வியாழன், 13 டிசம்பர், 2018

கூட்டம் நடத்தக் கூடாது என்ற மாநிலச் சங்கத்தின்
கட்டளையால் இன்றைய கூட்டம் ரத்தானது!
-------------------------------------------------------------------------------------
தோழர் மதிவாணன் பேசுவதாக இருந்த இன்றைய
(14.12.2018) வேலைநிறுத்த  வாபஸ் பற்றிய விளக்கக்
கூட்டம் ரத்தாகியுள்ளது. கிளைச் சங்கத்தின் உரிமையில் மாநிலச் சங்கம் வரம்பு மீறித்
தலையிட்டு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
என்று கண்டிப்புக் காட்டியதை அடுத்து இக்கூட்டம்
ரத்து செய்யப்படுகிறது..

கூட்டத்தை ஏன் நடத்தக் கூடாது என்பதற்கு மாநிலச்
சங்கம் எத்தகைய நியாயமான விளக்கத்தையும்
அளிக்கவில்லை. "விளக்கமெல்லாம் தேவையில்லை,
நடத்தக்கூடாது என்றால் நடத்தக்கூடாதுதான். மீறி
நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்"
என்று எச்சரித்தது மாநிலச் சங்கம்.

மாநிலத் தலைவரே இக்கிளைச் செயலாளருடன்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்தை
நடத்தக் கூடாது என்றும், மீறி நடத்தினால் ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக
எச்சரித்தார்.

குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியும்
பறித்ததாம் என்பது போல, கோட்டப் பொறியாளருடன்
தொடர்பு கொண்டு, இக்கூட்டத்திற்கு வழங்கப்பட்ட
இட அனுமதியை ரத்து செய்யுமாறு வலியுறுத்தப்
பட்டுள்ளது. இதன் மூலம் சங்கத்தின் பிரச்சினைக்கு
நிர்வாகத்திடம் சரணடைவது என்ற அவலம் அரங்கேறி
உள்ளது. நிர்வாகத்திடம் அடிபணிந்தாவது இந்தக்
கூட்டத்தை நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்ற
அளவுக்கு சங்கத்தின் உயர்மட்ட அமைப்பு
கீழிறங்கலாமா?

செய்து முடி அல்லது செத்து மடி (Do or die) என்ற
முழக்கத்துடன் டிசம்பர் 3 வேலைநிறுத்தத்திற்கு
ஆயத்தம் ஆனோம். ஆனால் திடீரென வேலைநிறுத்தம்
வாபஸ் .பெறப்பட்டது. இந்நிலையில் நடந்தது
என்ன, கோரிக்கைகளின் நிலவரம் என்ன என்று
அறிந்து கொள்ள ஊழியர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கும்  பொருட்டே
இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் என்ன தவறு? இது எந்தவொரு கிளைச்சங்கமும்
மேற்கொள்கின்ற இயல்பான ஒரு நடவடிக்கைதானே!
இந்தக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய
அவசியம் என்ன? மாநிலச் சங்கம் பதில் சொல்லுமா?

FNTO அல்லது BSNLEU  போன்ற மாற்றுச் சங்கத்
தலைவர்களை உரையாற்ற அழைத்து இக்கூட்டம்
நடத்தப் படவில்லை. நமது சங்கமான NFTE சங்கத்தின்
சென்னைத் தொலைபேசி மாநிலச் செயலரை
உரையாற்ற அழைத்துள்ளோம். இதிலெல்லாம்
தவறு கண்டுபிடித்தால் பின் எப்படித்தான் சங்கம்
நடத்துவது?

அ) கூட்டம் நடத்தக் கூடாது என்ற உத்தரவு
ஆ) நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை என்ற மிரட்டல்
இ) இதிலும் திருப்தி அடையாமல், நிர்வாகத்திடம்
சரணடைந்து, கூட்டம் நடத்துவதற்கு இடம் தரக்
கூடாது என்று கெஞ்சுதல்
இந்த அளவுக்கு அராஜகத்தின் எல்லையைத் தொட்டு
நிற்க வேண்டிய அவசியம் என்ன? ஒருவர் ஒரு
மணி நேரம் பேசினால் பூகம்பம் வந்து விடுமா? அல்லது
தொலைபேசி இணைப்பகம்தான் இடிந்து விழுந்து விடுமா?

வேலைநிறுத்தம் என்பது ஒரு சில தலைவர்கள்
மட்டும் பங்குபெறும் உண்ணாவிரதப் போராட்டம்
போன்றதல்ல. இது ஒவ்வொரு தொழிலாளியும்
உணர்வுபூர்வமாகப் பங்கு பெறும் கூட்டுச் செயல்பாடு
(concerted action) ஆகும். எனவே ஒரு வேலைநிறுத்தம்
விலக்கிக் கொள்ளப்படும்போது,  அதற்கான
காரணங்கள் என்ன என்று ஊழியர்களுக்கு
விளக்கம் அளிக்க வேண்டியது சங்கத்தின்
கடமையாகும்.

வேலைநிறுத்தப் பிரச்சாரக் கூட்டங்கள் அதிக அளவில்
நடந்தது போலவே, வேலைநிறுத்தம் ஏன் விலக்கிக்
கொள்ளப்பட்டது என்ற விளக்கக் கூட்டங்களும்
அதிக அளவில் நடைபெற வேண்டும். மாநிலச் சங்கம்
சார்பாகவும் AUAB சார்பாகவும் வேலைநிறுத்த
வாபஸ் பற்றிய காரணங்களைத் தெரிவிக்கும்
கூட்டங்கள் பேரளவில் நடைபெற்று இருக்க வேண்டும்.
ஊழியர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல
வேண்டிய கடமையை மனதில் கொண்டே எங்கள்
கிளைச் சங்கம் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
இதைத் தடுத்ததன் மூலம் ஊழியர்களை
அவமதித்துள்ளது மாநிலச் சங்கம். ஊழியர்களுக்குப்
பதில் சொல்லும் பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளது
மாநிலச் சங்கம்.

NFTEயின் பாரம்பரியம் இதுவல்ல. விமர்சனங்களை
எப்போதும் வரவேற்பதும் ஊழியர்களிடம் எல்லா
உண்மைகளையும் சொல்வதுமே NFTEயின் பண்பாடு.
தலைவர்கள் ஓ பி குப்தா, ஜெகன் போன்றோர்
அப்படித்தான் சங்கத்தை நடத்தி வந்தனர்.
முழுமையான ஜனநாயகம் மட்டுமே சங்கத்தை
உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் என்று உணர்ந்து
அவ்வாறே சங்கத்தை நடத்தியும் வந்தனர். சங்கத்தை
இப்படித்தான் நடத்த வேண்டும் என்று நமக்குக்
கற்பித்து விட்டும் சென்றனர்.

ஆனால் மாநிலச்சங்கம் இன்று நடத்தி இருப்பது
அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. தொழிற்சங்க
ஜனநாயகத்துக்கே பெரும்  அச்சுறுத்தலாக
அமைந்து விட்டது மாநிலச் சங்கத்தின் இந்த நடவடிக்கை.
விளக்கக் கூட்டங்களை நடத்துமாறு கிளைகளை
ஊக்குவிக்க வேண்டிய மாநிலச் சங்கமானது,
இதற்கு நேர் எதிராக கூட்டம் நடத்தாதே என்று
எச்சரிப்பது சரியா? இதுதான் NFTE பாரம்பரியமா?
இதுதான் தலைவர்கள் குப்தா ஜெகன் காட்டிய பாதையா?

BSNLEU சங்கத்துடனான நமது உறவு என்பது சக
இடதுசாரிச் சங்கத்துடனான தோழமை உறவே.
இவ்விரு சங்கங்களுக்கு இடையிலான உறவு
கணினித் தொழில்நுட்பத்தில் வரும் எஜமான்-அடிமை
உறவு போன்றதல்ல (Not a master slave relationship). எனவே
BSNLEU மற்றும் AUAB கூட்டமைப்பு எடுத்த  வேலைநிறுத்தத்தை
விலக்கிக் கொள்வது என்ற  முடிவை விமர்சன ரீதியாக
அணுகும் ஊழியர்களின் உரிமையை யாருக்காகவும்
பலி கொடுக்க வேண்டிய தேவை இல்லை. 

கூட்டம் நடத்தக் கூடாது என்று மாநிலச் சங்கம்
கட்டளையிட்ட பிறகு, அமைப்புச் சிக்கலை
ஏற்படுத்த வேண்டாம் என்ற நல்ல நோக்கத்தின்பேரில்
கிளைச்சங்கமானது இக்கூட்டத்தை ரத்து செய்து விட்டது.
மாநிலச் சங்கத்தின் நியாயமற்ற உத்தரவை மீறி,
இக்கூட்டத்தை நடத்தியிருக்க முடியுமா என்றால்,
நிச்சயமாக விண்ணதிரும் முழக்கங்களுடன்
நடத்தியிருக்க முடியும். ஆனால் அதை இக்கிளைச்சங்கம்
செய்ய விரும்பவில்லை. கிளையின்  உறுப்பினர்களின்
உணர்வுக்கு மதிப்பளிக்க மாநிலச் சங்கம்
தவறிய நிலையிலும், மாநிலத் சங்கத்திற்கு உரிய
மதிப்பை அளிக்க நாங்கள் விரும்பினோம்.

மாநிலச் சங்கத்தின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நிர்வாகம்
இடம் தர மறுத்தாலும், தடையை மீறி அதே இடத்தில்
எங்களால் கூட்டம் நடத்தியிருக்க முடியும்; அல்லது வேறொரு
இடத்தில் கூட்டம் நடத்தியிருக்க முடியும். சீப்பை
ஒளித்து வைப்பதால் கல்யாணம் நின்று விடாது.

ஆனால் சங்கக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நிற்பதும்,
நடந்த உண்மைகளை ஊழியர்களிடம் முன்வைத்து
நியாயம் கேட்பதுமே சரியான நடவடிக்கை ஆகும்
என்பதால், இக்கூட்டத்தை ரத்து செய்துள்ளோம்.
எங்களின் நியாயத்தை ஊழியர்கள் அங்கீகரிப்பார்கள்
என்றும் மாநிலச் சங்கம் தனது தவறை உணர்ந்து
திருத்திக் கொள்ளும் என்றும் நம்புகிறோம்.   
********************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக