வியாழன், 13 டிசம்பர், 2018

தோற்கும் பாஜகவும்
ஜெயிக்கும் இந்துத்துவமும்!
(இது கட்டுரை அல்ல; கருத்தாயுதம்!)
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.
(மிசோரம், ம.பி, ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஸ்கர்).
இவற்றில் தான் ஆட்சியில் இருந்த மூன்று
மாநிலங்களிலும் பாஜக காங்கிரஸிடம் 
ஆட்சியை இழந்திருக்கிறது. மிசோரம் மாநிலத்தில்
ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி
என்னும் மாநிலக் கட்சியிடம் படுமோசமான
முறையில் ஆட்சியை  இழந்திருக்கிறது.

தெலுங்கானாவில் மாநிலக்கட்சியான டி.ஆர்.எஸ்
ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவுடன் காங்கிரஸ் அமைத்த
கூட்டணியை தெலுங்கானா மக்கள் ஏற்காமல்
மோசமான தோல்வியை காங்கிரஸ் கூட்டணிக்கு
அளித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து
எளிதாக ஆட்சியைப் பறிக்க முடியவில்லை
காங்கிரசால். இறுதி வரை "கழுத்துக்குக் கழுத்து" 
(neck to neck) என்ற அளவிலான போட்டி.
(மொழிபெயர்ப்பு உபயம்: தமிழிசை அம்மையார்).

மபியில் வாக்கு சதவீதம் வெற்றிபெற்ற காங்கிரசை
விட தோற்ற பாஜகவுக்குச் சற்றே  அதிகம். இது
பாஜகவுக்கு வெறும் சிராய்ப்பு போன்றதே.
2019 தேர்தலுக்குள் பாஜக இதைச் சரிசெய்து விடும்.

ஆக, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைப்
பொறுத்தமட்டில், காங்கிரசின் வெற்றியை
தீர்மானகரமான வெற்றி (decisive victory) என்று
கூற இயலாது. அதே போல பாஜகவின் தோல்வியை
மரண அடி என்றும் வர்ணிக்க இயலாது.

வெகு காலமாகவே இந்திய ஆளும் வர்க்கத்தின்
நம்பகமான பிரதிநிதியாக இருந்த காங்கிரஸ்
காலப்போக்கில் அந்த நம்பகத் தன்மையை
இழக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து
பாஜக அந்த இடத்தைப் பிடித்தது. இதன்
விளைவாகவே 2014ல் ஆட்சியைப் பிடித்தது.

2019 தேர்தலிலும் பாஜக ஆட்சியமைக்க
வேண்டுமென்றால், ஆளும் வர்க்கத்தின்
நமிக்கையைப் பெற்றிருப்பது மட்டும் போதாது,
மக்களின் ஒப்புதலை பாஜக பெற்று விடும் 
என்று ஆளும் வர்க்கம் நம்ப வேண்டும். இந்த
நிமிடம் வரை பாஜகவின் மீதான நம்பிக்கையை
ஆளும் வர்க்கம் இழக்கவில்லை.

மக்களைப் பொறுத்தமட்டில் பொருளாதாரம்
சமூகம் ஆகிய துறைகளில் இவ்விரு கட்சிகளின்
நிலை என்ன என்பதை ஆராய வேண்டும்.
காங்கிரஸ், பாஜக இவ்விரு கட்சிகளுக்கும்
பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றுதான்.
காங்கிரஸ் ஆட்சியின்பொது முன்மொழியப்பட்ட
பொருளியல் கொள்கைகளையே பாஜக
நிறைவேற்றி வருகிறது. உதாரணம்: GST.

இவ்விரு கட்சிகளும் வேறுபடுவது சமூகம்
குறித்த அணுகுமுறையில்தான். மதச்சார்பின்மை,
சிறுபான்மை ஆதரவு ஆகியவை காங்கிரசின்
அடையாளங்கள் என்றால், இந்துத்துவம் என்பது
பாஜகவின் அடையாளம்.

இங்கு வாசகர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள
வேண்டும். காங்கிரசானது  இந்துத்துவக்
கொள்கைகளைத் தனது கொள்கையாகக்
கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது பாஜகவானது மதச்சார்பின்மைக்காக
உடல் பொருள் ஆவியை அர்ப்பணிக்கும்.

இந்திய சமூகத்தில் பெருவாரியான மக்களின்
ஆதரவைப் பெறுவதற்கான உத்திகளாகவே
இந்துத்துவமும் மதச்சார்பின்மையும் இவ்விரு
கட்சிகளாலும் பயன்படுத்தப் படுகின்றன. இங்கு
காங்கிரசின் மதச் சார்பின்மை என்பது அதன்
சரியான பொருளில் அமைந்த கோட்பாடு அல்ல
என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும்.

தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறங்குகிறது
என்றாலே, முன்பெல்லாம் மதச்சார்பின்மை
என்ற முழக்கம் உரத்து ஒலிக்கும். காங்கிரசின்
maneuvering அனைத்தும் மதச்சார்பின்மையை
மையம் கொண்டிருக்கும். ஆனால் அண்மைத்
தேர்தல்களில் காங்கிரசின் இந்த முழக்கம்
மேற்பரப்புக்கு வரவே இல்லை.

இதற்கு மாறாக, அண்மைக் காலமாகவே
காங்கிரஸானது இந்துத்துவத்தின் யுத்த
சன்னத்துக்களைத் தரித்து வருகிறது
என்பதைக் கண்டு வருகிறோம். பெரோஸ் கானின்
பேரனும் அந்தோனியோ மெய்னோவின் மகனுமான
ராகுல் காந்தி தம்மை ஒரு உயர்ந்த பிராமணராக
முன்னிறுத்துகிறார். தமது கோத்திரம் என்ன
என்பதையும் பொதுவெளியில் கூறுகிறார்.

அவர் அணிந்திருக்கும் பூணூலில் சிறிதளவு
மான்தோலும் இருக்கக்கூடும். இந்தியாவில்
எங்கெல்லாம் கோவில்கள் உண்டோ, அங்கெல்லாம்
சென்று சாமி கும்பிடுவதும், விபூதி, குங்குமம்,
தாயத்து, ருத்திராட்சம் சகிதமாகக் காட்சி
தருவதுமே ராகுல் காந்தியின் தேர்தல்
பணிகளாக இருந்தன.

தீச்சட்டி எடுப்பது. மண்சோறு சாப்பிடுவது
ஆகியவற்றை மட்டுமே ராகுல்காந்தி விட்டு
வைத்திருக்கிறார்.மூக்குப்பொடிச் சித்தர் செத்துப்
போகாமல் ,இருந்திருந்தால், டி டி வி தினகரனுக்குப்
போட்டியாக அவரிடமும் ஆசி பெற ராகுல் காந்தி
திருவண்ணாமலை சென்றிருக்கக் கூடும்.
இவையெல்லாம் ராகுல்காந்தியின்
கடவுள் பக்தியின் வெளிப்பாடுகள் அல்ல. மாறாக
காங்கிரஸ் கட்சியும் ஓர் இந்துத்துவக் கட்சிதான்
என்ற வலுவான செய்தியை தேர்தலில் வாக்களிக்க
இருக்கும் வாக்காளர்களின் சிந்தனைக்குள் இறக்குவதற்காகத்தான்.
     
அயோத்தியில் ராமர் கோவில் காட்டுவோம் என்ற
முழக்கத்தைப்  புதுப்பிக்கலாமா என்று பாஜக
யோசித்துக் கொண்டிருக்கும்போது, ராகுல்காந்தி
என்ன செய்ய வேண்டும்? இடிக்கப்பட்ட மசூதியை
மீண்டும் கட்டிக் கொடுப்போம் என்று
சிறுபான்மையினருக்கு வாக்குறுதி அளிக்க
வேண்டுமா, இல்லையா? முன்பு அப்படித்தானே
காங்கிரஸ் பேசிவந்தது!

ஆனால் இந்த வாக்குறுதியை அளிக்க ராகுல்காந்தி
இன்று தயாராக இல்லை. காரணம் இந்துத்துவத்தை
வெளிப்படையாகவோ, ஏன் மறைமுகமாகவோ கூட
எதிர்க்க காங்கிரஸ் இன்று தயாராக இல்லை.
மாறாக இந்துத்துவ முகாமில் தானும் இடம்பெற
வேண்டும் என்பதுதான் காங்கிரசின் தேர்தல்
வியூகமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக என்பது 90 சதம் இந்துக்களைக்
கொண்ட கட்சி என்கிறார் ஸ்டாலின். திமுகவின்
அத்தனை தலைவர்களும் திருக்கோவில்
கைங்கரியங்களில் வெளிப்படையாகத்
தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள்.
துர்கா ஸ்டாலின் அம்மையார் பங்கு பெறாத
எந்தவொரு திருக்கோவில் நிகழ்ச்சியும்
தமிழ்நாட்டில் நடந்தது இல்லை. ராசாத்தி அம்மாள்
செய்யாத யாக யக்ஞங்கள் இல்லை. இந்த
அளவுக்கு தான்  பேசிவந்த போலி நாத்திகத்தையும்
கடலில் கரைத்து விட்ட திமுக, திராவிட
இந்துத்துவத்தைத் தன்  கொள்கையாக வரித்துக்
கொண்டுள்ளது. புரட்சிப்புயலோ கிறிஸ்துவத்தில்
தம்மை இணைத்துக் கொண்டு பகுத்தறிவின் புதிய பரிமாணத்தைத் தரிசித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் ஏராளமான உதாரணங்களைக் கூற
இயலும்; விரிவஞ்சி விடுக்கிறேன். இவை
அனைத்தும் எதைக் காட்டுகின்றன? அரசியல்
அரங்கில் இந்துத்துவம் செல்வாக்குப் பெற்று
வருவதையே காட்டுகின்றன.

பாஜக ஐந்து மாநிலத் தேர்தல்களில் தோற்றிருக்கலாம்.
ஆனால் சித்தாந்த ரீதியாக, இந்தியாவில் பாஜகவின்
இந்துத்துவம் செல்வாக்குப் பெற்று வருவதை
எவராலும் மறுக்க இயலாது. இந்துத்துவத்தைக்
களத்தில் நேருக்கு நேர் சந்தித்து முறியடிக்க
தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்தவொரு
அரசியல் கட்சியும் தயாராக இல்லை.
இதுவே உண்மை.

எனவே தேர்தல் அரசியலுக்கு வெளியில்
பரந்துபட்ட மக்களைத் திரட்டி இந்துத்துவத்தை
முறியடிக்கும் பொறுப்பும் கடமையும் மார்க்சிய
லெனினியக் கட்சிகளுக்கே உண்டு.
****************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக