திங்கள், 17 டிசம்பர், 2018

பௌதிக இருப்பு என்பதையும் உள்ளடக்கிய பிறகே
பொருளின் இலக்கணம் முழுமை அடைகிறது!
அத்வைதத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணி!
நெல்லையப்பர் கோவிலில் சத்தியம் செய்யவா?
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
பாடங்களைக் கற்க இயலாமல் சில குழந்தைகள்
அவதி உறுவதுண்டு. கற்றல் குறைபாடுகள் பல
வகையானவை. அவற்றுள் டிஸ்லெக்சியா (dyslexia)
என்பதும் ஒன்று. மார்க்சியத்தைக் கற்பதிலும்
சிலருக்கு டிஸ்லெக்சியா இருப்பது கண்கூடு.
பொருளின் இலக்கணம் குறித்த  விவாதத்தில்
வெளிப்படும் எதிர்த்தரப்பின்  புரிதல் இதை
எமக்கு உணர்த்துகிறது.

இதுதான் பொருளின் இலக்கணம்!
--------------------------------------------------------------
1) பொருள் என்பது புறநிலை யதார்த்தம் என்ற
லெனினின் வரையறையை நியூட்டன் அறிவியல்
மன்றம் அப்படியே ஏற்றுக் கொள்கிறது.

2)  பொருளுக்கு பௌதிக இருப்பு (physical existence)
உண்டு என்ற அம்சத்தையும் லெனினின்
வரையறையுடன் சேர்க்கிறது நியூட்டன்
அறிவியல் மன்றம்.

3) லெனினின் வரையறையை இட்டு நிரப்பும்
பொருட்டு (complementing) நியூட்டன் அறிவியல்
மன்றம், பௌதிக இருப்பு என்ற இந்தச்
சேர்க்கையை வலியுறுத்துகிறது.

4) புறநிலை யதார்த்தம், பௌதிக இருப்பு என்ற
 இரண்டு அம்சங்களைக் கொண்ட இப்புதிய
இலக்கணம், பொருள் பற்றிய வரையறையை
மிகவும் கறார்த்தன்மை (rigorous) உடையதாகவும்
கூர்மையானதாகவும்  ஆக்கி விடுகிறது.

இதை ஆயிரம் முறை கூறி விட்டோம். தோழர்
மதியவனுக்காக ஆயிரத்து ஒன்றாவது முறையாக
மீண்டும் கூறுகிறோம்.

இது கூறியது கூறல் என்னும் வழுவாகும். இதற்காக
பவணந்தி முனிவர் என்னை மன்னிப்பாயாக.
கூறியது கூறல் நிகழ்ந்தாலும் கேடில்லை, குன்றக்
கூறலோ மாறுகொளக் கூறலோ இருந்து விடக்
கூடாது என்பதே எப்போதும் எமது அக்கறை ஆகும்.
( குன்றக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக்
கூறல் ஆகிய வழுக்கள் பற்றி அறிந்திட
விரும்புவோர்  அருகிலுள்ள பள்ளியின்
தமிழாசிரியர்களை அணுகலாம்). நிற்க.

பௌதிக இருப்பு என்ற அம்சத்தைச் சேர்ப்பதற்கு
முன், பொருளின் இலக்கணம் மிகவும்
நெகிழ்ச்சித் தன்மை கொண்டிருந்தது.
தொள தொள சட்டை போன்று இருந்தது.
பௌதிக இருப்பைச் சேர்த்த பின்னால்,
அளவெடுத்துத் தைத்த சட்டை போல
உடம்புக்குக் கச்சிதமாகப் .பொருந்துகிறது.

அப்படியானால் பௌதிக இருப்பு என்பது
பொருளுக்கான நிபந்தனையா என்று கேட்கிறார்
பிரதிவாதி மதியவன். ஆம், நிபந்தனைதான்
என்று அடித்துக் கூறுகிறோம்.

பௌதிக இருப்பு இல்லையென்றால்
பொருளாகாதா என்று மீண்டும் கேட்கின்றனர்
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப் பட்டோர். ஆம்,
பௌதிக இருப்பு இல்லாவிடில் அது பொருளாகாது
என்று சத்தியம் செய்கிறோம். திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவிலில் சூடனைப் பொருத்தி
அணைக்கத் தயாராக இருக்கிறேன் என்று
மதியவன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருள் பற்றிய விவாதமே சாதியம் பற்றிய
விவாதத்தில் இருந்துதான் பிறந்தது. அண்ணன்
தியாகு அவர்கள் "சாதியும் ஒரு பொருளே" என்று
கூறியபோது. அதை மறுத்து "பௌதிக இருப்பு
இல்லாத எந்த ஒன்றும் பொருள் அல்ல" என்று
நான் கூறியதைத் தொடர்ந்தே பொருள் பற்றிய
விவாதம் மேலெழுந்தது.

எனவே நியூட்டன் அறிவியல் மன்றம், தோழர்
மதியவன் புகார் கூறுவது போல, எதையும்
மறைக்கவில்லை, திரிக்கவில்லை. எமது
நிலையை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக
முன்வைக்கிறோம். எல்கேஜி வகுப்புக் குழந்தை
"மிஸ், சிரிக்கிறான் மிஸ், கிள்ளிட்டான் மிஸ்"  
என்று புகார் கூறுவது போல, தோழர் மதியவனும்
"இளங்கோ திரிக்கிறார், இளங்கோ மறைக்கிறார்"
என்று கூறுவது சிரிப்பு மூட்டுகிறது.

பொருளுக்கும் கருத்துக்கும் இடையில் ஒரு
கறாரான எல்லைக்கோட்டை "பௌதிக இருப்பு"
என்னும் எமது புதிய இலக்கணம் வகுத்து
விடுகிறது. கடவுள் என்னும் கருத்தும் கூடப்
பொருளாகி விடும் அபாயத்தை எமது புதிய
இலக்கணம் நீக்கி விடுகிறது. பொருளுக்கு
மானசீக இருப்பு மட்டுமே உண்டு என்ற
ஆதிசங்கரரின் இலக்கணத்தை எமது புதிய
இலக்கணம் சுக்குநூறாக நொறுக்கி விடுகிறது.
அத்வைதத்தின் சவப்பெட்டியில் அறைந்த
கடைசி ஆணியாக பௌதிக இருப்பு அமைகிறது.

பௌதிக இருப்பு தேவையில்லை என்று சொல்லும்
அக்கணமே மானசீக இருப்பு உடையதும்
பொருள் என்றாகி விடுகிறது. மானசீக இருப்பு
உடைய திருநெல்வேலி நெல்லையப்பர்
போன்றவர்களும் பருண்மையான பொருளாகி
விடுகின்றனர். ஆகவே தோழர்களே,
பௌதிக இருப்பு இருந்தால் மட்டுமே பொருள்
என்பதை  ஏற்க மறுக்கும் எவர் ஒருவரும்
ஆதிசங்கரரின் METAPHYSICS படுகுழியில்
விழுந்து விடுவார் என்று எச்சரிக்கிறோம்..
*******************************************************        

     
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக