ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இலக்கியப் பக்கங்கள்:
இலக்கிய மாணவர்களுக்கு மட்டுமானது!
மீள்பதிவு!
-----------------------------------------
கருக்கல் மறைந்து வானம் வெளுத்தது!
(ஆண்டாள் திருப்பாவை விளக்கவுரை)
-----------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------
பாசுரம்-8
--------------------
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
---------------------------------------------------------------------------------
விளக்கவுரை:
ஆண்டாள் தன் தோழியருடன் ஆய்ப்பாடியில் உள்ள
பிற பெண்களைத் துயில் எழுப்பச் செல்கிறாள். 
இப்போது பொழுது நன்கு புலர்ந்து விட்டது. கருக்கலுக்கே 
உரிய இருட்டு மறைந்து கீழ்வானம் நன்கு வெளுத்து 
விட்டது. 
இதற்கு முந்திய பாசுரத்தில் இருள் பிரியவில்லை. 
ஆறாம் பாசுரத்தில்
"புள்ளும் சிலம்பின காண்" என்கிறாள். 
ஏழாம் பாசுரத்தில்
"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின
பேச்சரவம்" பற்றிக் கூறுகிறாள்.
உயிரினங்களில் பொழுது புலர்வதை முதலில்
உணர்வன பறவைகளே. பின்னரே விலங்குகளும்
மனிதர்களும் உணர்கின்றனர். சேவல்தான் முதலில்
கூவிப் பொழுது விடிவதை இன்றும் அறிவிக்கிறது.
ஆறாம் பாடலை விட, ஏழாம் பாடலில் மேலும்
நேரம் கூடிவிட்டது என்பதை உணர்த்துகிறாள் ஆண்டாள்.
ஆறாம் பாடலில் புள்ளும் சிலம்பின காண் என்பதன் மூலம்
ஒரு சில பறவைகள் ஓசை எழுப்பின என்ற ஆண்டாள்,
ஏழாம் பாடலில் கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்
கலந்து பேசின பேச்சரவம் என்பதில், "எங்கும்" என்ற
சொல்லால் எல்லா இடங்களிலும் பறவைகள் ஓசை
எழுப்பத் தொடங்கி விட்டன என்று கூறுவதன் மூலம்
ஆய்ப்பாடியின் மொத்தப் பறவைக் கணமும் கூடு
துறந்து வெளியில் பறந்து விட்டன என்று உணர்த்துகிறாள்.
இந்த எட்டாம் பாசுரத்தில் பொழுது மேலும் அதிகரித்து
விட்டது. பறவைகளுக்கு அடுத்து எருமைகளும்
தொழுவம் நீங்கி மேயச் சென்று விட்டன. பசும்புல்
தரை முழுவதும் எருமைகள் பரவி நின்று மேய்கின்றன.
சிறுவீடு என்பதில் வீடு என்றால் தொழுவத்தில் இருந்து
விடுதலை என்று பொருள்படும். ஆயின், வீடு என்று
சொன்னால் போதுமே, சிறுவீடு என்று ஆண்டாள் சொன்னது
ஏன்? .
பொழுது புலர்ந்ததுமே கறவைகளிடம் பால் கறப்பதில்லை.
அதிகாலையில் சிறிது மேய்ந்த பின்னர் தொழுவம்
திரும்பிய பின்னரே பால் கறப்பர்.பால் கறப்பதற்கு .
முன்னர் கறவைகளுக்கு அதிகாலையில் கிடைத்த
இந்த விடுதலையை சிறுவீடு என்கிறாள் ஆண்டாள்.
இந்தப் பாடலில் ஆண்டாள் எழுப்பச் செல்லும் பெண்
ஒரு கோதுகலமுடைய பாவை. எந்நேரமும் மனம் நிறைந்த
மகிழ்ச்சியுடன் இருப்பவள். தான் இருக்கும் இடத்தை
மகிழ்ச்சியால் நிரப்பி விடுபவள் இவள் எனவே இவள்
இல்லாமல் ஆண்டாள் செல்ல விரும்பவில்லை.
ஏற்கனவே நமது தோழியரில் பலர் நீராடச் சென்று
விட்டார்கள். மீதியிருப்பவர்களும் நீராட .விரைகிறார்கள்.
அவர்களை இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டு உன்னைக்
கூப்பிட வந்திருக்கிறேன், எழுந்து வா என்கிறாள் ஆண்டாள்.
குதிரை வடிவில் வந்த அசுரனின் வாயைப் பிளந்து
கொன்றவனும், கம்சனின் அரசவை மல்லர்களை
மற்போரில் வென்றவனும் ஆகிய, தன் வீரத்தால்
தலைவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய கண்ணனை
வணங்கச் செல்வோம், வா.
நம்மைக் கண்டு கண்ணனே வியந்து நிற்பான். நம்மில்
எவர் எவர்க்கு என்ன வேண்டும் என ஆராய்ந்து அருள்
புரிவான், எனவே விரைந்து வா பெண்ணே என்கிறாள்
ஆண்டாள்.

இப்பாசுரத்தில் வரும் மேய்வான், போவான், கூவுவான்
ஆகிய சொற்கள் எதிர்கால வினைமுற்றுகள் அல்ல.
அவை ஆண்டாள் காலத்துத் தமிழில் பயின்ற வினையெச்ச
வாய்பாடுகள். தமிழ் இலக்கணம் கற்றோர் "வான், பான்,
பாக்கு" என்னும் வினையெச்சங்கள் பற்றிக் கற்றதை
ஈண்டு நினைவு கூர்க. 
**********************************************************************

எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் 
என்பதில் வரும் சிறுவீடு என்பதற்கு இதுவரை 
எவரும் விளக்கம் கூறியதில்லை. முனைந்து 
பொருள் கண்டறிந்து கூறியவன் யானே என்பதை 
மிகுந்த தன்னடக்கத்துடன் பதிவு செய்கிறேன்.
-
நெல்லை மாவட்டத்தில் மாடு வளர்ப்போர் 
:"கொஞ்சம் அவுத்து வுடு" என்பார்கள்.  இவ்வாறு 
" அவுத்து வுடுவது" தான் சிறு வீடு. அதாவது கயிற்றை 
அவிழ்த்து தொழுவத்தில் இருந்து வெளியே 
செல்லுமாறு விடுவது என்று பொருள். மாடு 
கன்றுகளோடு வளர்ந்தவர்கள்தாம் சிறுவீடு 
என்பதன் பொருளை அறியவும் உரைக்கவும்
முடியும்.     

ஆனந்தன் அமிர்தன்  கருங்குளம் முருகன் 

IKKATTURA

படித்தேன்; மகிழ்ச்சி; நன்றி.
முத்தமிழ் அறிஞரை விட்டு விட்டீர்களே!

மைக்கேல்ராஜ் நே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக