வெள்ளி, 7 டிசம்பர், 2018

வெண்ணெய் திரளும்போது
தாழியை உடைத்தது போல்
BSNL வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------- 
நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது
அரசுத் துறை நிறுவனமான BSNL.தொடர்ந்து வாழ
இயலாத BSNL எப்போது உயிரை விடும் என்று
போட்டி நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

நெருக்கடியில் இருந்து தன்னை விடுவித்துக்
கொள்ளவும், கண்ணெதிரே தெரிகின்ற மரணத்தில்
இருந்து தப்பித்து தன்னுடைய உயிரைக்
காப்பாற்றிக் கொள்ளவும் இறுதிக்கும் இறுதியான
ஒரு முயற்சியை அண்மையில் BSNL மேற்கொண்டது.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளின் தொழிற்சங்கங்களின் 
கூட்டமைப்பான AUAB (All Unions and Associations of BSNL)
சார்பாக காலவரம்பற்ற வேலைநிறுத்தத்திற்கு
அறிவிப்பு கொடுக்கப்பட்டது. டிசம்பர் 3, 2018 முதல்
காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்க
ஊழியர்களும் அதிகாரிகளும் ஆயத்தமாயினர்.

ஆனால் என்ன துரதிருஷ்டம்! இந்த
வேலைநிறுத்தத்திற்குத் தலைமை தாங்கிய
மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவுத் தொழிற்சங்கமான
BSNLEU (BSNL Employees Union) வெண்ணெய் திரளும்போது
தாழியை உடைத்து விட்டது. ஆம்,  வேலைநிறுத்தத்தை
வாபஸ் பெற்று விட்டது.வேலைநிறுத்தம் வாபஸ் 
என்ற தனது சொந்த முடிவை, கூட்டுப் போராட்டக்
குழுவான AUAB மீது மார்க்சிஸ்ட் சங்கம் திணித்தது.
இதன் விளைவாக திட்டமிடப்பட்ட டிசம்பர் 3
வேலைநிறுத்தம் சுக்குநூறாக நொறுங்கிப்
போனது. அதோடு சேர்த்து BSNLன் எதிர்காலமும்
நொறுங்கிப் போனது.   

முற்றிலும் அறிவியல்-தொழில்நுட்பத் துறையான
தொலைதொடர்பில் ஒரு நிறுவனத்தின் வாழ்வு
என்பது அது வைத்திருக்கும் தொழில்நுட்பத்தைச்
சார்ந்தே உள்ளது. இங்கு தொழில்நுட்பம் என்பது
பிரதானமாக அலைக்கற்றையைக் குறிக்கும்.

உலகெங்கும் 5G  எனப்படும் ஐந்தாம் தலைமுறை
அலைக்கற்றை மிகவும் பரவலாகி விட்டது.
இந்தியாவில் 5G அலைக்கற்றை (3300-3400 MHz
மற்றும் 3400-3600 MHz) 2019ஆம் ஆண்டின்
பிற்பகுதியில் ஏலம் விடப்படும் என்று
தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர்
திருமதி அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
(பார்க்க:எகனாமிக் டைம்ஸ், செப்டம்பர் 23, 2018).

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில்
பல்வேறு தனியார் நிறுவனங்கள் 4G
அலைக்கற்றையை வைத்திருக்கின்றன.
ஆனால் BSNL நிறுவனத்துக்கு இன்னமும்
4G அலைக்கற்றை வழங்கப்படவில்லை.      

வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவை
வழங்க வேண்டுமெனில், முன்னேறிய
தலைமுறையைச் சேர்ந்த அலைக்கற்றை
அவசியம். ஒரு திரைப்படத்தை ஒருவர்
பதிவிறக்கம் செய்கையில், 4G அலைக்கற்றையானது
வினாடிக்கு 1 ஜிபி (1gbps) வேகம் தரும். ஆனால்
5G அலைக்கற்றையானது வினாடிக்கு 20 ஜிபி
(20 gbps) வேகம் தரும். (பார்க்க: அமைச்சர் மனோஜ்
சின்ஹா நாடாளுமன்றத்தில் கூறியது; எகனாமிக்
டைம்ஸ், பெப்ரவரி 27.2018)  

ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்
தற்போது 4G அலைக்கற்றையை வைத்திருக்கின்றன.
அடுத்து 5G அலைக்கற்றையையும் அவர்கள்
வாங்கி விடுவார்கள். ஆனால் BSNLன் நிலை என்ன?

BSNL இடம் 4G இல்லை. 5Gயை நினைத்துப் பார்க்கவே
BSNLஆல் முடியாது. இந்நிலையில் BSNL உயிர்
வாழ்வது எப்படி? ஏற்கனவே கடந்த பல
ஆண்டுகளாகவே BSNLல் வளர்ச்சிப் பணிகள்
எவையும் மேற்கொள்ளப் படவில்லை. இதன்
பொருள் சந்தையின் தேவைக்கும்
வாடிக்கையாளர்களின் தேவைக்கும் BSNL ஈடு
கொடுக்க முடியவில்லை என்பதே. சுருங்கக்
கூறின், சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல்
பட்டினி கிடக்கும் நிலையில்தான் BSNL உள்ளது.  

நிறுவனத்தின் நிலை இவ்வாறு இருக்க, ஊழியர்களின்
நிலையோ இன்னும் மோசம். அவர்களுக்கான
பழைய ஊதிய விகிதம் காலாவதி ஆகிவிட்டது.
ஊதியம் திருத்தி அமைக்கப் பட வேண்டும். இது
முன்பே செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால்
செய்யப்படவில்லை. நிர்வாகமும் அரசும் சேர்ந்து
தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தன.

எனவே ஊதியம் திருத்தி அமைத்தல், 4G அலைக்
கற்றையை BSNLக்கு வழங்குதல் உள்ளிட்ட
கோரிக்கைகளை  முன்வைத்து டிசம்பர் 3 முதல்
காலவரமற்ற வேலைநிறுத்தம் செய்ய BSNL
தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தன.

நெருங்கி வரும் மரணத்தில் இருந்து BSNLஐக்
காப்பாற்ற வல்ல இந்த வேலைநிறுத்தத்தை
வாபஸ் பெற்று BSNLக்கும் ஊழியர்களுக்கும்
துரோகம் இழைத்துள்ளது மார்க்சிஸ்ட்
தொழிற்சங்கமான BSNLEU. இச்சங்கம் சீதாராம்
எச்சூரியிடம் இருந்து நேரடியாகக் கட்டளைகளைப்
பெறும் சங்கம் ஆகும்.

காலவரம்பற்ற இந்த வேலைநிறுத்தம்
நடைபெறுமானால் அது தமது அரசுக்குப் பெரும்
சங்கடத்தை விளைவிக்கும் என்று கருதிய
மோடி, இந்த வேலைநிறுத்தம்  நடக்கக் கூடாது
என்று விரும்பினார். இத்துறையில் முன்பு
அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திடம்
வேலைநிறுத்தத்தை  முறியடிக்கும் பொறுப்பை
மோடி ஒப்படைத்தார்.

ரவிசங்கர் பிரசாத் சீதாராம் எச்சூரியிடம்
பேசி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற
வைத்தார். சாம பேத தான தண்டம் என்னும்
நான்கு முறைகளில் மூன்றாவது முறையைக்
கையாண்டு யெச்சூரியை வீழ்த்தியுள்ளார்
ரவிசங்கர் பிரசாத் என்கிறது RSS வட்டாரம்..

மார்க்சிஸ்ட் தலைமை பெட்டி வாங்கிக் கொண்டு
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று விட்டது
என்ற செய்தி காட்டுத்தீயாக நாடு முழுவதும்
பரவி உள்ளது. ஒவ்வொரு டெலிபோன் எக்சேஞ்சிலும்
ஒவ்வொரு BSNL அலுவலகத்திலும் ஊழியர்கள்
கொதித்துப்போய் இருக்கிறார்கள். வாயில் கூட்டம்
நடத்தி ஊழியர்களை நேரடியாகச் சந்திக்க
இயலாமல் பயந்து போய்க் கிடக்கிறது
மார்க்சிஸ்ட் சங்கத் தலைமை.

மார்க்சிஸ்ட் தலைமை பெட்டி வாங்கி விட்டது
என்று இரண்டு லட்சம் ஊழியர்களும் கருதுவதை
யாரும் எளிதில் புறக்கணிக்க முடியாது.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
பேசுகிறவர்கள் அல்ல BSNL ஊழியர்கள்.

வேலைநிறுத்தம் ஏன் வாபஸ் பெறப்பட்டது
என்பதற்கு தர்க்கபூர்வமாகவோ நியாயமாகவோ
எந்தவொரு காரணத்தையும் மார்க்சிஸ்ட் சங்கத்
தலைமையால் கூற இயலவில்லை. ஏற்கத்தக்க
காரணம் எதுவும் இல்லாத வெற்றிடத்தை கனத்த
சூட்கேஸ்கள் நிரப்புவது இயற்கையே.

4G அலைக்கற்றையை அரசிடம் இருந்து வாங்குவது
என்பது பிரதானமாக இரண்டு அம்சங்களைக்
கொண்டது.
1. அலைக்கற்றையின் விலை. இது  பல்லாயிரம்
கோடி ரூபாய் செலவினம். உதாரணமாக அதிதிறன்
வாய்ந்த 700 MHz அலைக்கற்றையின் விலை
(Base price per mega Hertz ) ரூ 11,485 கோடி ஆகும்).
2. அடுத்து 4G சேவையை வழங்குதல் (Service roll out).
இதுவும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவினம்.

இன்றைய நிலையில் லட்சம் கோடி ரூபாய்
செலவழித்து அலைக்கற்றை வாங்கி சேவை
வழங்குவது என்றால்,அதற்குரிய நிதி ஆதாரம்
BSNLல் இல்லை.

ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட  எல்லாத் தனியார்
நிறுவனங்களும் தங்களின் சொந்த மூலதனத்தில்
சேவை வழங்கவில்லை. அவை பொதுத்துறை
வங்கிகளிடம் கடன் வாங்கியே தங்களின்
நிறுவனத்தை நடத்துகின்றன. இதைப் பொதுமக்கள்
அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, அரசு வங்கிகளிடம் இருந்து ஏர்டெல்
1,13,000 கோடி ரூபாய் கடன் .வாங்கியுள்ளது. சுனில்
மிட்டல் தன் சொந்த மூலதனத்தில் ஏர்டெல்
நிறுவனத்தை நடத்தவில்லை. இது போலவே,
ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவங்கள் சேர்ந்து
பொதுத்துறை வங்கிகளிடம் 1,20,000 கோடி ரூபாய்
கடனாக வாங்கி உள்ளன.

ஆனால் BSNL நிறுவனம் மட்டுமே தன் சொந்த
மூலதனத்தில் வாழ்ந்து வருகிறது. தற்போது
4G அலைக்கற்றையை வாங்குவதற்கும், சேவை
வழங்குவதற்கும் தேவைப்படும் லட்சம் கோடி
ரூபாயை BSNL எங்கிருந்து பெற இயலும்?
பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்றுத்தான்
4G சேவையை BSNLஆல் வழங்க இயலும்.

ஆனால், வங்கிகளிடம் இருந்து BSNL நிறுவனம்
கடன் வாங்குவதற்கு மோடி அரசு அனுமதிக்கவில்லை.
இது BSNL மீதான அரசின் மிகப்பெரிய தடை.
அது மட்டுமல்ல, அரசானது BSNLஐ ஒழிப்பதற்கு
முனைப்பாக உள்ளது என்பதற்கு இது
சான்றாகும்.

நிலைமை இவ்வாறு படுமோசமாக (precarious)
இருக்கும்போது, ஒரு வேலைநிறுத்தத்தை
நடத்தி, அரசைப் பணிய வைத்திருக்க வேண்டாமா?
பொத்துத்துறை வங்கிகளிடம் கடன் வாங்க
BSNLக்கு மட்டும் தடை விதித்த அரசின்
ஒரவஞ்சனையை  எதிர்த்துப் போராடி இருக்க
வேண்டாமா?

பேச்சுவார்த்தையில் வாங்கிக்கடனுக்கான
தடையை நீக்குவது குறித்து எதுவும்
பேசப்பட்டதா? இல்லை. AUAB தலைவர்கள்
கையெழுத்திட்டு வெளியிட்ட வேலைநிறுத்த
வாபஸ் அறிக்கையில் இது குறித்தெல்லாம் எதுவும்
இல்லை.

உடன்பாடு ஏற்படாமல், ஒப்பந்தம் போடாமல்
வேலைநிறுத்தத்தை ஒருதலைப் பட்சமாக
மார்க்சிஸ்ட் சங்கம் வாபஸ் பெற்றுள்ளது.
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கு
ஒரு எளிய தர்க்கத்தைக் கூட மார்க்சிஸ்ட்
சங்கத்தால் முன்வைக்க இயலவில்லை. இதன்
விளைவாக இன்று இரண்டு லட்சம் ஊழியர்களிடம்
அம்பலப்பட்டும் தனிமைப்பட்டும் கிடக்கிறது
மார்க்சிஸ்ட் சங்கம்.

துரோகம் இன்று தற்காலிகமாக வெற்றி
பெற்றிருக்கலாம். எனினும் இறுதிக்கும்
இறுதியான பரிசீலனையில் இரண்டு லட்சம்
தொழிலாளர்களின் நான்கு லட்சம் கரங்களும்
உயரும்போது, துரோகம் தூள் தூளாகும்.

கோடிக்கால் பூதமடா தொழிலாளி
கோபத்தின் ரூபமடா!
************************************************************           

   


    







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக