சனி, 8 டிசம்பர், 2018

பொருள் பற்றிய அறிவியலின் வரையறை!
சாதியும் கடவுளும் கருத்தா? பொருளா?
அறிவியலுக்குக் கீழ்ப்படியும் தத்துவம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
சாதியம் குறித்த விவாதத்தின் தொடர்ச்சியாக
பொருள் (matter) குறித்த விவாதம் எழுந்தது. இதில் 
அண்ணன் தியாகு அவர்களும் நானும்
எங்கள் தரப்பை முழுமையாக முன்வைக்கும்
முன்னரே தோழர் ஏ எம் கே அவர்களின் மறைவுச்
செய்தி வந்தமையால் விவாதம் இடையிலேயே நின்றது. இந்நிலையில் பொருள் குறித்த இன்றைய அறிவியலின் பார்வையை தற்போது முன்வைக்கிறேன்.

1. மார்க்சியம் என்பது  வழிகாட்டும் தத்துவமே
(guiding philosophy) தவிர வழிபாட்டுக்கு உரிய
தத்துவம் அல்ல.

2. நியூட்டன், ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகள் மீது  
அறிவியலாளர்கள்  என்ன அணுகுமுறையைக்
கொண்டுள்ளனரோ, அதே அணுகுமுறையையே
மார்க்சிய மூல ஆசான்கள் மீதும் மார்க்சியர்கள்
கொண்டிருக்க வேண்டும். மாறாக, வழிபாட்டு
மனநிலையுடன் கூடிய அணுகுமுறை உண்மையைக்
கண்டறிய உதவாது. அது மார்க்சியத்தின் அறிவியல்
உள்ளடக்கத்துக்கு எதிரானது.

3. அல்லாஹு அக்பர் என்று கூச்சலிடுவது போல,
மார்க்சுஹு அக்பர், லெனினுஹூ அக்பர் என்று
கூச்சலிடுவது அறிவியல் அல்ல; வழிபாடு! அறிவியல்
உலகில் யார் எவரும் நியூட்டனுஹூ  அக்பர் என்றோ
ஐன்ஸ்டினுஹூ அக்பர் என்றோ கூச்சலிடுவது இல்லை.
(அல்லாஹு அக்பர் என்பதற்கு இறைவன் மிகப்
பெரியவன் என்று பொருள்).  

4. எந்தவொரு தத்துவ விவாதத்திலும் இறங்குவதற்கு
முன்னால், தத்துவத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள
உறவு நிலையைக் கறாராக  வரையறுத்து விட
வேண்டும். இது ஒரு அவசியமான முன்நிபந்தனை
ஆகும்.  

5. மார்க்ஸ் (181801883) எங்கல்ஸ் (1820-1895) காலமான
19ஆம் நூற்றாண்டிலும், லெனின் (1870-1924)
காலமான 20ஆம் நூற்றாண்டின் முன்பகுதியிலும்
அறிவியலை விட உயர்ந்த இடத்தில் தத்துவம்
இருந்தது. எல்லா அறிவுத் துறைகளின் தலைமைப்
பீடமாக தத்துவம் இருந்தது.

6. கணிதம், இயற்பியல், விலங்கியல், பொருளியல்
உள்ளிட்ட எல்லா அறிவுத் துறைகளின்
பொதுவிதிகளைக் கண்டறிந்தும், இவற்றின்
உள்ளடக்கத்தை கிரகித்துக் கொண்டும், ஓர்
ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்தை
தத்துவம் (philosophy) வழங்கியது. இதன்
காரணமாகவே தத்துவம் தலைமையில் இருந்தது.

7. 20, 21ஆம் நூற்றாண்டில் அறிவியலின் அனைத்துத்
துறைகளும் அசுரத் தனமாகவும் ராட்சசத்
தனமாகவும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறின.
அறிவியல் பிரம்மாண்டமாக வளர்ந்தது.
அறிவியலின் வேகத்திற்கு கொஞ்சமும் ஈடு 
கொடுக்க முடியாமல் தத்துவம் வெகுவாகப்
பின்தங்கியது.

8. குவான்டம் இயற்பியல், துகள் இயற்பியல்,
உயர் ஆற்றல் இயற்பியல் போன்ற இயற்பியல் 
துறைகளின் வளர்ச்சி பிரபஞ்சம் குறித்த
உலகப் பார்வையை பெரிதும் மாற்றி அமைக்க
முயன்று கொண்டிருக்கிறது. ஆனால்
தத்துவமானது அறிவியலோடு ஒத்திசைவாக
வளர்ச்சி அடையாமல் பின்தங்கி விட்டதால்
நவீன அறிவியலை உள்வாங்கி ஓர்
ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்தை
தத்துவத்தால் வழங்க இயலவில்லை.

9. இந்நிலையில்தான் "தத்துவம் செத்து விட்டது"
என்று அறிவித்தார் ஸ்டீபன் ஹாக்கிங். தொடர்ந்து,
"இனி தத்துவஞானிகளின் பணியை
அறிவியலறிஞர்களே மேற்கொள்வர்" என்றும்
ஹாக்கிங் அறிவித்தார்.

10. மார்க்ஸ் எங்கல்சுக்குப் பின்னர்
பொருள்முதல்வாதத்தைப் புதுப்பித்தும் வளர்த்தும்
வருபவர் ஸ்டீபன் ஹாக்கிங்கே என்பதால்,
ஹாக்கிங்கின் கருத்துக்களைப் புறக்கணிக்க
இயலாது.    
.   
11. மார்க்ஸ் எங்கல்ஸ் மட்டுமின்றி லெனின் காலம்
வரையிலும் தத்துவத்திற்கும் இயற்பியலுக்கும்
மோதல் எதுவும் இல்லை; இரண்டும் ஒத்திசைவாகவே
இருந்தன. ஸ்டாலின் காலத்தில் தத்துவத்திற்கும்
இயற்பியலுக்கும் மோதல் ஏற்பட்டபோது
ஸ்டாலின் அதை எதிர்கொள்ள நேர்ந்தது. (இது
குறித்துப் பின்னர் காண்போம்).

12. ஆக மொத்தத்தில், இன்றைய நிலையில்,
இந்த 2018ஆம் ஆண்டில், தத்துவம் தனது
தலைமையை இயற்பியலிடம் இழந்து விட்டது
என்ற உண்மையைக் கருத்தில் கொள்ள
வேண்டும். இந்த மெய்நிலையை ஏற்காமல்
மேற்கொள்ளப்படும் எந்தவொரு தத்துவ
விவாதமும் பயனற்றதாகி விடும்.

13) இந்தச் சூழலில்தான், பொருள் (matter) பற்றிய
வரையறையை, புரிதலை நாம் ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். தோழர் மதியவன்
இரும்பொறை  அவர்கள் பெரிதும் முயன்று
மழை, காந்தப்புலம் ஆகியவையும் பொருளே
என்று நிரூபிக்கிறார். அவர் இவ்வளவு சிரமம்
மேற்கொள்ள வேண்டியதில்லை.

14) ஓரிடத்தில் ஒரே ஒரு மின்னேற்றத்தை
(unit electric charge) வைத்தால் கூட, அந்த chargeஐச்
சுற்றி ஒரு மின்புலம் (electric field) ஏற்படும்.
இந்த மின்புலத்திற்கு ஒரு பௌதிக இருப்பு
(physical existence) உண்டு. பௌதிக இருப்பு
உள்ள அனைத்தும் பொருளாகும்; புலம்
(field) உட்பட.

15. ஆக பொருள் (matter) என்பதைத் தீர்மானிக்கும்
காரணி எது? பௌதிக இருப்பே. இதுதான் பொருளின் வரையறை.                    

16. ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொள்ளும்போது
அது  மாபெரும் பௌதிக சக்தியாகி விடுகிறது
என்றார் மார்க்ஸ். பொருள் பற்றிய 19ஆம்
நூற்றாண்டின் புரிதலில் இருந்து மார்க்ஸ்
இவ்வாறு கூறியுள்ளார்.

17. பொருளுக்கான இலக்கணத்தை மிகவும்
விசாலமாக ஆக்கும்போது என்ன நிகழும்?
கடவுளும் பொருளாகி விடும். சாதியும்
பொருளாகி விடும். சுருங்கக் கூறின்,
கருத்துக்களில் பல பொருளாகி விடும்.
இதன் தீய விளைவு என்னவெனில், பொருளுக்கும்
கருத்துக்குமான வேறுபாடு மறைந்து விடும்.
இறுதியில் பொருள்முதல்வாதத்திற்கும்
கருத்துமுதல்வாதத்திற்குமான வேறுபாடும்
மறைந்து விடும்.

18. இந்த அபாயத்தைத் தவிர்க்கவே பொருள் பற்றிய
வரையறையில் மிகுந்த கறார்த் தன்மை
கொள்ள .வேண்டியுள்ளது.

19. தமிழ்ச் சமூகத்தில் இந்தக் கருத்துக்களை
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே முதன்
முதலாக முன்வைக்கிறது. நிலவுகிற சிந்தனைப்
போக்கிற்கு மாறாக, முற்றிலும் புதிய
கருத்துக்களை முன்மொழியும்போது, எடுத்த
எடுப்பிலேயே அவை ஏற்றுக் கொள்ளப்பட
மாட்டா என்பதை நியூட்டன் அறிவியல் மன்றம்
அறிந்தே வைத்திருக்கிறது.

20. பெருமதிப்புக்குரிய அண்ணன் தியாகு அவர்கள்,
தோழர்கள்  ஜமாலன், மதியவன் இரும்பொறை,
மற்றும் தோழர்கள் இவ்விவாதத்தில் பங்கேற்றுச்
செழுமைப் படுத்த வேண்டுமெனக் கோருகிறேன்.
*********************************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக