வெள்ளி, 21 டிசம்பர், 2018

வடக்கு வீழ்கிறது!
தெற்கு அரியணையில் வீற்றிருக்கிறது!
----------------------------------------------------------------------
ஒரு காலத்தில் ஆன்மிகம் என்றால்
வட இந்தியாதான். பெரும் பெரும் யாகங்கள்,
யக்ஞங்களை  வட இந்தியர்கள்தான் நடத்தி
வந்தனர். தென்னிந்தியா மிகவும் பின்தங்கியே
இருந்து வந்தது.

அண்மைக்காலமாக இந்நிலை மாறி வருகிறது.
இந்திய அளவில் பெரும் யாகங்களைச் செய்து
புகழ் பெற்றார் தெலுங்கானா முதல்வர்
சந்திர சேகர ராவ். கர்நாடகத்தில் கவுடா,
குமாரசாமி ஆகியோர் மூடநம்பிக்கையின்
எல்லையைத் தொட்டனர். கேரளத்தில் கூட
காம்ரேடுகள் கிருஷ்ண ஜெயந்தி நடத்தி
கிருஷ்ணரின் அருளாசி பெற்றனர்.

ஆன்மிக வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு
வேறு எவரையும் விட அதிகமானது. திராவிட
இந்துத்துவம் கொடிகட்டிப் பறக்கும் இடம்
தமிழ்நாடு.

யாக யக்ஞங்களைச் செய்வதில் உலக
அளவில் புகழ் பெற்றவர் ராஜாத்தி அம்மாள்.
அதிகமான எண்ணிக்கையில் யாக யக்ஞங்களைச்
செய்தவர் என்ற பெருமையை ராஜாத்தி அம்மாள்
பெறுகிறார்.இவரைக் கெளரவிக்கும் முகத்தான்
யக்ஞ சரஸ்வதி என்ற பட்டம் அண்மையில்
இவருக்கு வழங்கப் பட்டு இருக்கிறது.

லேசான மலச்சிக்கல் இவருக்கு இரண்டு
நாட்களாக இருந்தால் போதும். உடனே ஒரு
யாகத்தைச் செய்து மலச்சிக்கல் அவதியில்
இருந்து விடுதலை அடைந்து விடுவார். 2G
வழக்கில் சாதகமான தீர்ப்பு வர, இவர்
நடத்திய பிரம்மாண்ட யாகமே காரணம்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்
பெருவழுதிக்குப் பின் யாக யக்ஞங்களைச்
செய்வதில் தலைசிறந்து விளங்கும்
ராஜாத்தி அம்மாள் வாழிய

ராஜாத்தி அம்மாளுக்குப் போட்டியாக
ஆன்மிகத்தில் தினமும் முத்துக் குளிப்பவர்
துர்கா ஸ்டாலின் அம்மையார். தமிழ்நாடு
முழுவதும் உள்ள திருக்கோவில் வழிபாடுகளில்
கலந்து கொண்டு கலக்குபவர். இவர் இல்லாமல்
தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் எந்தக் கோவில்
விசேஷமும் நடக்காது. கோவில் விசேஷங்களுக்கு
அள்ளி அள்ளி  வழங்குவதில் மற்ற எவரும்
இவரின் அருகில்கூட வர முடியாது.

ராஜாத்தி அம்மாள், துர்கா ஸ்டாலினைத்
தொடர்ந்து, ஆழ்வார்கள் ஆய்வு மையம் நடத்தும்
ஜெகத் ரட்சகன், ஆன்மிக அருளாளர் கே என் நேரு
ஆகியோர் இந்துத்துவத்தின் தூண்களாகத்
திகழ்ந்து, தமிழகத்துக்கே ஆன்மிக ஒளி
பாய்ச்சி வருகின்றனர்.

ஆக, வட இந்தியா பொலிவிழந்து விட்டது.
ஆன்மிக  அரியணையில் இருந்து வடக்கு
வெளியேறி விட்டது. தெற்கு அரியணையில் ஏறி
விட்டது. இந்தச் சாதனையை நிகழ்த்திக்
காட்டிய ராஜாத்தி, துர்கா, ஜகத் ரட்சகன்,
நேரு ஆகியோர் வரலாற்றில் இடம் பெற்று
விட்டனர்.

தமிழகம் பெரியார் மண் அல்ல.
ஆன்மிக மண்!
*********************************************  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக