosophy) வழங்கியது. இதன்
காரணமாகவே தத்துவம் தலைமையில் இருந்தது.

7. 20, 21ஆம் நூற்றாண்டில் அறிவியலின் அனைத்துத்
துறைகளும் அசுரத் தனமாகவும் ராட்சசத்
தனமாகவும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறின.
அறிவியல் பிரம்மாண்டமாக வளர்ந்தது.
அறிவியலின் வேகத்திற்கு கொஞ்சமும் ஈடு 
கொடுக்க முடியாமல் தத்துவம் வெகுவாகப்
பின்தங்கியது.

8. குவான்டம் இயற்பியல், துகள் இயற்பியல்,
உயர் ஆற்றல் இயற்பியல் போன்ற இயற்பியல் 
துறைகளின் வளர்ச்சி பிரபஞ்சம் குறித்த
உலகப் பார்வையை பெரிதும் மாற்றி அமைக்க
முயன்று கொண்டிருக்கிறது. ஆனால்
தத்துவமானது அறிவியலோடு ஒத்திசைவாக
வளர்ச்சி அடையாமல் பின்தங்கி விட்டதால்
நவீன அறிவியலை உள்வாங்கி ஓர்
ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்தை
தத்துவத்தால் வழங்க இயலவில்லை.

9. இந்நிலையில்தான் "தத்துவம் செத்து விட்டது"
என்று அறிவித்தார் ஸ்டீபன் ஹாக்கிங். தொடர்ந்து,
"இனி தத்துவஞானிகளின் பணியை
அறிவியலறிஞர்களே மேற்கொள்வர்" என்றும்
ஹாக்கிங் அறிவித்தார்.

10. மார்க்ஸ் எங்கல்சுக்குப் பின்னர்
பொருள்முதல்வாதத்தைப் புதுப்பித்தும் வளர்த்தும்
வருபவர் ஸ்டீபன் ஹாக்கிங்கே என்பதால்,
ஹாக்கிங்கின் கருத்துக்களைப் புறக்கணிக்க
இயலாது.    
.   
11. மார்க்ஸ் எங்கல்ஸ் மட்டுமின்றி லெனின் காலம்
வரையிலும் தத்துவத்திற்கும் இயற்பியலுக்கும்
மோதல் எதுவும் இல்லை; இரண்டும் ஒத்திசைவாகவே
இருந்தன. ஸ்டாலின் காலத்தில் தத்துவத்திற்கும்
இயற்பியலுக்கும் மோதல் ஏற்பட்டபோது
ஸ்டாலின் அதை எதிர்கொள்ள நேர்ந்தது. (இது
குறித்துப் பின்னர் காண்போம்).

12. ஆக மொத்தத்தில், இன்றைய நிலையில்,
இந்த 2018ஆம் ஆண்டில், தத்துவம் தனது
தலைமையை இயற்பியலிடம் இழந்து விட்டது
என்ற உண்மையைக் கருத்தில் கொள்ள
வேண்டும். இந்த மெய்நிலையை ஏற்காமல்
மேற்கொள்ளப்படும் எந்தவொரு தத்துவ
விவாதமும் பயனற்றதாகி விடும்.

13) இந்தச் சூழலில்தான், பொருள் (matter) பற்றிய
வரையறையை, புரிதலை நாம் ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். தோழர் மதியவன்
இரும்பொறை  அவர்கள் பெரிதும் முயன்று
மழை, காந்தப்புலம் ஆகியவையும் பொருளே
என்று நிரூபிக்கிறார். அவர் இவ்வளவு சிரமம்
மேற்கொள்ள வேண்டியதில்லை.

14) ஓரிடத்தில் ஒரே ஒரு மின்னேற்றத்தை
(unit electric charge) வைத்தால் கூட, அந்த chargeஐச்
சுற்றி ஒரு மின்புலம் (electric field) ஏற்படும்.
இந்த மின்புலத்திற்கு ஒரு பௌதிக இருப்பு
(physical existence) உண்டு. பௌதிக இருப்பு
உள்ள அனைத்தும் பொருளாகும்; புலம்
(field) உட்பட.

15. ஆக பொருள் (matter) என்பதைத் தீர்மானிக்கும்
காரணி எது? பௌதிக இருப்பே. இதுதான் பொருளின் வரையறை.                    

16. ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொள்ளும்போது
அது  மாபெரும் பௌதிக சக்தியாகி விடுகிறது
என்றார் மார்க்ஸ். பொருள் பற்றிய 19ஆம்
நூற்றாண்டின் புரிதலில் இருந்து மார்க்ஸ்
இவ்வாறு கூறியுள்ளார்.

17. பொருளுக்கான இலக்கணத்தை மிகவும்
விசாலமாக ஆக்கும்போது என்ன நிகழும்?
கடவுளும் பொருளாகி விடும். சாதியும்
பொருளாகி விடும். சுருங்கக் கூறின்,
கருத்துக்களில் பல பொருளாகி விடும்.
இதன் தீய விளைவு என்னவெனில், பொருளுக்கும்
கருத்துக்குமான வேறுபாடு மறைந்து விடும்.
இறுதியில் பொருள்முதல்வாதத்திற்கும்
கருத்துமுதல்வாதத்திற்குமான வேறுபாடும்
மறைந்து விடும்.

18. இந்த அபாயத்தைத் தவிர்க்கவே பொருள் பற்றிய
வரையறையில் மிகுந்த கறார்த் தன்மை
கொள்ள .வேண்டியுள்ளது.

19. தமிழ்ச் சமூகத்தில் இந்தக் கருத்துக்களை
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே முதன்
முதலாக முன்வைக்கிறது. நிலவுகிற சிந்தனைப்
போக்கிற்கு மாறாக, முற்றிலும் புதிய
கருத்துக்களை முன்மொழியும்போது, எடுத்த
எடுப்பிலேயே அவை ஏற்றுக் கொள்ளப்பட
மாட்டா என்பதை நியூட்டன் அறிவியல் மன்றம்
அறிந்தே வைத்திருக்கிறது.

20. பெருமதிப்புக்குரிய அண்ணன் தியாகு அவர்கள்,
தோழர்கள்  ஜமாலன், மதியவன் இரும்பொறை,
மற்றும் தோழர்கள் இவ்விவாதத்தில் பங்கேற்றுச்
செழுமைப் படுத்த வேண்டுமெனக் கோருகிறேன்.
*********************************************************** 


வெள்ளி, 7 டிசம்பர், 2018

வெண்ணெய் திரளும்போது
தாழியை உடைத்தது போல்
BSNL வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------- 
நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது
அரசுத் துறை நிறுவனமான BSNL.தொடர்ந்து வாழ
இயலாத BSNL எப்போது உயிரை விடும் என்று
போட்டி நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

நெருக்கடியில் இருந்து தன்னை விடுவித்துக்
கொள்ளவும், கண்ணெதிரே தெரிகின்ற மரணத்தில்
இருந்து தப்பித்து தன்னுடைய உயிரைக்
காப்பாற்றிக் கொள்ளவும் இறுதிக்கும் இறுதியான
ஒரு முயற்சியை அண்மையில் BSNL மேற்கொண்டது.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளின் தொழிற்சங்கங்களின் 
கூட்டமைப்பான AUAB (All Unions and Associations of BSNL)
சார்பாக காலவரம்பற்ற வேலைநிறுத்தத்திற்கு
அறிவிப்பு கொடுக்கப்பட்டது. டிசம்பர் 3, 2018 முதல்
காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்க
ஊழியர்களும் அதிகாரிகளும் ஆயத்தமாயினர்.

ஆனால் என்ன துரதிருஷ்டம்! இந்த
வேலைநிறுத்தத்திற்குத் தலைமை தாங்கிய
மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவுத் தொழிற்சங்கமான
BSNLEU (BSNL Employees Union) வெண்ணெய் திரளும்போது
தாழியை உடைத்து விட்டது. ஆம்,  வேலைநிறுத்தத்தை
வாபஸ் பெற்று விட்டது.வேலைநிறுத்தம் வாபஸ் 
என்ற தனது சொந்த முடிவை, கூட்டுப் போராட்டக்
குழுவான AUAB மீது மார்க்சிஸ்ட் சங்கம் திணித்தது.
இதன் விளைவாக திட்டமிடப்பட்ட டிசம்பர் 3
வேலைநிறுத்தம் சுக்குநூறாக நொறுங்கிப்
போனது. அதோடு சேர்த்து BSNLன் எதிர்காலமும்
நொறுங்கிப் போனது.   

முற்றிலும் அறிவியல்-தொழில்நுட்பத் துறையான
தொலைதொடர்பில் ஒரு நிறுவனத்தின் வாழ்வு
என்பது அது வைத்திருக்கும் தொழில்நுட்பத்தைச்
சார்ந்தே உள்ளது. இங்கு தொழில்நுட்பம் என்பது
பிரதானமாக அலைக்கற்றையைக் குறிக்கும்.

உலகெங்கும் 5G  எனப்படும் ஐந்தாம் தலைமுறை
அலைக்கற்றை மிகவும் பரவலாகி விட்டது.
இந்தியாவில் 5G அலைக்கற்றை (3300-3400 MHz
மற்றும் 3400-3600 MHz) 2019ஆம் ஆண்டின்
பிற்பகுதியில் ஏலம் விடப்படும் என்று
தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர்
திருமதி அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
(பார்க்க:எகனாமிக் டைம்ஸ், செப்டம்பர் 23, 2018).

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில்
பல்வேறு தனியார் நிறுவனங்கள் 4G
அலைக்கற்றையை வைத்திருக்கின்றன.
ஆனால் BSNL நிறுவனத்துக்கு இன்னமும்
4G அலைக்கற்றை வழங்கப்படவில்லை.      

வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவை
வழங்க வேண்டுமெனில், முன்னேறிய
தலைமுறையைச் சேர்ந்த அலைக்கற்றை
அவசியம். ஒரு திரைப்படத்தை ஒருவர்
பதிவிறக்கம் செய்கையில், 4G அலைக்கற்றையானது
வினாடிக்கு 1 ஜிபி (1gbps) வேகம் தரும். ஆனால்
5G அலைக்கற்றையானது வினாடிக்கு 20 ஜிபி
(20 gbps) வேகம் தரும். (பார்க்க: அமைச்சர் மனோஜ்
சின்ஹா நாடாளுமன்றத்தில் கூறியது; எகனாமிக்
டைம்ஸ், பெப்ரவரி 27.2018)  

ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்
தற்போது 4G அலைக்கற்றையை வைத்திருக்கின்றன.
அடுத்து 5G அலைக்கற்றையையும் அவர்கள்
வாங்கி விடுவார்கள். ஆனால் BSNLன் நிலை என்ன?

BSNL இடம் 4G இல்லை. 5Gயை நினைத்துப் பார்க்கவே
BSNLஆல் முடியாது. இந்நிலையில் BSNL உயிர்
வாழ்வது எப்படி? ஏற்கனவே கடந்த பல
ஆண்டுகளாகவே BSNLல் வளர்ச்சிப் பணிகள்
எவையும் மேற்கொள்ளப் படவில்லை. இதன்
பொருள் சந்தையின் தேவைக்கும்
வாடிக்கையாளர்களின் தேவைக்கும் BSNL ஈடு
கொடுக்க முடியவில்லை என்பதே. சுருங்கக்
கூறின், சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல்
பட்டினி கிடக்கும் நிலையில்தான் BSNL உள்ளது.  

நிறுவனத்தின் நிலை இவ்வாறு இருக்க, ஊழியர்களின்
நிலையோ இன்னும் மோசம். அவர்களுக்கான
பழைய ஊதிய விகிதம் காலாவதி ஆகிவிட்டது.
ஊதியம் திருத்தி அமைக்கப் பட வேண்டும். இது
முன்பே செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால்
செய்யப்படவில்லை. நிர்வாகமும் அரசும் சேர்ந்து
தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தன.

எனவே ஊதியம் திருத்தி அமைத்தல், 4G அலைக்
கற்றையை BSNLக்கு வழங்குதல் உள்ளிட்ட
கோரிக்கைகளை  முன்வைத்து டிசம்பர் 3 முதல்
காலவரமற்ற வேலைநிறுத்தம் செய்ய BSNL
தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தன.

நெருங்கி வரும் மரணத்தில் இருந்து BSNLஐக்
காப்பாற்ற வல்ல இந்த வேலைநிறுத்தத்தை
வாபஸ் பெற்று BSNLக்கும் ஊழியர்களுக்கும்
துரோகம் இழைத்துள்ளது மார்க்சிஸ்ட்
தொழிற்சங்கமான BSNLEU. இச்சங்கம் சீதாராம்
எச்சூரியிடம் இருந்து நேரடியாகக் கட்டளைகளைப்
பெறும் சங்கம் ஆகும்.

காலவரம்பற்ற இந்த வேலைநிறுத்தம்
நடைபெறுமானால் அது தமது அரசுக்குப் பெரும்
சங்கடத்தை விளைவிக்கும் என்று கருதிய
மோடி, இந்த வேலைநிறுத்தம்  நடக்கக் கூடாது
என்று விரும்பினார். இத்துறையில் முன்பு
அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திடம்
வேலைநிறுத்தத்தை  முறியடிக்கும் பொறுப்பை
மோடி ஒப்படைத்தார்.

ரவிசங்கர் பிரசாத் சீதாராம் எச்சூரியிடம்
பேசி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற
வைத்தார். சாம பேத தான தண்டம் என்னும்
நான்கு முறைகளில் மூன்றாவது முறையைக்
கையாண்டு யெச்சூரியை வீழ்த்தியுள்ளார்
ரவிசங்கர் பிரசாத் என்கிறது RSS வட்டாரம்..

மார்க்சிஸ்ட் தலைமை பெட்டி வாங்கிக் கொண்டு
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று விட்டது
என்ற செய்தி காட்டுத்தீயாக நாடு முழுவதும்
பரவி உள்ளது. ஒவ்வொரு டெலிபோன் எக்சேஞ்சிலும்
ஒவ்வொரு BSNL அலுவலகத்திலும் ஊழியர்கள்
கொதித்துப்போய் இருக்கிறார்கள். வாயில் கூட்டம்
நடத்தி ஊழியர்களை நேரடியாகச் சந்திக்க
இயலாமல் பயந்து போய்க் கிடக்கிறது
மார்க்சிஸ்ட் சங்கத் தலைமை.

மார்க்சிஸ்ட் தலைமை பெட்டி வாங்கி விட்டது
என்று இரண்டு லட்சம் ஊழியர்களும் கருதுவதை
யாரும் எளிதில் புறக்கணிக்க முடியாது.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
பேசுகிறவர்கள் அல்ல BSNL ஊழியர்கள்.

வேலைநிறுத்தம் ஏன் வாபஸ் பெறப்பட்டது
என்பதற்கு தர்க்கபூர்வமாகவோ நியாயமாகவோ
எந்தவொரு காரணத்தையும் மார்க்சிஸ்ட் சங்கத்
தலைமையால் கூற இயலவில்லை. ஏற்கத்தக்க
காரணம் எதுவும் இல்லாத வெற்றிடத்தை கனத்த
சூட்கேஸ்கள் நிரப்புவது இயற்கையே.

4G அலைக்கற்றையை அரசிடம் இருந்து வாங்குவது
என்பது பிரதானமாக இரண்டு அம்சங்களைக்
கொண்டது.
1. அலைக்கற்றையின் விலை. இது  பல்லாயிரம்
கோடி ரூபாய் செலவினம். உதாரணமாக அதிதிறன்
வாய்ந்த 700 MHz அலைக்கற்றையின் விலை
(Base price per mega Hertz ) ரூ 11,485 கோடி ஆகும்).
2. அடுத்து 4G சேவையை வழங்குதல் (Service roll out).
இதுவும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவினம்.

இன்றைய நிலையில் லட்சம் கோடி ரூபாய்
செலவழித்து அலைக்கற்றை வாங்கி சேவை
வழங்குவது என்றால்,அதற்குரிய நிதி ஆதாரம்
BSNLல் இல்லை.

ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட  எல்லாத் தனியார்
நிறுவனங்களும் தங்களின் சொந்த மூலதனத்தில்
சேவை வழங்கவில்லை. அவை பொதுத்துறை
வங்கிகளிடம் கடன் வாங்கியே தங்களின்
நிறுவனத்தை நடத்துகின்றன. இதைப் பொதுமக்கள்
அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, அரசு வங்கிகளிடம் இருந்து ஏர்டெல்
1,13,000 கோடி ரூபாய் கடன் .வாங்கியுள்ளது. சுனில்
மிட்டல் தன் சொந்த மூலதனத்தில் ஏர்டெல்
நிறுவனத்தை நடத்தவில்லை. இது போலவே,
ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவங்கள் சேர்ந்து
பொதுத்துறை வங்கிகளிடம் 1,20,000 கோடி ரூபாய்
கடனாக வாங்கி உள்ளன.

ஆனால் BSNL நிறுவனம் மட்டுமே தன் சொந்த
மூலதனத்தில் வாழ்ந்து வருகிறது. தற்போது
4G அலைக்கற்றையை வாங்குவதற்கும், சேவை
வழங்குவதற்கும் தேவைப்படும் லட்சம் கோடி
ரூபாயை BSNL எங்கிருந்து பெற இயலும்?
பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்றுத்தான்
4G சேவையை BSNLஆல் வழங்க இயலும்.

ஆனால், வங்கிகளிடம் இருந்து BSNL நிறுவனம்
கடன் வாங்குவதற்கு மோடி அரசு அனுமதிக்கவில்லை.
இது BSNL மீதான அரசின் மிகப்பெரிய தடை.
அது மட்டுமல்ல, அரசானது BSNLஐ ஒழிப்பதற்கு
முனைப்பாக உள்ளது என்பதற்கு இது
சான்றாகும்.

நிலைமை இவ்வாறு படுமோசமாக (precarious)
இருக்கும்போது, ஒரு வேலைநிறுத்தத்தை
நடத்தி, அரசைப் பணிய வைத்திருக்க வேண்டாமா?
பொத்துத்துறை வங்கிகளிடம் கடன் வாங்க
BSNLக்கு மட்டும் தடை விதித்த அரசின்
ஒரவஞ்சனையை  எதிர்த்துப் போராடி இருக்க
வேண்டாமா?

பேச்சுவார்த்தையில் வாங்கிக்கடனுக்கான
தடையை நீக்குவது குறித்து எதுவும்
பேசப்பட்டதா? இல்லை. AUAB தலைவர்கள்
கையெழுத்திட்டு வெளியிட்ட வேலைநிறுத்த
வாபஸ் அறிக்கையில் இது குறித்தெல்லாம் எதுவும்
இல்லை.

உடன்பாடு ஏற்படாமல், ஒப்பந்தம் போடாமல்
வேலைநிறுத்தத்தை ஒருதலைப் பட்சமாக
மார்க்சிஸ்ட் சங்கம் வாபஸ் பெற்றுள்ளது.
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கு
ஒரு எளிய தர்க்கத்தைக் கூட மார்க்சிஸ்ட்
சங்கத்தால் முன்வைக்க இயலவில்லை. இதன்
விளைவாக இன்று இரண்டு லட்சம் ஊழியர்களிடம்
அம்பலப்பட்டும் தனிமைப்பட்டும் கிடக்கிறது
மார்க்சிஸ்ட் சங்கம்.

துரோகம் இன்று தற்காலிகமாக வெற்றி
பெற்றிருக்கலாம். எனினும் இறுதிக்கும்
இறுதியான பரிசீலனையில் இரண்டு லட்சம்
தொழிலாளர்களின் நான்கு லட்சம் கரங்களும்
உயரும்போது, துரோகம் தூள் தூளாகும்.

கோடிக்கால் பூதமடா தொழிலாளி
கோபத்தின் ரூபமடா!
************************************************************