செவ்வாய், 18 டிசம்பர், 2018

அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்ப
பருப்பொருளின் வரையறையை
சீரமைப்பது எப்படித் தவறாகும்?
இதற்கு யாருடைய அனுமதியைப் பெற வேண்டும்?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
அறிவியலுக்கு வர்க்கச் சார்பு கிடையாது.
(Science is not class biased). பூர்ஷ்வா ரயில் என்றோ
பாட்டாளி ரயில் என்றோ எதுவும் கிடையாது.

பொருள்முதல்வாதம் என்பது முற்ற முழுக்க
அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
அறிவியலைச் சார்ந்தே அது பிறந்தது.
அறிவியலைச் சார்ந்தே காலந்தோறும் அது
வளர்ந்து வந்திருக்கிறது. பொருள்முதல்வாதமானது,
அந்தந்தக் காலக் கட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு
நேர் விகிதப் பொருத்தத்தில் (directly proportional)
இருந்து வந்திருக்கிறது. இனியும் இருக்கும்.

பொருள்முதல்வாதம் என்பது இயற்கை, பிரபஞ்சம்
ஆகியவை பற்றிய, பொருளை முதன்மையாகக்
கொண்ட, கடவுளை மறுக்கிற, அறிவியல் வழிப்பட்ட
ஓர் உலகக் கண்ணோட்டம்.

மார்க்சியத்துக்கு உள்ளும் மார்க்சியத்துக்கு
வெளியிலும் உள்ள சிந்தனையாளர்களால்
காலந்தோறும் பொருள்முதல்வாதம் புதுப்பிக்கப்
பட்டு வருகிறது. பாயர்பாக் முதல் மாவோ வரை  பொருள்முதல்வாதத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச்
செய்து இருக்கிறார்கள்.மார்க்சிய மூல ஆசான்கள்
ஐவரின் மறைவுக்குப் பின்னால்,
பொருள்முதல்வாதத்தைத் தொடர்ந்து
புதுப்பிப்பதில் ஸ்டீபன் ஹாக்கிங்
போன்ற விஞ்ஞானிகளுக்கும் பங்குண்டு.

லுத்விக் பாயர்பாக்கின் பொருள்முதல்வாதமே
மார்க்சியத்தின் ஒரு கூறாக மார்க்சால்
எடுத்துக் கொள்ளப்பட்டது என்கிறார் லெனின்.
மார்க்சும் எங்கல்சும் தங்களின் ஆசானாக
வரித்துக் கொண்ட லுத்விக் பாயர்பாக்
மார்க்சியவாதி அல்லர் என்பது அனைவரும்
அறிந்ததே.

ஆக பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சியில்
மார்க்சிய மூல ஆசான்களும் சரி, மார்க்சியத்துக்கு
வெளியில் உள்ள லுத்விக் பாயர்பாக் போன்ற
அறிஞர்களும் சரி மிகுதியாகப்ம் மிகுதியாகப்
பங்களித்து உள்ளனர்.

பொருள்முதல்வாதம் ஒட்டு மொத்த  மானுடத்துக்கும்
சொந்தமானது. எந்த ஒரு கட்சிக்கோ முகாமுக்கோ
இயக்கத்துக்கோ சொந்தமானது அல்ல.
லுத்விக் பாயர்பாக் ஆத்மா என்பதை
மறுப்பதற்கு முன்னாலேயே, அதுவும் 2000
ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆத்மாவை
மறுத்தவர் புத்தர். அவரின் "நிராத்ம வாதம்"
(theory of no soul) ஆத்மா இல்லை என்று கூறும்
பொருள்முதல்வாதம் ஆகும்.
(பார்க்க; ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய
"பௌத்தத் தத்துவ இயல்").

இந்தியத் தத்துவஞான வரலாற்றைப் படித்தால்,
இந்தியப் பொருள்முதல்வாதம் மேற்கத்தியப்
பொருள்முதல்வாதத்தை விட காத்திரமாகவும்
ஆழமாகவும் இருந்தது என்பது புலப்படும்.

எனவே நமது தாய்நாட்டின் செழுமையான
தத்துவஞான மரபின் மீது கால் பதித்து நின்று
கொண்டு, நவீன அறிவியலுக்கு ஒத்திசைவாக
அமையும் விதத்தில், பருப்பொருள் பற்றிய
வரையறையை முழுமையாக்க நியூட்டன்
அறிவியல் மன்றம் முன்வருகிறது.

இதற்கு நாங்கள் யாரிடம் அனுமதி வாங்க
வேண்டும்? பருப்பொருளின் வரையறைக்கு
பதிப்புரிமை, காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை
ஆகியவற்றை வைத்திருப்பவர் யார்?

பருப்பொருளை நீ வரையறுக்கக் கூடாது என்று
எங்களைத் தடுக்கும் உரிமையும் அருகதையும்
அதிகாரமும் படைத்த அதிமானுடர் யார்?

பொருள்முதல்வாதம் என்ன வீரவநல்லூரில்
தாமிரபரணிப் பாசனத்தில் உள்ள முக்குருணி
விதைப்பாடு அயன் நஞ்சை நலமா? பருப்பொருளுக்கு
புதிய வரையறையை முன்மொழிவது அடுத்தவன்
நாத்தங்காலில்  இறங்கி நடவு நடுவதா?

பொருள்முதல்வாதம் எவர் ஒருவரின் தனிச்சொத்தும்
அல்ல. எந்த மைனராவது தன் மார்பில்
அணிந்திருக்கும் புலிநகம் பதித்த தங்கச்
சங்கிலியும் அல்ல. அக்கறையும் ஆற்றலும் உள்ள
தகுதி வாய்ந்த எந்த ஒரு பொருள்முதல்வாதியும்
பருப்பொருள் பற்றிய புதிய வரையறையை
முன்வைக்கலாம். இதில் அருகதை உள்ள
எல்லோருக்கும் சம உரிமை உண்டு.

பருப்பொருள் பற்றிய புதிய வரையறையை
தமிழ்ச் சமூகத்தின் முன்பாக வைப்பது
எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.
முன்வைக்கப்பட்ட புதிய வரையறை சரியா
தவறா என்பதை அறிவியல் தீர்மானிக்கட்டும்.

பருப்பொருள் என்பது ஓர் புறநிலை யதார்த்தம்
(objective reality) என்ற லெனினின் வரையறையை
நியூட்டன்  அறிவியல் மன்றம் அப்படியே .ஏற்கிறது.
பருப்பொருள் பற்றிய வரையறையில் லெனினின்
பங்களிப்பு எவ்வளவு மகத்தானது என்பதை
யாரினும் கூடுதலாக நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.

எமது புதிய வரையறை லெனினின் வரையறைக்கு
 எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல. இதை ஆயிரம்
முறை கூறி இருக்கிறோம். பருப்பொருள் பற்றிய
வரையறையை முழுமையாக்குவதே எமது
ஒரே நோக்கம். பௌதிக இருப்பு உடையதே
பொருள் என்பதே எமது முன்வைப்பு. பௌதிக
இருப்பற்ற  விஷயங்களையும் பொருளாகக்
கருதுவது ஆதிசங்கரரின் அத்வைதப் பார்வைக்கு
வலு சேர்க்கிறது. பொருள்முதல்வாதத்திற்கும்
கருத்துமுதல்வாதத்திற்கும் இடையிலான
எல்லைக்கோட்டை அழித்து  விடுகிறது.

தத்துவம் என்பது இயற்கையை உள்ளது உள்ளபடி
பிரதிபலிக்க வேண்டும் என்றார் எங்கல்ஸ்.
இன்றைய உலகில் நடைபெறும்  ஒவ்வொரு
அறிவியல் பரிசோதனையும் பொருள்முதல்
வாதத்தின் சரித்தன்மையை நிரூபித்துக்
கொண்டிருக்கிறது. எனவே பொருள்முதல்
வாதமானது இன்றைய அறிவியலை
உட்கிரகித்துக் கொண்டு தன்னைப் புதுப்பித்துக்
கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
அப்போதுதான் இன்றைய பொருள்முதல்வாதம்
லெனின் கூறிய போர்க்குணமிக்க பொருள்முதல்
வாதமாக இருக்கும்.

பருப்பொருள் பற்றிய எமது புதிய வரையறை
எவ்விதத்திலும் வரலாற்றுப்  பொருள்முதல்
வாதத்துக்கு எதிரானதல்ல. மார்க்சியத்தின்
மூன்று உள்ளடக்கக் கூறுகளில் எந்த ஒன்றின்
மீதும் எமக்கு எதிர்மறையான கருத்து இல்லை.
எனவே எமது புதிய வரையறை மார்க்சியத்துக்கு
எதிரானது என்று எவரேனும் கருத முற்படுவது
பிறழ்புரிதல் ஆகும். அது திசை திருப்பும்
நோக்கம் .கொண்டதாகும்.

எமது புதிய வரையறைக்கான நியாயங்கள்
மற்றும் விளக்கங்கள் அடுத்த கட்டுரையில்
வெளியிடப்படும்.
*****************************************************   
கிருஷ்ணசாமி  தியாகராஜன் மருதுபாண்டியன்
நலங்கிள்ளி

ஆம், கருத்து என்பது பொருளின் பிரதிபலிப்பு
என்கிறது மார்க்சியம். பொருளே முதன்மையானது;
கருத்து இரண்டாம்பட்சமானது (secondary) என்கிறது
மார்க்சியம்/ எனவே எந்த ஒரு கருத்தும் ஏதாவது
ஒரு பொருளின் பிரதிபலிப்பே.  
  

தூய கற்பனை (pure imagination) என்பது கூட,
பொருள் இல்லாமல் தோன்ற இயலாது என்பது
மார்க்சியம் வலியுறுத்துகின்ற விஷயம்.
 

கருத்துமுதல்வாதம் என்பது கருத்தே
முதன்மையானது என்று கூறும் தத்துவம்.
பொருளல்ல கருத்தே அனைத்தையும்
தீர்மானிக்கிறது என்பதே க.மு.வாதம்.
பொருளின் முதன்மையை மறுக்கிறது
கமு  வாதம்.
பொருள் என்பது நமது கருத்தில் நிலவும்
விஷயம் என்கிறது கமு வாதம். இதன் அர்த்தம்
என்னவெனில் பொருளுக்கு பௌதிக இருப்பு
கிடையாது, மானசீக இருப்பு மட்டுமே உண்டு
என்பதாகும். அத்வைதம் இப்படித்தான் கூறுகிறது.

எனவேதான் பொருளை வரையறுத்த லெனின்
பொருள் என்பது மனித சிந்தனைக்கு வெளியில்
நிலவும் புறநிலை யதார்த்தம் என்கிறார்.  

இவற்றை என்னிடம் சொல்லிப் பயனில்லை.
நான் ஸ்டாலின் கூறியது 100  சதம் சரி என்று
ஏற்றுக் கொண்டுள்ளேன். 
எனவே சப்பைக்கட்டு கட்டுவதில் பயனில்லை.

கருத்து என்பது பொருளின் பிரதிபலிப்பு என்றால்
ஜெராக்ஸ் பிரதி போன்றது என்றோ, புகைப்படம்
போன்றது என்றோ பொருளன்று. கருத்து என்பதில்
படைப்பாக்கத் தன்மை கொண்ட கற்பனைக்கும்
இடமுண்டு.

ஆதிமனிதனின் காலத்தில், நல்லது கெட்டது
எல்லாமே வானத்தில் இருந்துதான் வந்தது.
சூரிய ஒளி, சந்திர ஒளி, மழை, இடி, மின்னல்
ஆகிய எல்லாமே வானத்தில் இருந்துதான்
வந்தன. இவை நன்மை தீமை  இரண்டையும்
செய்ய .வல்லவை. இவை அனைத்துமே
புறநிலையில் .உள்ளவை. பௌதிக இருப்பு
உள்ளவை. இவைதான் பொருள் (matter).

இந்தப் பொருளைப் பார்த்துத்தான் கருத்தானது
மனித மூளையில் உதயமாகிறது. சர்வ சக்தி
வாய்ந்த  கடவுள் என்பவர்
(அதிமானுடர், most powerful superman)  மேலே
வானத்தில் இருந்து கொண்டு, ஒளியையும்
இருட்டையும் தருகிறார், மழையையும் இடி
மின்னலையும் தருகிறார் என்ற கற்பனை
உருவானது. முதலில் அதிமானுடன் என்று
கற்பனை செய்த ஆதி மனிதன் பின்னர்
கடவுள் என்பதை கற்பனையில் உருவாக்கினான்.

இங்கு கடவுள் என்ற கருத்து உருவாவதற்கு
வானம், சூரியன், இடி, மின்னல், மேகம், மழை
ஆகிய பௌதிக இருப்பு உடைய பொருட்கள்
காரணமாக அமைந்தன. இப்படித்தான்
கருத்து என்பது பொருளில் இருந்து, பொருளை
மூலமாகக் கொண்டு (matter as a resource), பிறக்கிறது.
கடவுள் என்ற கருத்தானது மனிதனின்
படைப்பாக்கத் திறனுடன் கூடிய கற்பனையாக
மெருகேற்றப் .படுகிறது. கடவுளுக்கு மனைவி
பிள்ளைகள் ஆகிய எல்லாமே கற்பனையில்
செய்யப் படுகின்றன.  

கணிதத்தில் சில  postulates, சில abstractions தவிர்க்க
இயலாதவை. பொருளின் மீது shrink fitting போல
கனகச்சிதமாகப்  பொருந்துவது அல்ல கருத்து.
கருத்துக்கு பொருளே மூலம், பொருளே  ஆதாரம்
என்பதையே பொருள்முதல்வாதம் .கூறுகிறது.
Mirror image போலவும் பொருளின் பிரதிபலிப்பாக
கருத்து இருக்கும். அப்படி அல்லாமல் சற்று
மாறுபட்டும் இருக்கும். கிடைத்த ஒரு படத்தை
photoshop செய்வது போலவும் கருத்து இருக்கும்.
பொருள் கருத்து இரண்டுக்குமான  உறவு
primary மற்றும் secondary போன்றது.
      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக